2025 மே 19, திங்கட்கிழமை

சொந்தச் செலவில் சூனியம் வைக்கிறதா அரசாங்கம்?

A.P.Mathan   / 2013 மே 05 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

அண்மையில் வெலிஓயாவில் வைத்து அறிவித்தபடி, வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை வரும் செப்டெம்பர் மாதம் நடத்துவதோ அல்லது நடத்தாமல் விடுவதோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கடியாகவே அமையப் போகிறது.

வடக்கு மாகாணசபைக்கு செப்டெம்பரில் தேர்தலை நடத்தப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்த பின்னர், எழுந்துள்ள எதிர்ப்புகள், இந்தத் தேர்தல் இலகுவானதொன்றாக இருக்கப் போவதில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

தேர்தலுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்ட தமிழ் அரசியல் கட்சிகள் மீதான தாக்குதல்களும், தமிழ் ஊடகங்கள் மீதான தாக்குதல்களும் வடக்கில் சுமுகமான - சுதந்திரமான சூழலில் தேர்தல் நடக்குமா என்ற கேள்வியை ஏற்கனவே எழுப்ப வைத்துவிட்டன.

இந்தச் சூழலில் வடக்கு மாகாணசபைக்கான தேர்தலுக்கு எழுந்து வரும் எதிர்ப்பு அரசியல் ரீதியான கொந்தளிப்பை இலங்கையில் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு ஒன்றை உருவாக்கலாம் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் மேதினப் பேரணியில், உரையாற்றிய அமைச்சர் விமல் வீரவன்ச, காணி, பொலிஸ் அதிகாரங்கள் பறிக்கப்படாமல் வடக்கு மாகாணசபைக்குத் தேர்தல் நடத்தப்படக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு அரசியலமைப்பைத் திருத்தாமல் தேர்தலை நடத்த முற்பட்டால் தமது கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் என்றும் அவர் மிரட்டியுள்ளார். இதுபோலவே, அரசாங்கத்தின் இன்னொரு கூட்டணிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாகாணசபைகளிடம் உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வரவேண்டும் என்றும், வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட சிங்களவர்களை மீளக்குடியமர்த்தாமல் தேர்தலை நடத்தக் கூடாது என்றும் ஜாதிக ஹெல உறுமய கூறியுள்ளது.

தேசப்பற்று தேசிய இயக்கமோ, வடக்கில் வாழ்ந்து வந்த 21 ஆயிரம் சிங்களக் குடும்பங்களை மீளக்குடியேற்றாமல் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு எதிராக, வழக்குப் பதிவு செய்யப்போவதாக மிரட்டியுள்ளது.

அரசாங்கத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இருக்கின்ற சிங்கள, பௌத்த கடும்போக்குவாத அரசியல் கட்சிகள், அமைப்புகள் எல்லாமே வடக்கு மாகாணசபைக்குத் தேர்தல் நடத்தப்படுவதை விரும்பவில்லை என்பதையே, இந்த எதிர்ப்புகளில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு எதிரான இந்த எதிர்ப்புணர்வு நாளடையில் இன்னும் தீவிரமடையலாம். அரசாங்கத்துக்கு அது பெருந்தலைவலியாகும் என்பதால் தான், இந்தத் தேர்தல் நடக்குமா என்ற கேள்வி இன்னமும் பலரால் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.

விமல் வீரவன்சவோ அல்லது ஜாதிக ஹெல உறுமயவோ விடுக்கும் எச்சரிக்கைகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அதுவும் வடக்கு, கிழக்கு விவகாரத்தில், அரசாங்கத் தரப்பை கடும்போக்கு நிலைப்பாடுகளை எடுக்க வைத்த பல்வேறு சந்தர்ப்பங்களின் பின்புலத்தில் இந்தக் கட்சிகளே இருந்துள்ளன.

