.jpg)
நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிறது திராவிட முன்னேற்றக் கழகம். தமிழகத்தில் நடைபெறும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசின் இரண்டாண்டு நிறைவு விழா முடிந்த கையோடு தன் பேச்சாளர்களின் கூட்டத்தைக் கூட்டியது தி.மு.க. ஏறக்குறைய 500இற்கும் மேற்பட்ட தலைமைக் கழக பேச்சாளர்கள் மே-19ஆம் திகதியன்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றனர். கடந்த சில மாதங்களாக தமிழக அரசியலை இலங்கை தமிழர் பிரச்சினைதான் ஆக்ரோஷமாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. ஆனால் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகியவுடன் இப்பிரச்சினையின் தாக்கம் பெருமளவு குறைந்துவிட்டது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்து, உள்ளூர் அரசியலுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். அதன் முதல் கட்டமாக "சேது சமுத்திரத்திட்டம் வேண்டாம்" என்று இந்திய சுப்ரீம் கோர்ட்டில் மனுப்போட்ட அ.தி.மு.க. அரசை கண்டித்து தமிழகமெங்கும் மே-15ஆம் திகதி "எழுச்சி நாள்" பொதுக்கூட்டங்களை நடத்தியது தி.மு.க. இதில் அக்கட்சியின் தலைவர் கருணாநிதியே வடசென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, "இந்த அரசு இன்னும் மூன்று வருடங்கள் நீடிக்க வேண்டுமா?" என்று முதல் முறையாக கோபமாக கேள்வி எழுப்பினார். அதேபோல் காங்கிரஸை விட்டு விலகியவுடன் "டெசோ" கூட்டத்தைப் போட்டார். அதன் பிறகு அடுத்த கூட்டம் இன்னும் டெசோ தரப்பிலிருந்து இன்னும் கூட்டப்படவில்லை. அது மட்டுமல்ல, டெசோ சார்பில் ஒரு மாநாடு சென்னைக்கு வெளியில் மதுரையிலோ அல்லது திருச்சியிலோ போடுவதற்கான ஆரம்பகட்ட "முஸ்தீபுகள்" மேற்கொள்ளப்பட்டன. அதுவும் இன்னும் கை கூடவில்லை. இதெல்லாம் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இப்போது உடனடி தேவை "அ.தி.மு.க. அரசு" பற்றி பேசுவது மட்டுமே என்று தி.மு.க. கருதியிருக்கிறது என்ற தோற்றத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.
இதைப் புரிந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதாவும் இலங்கை தமிழர் பிரச்சினையில் அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார். கடந்த இரு வருடங்களாக இலங்கை தமிழர்களுக்காக போராடும் அமைப்புகள் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் படத்தை தாங்கள் போடும் கூட்டங்களில் தாராளமாக பயன்படுத்தி வருகின்றன. போஸ்டர்கள் அடித்து ஒட்டியிருக்கின்றன. குறிப்பாக "நாம் தமிழர் கட்சி" நடத்தும் சீமான், பிரபாகரன் படத்தைப் போடாமல் கூட்டமே நடத்தியது இல்லை. பேரணியைக் கூட்டியதில்லை என்றே சொல்லலாம். ஆனால் இந்தமுறை "முள்ளிவாய்க்கால்" நினைவு தினத்தைக் கொண்டாடும் வகையில் இலங்கை தமிழர்களுக்காக போராடும் அமைப்புகள் எல்லாமே "நினைவேந்தல்" நிகழ்ச்சியை தமிழகத்தில் நடத்தின. அப்படி சீமானும் கடலூரில் கூட்டம் போட்டார். அதற்கு காஷ்மீர் மாநில விடுதலை முன்னணி தலைவர் யாஸிம் மாலிக்கையும் அழைத்தார். பிரபாகரன் படம் போடுவது, யாஸிம் மாலிக் பேசுவது என்ற இரு விஷயங்களையும் மனதில் வைத்து கடலூரில் சீமானின் பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அதேபோல் சென்னையில் "தானா" தெருவில் நடைபெறுவதாக இருந்த திருமாவளவன் கூட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. இப்படி இலங்கை தமிழர்களுக்காக போராடும் இயக்கங்கள் "முள்ளிவாய்க்கால்" தினத்தை கொண்டாடுவதற்கு முதல் முறையாக கடந்த இரு வருடங்களில் தமிழக காவல்துறை "செக்" வைத்திருக்கிறது. குறிப்பாக காவல்துறை "சட்டம்-ஒழுங்கு" கோணத்தில் இலங்கை தமிழர் தொடர்பான போராட்டங்களை பார்க்கத் தொடங்கியிருக்கிறது என்பதற்கு இது அத்தாட்சி.
