2025 மே 19, திங்கட்கிழமை

கருணாநிதி- விஜயகாந்த் திடீர் சந்திப்பு: தகிதகிக்கும் தமிழக அரசியல்!

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 23 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல தமிழ் பத்திரிகையான தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் மறைவு அரசியலின் இரு துருவங்களை ஓரிடத்தில் சங்கமிக்க வைத்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியும், தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்தும் போயஸ் கார்டனில் உள்ள சிவந்தி ஆதித்தன் இல்லத்தில் சந்தித்துள்ளார்கள். மறைந்த சிவந்தி ஆதித்தன் உடலுக்கு மலர்வளையம் வைக்கப்போன இடத்தில் நிகழ்ந்த இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

2005இல் தே.மு.தி.க. தொடங்கிய பிறகு தன் தி.மு.க. எதிர்ப்பில் விஜயகாந்த் சற்றும் குறையவில்லை. குறிப்பாக 2006 முதல் 2011வரை நடைபெற்ற தி.மு.க. ஆட்சியின்போது இந்த எதிர்ப்பில் மிகவும் உறுதியாகவே இருந்தார். அதேபோல் எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க. மீதும் அவரது சாடல்கள் நிற்கவில்லை. ஏனென்றால் "தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விற்கு நான் மாற்று சக்தி" என்ற பிரசாரத்தை முன்னெடுத்து விஜயகாந்த் கட்சி தொடங்கியதால், இரு கட்சிகளையும் எதிர்ப்பது என்பதில் "காரம்" குறையாமலேயே இருந்தார் விஜயகாந்த். அவர் வாக்குகளை பிரித்ததன் விளைவாக, 2006இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. பாட்டாளி மக்கள் கட்சி, ம.தி.மு.க. போன்ற கட்சிகள் தேர்தல் கூட்டணி களத்தில் மதிப்பை இழந்தன. பிறகு 2009 நாடாளுமன்ற தேர்தலிலும் தனியே நின்றார் விஜயகாந்த். அதனால் தி.மு.க. அணியே அதிக எம்.பி.க்களை தமிழகத்தில் பெற்றது. அ.தி.மு.க.வின் வெற்றி முகம் படு மோசமாக பாதிக்கப்பட்டது. இதுபோன்ற சூழ்நிலையில் "தி.மு.க.- காங்கிரஸ்" கூட்டணியை வீழ்த்த விஜயகாந்த் தேவை என்ற எண்ணவோட்டத்திற்கு வந்தது அ.தி.மு.க. அதனால் 2011 சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி சேர்ந்தன. தி.மு.க. கூட்டணியை வீழ்த்தி தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தன. அ.தி.மு.க. கூட்டணி வெற்றிக்கு விஜயகாந்த் பெருமளவில் உதவினார் என்பது அவரது கட்சி நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற 10 சதவீத வாக்குகளை வைத்து சொல்லி விட முடியும். இந்த வெற்றி மூன்றாவது சக்தி என்ற அந்தஸ்தில் இருந்த காங்கிரஸை பின்னுக்குத் தள்ளியது. அது மட்டுமின்றி பாட்டாளி மக்கள் கட்சியும், (டாக்டர் ராமதாஸ்), விடுதலை சிறுத்தைகள் கட்சியும் (திருமாவளவன்) ஒரே கூட்டணியில் இருந்தாலும், விஜயகாந்த் இருக்கும் கூட்டணியை வீழ்த்த முடியாது என்ற நிலை உருவானது.

