2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

2ஆம் அத்தியாயம்

George   / 2014 ஒக்டோபர் 12 , பி.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜோசப் அன்டன் ஜோர்ஜ்

“This is Life line of this country” இது வெறும் வார்த்தைகள் அல்ல நிதர்சனமான உண்மை. இந்த வார்த்தைகளை இன்று சொல்லப்பட்டதுமல்ல, இதை சொன்னதும் எம்மவரும் இல்லை. இந்த வார்த்தைகள் 1956ஆம் ஆண்டு யாழ்தேவி ஆரம்பிக்கப்பட்ட போது, பீற்றர் கெனமன் மகிழ்ச்சியுடன் உதிர்த்தவை.

பீற்றர் கெனமன் யார் என்று தெரிந்தால் தான் அவரது வார்த்தைகளின் அர்த்தம் விளங்கும். அந்தக் காலத்திலேயே தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் சம அந்தஸ்து கொடுத்து இலங்கையை பல இனங்களைக் கொண்ட சமத்துவ நாடாக்க வேண்டும் என்று கூறி வந்தவர்தான் அவர்.

கேம்பிரிட்ஜ் பட்டதாரியான பீற்றர் கெனமன், இடதுசாரி அரசியல்வாதியாக இருந்ததால், அவரால் இலங்கையின் அரச நிர்வாகத்தில் பெருமளவான ஆளுமையைச் செலுத்தமுடியாமல் இருந்தது. இருப்பினும், சமாதானத்தை விரும்பிய மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட ஒருவராக விளங்கினார்.

இவர் சொன்ன வார்த்தை இன்று எத்தனை பேருக்கு நினைவிருக்கிறதோ தெரியவில்லை. ஆனால், அந்த வார்த்தையை மீண்டும் நினைவுபடுத்தும் ஒரு வரலாற்றுச் சம்பவம் இன்று உதிக்கப்போகின்றது.

முன்னொருநாள், பத்திரிகையை வாசித்துக்கொண்டிருந்த போது என் கண்ணில் பட்ட செய்தியொன்று நினைவுக்கு வருகிறது.“ பதினைந்து வயதான நான், இன்றுதான் முதற் தடவையாக புகையிரதத்தை பார்த்துள்ளேன். மிகவும் சந்தோஷமாகவுள்ளது. இதுவரை நான் கொழும்புக்கு சென்றதில்லை. இந்த புகையிரத வண்டியில் கொழும்புக்கு போக எனக்கு ஆசை” என்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஓமந்தை பிரதேச சிறுமியொருவர் சொன்ன வார்த்தைகளை அந்த பத்திரிகை, செய்தியாக வெளியிட்டிருந்தது.

2011ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதியன்று அச்சிறுமி இந்த வார்த்தையை உதிர்ந்திருந்தார். அன்றுதான் ஓமந்தை புகையிரத நிலைய திறப்பு விழாவும் கூட. இந்த நிலைமை வடக்கிலுள்ள பெரும்பாலான சிறுவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். உண்மையில் 1990ஆம் ஆண்டுக்கு பிறகு ரயில் என்பது யாழ்பாணத்திற்கு வார்த்தையால் மாத்திரமே அறியப்பட்டிருந்தது.

இலங்கையில் இனமுறுகல் ஆரம்பித்து மெதுவாக வேரூன்றிய காலத்திலும் சரி, அது ஆயுத போராட்டமாக மாறிய காலத்திலும் சரி, இலங்கையில் இருவேறு இனங்களை மாத்திரமன்றி, வடக்கையும் தெற்கையும் இணைக்கும் வீராங்கனையாக திகழ்ந்தவள் தான் இந்த யாழ்தேவி.

வடக்கு தமிழர்களின் வாழ்வில் பின்னிப்பிணைந்து அவர்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே யாழ்தேவி மாறியிருந்தது. ஆனால், 1990ஆம் ஆண்டுக்கு பின்னரான இளைய தலைமுறையினரால் யாழ்தேவி என்ற பெயரை மாத்திரமே உச்சரிக்க முடிந்தது. யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான உறவுப் பாலமாக விளங்கிய யாழ்தேவியின் வேகத்திற்கு ஏற்றாற் போல அதன் வரலாறும் மிக வேகமானதுதான்.

ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் இலங்கை இருந்த காலத்தில், 1864ஆம் ஆண்டு முதன் முதலாக ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், இது 1902ஆம் ஆண்டுதான் யாழ்ப்பாணம் வரை விஸ்தரிக்கப்பட்டது.

சரக்கு ரயிலும் தபால் ரயிலும் இந்த ரயில் சேவைகளில் அடங்கும். இருந்தாலும் தபால் ரயிலின் வேகம் மிக குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக மாலை 05.00 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்படுகின்ற தபால் ரயில், கொழும்பை வந்து சேர நீண்ட நேரம் எடுத்தமையால் பயணிகளால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது.

இவ்வாறான சிரமங்களை தவிர்பதற்காக 1956ஆம் ஆண்டு, யாழ்தேவி ரயில் சேவை உதயமானது. மிகவும் சக்திவாய்ந்த எஞ்ஜின்களை கனடாவிலிருந்து கொண்டுவந்து பொருத்தினர். இதன் முதல் பயணம் மிகவும் உணர்வுபூர்வமானது. காரணம், பிரித்தானியாவிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்று அப்போதுதான் 8 ஆண்டுகள் கடந்திருந்தது. அதுமட்டுமன்றி, தமிழ் - சிங்கள மக்களிடையேயான இனமுறுகல் சிறிது சிறிதாக வேரூன்ற ஆரம்பித்திருந்த அந்த காலத்தில் அவர்களுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தும் உறவு பாலமாக அல்லது இனவாதிகளின் பார்வையில் சவாலான ஒன்றாக யாழ்தேவி தனது முதல் பயணத்தை ஆரம்பித்திருந்தது.

யாழ்தேவி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், பீ.டீ.ரம்பல என்பவரே ரயில்வே திணைக்களத்தின் பிரதம முகாமையாளராக இருந்தார். அதன்பின்னர், அப்பதவிக்கு வந்த கே.கனகசபை என்பவர், யாழ்தேவியை மெருகூட்டினார். இதனால், அக்காலத்தில் அதிக வருமானத்தை உழைத்த பெருமையை யாழ்தேவியே பெற்றது.

யாழ்தேவியின் பயண வரலாற்றில், இலங்கையின் முன்னாள் பிரதமர் தஹநாயக்க, அவரது நெருங்கிய நண்பரான சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் முன்னாள் அதிபர் ஒரேற்றர் சுப்பிரமணியத்தின் வீட்டை யாழ்தேவியில் சென்றடைந்தமை மற்றும் தந்தை செல்வா, யாழ்தேவியில் கொழும்பு சென்றமை போன்றன பதியப்பட்டிருக்கும்.

கொழும்பில் வேலைவாய்ப்புகளை பெற்றிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் - யுவதிகள், வெள்ளிக்கிழமைகளில் யாழ்தேவியின் உதவியோடு வீடு திரும்பி, பின்னர் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலைக்குச் சென்ற அனுபவங்கள் ஏராளம். இந்த நினைவுகள் இன்று முதுமை பராயத்தில் இருக்கும் பலருக்கும் இருக்கலாம். தமிழர்களின் வாழ்வில் யாழ்தேவி ஒரு முக்கியமான அடையாளமாக மாறியமைக்கு இதுவும் ஒரு காரணம் என்றால் அது மிகையாகாதுதானே?.

இனங்களுக்கு இடையிலான உறவுகளை மாத்திரம் யாழ்தேவி இணைக்கவில்லை. பல இளைஞர் யுவதிகளின் இதயங்களை இணைக்கும் பணியினையும் செவ்வனே செய்திருந்தது. யாழ்தேவியில் சந்தித்திருந்த இளைஞர் - யுவதிகள், தங்களது பயண இடைவெளியில் பேசிப் பழகி, காதல் கொண்டு பின்னர் வீட்டார்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட சுவாரஷ்யங்கள் இன்னும் காற்றோடு கலந்து எம் காதோடு பேசும்.