ஆகவே, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் மாநில பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. அதற்கு முன்னோட்டம்தான் அ.தி.மு.க. அரசின் சாதனைகள் பற்றிய விளம்பரங்கள் மற்றும் விளம்பரப் பாடல்கள் அடங்கிய பிரசாரம் போன்றவை. அது தவிர, மாவட்டந்தோறும் அ.தி.மு.க.வின் சாதனைகளை விளக்க "பாசறை கூட்டங்களை" (பாசறைகள் என்பது தி.மு.க.வில் இருக்கின்ற இளைஞரணி போன்றது) நடத்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இரண்டாண்டு நிறைவு விழாவில் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட அரசின் இரு வருட சாதனைகளை விளக்கிப் பேசினார். அந்த விவாதத்தில் பங்கேற்ற (அ.தி.மு.க.விடமிருந்து விலகி நின்ற) புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கூட, "2011இற்கு முன்பு தம் மக்களாட்சி (தி.மு.க.வின் குடும்ப ஆட்சி) நடந்தது. இப்போது தமிழக மக்களுக்கான ஆட்சி நடக்கிறது. அந்த பெருமை தமிழக முதல்வரையே சாரும்" என்று வெகுவாக பாராட்டினார். இந்த இரண்டாண்டு நிறைவு விழாவில் சட்டமன்றத்தில் அ.தி.மு.க. அரசுக்கு கிடைத்த பாராட்டைப் பார்த்தால், சென்ற சட்டமன்ற தேர்தலில் இருந்த 9 கட்சிகளும் (விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. தவிர) அ.தி.மு.க. அணியில் நீடிக்கும் என்றே தெரிகிறது. அப்படிப்பட்ட அணியில் அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், கொங்கு மக்கள் இளைஞர் பேரவை ஆகியவை அடங்கும். காங்கிரஸும் அ.தி.மு.க. கூட்டணிக்கு ரெடி என்பது போல்தான் அக்கட்சி உறுப்பினர் அ.தி.மு.க. அரசுக்கு வாசித்த பாராட்டுப் பத்திரம் அமைந்தது. ஆனால் அ.தி.மு.க.தான் காங்கிரஸ் கட்சியை சேர்த்துக் கொள்வதா, வேண்டாமா என்று இன்னும் "இறுதி" முடிவு எடுக்கவில்லை. தே.மு.தி.க.வைப் பொறுத்தமட்டில் அன்றைய தினம் பன்ருட்டி ராமச்சந்திரன் ஏதாவது பாராட்டிப் பேசி விடப் போகிறார் என்று கேப்டன் விஜயகாந்த் நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை. தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டாண்டு நிறைவு தினத்தைக் கொண்டாடும் தினத்திற்கு முதல் நாளில் இருந்தே சட்டமன்றத்திற்குச் செல்லவில்லை. ம.தி.மு.க.விற்கு சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் இல்லை. அதனால் அவர்கள் பாராட்டு என்ற பேச்சே எழவில்லை. அதே நேரத்தில் போதிய தொகுதிகள் தந்தால், அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கலாம் என்ற மனநிலையில் இருக்கிறார் வைகோ என்பதே அக்கட்சி வட்டாரத் தகவல். இந்த கோணத்தில் ஏறக்குறைய அ.தி.மு.க.விற்கான எதிர்கால நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உருவாகி விட்டது என்றே எண்ண வேண்டும்.
இதுபோன்ற நிலையில்தான், தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளர்கள் கூட்டம் நடைபெற்றது. "காதல் நாடக திருமண" விவகாரம் தொடர்பான போராட்டத்தில் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்ட பிறகு, தி.மு.க.விற்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் கூட்டணி வரப்போகிறது என்ற பேச்சு தீவிரமாக எழுந்திருக்கிறது. ஆனால் அதை பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸும் விரும்பவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதியும் விரும்பவில்லை. கைதாகியிருந்த டாக்டர் ராமதாஸ் திருச்சி சிறையிலிருந்து விடுதலையானவுடன் அளித்த பேட்டியில், "என் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைத்து தலைவர்களுக்கும் நன்றி" என்றார். இது அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று சொன்ன தி.மு.க. தலைவர் கருணைநிதிக்கும் பொருந்தும். ராமதாஸை விடுதலை செய்ய வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்த தி.மு.க. தலைவருக்கு என்று தனிப்பட்ட முறையில் எந்த நன்றியும் சொல்லவில்லை. அது மட்டுமின்றி அன்று இரவே பா.ம.க.வின் அதிகார பூர்வ டி.வி.யான "மக்கள் டி.வி."யில் டாக்டர் ராமதாஸின் பேட்டி ஒளிபரப்பானது. அதில் "விடுதலைக்காக குரல் கொடுத்த தலைவர்களுக்கு நன்றி" என்ற ராமதாஸின் பதிலே இடம்பெறவில்லை. அதுவே தி.மு.க.வுடன் சேருவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தயாராக இல்லை என்பதற்கான அடையாளம்.
