2026 மே 06, புதன்கிழமை

மதம் பிடித்த அரசியல்!

A.P.Mathan   / 2011 மார்ச் 14 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

•    மப்றூக்

இரண்டு விடயங்களில் மனிதன் மிக இலகுவாக உணர்ச்சிவசப்பட்டு விடுகின்றான். ஒன்று: மதம் இரண்டாவது: அரசியல்! துரதிர்ஷ்டவசமாக இன்றைக்கு இந்த இரண்டு விடயங்களாலும் கொந்தளித்துப் போய்க்கிடக்கிறது – அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியல் களம்!

மேற்சொன்ன இரண்டு விடயங்களும் மனிதனை உணர்ச்சிவசப்படுத்தினாலும், அரசியலா, மதமா என்று வரும்போது – மதம் என்கிற விடயமே சிலிர்த்துக் கொண்டு எழுந்து நிற்கும். அதற்குப் பிறகுதான் அனைத்தும் என்பது அநேகரின் கருத்தாகும்.

இவ்வாறானதொரு நிலையில், அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் கடந்த வாரம் மதத்தோடு அரசியல் தாறுமாறாக முட்டி மோதிக் கொண்டதொரு நிகழ்வைக் காணக் கூடியதாகவிருந்தது.

அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் கடந்த 04ஆம் திகதி தமது பிரசாரக் கூட்டமொன்றினை மு.காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்தது. அக்கரைப்பற்று மாநகரசபைத் தேர்தலில் மு.கா. சார்பில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா மதனியின் தலைமையில் இடம்பெற்ற அந்தக் கூட்டத்தில் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஹக்கீம் கலந்து கொள்ளும் அந்தக் கூட்டத்தைத் தடுப்பதற்கு பல்வேறு ஏற்பாடுகள் நடந்தன. அவை சட்ட ரீதியாகவும், சட்டத்துக்கு முரணாகவும் கூட அமைந்திருந்தமைதான் இங்கு கவனிக்கத்தக்கது.

ஹக்கீம் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு அக்கரைப்பற்றுப் பொலிஸார் முழுமையான அனுமதியினை எழுத்து மூலம் வழங்கியிருந்தார்கள். ஆயினும், தாம் அந்தக் கூட்டத்துக்கு வழங்கிய ஒலிபெருக்கி அனுமதியினை ரத்துச் செய்யுமாறு கோரி – அதே அக்கரைப்பற்றுப் பொலிஸார் சில காரணங்களை முன்வைத்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் வழங்கொன்றைத் தாக்கல் செய்தனர்.

ஆனாலும், அக்கரைப்பற்றுப் பொலிஸாரின் கோரிக்கையினை - குறித்த நீதிமன்றம் நிராகரித்தது.

அக்கரைப்பற்றுப் பொலிஸார் இவ்வாறு நடந்து கொண்டமைக்கு – அமைச்சர் அதாவுல்லாவின் அழுத்தம் பின்னணியில் இருந்ததாகக் குற்றம் சாட்டுகிறது மு.காங்கிரஸ்!

பள்ளிவாசலுக்குள் அசிங்கம்

பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்திருந்தபோதும், மு.காங்கிஸாரின் குறித்த கூட்டத்துக்குச் சென்ற அக்கரைப்பற்றுப் பொலிஸார் அங்கு ஒலிபெருக்கியை உபயோகிக்கக் கூடாது என்று கூறினார்கள். இதை மு.காங்கிரஸார் ஏற்றுக்கொள்ளவில்லை. அங்கிருந்த மு.கா. தலைவரே நேரடியாக பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பொலிஸார் ஒதுங்கிக் கொண்டனர். ஒலிபெருக்கியின் உதவியுடன் கூட்டம் ஆரம்பமானது.

மேடையில் ஒருவர் பேசிக் கொண்டிருந்தபோது - கூட்டத்தினிடையே கற்கள் வந்து விழத் தொடங்கின. பின்னர் மு.கா. தலைவர் ஹக்கீம் பேசத் தொடங்கிய போதுதான் அந்தப் பிரளயம் நடந்தது.