இலங்கையில் இருந்த மற்றைய ரயில்களுடன் ஒப்பிடுகையில், யாழ்தேவி தனி அடையாளத்தை நிலைநாட்டியிருந்தது. அதில் பயணிகளுக்கு பரிமாறிய யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய உணவுகளால் அது விஷேடத்துவம் பெற்றிருந்தது. அது கடந்து செல்கின்ற பாதைகளில் பத்து நிமிடங்கள் வரைகூட கம கமவென சாப்பாட்டு வாசனை இருக்குமாம்.

கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படுகின்ற ரயில், 256 மைல்களைக் கடந்து யாழ்ப்பாணத்தை அடையும். ராகம, பொல்காவெல, குருநாகல், மாஹோ, அநுராதபுரம், மதவாச்சி, வவுனியா, ஆனையிறவு, யாழ்ப்பாணம் ஆகியவற்றை வந்தடைந்து நிறைவாக கே.கே.எஸ்.என்கிற காங்கேசன்துறையில் பயணத்தை பூர்த்தி செய்யும்.

இனங்களை இணைக்க அறைகூவல் விடுத்து யாருக்கும் அஞ்சாமல் பயணித்துக்கொண்டிருந்த யாழ்தேவி எஞ்ஜினின் உறுமல் சத்தம் ஒரு நாள் நின்றே விட்டது.

அன்று 1985 ஜனவரி 19ஆம் திகதி. காரிருளை கிழித்துக்கொண்டு இருளோரு இருளாக பயணித்து கொண்டிருந்த யாழ்தேவி எதையோ கண்டு தனது வேகத்தை தளர்த்தியது. சில விநாடிகளில் 'பொம்' என்ற சத்தத்துடன் சில ஒளிச்சிதறல்கள் அவ்வளவுதான்...

அன்றைய யாழ்தேவியில் கடமைபுரிந்த அனைத்து தமிழ் சாரதிகளும் விடுமுறையில் இருந்தனர். ரயிலில் கடமைபுரிய அன்று யாரும் இருக்கவில்லை. ரெபியல் லியனகே பணிக்கு தயாரானார். அன்று அவரே யாழ்தேவியை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்லவேண்டியிருந்தது.

தனக்கு நடக்கபோவதை அறியாமல், கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்தேவி குதுகலத்துடன் புறப்பட்டது.  ஆனையிறவு ரயில் பாதை ஏ-9 வீதி பகுதியில் சேதமடைந்திருந்தமையால் அந்த வழியால் செல்லமுடியவில்லை. அதனால் அவர் ரயிலை நிறுத்தினார். பின்னர் பின்னால் செலுத்தி முருகண்டி பிரதேசத்திற்கு ரயிலை கொண்டு சென்றார். அப்போது இரவு 7 மணியை அண்மித்திருந்தது. நன்றாக இருட்டியிருந்தது. ரயிலை மீண்டும் கொண்டு செல்லுமாறு அவருக்கு கட்டளை வந்தது.

இல்லை இல்லை நாம் எப்படியாவது முன்னோக்கி செல்லவேண்டும் என்று எந்துல பீரிஸ் எனும் அதிகாரி அவருக்கு கூறினார். அதன் பிறகு ரயில் மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்தது. ஏதோ அசம்பாவிதம் ஏற்பட போகின்றது என ரெபியலின் மனதுக்கு தோன்றியது. எனினும் செல்ல வேண்டிய பயணத்தை நிறைவு செய்து தானே ஆகவேண்டும்.

பாதுகாப்பு காரணங்களுக்காக ரயிலில் உள்ள விளக்குகளை அணைத்துவிட தீர்மானித்தார். விளக்குகளை அணைத்துவிட்டு யாழ்தேவி தனது பயணத்தை தொடர்ந்தது. 

சிறிது நேரம் சென்றதும் யானைகள் ரயில் பாதைக்கு குறுக்கே செல்லும் விடயம்,தீடிரென்று ரெபியலின் ஞாபகத்துக்கு வந்தது. அவர் விரைவாக இயங்கி ரயிலில் விளக்குகளை ஒளிரவிட்டார். சில விநாடிகள் கழித்து 'பொம்' என்ற சத்தத்துடன் குண்டொன்று வெடித்தது.