அதே நிலைப்பாட்டில்தான் தி.மு.க. தலைவர் கருணாநிதியும் இருக்கிறார். தி.மு.க. பேச்சாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், "தி.மு.க. ஒன்றுதான் திராவிடர்களுக்கு வழிகாட்டி. இந்த போர்வாளை எதிரிகளிடம் நாம் என்றைக்கும் கொடுக்க மாட்டோம். இந்த திராவிட பட்டாளத்தை அழித்து விடுவோம் என்று ஒரு குரல் கிளம்புகிறது. திராவிட இயக்கத்தால் பதவி பெற்றவர்கள், மந்திரியானவர்கள், திராவிட இயக்கத்தால் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், திராவிட இயக்கத்தால் பிற்படுத்தப்பட்டோம் என்று கூறி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற அந்த பட்டியல் உருவானதற்கு காரணமாக இருந்தவர்கள் திராவிட இயக்கத்தை ஒழிப்போம் என்கிறார்கள்" என்று சாடி, பாட்டாளி மக்கள் கட்சியை நேரடியாக அட்டாக் பண்ணியிருக்கிறார். ஏனென்னால் "திராவிடம்" என்ற சொல்லே கிடையாது என்றும், திராவிடக் கட்சிகளை ஒழியுங்கள் என்றும் காரசாரமாக பேசியவர் டாக்டர் ராமதாஸ்தான். இப்படி பா.ம.க.வை தி.மு.க. தலைவர் கருணாநிதி அட்டாக் பண்ணுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்ட பிறகு "பா.ம.க.- தி.மு.க." கூட்டணி உருவாகும் என்ற செய்தி வலுவாக பரப்பப்படுகிறது. இந்த செய்தி தி.மு.க.விற்கு சாதகமானது அல்ல என்பது அக்கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு தெரிகிறது. ஏனென்றால், தி.மு.க. அணியில் முந்திக் கொண்டு பா.ம.க. இடம்பெற்று விட்டால், அது விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க, தி.மு.க.வுடன் அணி சேருவதற்கு முட்டுக்கட்டையாக அமைந்து விடும். ஆகவே தி.மு.க.விற்கு இப்போதைய முதல் தேவை தே.மு.தி.க.தானே தவிர பாட்டாளி மக்கள் கட்சி அல்ல. இந்த சூட்சமத்தைப் புரிந்து கொண்டுதான் தி.மு.க. பேச்சாளர்கள் கூட்டத்தில் பா.ம.க.வை கடுமையாக விமர்சித்துள்ளது தி.மு.க. தலைமை.
