2025 மே 19, திங்கட்கிழமை

அழகிரி-ஸ்டாலின்-கனிமொழி யுத்தம்: உச்சகட்ட வேதனையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி?

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 01 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெல்லியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறியிருந்தாலும், உள்கட்சி பிரச்சினையில் தி.மு.க. திணறிக் கொண்டிருக்கிறது. "பயணிப்பதற்கு பாதை கிடைத்துவிட்டது. ஆனால் வழி எல்லாம் முள்ளும், புதருமாக கிடக்கிறது" என்பதுபோல், காங்கிரஸை விட்டு விலகியதால் தி.மு.க.விற்கு "தேர்தல் பாதை" தெளிவாகி விட்டது. ஆனால் அந்த பாதையில் உள்கட்சி பூசல் முள்ளும், புதருமாக காட்சியளிக்கிறது. தன்னுடைய வேகத்திற்கு பயணிக்க முடியாத இரண்டாம் கட்ட தலைமையை வைத்துக் கொண்டு எப்படி நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது என்ற நெருக்கடியில் இருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.

காங்கிரஸிடமிருந்து விலகியது தி.மு.க. தலைவர் கருணாநிதி எடுத்த முடிவு. அது இன்று எடுத்த முடிவல்ல. ஒரு சீனியர் லீடர் சொல்வது போல், "எங்கள் தலைவர் 2011 மே மாதம் 16ஆம் திகதி தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்த நேரத்திலேயே 2-ஜியையும் (ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம்), இலங்கை தமிழருக்கு எதிரான போரையும் கொண்டு வந்து நம் கட்சியை காங்கிரஸ்காரர்கள் கவிழ்த்து விட்டார்கள். இனி அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளக்கூடாது என்று அறிவித்தார். அதன் முதல்கட்டம்தான் சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட்டது" என்ற அவர், "ஆனால் இப்போது காங்கிரஸிலிருந்து தி.மு.க. வெளியேற வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தது மு.க. ஸ்டாலின் என்பதுபோல் பிரசாரத்தை கிளப்பி விட்டார்கள். தி.மு.க. வை பொறுத்தவரை இன்னமும் தலைவர்தான் முடிவு எடுக்கிறார். அதை செயல்படுத்தும் இடத்தில் மட்டுமே மற்றவர்கள் இருக்கிறோம்" என்று "பொடி" வைத்து பேசினார். இந்த சீனியர் லீடரின் கருத்தை வலியுறுத்தும் வகையில், "காங்கிரஸிலிருந்து தி.மு.க. விலகியது ஸ்டாலின் எடுத்த முடிவு" என்று செய்தி வெளியிட்ட பத்திரிக்கையை கண்டித்து தி.மு.க. தலைவர் கருணாநிதியே அறிக்கை விட்டார்.

இந்த சர்ச்சை முடிந்த கையோடு மத்திய அமைச்சராக இருந்த மு.க. அழகிரி விவகாரம் வெடித்தது. "அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்யும் முடிவை தன்னிடம் கேட்காமல் எடுத்து விட்டீர்கள்" என்ற கோபத்தில் பிரதமரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுக்கப்போன தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலுவுடன் செல்ல மறுத்தார். பிரதமர் அலுவலகத்தில் பாலு தரப்பினர் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட அழகிரி அங்கேயுள்ள மத்திய அமைச்சர் நாராயணசாமி அறையில் அமர்ந்து விட்டார். பாலு தலைமையில் உள்ளவர்கள் கடிதத்தை கொடுத்து விட்டுச் சென்ற பிறகு, அழகிரி தன்னுடன் இன்னொரு அமைச்சர் நெப்போலியனை அழைத்துக் கொண்டு போய் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். மு.க. அழகிரி தனக்கு பொலிஸ் பாதுகாப்பு கேட்பதற்காகவே அப்படி தனியாக சந்தித்தார் என்ற தகவலும் உண்டு. அதை நிரூபிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி அமைச்சர் பதவியிலிருந்து விலகிய அழகிரிக்கு பொலிஸ் பந்தோபஸ்டு கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி கட்சியின் குழுத் தலைவருடன் சென்று ராஜினாமா கடிதத்தைக் கொடுத்ததைக் கூட தலைமை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அதன் பிறகு நடைபெற்ற தி.மு.க. செயற்குழு கூட்டத்திற்கும் அவர் வரவில்லை. இத்தனைக்கும் மத்திய அரசிலிருந்து வெளியேறிய முடிவை "அப்ரூவ்" பண்ண போடப்பட்ட செயற்குழுக்கூட்டம் இது. மதுரைபோன அழகிரி "செயற்குழு கூட்டத்தில் எவ்வளவு பேர் கலந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன்" என்று சர்வசாதரணமாக பதில் சொல்லி விட்டு அமைதியாகி விட்டார்.