மு.கா.வின் குறித்த கூட்டம் இடம்பெற்ற இடத்துக்குச் சற்றுத் தொலைவில் ஒரு பள்ளிவாசல் இருக்கிறது. அதை 'மர்கஸ்' பள்ளிவாசல் என்று அழைப்பார்கள். அந்தப் பள்ளிவாசலுக்குள்  அமைச்சர் அதாவுல்லா மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் உதுமாலெப்பை ஆகியோரும், அவர்களுடன் ஒரு கூட்டமும் நுழைந்தது. பள்ளிவாசலின் ஒலிபெருக்கி அவர்களால் அடாத்தாகப் பறித்தெடுக்கப்பட்டது. அங்கிருந்து மு.கா. தலைவரைத் தூசிக்கும் வகையில் சத்தமிடத் தொடங்கினார் கிழக்கு மாகாணசபை அமைச்சர் உதுமாலெப்பை!

வணக்கஸ்தலங்கள் என்பது புனிதத் தன்மையோடு பார்க்கப்படுபவை. அவற்றினை இறை வணக்கத்துக்காகவும், சமயம் சார்ந்த நல்ல விடயங்களுக்காகவும் அன்றி, வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவதை எந்த மதத்தினரும் அனுமதிப்பதில்லை. ஆனாலும், மு.காங்கிரஸின் கூட்டத்தைக் குழப்புவதற்காக – மேற்சொன்ன அமைச்சர்களும் அவர்களோடு சேர்ந்த சிலரும் பள்ளிவாசலுக்குள் புகுந்து, அதன் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி பள்ளிவாசலுக்குக் களங்கம் ஏற்படுத்தியதாக சம்பவத்தை நேரில் கண்டோர் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும், மு.கா. தலைவர் ஹக்கீம் - பேசுவதை நிறுத்தவில்லை. தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தார்.

இந்தநிலையில் பொலிஸார் நடந்து கொண்ட விதம்தான் புதினமாக இருந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள். தமது அனுமதியினைப் பெற்று நடத்தப்படுகின்ற ஒரு கூட்டம், அதுவும் இந்த நாட்டின் நீதியமைச்சர் ஒருவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம் - சட்டத்துக்கு முரணான வகையில் குழப்பப்படுவதை தடுத்து நிறுத்தாமல் பொலிஸார் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக அங்கிருந்த மக்களும், கூட்ட ஏற்பாட்டாளர்களும் கூறுகின்றனர்.

இந்த இடத்தில், நமக்குள் சில கேள்விகள் எழுகின்றன.

  1. அமைச்சர் அதாவுல்லா – அமைச்சர் ஹக்கீம் என்கிற இரண்டு அமைச்சர்களின் பிரச்சினையில் பொலிஸார் ஏன் சார்புப் போக்கை எடுக்க வேண்டும்?
  2. தனது அரசியல் பகையாளியின் சொந்த இடத்துக்குச் செல்லும் போது, தனக்கான பாதுகாப்பினை ஏன் முன் கூட்டியே ஹக்கீம் உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை.
  3. ஒரு நீதியமைச்சராக இருந்தும் - தனக்குரிய முழுமையான பாதுகாப்பினை ஹக்கீமால் பெற்றுக் கொள்ள முடியாமல் போனது எப்படி?


ஹக்கீம் தனது பாதுகாப்பில் உசாராக இருந்திருந்தால், அவருக்கெதிராக நடத்தப்பட்ட அன்றைய கூத்து இடம்பெறாமலேயே தடுத்திருக்கலாம் என்று – மு.கா.வின் அன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பிரதிநிதியொருவரே ஆதங்கத்தோடு கூறுகின்றார்.