அடுத்து அவர் வைகோவையும் விட்டு வைக்கவில்லை."தம்பீ, தம்பீ என்று நம்மால் கொண்டாடப்பட்டவர்கள் எந்த அளவிற்கு தருக்கர்களாக மாறினார்கள், துரோகிகளாக மாறினார்கள் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும்" என்று விமர்சித்துள்ளார். தி.மு.க.விலிருந்து விலக்கப்பட்ட வைகோவை சாடித்தான் இப்படிப் பேசியுள்ளார் என்பதற்கு வேறு புதிய விளக்கம் தேவையில்லை. வைகோ தலைமையிலான ம.தி.மு.க.வை தி.மு.க. தலைவர் கருணாநிதி விமர்சிப்பதில் வேறு ஒரு வியூகம் இருக்கிறது. நடைபயணத்தின் போது முதல்வர் ஜெயலலிதா வைகோவை சந்தித்தார். அதன் பிறகு அ.தி.மு.க.வுடன் ம.தி.மு.க. நெருங்கிச் செல்லுவது போன்ற சம்பவங்கள் அடுத்தடுத்த அரங்கேறின. ஆனால் காங்கிரஸிலிருந்து தி.மு.க. விலகிய பிறகு வைகோ, நடுநிலையாகி விட்டார். ஒரேயடியாக அ.தி.மு.க. பக்கமாக சாய்ந்தால், தேவைப்படும் எண்ணிக்கையிலான தொகுதிகள் நமக்கு கிடைக்காது என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அதனால் தி.மு.க. மீதான விமர்சனத்தை வைகோ கொஞ்சம் குறைத்துக் கொண்டிருக்கிறார். இது தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்காக அல்ல. அ.தி.மு.க.விடம் "எனக்கு தி.மு.க. ஆப்ஷனும் இருக்கிறது" என்று காட்டி, அதிக சீட்டுகளை பெறுவதற்காகவே! இதை முறையடிக்கவே தி.மு.க. பேச்சாளர்கள் கூட்டத்தில் வைகோவையும் சாடியிருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. "என்னைக்காட்டி அ.தி.மு.க. அணியில் ம.தி.மு.க. அதிக இடம் வாங்க முடியாது" என்பதே அவரது பேச்சின் அதிரடி வியூகம். தி.மு.க. பேச்சாளர்கள் கூட்டத்தில் பா.ம.க.வையும், ம.தி.மு.க.வையும் விமர்சித்த அவர், காங்கிரஸ் பற்றியோ, தே.மு.தி.க.வையோ, கம்யூனிஸ்டுகளையோ குறை கூறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஏனென்றால் இந்த மூன்று கட்சிகளுமே எந்த நேரத்திலும் ஏதாவது ஒரு வடிவத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி சேரும் நிர்பந்தம் வரலாம் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைக்கிறார். அப்படியொரு சந்தர்ப்பம் வரும் போது தே.மு.தி.க.வும், கம்யூனிஸ்டுகளும் அவரது அஜெண்டாவில் முதல் ப்ரையாரிட்டியாக இருக்கலாம். ஆகவே கூட்டணிக்கு வரும் கட்சிகள் பற்றிய சமிஞ்ஞைகளை இந்த பேச்சாளர்கள் கூட்டம் வாயிலாக தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அக்கூட்டத்தில் "அணிகள்" பற்றி பேசிய கலைஞர் கருணாநிதி தி.மு.க.விற்குள் இருக்கும் கோஷ்டிப் பூசல் பற்றியும் விவரிக்கத் தவறவில்லை. அதிலே குறிப்பாக "கட்சி தலைவர் நான்தான்" என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவிக்கும் வகையில், கட்சிக்குள் நிலவும் வெவ்வேறு கோஷ்டிகள் பற்றிக் குறிப்பிடும் போது, "ஸ்டாலின் இளையவர். என்னைப் போன்ற இவ்வளவு அணுபவத்தை, தி.மு.க.வின் அரசியலில் அவர் முழுதும் இன்னும் உணராதவர்" என்று கோடிட்டுக் காட்டியுள்ளார். அது மட்டுமின்றி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற ஆர்வத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். வரப்போவது நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும், அதன் பின் வரும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்துப் பேசியிருக்கும் தி.மு.க. தலைவர், "தேர்தலே வேண்டாமென்று ஒதுங்கிப் போய்விடவும் நான் விரும்பவில்லை. தேர்தல் வேண்டும். தேர்தலில் நாம் நிற்க வேண்டும்" என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தானே முதல்வர் வேட்பாளர் என்பதை தி.மு.க. சொற்பொழிவாளர்கள் கூட்டத்தில் அறிவித்துள்ளார் என்றே இதை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பேச்சின் பின்னணியில், "நான்தான் தி.மு.க. தலைவர். அடுத்த முறையும் நான்தான் முதல்வர் வேட்பாளர்." என்ற செய்தி போக வேண்டும் என்று விரும்புகிறார் என்பதே இந்த பேச்சிலிருந்து எதிரொலிக்கிறது. ஏனென்றால் தி.மு.க. பேச்சாளர்கள் என்பவர்கள்தான் கட்சி தலைமையின் செய்தியைக் கொண்டு செல்லும் "ஊடகங்கள்". அவர்கள் கூட்டத்தில் தி.மு.க. அமைக்கவிருக்கும் கூட்டணி பற்றியும், தி.மு.க.விற்குள் நடைபெறும் உள்கட்சி பிரச்சினைகள் குறித்தும் விரிவாக உரையாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே தேர்தல் களம் தயாராகி விட்டது. முக்கிய கட்சிகளான தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் களத்தில் "குஸ்தி"க்குத் தயாராகி விட்டன என்பதே இரு கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு நடத்தும் கூட்டங்கள், ஆர்பாட்டங்கள் தெளிவுபடுத்துகின்றன.