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் வெற்றி தோல்வியை நிச்சயிப்பது விஜயகாந்த் என்ற நிலை 2011 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு உருவானது. இதுபோன்ற சூழ்நிலையில்தான் அ.தி.மு.க.விற்கும் விஜயகாந்திற்கும் மோதல் வெடித்தது. அவரது கட்சியான தே.மு.தி.க. "ஆளுங்கட்சி கூட்டணியிலிருந்து" வெளியேறியது. இதன்பிறகு விஜயகாந்த்தை தி.மு.க. அணிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்ற விதத்தில் தனது அரசியல் தந்திரங்களை மேற்கொள்ளத் தொடங்கினார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. எதிர்கட்சி தலைவராக இருக்கும் விஜயகாந்த் சட்டமன்றத்திலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டதை கண்டித்தார். விஜயகாந்த் மீது போடப்படும் அவதூறு வழக்குகளை கண்டித்தார். விஜயகாந்த் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் சஸ்பென்ட் செய்யப்படுவதை விமர்சித்தார். தமிழகத்தில் தே.மு.தி.க.விற்கு நடக்கும் நெருக்கடிகளைப் பார்த்து அவர்களுக்காக குரல் கொடுப்பவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி மட்டுமே என்ற எண்ணம் ஏற்பட்டது. ஏன் தே.மு.தி.க. தொண்டர்கள் மத்தியிலேயே கூட அந்த எண்ணம் உருவாக ஆரம்பித்தது. இதுபோன்றதொரு சூழ்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தன் மகள் திருமணத்திற்காக விஜயகாந்தை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா. அந்த அழைப்பிதழே தி.மு.க. தலைவரின் அனுமதியுடன்தான் கொடுக்கப்பட்டது. அதனையேற்று விஜயகாந்த் திருச்சியில் நடைபெற்ற திருமணத்திற்கு வந்திருந்தால், அப்போதே "கருணாநிதி- விஜயகாந்த்" சந்திப்பு நடைபெற்றிருக்கும். ஆனால் திருச்சியில் நடைபெற்ற அந்த திருமணத்திற்கு செல்லவில்லை விஜயகாந்த்.

ஆனாலும் தி.மு.க. தரப்பு விஜயகாந்தை நோக்கி "வீசும்" அன்புக் கணைகளை குறைக்கவில்லை. குறிப்பாக காங்கிரஸ் கூட்டணியிலிருந்தும், மத்திய அரசிலிருந்தும் தி.மு.க. "விடை" பெற்ற பிறகு, இந்த பாசப் போராட்டம் மேலும் அதிகமானது. சென்ற ஏப்ரல் 13ஆம் திகதி தி.மு.க. தலைவர் கருணாநிதி "ஓங்கி குரல் கொடுப்போம் வாரீர்" என்று ஒரு பரபரப்பு அறிக்கை விட்டார். அது அவர் கட்சி உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதம் என்றாலும் அதில் தே.மு.தி.க. படும் அவஸ்தைகள், விஜயகாந்திற்கு நேரும் சங்கடங்கள் போன்றவற்றை பிரதானமாக பட்டியலிட்டிருந்தார். அந்த கடிதத்தில் அவர், "தமிழகத்தில் 2011 சட்டமன்ற தேர்தலுக்குப் பின் பிரதான எதிர்கட்சியாக தே.மு.தி.க.தான் அமைந்தது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் தோழமை கட்சிதான் தே.மு.தி.க. தற்போது அந்தக் கட்சி இந்த ஆட்சியிலே என்ன பாடுபடுகிறது? தே.மு.தி.க.விற்கும், தி.மு.கழகத்திற்கும் தோழமை கிடையாதுதான். ஆனாலும் அ.தி.மு.க. அரசு தே.மு.தி.க. என்ற எதிர்கட்சியின் மீது எடுக்கும் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது வேதனையாகத்தான் இருக்கிறது" என்று உருக்கமாக எழுதினார். இப்படி எழுதி விட்டு அதே கடிதத்தின் இறுதியில், "எதிர்கட்சி என்ற ஒன்றே இருக்கக்கூடாது. இருந்தாலும் அது தன் கடமையை ஆற்ற அனுமதிக்கக்கூடாது என்ற எண்ணத்தோடு காரியங்கள் நடத்தப்படுகின்றன... ஜனநாயக மாண்புகளில் நம்பிக்கை கொண்டுள்ள அனைவரும் ஒருங்கிணைந்து ஓங்கிக் குரல் கொடுத்திட "வாரீர்" என்று அன்புடன் அழைக்கிறேன்" என்றார். இது பிரதானமாக விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வுக்கு விடப்பட்ட அழைப்பு.

இந்த அழைப்பிற்கு விஜயகாந்த் பதில் சொல்லவில்லை. ஆனால் அதுபோன்றதொரு "தி.மு.க.- தே.மு.தி.க." நெருக்கம் வந்து விடக்கூடாது என்பதில் அ.தி.மு.க. தலைமை மிகவும் உஷாராகவே அரசியல் நிகழ்வுகளை நடத்தி வருகிறது. தி.மு.க. தலைவரின் இந்த அறிவிப்பை முறியடிக்க, தே.மு.தி.க.விற்கு ஒரு திடீர் முக்கியத்துவத்தைக் கொடுக்க முன் வந்தார் முதல்வர் ஜெயலலிதா. தமிழக சட்டமன்றத்தில் தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் முதலில் பேச அனுமதி அளித்து வந்தார் சபாநாயகர். ஏனென்றால் அக்கட்சி பிரதான எதிர்க்கட்சி. ஆனால் அந்த உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கிறார்கள் என்று காரணம் காட்டி பிறகு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை முதலில் சட்டமன்றத்தில் பேச விடுவதில்லை. இதை கண்டித்து தே.மு.தி.க.வினர் வெளிநடப்பு எல்லாம் செய்தார்கள். சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்கள். ஆனால் அவரோ, "அவையை நடத்தும் உரிமை எனக்கு இருக்கிறது. அவை நடவடிக்கைகளுக்கு ஏற்ற வகையில் அந்த முடிவை எடுத்துள்ளேன்" என்று கூறி, தே.மு.தி.க.வின் கோரிக்கையை பரிசீலிக்கவில்லை. தி.மு.க. தலைவரின் "ஒங்கி குரல் கொடுப்போம். வாரீர்" என்ற அழைப்பிற்கு பிறகு, முதல்வர் ஜெயலலிதாவே சபாநாயகருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதனையேற்று தே.மு.தி.க. உறுப்பினர்களுக்கு மீண்டும் "முதலில் பேசும் உரிமை" சட்டமன்றத்தில் வழங்கப்பட்டது.

இப்படி முதல்வரே மீட்டுக் கொடுத்த உரிமை விஜயகாந்திற்கு மனநிறைவைக் கொடுத்ததோ இல்லையோ அதே கட்சியின் எதிர்கட்சி துணை தலைவராக இருக்கும் பன்ருட்டி ராமச்சந்திரனுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. உரிமையை மீட்டுக் கொடுத்த முதல்வரை சட்டமன்றத்தில் வெகுவாகப் பாராட்டிப் பேசிய பன்ருட்டி ராமச்சந்திரன், "தாராள மனதோடு மீண்டும் எங்களுக்குரிய இடம் வழங்கியதற்கு மனமார்ந்த் நன்றி. சுடர்விளக்காயினும் அதற்கு ஒரு தூண்டுகோள் வேண்டும் என்பது போல் சபாநாயகருக்கு தமிழக முதல்வர் தூண்டுகோளாக இருந்திருக்கிறார் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று ஏசுபிரான் சொன்னார். அதைவிட மேலாக திருவள்ளுவர் கெடுதல் செய்பவர்களுக்கும் நல்லது செய்வதுதான் சான்றாண்மை ("இன்னார் செய்தார்" திருக்குறள சுட்டிக்காட்டி" என்று கூறியுள்ளார். அந்த ரீதியில் எங்கள் உரிமையை மீட்டுக் கொடுத்த முதல்வரின் பெருந்தன்மைக்கும், சான்றாண்மைக்கும் இதயம் சார்ந்த நன்றி" என்று புகழுரைத்தார். ஏப்ரல் 18ஆம் திகதியன்று முதல்வர் ஜெயலலிதாவை பன்ருட்டி ராமச்சந்திரன் இப்படி பாராட்டிப் பேசினார்.

உடனே தமிழக அரசியல் களம் பரபரப்பானது. தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க விஜயகாந்த் விரும்பவில்லை. அதனால்தான் பன்ருட்டி ராமச்சந்திரன் முதல்வரை சட்டமன்றத்தில் பாராட்டி பேசி விட்டார் என்றெல்லாம் செய்திகள் சிறகடித்துப் பறக்கத் தொடங்கின. ஆனால் தே.மு.தி.க.வின் அதிகார பூர்வமான டி.வி.யான "கேப்டன் டி.வி"யில் பன்ருட்டி ராமச்சந்திரனின் பாராட்டுரைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதே நேரத்தில் அ.தி.மு.க.வின் டி.வி.யான "ஜெயா டி.வி"யில் பன்ருட்டி ராமச்சந்திரனின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த பேச்சு மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது. இதுபோன்ற சூழ்நிலையில்தான் மறைந்த சிவந்தி ஆதித்தன் இல்லத்திற்கு வந்தார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அங்கு முதலில் பன்ருட்டி ராமச்சந்திரன் நின்றார். அவருக்கு வேண்டிய தி.மு.க. பிரமுகர் ஒருவர், "அண்ணே தலைவர் வருகிறார். கொஞ்சம் இருங்களே" என்று பன்ருட்டி ராமச்சந்திரனிடம் சொன்னாலும், அதற்காக காத்திராமல் அங்கிருந்து விருட்டென்று கிளம்பி விட்டார் பன்ருட்டி ராமச்சந்திரன். ஆனால் அதன் பிறகு வந்தார் விஜயகாந்த். சிவந்தி ஆதித்தனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வந்து காரில் அமருவது வரை காத்திருந்த விஜயகாந்த், கருணாநிதியைப் பார்த்து "வணக்கம் தலைவரே" என்று கூறினார். அதற்கு பதிலளிக்கும் வகையில், "வாப்பா. வணக்கம்" என்றார் கருணாநிதி. இதற்கு முன்பு ஸ்டாலினை விமான நிலையத்தில் சந்தித்துள்ளார் விஜயகாந்த். தே.மு.தி.க. துவங்கிய பிறகு இப்போதுதான் தி.மு.க. தலைவர் கருணாநிதியை நேருக்கு நேர் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு எதிர்கால அரசியல் உறவுக்கு விதை போடும் என்பதே தி.மு.க மற்றும் தே.மு.தி.க. முன்னனித் தலைவர்களின் எண்ணவோட்டமாக இருக்கிறது.

பொதுவாக அரசியலில் இதுபோன்ற சந்திப்புகள்தான் பிறகு கூட்டணிக்கு வித்திடும். சில வாரங்களுக்கு முன்பு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி நடைபயணம் சென்று கொண்டிருந்த வைகோவை சந்தித்தார் முதல்வர் ஜெயலலிதா. அதன்பிறகுதான் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி முறிவு ஏற்பட்டு, அ.தி.மு.க.வுடன் ம.தி.மு.க. கூட்டணி வைக்கும் என்ற பேச்சு எழுந்தது. அந்தப் பேச்சு இன்னமும் உயிரோட்டத்துடன் இருக்கிறது. அதேபோன்று இப்போது தினத்தந்தி அதிபரின் மரணத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும், விஜயகாந்தும் சந்தித்துள்ளார்கள். காங்கிரஸை விட்டு வெளியே வந்து நிற்கும் தி.மு.க.விற்கு இது அடுத்த கூட்டணிக்கான "பிளாட்பாரத்தை" அமைத்துக் கொடுத்திருக்கிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X