இதற்குப் பிறகு, அமைச்சர் ஹக்கீம் எடுத்த நடவடிக்கை காரணமாக, இரவோடு இரவாக மட்டக்களப்புப் பிராந்திய உதவிப் பொலிஸ்மா அதிபர் அம்பாறைக்கு அழைக்கப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் மு.காங்கிரஸ்காரர்களின் முறைப்பாடுகளும், வாக்கு மூலங்களும் பதியப்பட்டன. சில சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

ஆனாலும், மு.கா. தலைவரின் இந்தச் செயற்பாடுகள் வெள்ளத்துக்குப் பின்னர் கட்டப்பட்ட அணையாகவே பலராலும் பார்க்கப்படுகிறது!

பிழைக்கும் வியாக்கியானம்!

'முஹம்மது நபியவர்கள் படிக்காதவர் என்பதால்தான் இறைவன் அவரை நபியாக்கினான். இறைவன் கூறியவைகளையெல்லாம் மறுபேச்சின்றி முஹம்மது நபியவர்கள் ஏற்றுக்கொண்டமைக்குக் காரணம், அவர்கள் படிக்காதவர்கள் என்பதால்தான்! அதாவது, இறைவனின் கட்டளைகளுக்கு முஹம்மது நபியவர்கள் கட்டுப்பட்டதற்குக் காரணம் அவர்கள் படிக்காத நபியாக (உம்மி நபி) இருந்தமைதான்!'

மேற்சொன்ன விடயத்தை அண்மையில் அமைச்சர் அதாவுல்லா அக்கரைப்பற்றில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசும்போது மிகவும் பகிரங்கமாகக் கூறியிருந்தார்.

அவர் இந்த விடயத்தைப் பேசுவதற்கு ஒரு பின்னணிக் காரணம் இருந்தது. அதாவது, 'அக்கரைப்பற்று உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் அமைச்சர் அதாவுல்லா தனது குதிரைக் கட்சியில் களமிறக்கியுள்ள வேட்பாளர்களில் அதிகமானோர் பெரிதாகப் படிக்காதவர்கள்' என்று எதிரணியினர் கூறிவருகின்றனர். இதற்குப் பதில் கூறும் போதுதான், மேற்சொன்ன 'நபி விவகாரத்தை' அமைச்சர் அதாவுல்லா கையிலெடுத்துப் பேசியிருக்கின்றார்.

இவ்வாறு கூறியதன் மூலமாக அமைச்சர் அதாவுல்லா சில விடயங்களை நிறுவ முயன்றுள்ளதாகப் பார்க்கப்படுகின்றது. அவை:
1.    தலைமைத்துவத்துக்கும் படிப்பறிவுக்கும் தொடர்பில்லை.
2.    படிப்பறிவு குறைந்தவர்களே தலைமைத்துவத்தின் கட்டளைகளை கேள்விக்குட்படுத்தாமல் ஏற்றுக் கொள்வார்கள்.  
3.    படிப்பறிவில் குறைந்தவர்களை தனது கட்சியில் வேட்பாளராக்கியமை பிழையான விடயமல்ல!

அமைச்சர் அதாவுல்லாவின் மேற்படி உரை கூட, இஸ்லாமிய மார்க்க அறிஞர்களிடையேயும், மக்களிடையேயும் கடுமையான விமர்சனத்தினையும் கோபத்தினையும் உருவாக்கியிருக்கிறது. இவ்விவகாரம் குறித்து அக்கரைப்பற்றைச் சேர்ந்த மூத்த மௌலவி ஒருவர் கூறுகையில்;

'அமைச்சர் அதாவுல்லா - மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட முயன்றிருக்கின்றார். அவர் அரசியலை மட்டும் பேசினால் போதும். தனக்குத் தெரியாத விடயங்களிலெல்லாம் மூக்கை நுழைக்கக் கூடாது' என்கிறார்!