விடுதலைப் புலிகளுடனான போர்நிறுத்தத்துக்கு, பேச்சுக்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்தியதன் மூலம், போரை நோக்கி நாட்டைத் தள்ளிச் சென்றதிலும் சரி, வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்ததிலும் சரி இந்த கட்சிகளின் பங்கு முக்கியமானது.

எனவே, வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக இந்தக் கட்சிகள் விடுக்கின்ற எச்சரிக்கைகளை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் இலகுவாக புறந்தள்ளி விடமுடியாது.

விமல் வீரவன்சவோ, சம்பிக்க ரணவக்கவோ விடுக்கின்ற எச்சரிக்கைகள் ஒரு புறத்தில் இருக்க, காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணசபைகளிடம் விட்டு வைக்க அரசாங்கமும் கூடத் தயாராக இல்லை என்பது உண்மை.

ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படாது என்ற கருத்தை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அரசாங்கத்தில் முக்கியமானவர்களான பசில் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ போன்றவர்களும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தநிலையில், வடக்கு மாகாணசபைக்குத் தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக, இந்த அதிகாரங்களைப் பறித்துக்கொள்ளும் வகையிலான 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆனால் வெளிப்படையாக 13ஆவது திருத்தத்தில் உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பறிக்கின்ற வகையில் சட்டத் திருத்தத்தைக் கொண்ட வந்தால் அதற்கு, வெளியே எதிர்ப்பு எழும்பும்.
இதனைத் தவிர்ப்பதற்காகவே, ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாக குறைக்கவும், தலைமை நீதியரசரின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாக வரையறுக்கவும் இந்த திருத்தத்தில் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதியின் பதவிக்காலத்தைக் குறைப்பது என்ற இனிப்புப் பூசப்பட்ட மாத்திரைக்குள் தான் மாகாணசபைகளின் அதிகாரங்கள் பறிக்கப்படவுள்ளன. இந்தநிலையில், இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றி மாகாணசபைகளின் அதிகாரங்களைப் குறைப்பதற்கு, சிங்கள - பௌத்த தேசியவாதிகள் ஆதரவு அரசாங்கத்துக்கு இருந்தாலும், வெளியுலகில் எதிர்ப்புகள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

குறிப்பாக இந்தியா இந்த விடயத்தில் என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி இருக்கிறது.

ஏனென்றால் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மாகாணசபைகள் உருவாக்கப்பட்டதற்குக் காரணமே இந்தியா தான். 1987ஆம் ஆண்டு இந்திய - இலங்கை அமைதி உடன்பாட்டின் மூலம் மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதும் இந்தியா தான்.

இப்போதும் கூட, வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்ற வாக்குறுதியைப் பெற்ற பின்னர் தான், கொமன்வெல்த் மாநாட்டு விவகாரத்தில் எழுந்த நெருக்கடியில் இருந்து இலங்கையைக் காப்பாற்றியுள்ளது இந்தியா.

இந்தநிலையில், மாகாணங்களின் பொலிஸ், காணி அதிகாரங்களைப் பறித்த பின்னர் தான் தேர்தலை நடத்தப் போவதாக, திடீரென அரசாங்கம் அறிவித்தால், இந்தியாவின் எதிர்வினை எத்தகையதாக இருக்கும் என்பது கேள்விக்குரியது.

சிலவேளைகளில் இந்தியா அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்து விடலாம்.

சிலவேளைகளில், வெளிப்படையாக இல்லாவிட்டாலும் இராஜதந்திர ரீதியாக அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கலாம். இந்த விடயத்தில் இலங்கை அரசின் முடிவை இந்தியா ஏற்க மறுத்தால், மீண்டும் கொமன்வெல்த் மாநாட்டு விடயத்தில் இலங்கை நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.

அதேவேளை, காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பறிக்கின்ற இலங்கை அரசின் எந்தவொரு முயற்சிக்கும் எதிர்ப்புத் தெரிவிக்காமல் இந்தியா இணங்கிப் போகுமேயானால், அது இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்ட வரலாற்றுத் தோல்வியாகவே அமையும்.

ஏனென்றால், இப்பிரச்சினைக்கு 13ஆவது திருத்தம் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்று இப்போதும் வலியுறுத்தி வருகிறது இந்தியா.

1987இல் ராஜிவ்காந்தியால் முன்மொழியப்பட்ட திட்டத்தின்படி, மாகாணசபைகளுக்குக் கொடுக்கப்பட்ட காணி, பொலிஸ் அதிகாரங்கள் இலங்கை அரசினால் பிடுங்கிக் கொள்ளப்படுவதை இந்தியா வேடிக்கை பார்க்குமேயானால், அது இந்திய வெளிவிவகாரக் கொள்கையின் மிகப்பெரிய தோல்வியாகவே கருதப்படும்.

அதேவேளை, இந்தியாவினதோ அமெரிக்காவினதோ சொல்லைக் கேட்டு மாகாணங்களின் காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பறிக்கின்ற முயற்சிகளை இலங்கை அரசாங்கம் கைவிட்டு விடும் என்று எதிர்பார்க்க முடியாது.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், வெளிநாட்டு அழுத்தங்களை விட, சிங்கள, பௌத்த மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறது. விமல் வீரவன்சவும், சம்பிக்க ரணவக்கவும் கிளப்பி விட்டுள்ள பிரச்சினை, சிங்கள மக்களைக் கிளர்ந்தெழச் செய்து விடும் என்ற ஒரு காரணத்தை வைத்துக் கொண்டே, அரசாங்கத்தினால் இலகுவாக அரசியலமைப்புத் திருத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

அதுமட்டுமன்றி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்படும் சட்டத்தை எந்தவொரு ஜனநாயக உலகமும் ஏற்றேயாக வேண்டும். பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அமெரிக்கா ஏற்கவில்லை.

ஆனால், அரசாங்கம் அது பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவு என்று நியாயம் கூறியது.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அரசாங்கத்தின் வசம் உள்ள நிலையில், 19ஆவது திருத்தத்தின் மூலம் மாகாணசபைகளின் காணி, பொலிஸ் அதிகாரங்களை பறிப்பதுடன் மட்டும் நின்று விடாமல், அதற்கு அப்பால் சென்று மாகாணசபைகளையே இல்லாமல் செய்து விடவும் முடியும்.

ஆனால் ஒன்று, சர்வதேச அரங்கில், இந்தியாவுடனான உறவில் இலங்கை நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இப்போது வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவது என்ற முடிவில் இருந்தாலும், அங்கிருந்து இடம்பெயர்ந்த சிங்கள மக்களை குடியேற்றாமல் தேர்தலை நடத்தக் கூடாது என்ற நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று கோரப்படுமானால், அதனால் நிச்சயம் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி வரும்.

இப்போதைய நிலையில் அரசாங்கம் வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் போனால் பாரிய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. ஏனென்றால் வரும் செப்டெம்பரில் அரசாங்கத்துக்கு பல்வேறு காலக்கெடுக்கள் உள்ளன. பல்வேறு தடைகளைத் தாண்டியாக வேண்டியுள்ளது.

வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் முதலாவது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ள இடைக்கால அறிக்கை இரண்டாவது. கொமன்வெல்த் அமைச்சரவைக் கூட்டம் மூன்றாவது.

இந்த மூன்று தடைகளையும் வெற்றிகரமாகத் தாண்டி ஓடினால் தான், அரசாங்கத்தினால் வரும் நவம்பரில் கொமன்வெல்த் மாநாட்டை சிக்கலின்றி நடத்த முடியும். இல்லையேல் கொமன்வெல்த் மாநாட்டைக் கொழும்பில் நடத்தினாலும் கூட, நெருக்கடிகள், அழுத்தங்கள், விமர்சனங்களைத் தான் அதிகளவில் சந்திக்க வேண்டி வரும். சுருங்கச் சொன்னால் சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொண்டதாகி விடும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X