அந்த இடத்திலேயே ரயிலை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் நிறுத்தாமல் தொடர்ந்து செலுத்தினார். இந்தநேரத்தில் அவருக்கு உடனே அப்புஹாமி என்பவரின் நினைவு வந்தது. அவர் இந்த பகுதி ரயில் பாதையில் கடமையாற்றுபவர். அவர்தான் அந்த ரயில் பாதையை அவதானிக்கும் ஊழியர். அந்த ரயில் வீதியில் ஏதாவது சேதம் உள்ளதா? அல்லது வேறு ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் அவதானித்து அவருக்கு அறிவிக்க வேண்டும். அது தான் அவருடைய வேலை. அவர் வழமையாக இருக்கும் இடத்துக்குச் சென்று தேடினார் ரெபியல். அப்புஹாமி என்று பெயர் சொல்லியும் அழைத்தார். அவர் அங்கு இல்லை அப்புஹாமியை புலிகள் கொண்டு சென்று விட்டனர்.

இந்த சம்பவத்தால் 34பேர் உயிரிழந்தனர். ரயில்வே திணைக்களத்துக்கு 4 கோடி ரூபாய் நட்டமும் ஏற்பட்டது. எவ்வாறாயினும், யாழ்தேவி தனது பயணத்தை தொடர்ந்தாள்;. அவளது நீண்டகால பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதி மற்றுமொரு தடங்கல் ஏற்பட்டது. முறிகண்டியில் வைத்து யாழ்தேவி கண்ணிவெடிக்கு இலக்காகினாள். இதனால் இராணுவ வீரர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். இதற்கு மேலதிகமாக புகையிரத திணைக்களத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டமும் ஏற்பட்டது.

இதனையடுத்து வட மாகாணத்துக்கான யாழ்தேவியின் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் அது மதவாச்சி வரை மட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் அது வவுனியா வரை நீடிக்கப்பட்டது. காங்கேசன்துறை வரையான இச்சேவை நிறுத்தப்பட்ட காலப் பகுதியில் வட மாகாணத்தின் பல பகுதிகள் தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன. இக்காலப்பகுதியில் ரயில் தண்டவாளங்கள் மற்றும் புகையிர நிலையங்கள் என்பன தமிழீழ விடுதலை புலிகளினால் அவர்களின் இராணுவ தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டன.

கடந்த 2009ஆம் ஆண்டு வட மாகாணத்தின் பல பகுதிகள் அரசாங்கத்தினால் கைப்பற்றப்பட்ட போது வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் யாழ்தேவி புகையிரத சேவையை புனர்நிர்மாணம் செய்யும் பணிகள் 2009ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. இதன்பின்னர், முதற்கட்டமாக தாண்டிக்குளத்தை சென்றடைந்தது யாழ்தேவி. இதனையடுத்து 2011ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஓமந்தையை சென்றடைந்தது.

தொடர்ச்சியாக இலங்கை - இந்திய அரசாங்கங்களின் முயற்சியுடன் கடந்த மார்ச் மாதம் 05ஆம் திகதி கிளிநொச்சியை அடைந்தது யாழ்தேவி. இதனைத் தொடர்ந்து யாழ்பாணத்துக்கான ரயில் சேவை பணிகள் மும்முரமாக்கப்பட்ட நிலையில், கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி யாழ்பாணத்துக்கான பரீட்சார்த்த சேவையை யாழ்தேவி ஆரம்பித்தது. யாழ்பாணத்துக்கான யாழ்தேவியின் இரண்டாவது உத்தியோகபூர்வ பயணம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று வீறுநடை போட ஆரம்பிக்கிறது.

கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக சொல்லொணாத் துயரங்களை அனுபவித்த யாழ். மக்கள், யுத்தத்தின் நிறைவுக்கு பின்னர் யுத்த வடுக்களிலிருந்து சிறிது சிறிதாக மீண்டு வரும் நிலையில் யாழ்தேவியின் மீள் வருகை அவர்களுக்கு நிச்சயம் மகிழ்வினை ஏற்படுத்தும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X