இதன்பிறகு நடைபெற்ற ஒரு சம்பவம் தி.மு.க. தலைவர் கருணாநிதியை ரொம்பவும் டென்ஷனாக்கியது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தி.மு.க.வின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநிலத் தலைவராக இருக்கும் கனிமொழி கலந்து கொள்ளும் கூட்டம். அதற்கு முன்கூட்டியே மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடியிடம் அனுமதி வாங்கப்பட்டிருந்தது. ஆனால் கூட்டம் நடைபெறும் தினத்தில் பொன்முடி நேராக கலைஞர் கருணாநிதியிடம் சென்று, "என்னிடம் அனுமதி பெறாமலேயே கூட்டத்திற்கு வருகிறார் கனிமொழி" என்று புகார் சொல்ல, அதை தி.மு.க. பொருளாளர் ஸ்டாலினும் வழிமொழிய விவாதம் சூடுபிடித்தது. இறுதியில், "உன்னால் பிரச்சினை வரும் என்கிறார்கள். நீ அக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம்" என்று கனிமொழிக்கு அட்வைஸ் பண்ணினார் தி.மு.க. தலைவர். இதனால் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட அக்கூட்டத்தில் கனிமொழி கலந்துகொள்ள முடியாமல் போனது. கனிமொழி கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு கட்சிக்குள் இப்படி அடிக்கடி "தடை" போடப்படுகிறது என்பது கனிமொழி ஆதரவாளர்கள் மத்தியில் குமுறிக் கொண்டிருக்கிறது. இந்த விடயத்தில் தி.மு.க. தலைமை ரொம்பவுமே அப்செட் ஆனது. இதன் பிறகு நடைபெற்ற தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் பொதுக்குழுகூட்டத்தில் பேசிய கட்சி தலைவர் கருணாநிதி, "உங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். அது ஒற்றுமையாக இருங்கள். ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுங்கள். நம்மவர்களையே எதிரிகள் போல் கருதாதீர்கள். ஏனென்றால் "பிரிவினை" பெருவினையாக மாறி தி.மு.க.வையே அழித்து விடும்" என்று எச்சரிக்கை விடும் தொனியில் பேசினார். இதை தன் அருகில் ஸ்டாலினை வைத்துக் கொண்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் நிலைமையில் எந்த வித மாற்றமும் இல்லை. தி.மு.க. செயற்குழுவில் கலந்துகொள்ளாத அழகிரியை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்ற கோரிக்கை ஸ்டாலின் ஆதரவாளர்களால் தி.மு.க. தலைமையிடம் முன் வைக்கப்படுகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்த வேண்டும் என்று ஸ்டாலின் ஆதரவாளர்களான இரண்டாம் கட்ட தலைவர்கள் வற்புறுத்தப்படுவதால், பல இரண்டாம் கட்ட தலைவர்கள் (குறிப்பாக முன்னாள் மாநில, மத்திய அமைச்சர்கள்) அறிவாலயம் பக்கமே போகாமல் தங்கள் தொகுதிப்பக்கமாக ஓடி விடுகிறார்கள். "குடும்ப சண்டையில் நம் தலை உருளும். ஆகவே இப்போதைக்கு அறிவாலயம் பக்கம் போக வேண்டாம்" என்றே பல இரண்டாம் கட்ட தலைவர்கள் மத்தியில் முணுமுணுப்பு தெரிகிறது. கனிமொழி மீது புகார் சொன்ன முன்னாள் அமைச்சர் பொன்முடி தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் அமர்ந்து பல்வேறு பிரச்சினைகள் பற்றி விவாதிக்கும் வழக்கம் உடையவர். ஆனால் அவர் அந்த புகார் செய்த பிறகு தி.மு.க. தலைவரின் கலந்தாலோசனைக் கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியொரு பரபரப்பான சூழ்நிலையில், மார்ச் 30ஆம் திகதி தி.மு.க. சொற்பொழிவாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கட்சி சொற்பொழிவாளர்கள் கூட்டம் மிக முக்கியமானது. குறிப்பாக மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியிலிருந்து விலகியிருக்கும் சூழ்நிலையில், அதை விளக்கி தமிழகம் முழுக்க உள்ள சந்து பொந்துகளில் கொண்டு போகும் திறமை படைத்தது இந்த சொற்பொழிவாளர்கள் அணிதான். ஆனால் அப்படிப்பட்ட அணியின் கூட்டத்தை திடீரென்று ரத்து செய்து விட்டார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.

சொற்பொழிவாளர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு, கலைஞர் கருணாநிதியால் பேச முடியவில்லை (தொண்டை வலியால் அவஸ்தைப்படுகிறார் என்கிறார்கள்) என்ற ஒரு காரணம் சொல்லப்படுகிறது. ஆனால் தி.மு.க. உள்வட்டத் தலைவர் ஒருவரோ, "அதெல்லாம் காரணமில்லை. தலைவர் வைராக்கியமிக்கவர். சொற்பொழிவாளர்கள் கூட்டத்தின் முக்கியத்துவம் அவருக்குத் தெரியும். தொண்டை வலியுடன் கூட பேசுவார். ஏன் தொ.மு.ச. பொதுக்குழுவில் தொண்டை வலியுடன்தான் வந்து பேசினார். மு.க. அழகிரிதான் முரண்டு பிடிக்கிறார் என்று ஸ்டாலினுக்கு பிரச்சினை. ஆனால் கனிமொழியால் ஸ்டாலினுக்கு என்ன பிரச்சினை? கனிமொழி கூட்டங்களுக்கும் ஏன் ஸ்டாலின் தொல்லை கொடுக்க வேண்டும். கூட்டத்திற்கு போகாதே என்று கனிமொழியை எச்சரிக்க வேண்டும் என்ற வருத்தத்தில் இருக்கிறார் தலைவர். அது மட்டுமின்றி தலைவராக நாம் இருக்கும் போதே இவ்வளவு நடைபெறுகிறதே என்ற ஆதங்கமும் அவருக்கு இருக்கிறது. கட்சியின் தலைவர் என்ற முறையில் அதிகாரம் நம்மிடம் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வியை தனக்குள்ளே கேட்டுக் கொண்டு, அவர் கண்முன்பே நடக்கும் உள்கட்சி பூசல்களை வேதனையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்." என்று உருக்கமாகச் சொன்னார்.

இந்த பிரச்சினைகளால் தி.மு.க.வின் உள்கட்சி தேர்தல்களில் கிளைச் செயலாளர்கள் தேர்தலை மட்டும் இப்போது நடத்தி விட்டு, மற்ற நிர்வாகிகள் தேர்தல்களை நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு வைத்துக் கொள்ளலாம் என்ற தீவிர சிந்தனையில் இருக்கிறதாம் தி.மு.க. தலைமை. ஏனென்றால் வரப்போகின்ற கட்சி தேர்தல் முக்கியமான தேர்தல். ஸ்டாலின் கட்சிக்குள் தனக்குத்தான் அனைத்துமே என்று உறுதிபடுத்திக் கொள்ளும் தேர்தல். அதேபோல் மற்ற கோஷ்டிகளில் உள்ளவர்களும் கருதினால், கட்சி தேர்தல் கலவரத்தில் முடிந்து விடும் என்ற அச்சம் தி.மு.க. தலைமைக்கு இருப்பதாகவே தகவல். ஆகவே, இன்றைய சூழ்நிலையில் மத்திய அரசிலிருந்து விலகி வந்துவிட்ட தி.மு.க., ஒருமுகமாக எப்படி நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது என்ற போராட்டத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இப்படி "உள்கட்சி போராட்டத்தை" சந்தித்த கட்சிகள், தேர்தலில் சோதனைகளை சந்தித்த வரலாறு உண்டு. அதை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வும் கற்றுக்கொள்ளப் போகிறதா என்பதுதான் இப்போது அக்கட்சிக்குள் நடக்கும் உள்கட்சி போராட்டத்தின் "எச்சரிக்கை மணியாக" இருக்கிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X