இதேவேளை, அமைச்சர் அதாவுல்லாவின் மேற்படி வியாக்கியானத்தினை கண்டிக்கும் வகையில், அக்கரைப்பற்றில் ஏராளமான துண்டுப் பிரசுரங்கள் இன்றுவரை வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதேவேளை, அமைச்சர் அதாவுல்லாவின் கூற்றினை தர்க்க ரீதியாகப் பார்த்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்கின்றார் அக்கரைப்பற்றிலுள்ள புத்திஜீவியொருவர். காரணம், நபிமார்களில் மிகவும் படித்தவர்கள், மாபெரும் மேதைகள் என பலரும் இருந்திருக்கின்றார்கள். அப்படிப் பார்த்தால், அந்த நபிமார்கள் இறைவனின் கட்டளையினை ஏற்றுக்கொள்ளவில்லை என்றல்லவா அர்த்தமாகிறது என்கிறார் அவர்!

இந்தவகையில், அக்கரைப்பற்று 'மர்க்கஸ்' பள்ளிவாசலுக்குள் புகுந்து பள்ளிவாசல் ஒலிபெருக்கியினைப் பயன்படுத்தி, அரசியல் கூத்தாடியமை மற்றும் முஹம்மது நபியவர்கள் ஏன் படிக்காதவர்களாக இருந்தார்கள் என்பதற்குக் கூறியதாகக் சொல்லப்படும் வியாக்கியானம் ஆகிய குற்றச்சாட்டுக்கள் இன்று அமைச்சர் அதாவுல்லாவினை - மக்களும், மார்க்க அறிஞர்களும் கடுமையாக விமர்சிக்கும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

'நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.'
(திருக்குறள். அறத்துப்பால் - 193)  
(பொருள்: பயனில்லாத பேச்சு - அறிவு கெட்டவன் என்பதைக் காட்டி விடும்)

ஹறாம்!
அரசியல் - இஸ்லாமிய ஆட்சிகளின் போது பள்ளிவாசல்களிலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தது என்று இஸ்லாமிய வரலாறுகள் கூறுகின்றன. இதை வைத்துக் கொண்டு – 'நாங்களும் பள்ளிக்குள் சென்று அரசியல் செய்யப்போகிறோம்' எனக் கூறி - எதிரணியினரின் கூட்டங்களைக் குழப்புவதற்காக பள்ளிக்குள் செல்வதையும், பள்ளிவாசல் சொத்துக்களைத் தமது சுயநலன்களுக்காகப் பயன்படுத்துவதையும் அனுமதிக்க முடியாது என்பது இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் ஒருமித்த கருத்தாகும்.

இதை அழுத்திக் கூறும் வகையில் சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபையினர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளதுளூ

அதாவது, பளிவாசல்களின் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வது இஸ்லாமிய ஷரீஆ அனுமதிக்காத, வெறுக்கத்தக்க செயலாகும். தேர்தலில் வாக்குக் கேட்பதும், வாக்களிப்பதும், பிரசாரத்தில் ஈடுபடுவதும் ஜனநாயக மனித உரிமையாகும். அவற்றுக்கு எதிராக வன்முறையைப் பிரயோகிப்பது ஹறாமாகும். (ஹறாம் என்பது: இஸ்லாம் அனுமதிக்காத விடயம் எனப் பொருள் படும்)

வரலாற்றில் இரண்டு வகையானவர்கள் அரசியலில் இருந்து கொண்டு மதங்களோடு முட்டி மோதியிருக்கின்றார்கள்ளூ

முதல் வகையினர்:  மதத்தின் பெயராலுள்ள பொய்மைகளுக்கு எதிராக தமது அரசியலைப் பயன்படுத்தியவர்கள்.
இரண்டாம் வகையினர்: தமது பொய்யான அரசியலைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மதத்தினைக் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள்.

இரண்டாவது வகையினரை வரலாறு துரத்தியடித்த கதைகளை சரித்திரப் புத்தகங்களில் நீங்கள் காணலாம்!
•   


  Comments - 0

  • mcafareed Tuesday, 12 April 2011 02:56 AM

    என்னதான் இருந்தாலும் மரத்தில் மதமாகிப்போவதுதான்
    பெரிய பிரச்சினை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .