2025 மே 19, திங்கட்கிழமை

வடக்குத் தேர்தல் அக்னிப் பரீட்சையா?

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 03 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் ஓர் அக்னிப் பரீட்சையாகவே அமையப்போகிறது என்பதை, இப்போதே உணரக் கூடியளவுக்கு சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன.

போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் முடிந்து போயுள்ள நிலையில், வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்துவதில் காணப்படும் இழுபறி நிலை இதனை ஒரு சர்வதேச விவகாரமாக்கியுள்ளது.

அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளும், இந்தியா போன்ற நாடுகளும் வடக்கு மாகாணசபைக்கு ஜனநாயக ரீதியான தேர்தலை நடத்தி, தமிழ்மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன.

இந்தநிலையில், வரும் செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர் வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச சமூகத்துக்கு ஏற்கனவே வாக்குறுதி கொடுத்துள்ளார். இந்தக் காலஅவகாசம் முடிவடைய இன்னமும் 5 மாதங்களே உள்ளன.

தேர்தல் திணைக்களம், வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்காக வாக்காளர் பட்டியலை தயார் செய்து வைத்துள்ளது. எனினும், வடக்கு மாகாணசபையை உருவாக்கும் வர்த்தமானிப் பிரகடனத்தை இன்னமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிடாததால், தம்மால் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆரம்பிக்க முடியாதுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.

செப்டெம்பரில் தேர்தலை நடத்துவதாயின் அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே ஜனாதிபதி இந்த வர்த்தமானிப் பிரகடனத்தை வெளியிட வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். வடக்கில் தேர்தலை நடத்துவதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதை வெளிப்படுத்துவதற்கான எந்த அறிகுறிகளையும் இதுவரை காணமுடியவில்லை. ஆனால், வடக்கில் நியாயமான சூழலில் தேர்தலை நடத்துவதைத் தடுப்பதற்கான முயற்சிகள் மட்டும் தீவிரமான இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது.

ஒன்று வடக்கிற்குள் இடம்பெறும் சம்பவங்கள். இரண்டாவது வடக்கிற்கு வெளியே மேற்கொள்ளப்படும் முயற்சிகள் என்று இதனை வேறுபடுத்தலாம்.

கடந்தவாரம் கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில், தேர்தல் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது, நடத்தப்பட்ட தாக்குதல் சுதந்திரமான அரசியல் செயற்பாடுகள் வடக்கில் எந்தளவுக்கு சாத்தியம் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது அரசியல் செயற்பாடுகளை முடக்கும் நோக்கில் நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் இது தான் என்றில்லை. இதற்கு முன்னரும் பல சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கின்ற எந்த முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது ஏவிவிடப்படும் வன்முறைகளை சாதாரணமான அரசியல் எதிர்ப்புப் போராட்டமாக காட்டிக் கொள்ளலாம் என்று அரசாங்கம் கருதுகிறது போலும். குறிப்பாக கட்சி மோதல்களாக இதனை வெளிப்படுத்த அரசாங்கம் முற்படலாம்.

ஆனால், வடக்கு மாகாணசபைக்குத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், இடம்பெற்று வரும் இத்தகைய தாக்குதல்கள், தேர்தலை சுதந்திரமாக நடத்த முடியுமா – தேர்தல் சுதந்திரமாக நடத்தப்படுமா என்ற கேள்விகளையே எழுப்ப வைத்துள்ளன.

இந்தத் தேர்தலை ஏனைய எட்டு மாகாணசபைகளுக்கான தேர்தலைப் போன்று கருதிவிட முடியாது.

2008ஆம் ஆண்டு கிழக்கை விடுவித்து விட்டதாக அறிவித்த அரசாங்கம், அவசர அவசரமாக கிழக்கு மாகாணசபைக்கு தேர்தலை நடத்தியபோது இருந்த எதிர்பார்ப்பு - பரபரப்பை விடவும், அதிகமான எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் இதற்கு உள்ளது.

போர் முடிந்த பின்னர் வடக்கில் ஒரு நிர்வாகத்தை முதல்முறையாக அமைப்பதற்கான தேர்தல் இது. இதனை உலகமே உன்னிப்பாக கண்காணிக்கிறது. கண்காணிக்கும். எனவே, முறையாகத் தேர்தலை நடத்தாது போனால், அரசாங்கத்தை அது பாரிய நெருக்கடிக்குள் தள்ளி விடும்.

சுதந்திரமான தேர்தலை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு போதிய வாய்ப்புகள் அரசாங்கத்துக்கு இருந்தாலும், அது தவறவிடப்படுவது, வெளியுலகின் நம்பிக்கையீனத்தையே சம்பாதிக்க வைக்கும். இதுமட்டுமன்றி வடக்கில் படைக்குறைப்பு, கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தல் போன்றவற்றிலும் உலகம் கவனமாக இருக்கிறது.

போரைக் காரணம் காட்டி, ஜனநாயக ரீதியான மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டதும், கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டதும், தான் இதுவரையான வரலாறு. இந்த நிலைமையில் இருந்து வடக்கு மாகாணம் இன்னமும் முற்றுமுழுதாக விடுபடவில்லை. ஊடகங்கள் மீது தொடரும் தாக்குதல்களை இதற்கான ஆதாரங்களாக குறிப்பிடலாம். போரைக் காரணம் காட்டி அரசாங்கத்தினால் இனிமேல், வடக்கில் இயல்பற்ற சூழல் நிலவுவதாக நியாயப்படுத்த முடியாது.

அவ்வாறு செய்ய முற்பட்டால் அது வடக்கில் நிரந்தரமான, நிலையான அமைதியை அரசாங்கம் ஏற்படுத்தி விட்டது என்ற பிரசாரம் உண்மையானதா என்ற கேள்வியை எழுப்ப வைக்கும். இப்போது கூடத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற எதிரணி அரசியல் சக்திகளுக்கு வடக்கில் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் அரசாங்கத்துக்கு ஒருபோதும் நற்பெயரைத் தேடித்தரப் போவதில்லை.

இவையெல்லாம், தேர்தலை நடத்துவதற்கு கொடுக்கப்பட்ட காலக்கெடு நெருங்க நெருங்க வடக்கில் தேர்தல் ஒன்றை நடத்தும் சூழலில் இருந்து அரசாங்கம் விலகிச் செல்கிறதா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

இன்னொரு பக்கத்தில் வடக்கில் தேர்தலை நடத்தக் கூடாது என்று தெற்கிலுள்ள கடும் போக்காளர்கள் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளதும் ஒரு நல்ல சகுனமாக இருக்கப் போவதில்லை.

வடக்கில் தேர்தலை நடத்துவது ஈழத்தை கொடுப்பதற்குச் சமம் என்று செய்யப்படுகின்ற பிரசாரங்களும், அதற்கு எதிரான போராட்டங்களை நடத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளும், அரசாங்கத்தினால் ஊக்குவிக்கப்படலாம்.

ஏனென்றால், அரசாங்கம் இலங்கைத் தீவில் எந்தவொரு மாகாணசபையும் தனது கையை விட்டுப் போவதை விரும்பவில்லை. அதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசம் செல்வது அதற்குச் சுத்தமாகவே பிடிக்கவில்லை.

இத்தகைய நிலையில், தெற்கில் இருந்து வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு எதிராக கிளம்பும் குரல்களை அரசாங்கம் தாராளமாக ஊக்குவிக்க முற்படலாம். அது தேர்தலை இன்னமும் பின்தள்ளிப் போடுவதற்கு உகந்த காரணமாக அரசாங்கத்தினால் கருதப்படவும் கூடும்.

ஆனால், அத்தகையதொரு ஆபத்தான விளையாட்டில் அரசாங்கம் இறங்குமேயானால், அது வெளியுலகில் பெரிய எதிர்ப்பையும் கண்டனங்களையும் அரசாங்கத்துக்கு ஏற்படுத்தத் தவறாது. இப்போதுள்ள நிலையில், வடக்கில் தேர்தலை நியாயமாக நடத்துவது மட்டுமன்றி, அதற்கான புறச்சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதும் கூட, அரசாங்கத்துக்கு சிக்கலாகவே இருக்கும். தேர்தலுக்கு முன்னரே பெருக ஆரம்பித்துள்ள வன்முறைகள் நியாயமான தேர்தல் குறித்த அச்சங்களை வடக்கிலுள்ள மக்கள் மத்தியில் ஏற்படுத்த ஆரம்பித்து விட்டது.

ஒருவேளை நியாயமற்ற ஒரு தேர்தல் நடத்தப்படுமானால் அல்லது, அச்சம் நிறைந்த ஒரு சூழலில் தேர்தல் நடத்தப்பட்டு ஓர் ஆட்சி நிறுவப்படுமானால், அரசாங்கம் தனியே வெளியுலக ஆதரவை மட்டும் இழக்கப் போவதில்லை.

வடக்கிலுள்ள மக்களின் அமைதியான எதிர்காலம் பற்றிய நம்பிக்கைகளையும் அது சிதைத்து விடும். அது இலங்கையினது நீடித்த அமைதிக்கு சவாலான விடயமாக மாறிவிடும் ஆபத்தும் உள்ளது.

You May Also Like

  Comments - 0

  • Thamizhan Friday, 12 April 2013 09:00 AM

    இலங்கை என்னும் அரக்கனை இந்தியா முழுவதும் அழிக்கும்.....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X