2025 மே 19, திங்கட்கிழமை

பதினொரு இந்திய அமைச்சர்கள் ராஜினாமா; பரபரப்பாகும் இந்திய அரசியல் களம்

A.P.Mathan   / 2013 மே 13 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது இன்னிங்ஸ் அமைச்சர்களின் "ராஜினாமா" படலங்கள், "நீக்கும் படலங்களில்" சிக்கிக் கொண்டிருக்கிறது. 
 
"மிஸ்டர் க்ளீன்" என்ற இமேஜ் இருந்ததால் 2009 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுத் தர முடிந்தது. அந்த வெற்றியை மீண்டும் காங்கிரஸ் கட்சி பெற்றிவிடக்கூடாது என்ற பின்னணியில் நடைபெறும் இந்த ராஜினாமா படலங்கள் இந்திய அரசியலை கலக்கிக் கொண்டிருக்கிறது. பிரதமரின் வீட்டிற்கே பேரணியாகச் சென்று "நீங்கள் ராஜினாமா செய்யுங்கள்" என்று கூறும் அளவிற்கு அடுத்து ஆட்சிக்கு வர முயற்சி செய்யும்  பாரதீய ஜனதா கட்சி போராட்டத்தை உசுப்பி விட்டிருக்கிறது.
 
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது இன்னிங்ஸை பிரதமர் மன்மோகன்சிங் நம்பிக்கையுடனும், நல்ல மெஜாரிட்டியுடனும் தொடங்கினார். ஏனென்றால் 1996 இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு முதன் முதலாக 2009 நாடாளுமன்ற தேர்தலில்தான் காங்கிரஸ் கட்சி 200இற்கும் மேற்பட்ட எம்.பி.க்களை பெற்று இருக்கின்ற கட்சிகளுக்குள் தனிப்பெருங்கட்சியாக திகழ்ந்தது. அதேபோல் திராவிட முன்னேற்றக் கழகம், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள திரினாமூல் காங்கிரஸ், மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தேசிய வாத காங்கிரஸ் கட்சி ஆகிய மூன்று கட்சிகளும் "உற்ற துணையாக" நின்றன. இவர்கள் தவிர உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாயாவதி, முலயாம்சிங் யாதவ் இருவருமே போட்டி போட்டுக் கொண்டு பிரதமர் மன்மோகன்சிங்கை ஆதரித்தார்கள். இதனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எந்த சிக்கலும் இல்லை என்ற நிலைதான் மேலோங்கி இருந்தது.
 
இதற்கு முதல் சிக்கல் காங்கிரஸ் வடிவிலேயே வந்தது. வெளியுறவுத்துறை இணை அமைச்சராக இருந்த சசிதரூரின் மனைவிக்கு ஐ.பி.எல். கிரிக்கெட் டீமை வைத்திருக்கும் ஒரு கம்பெனியில் பங்குகள் இருக்கின்றன என்ற புகார் வெடித்தது. ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை நடத்திய கமிஷனர் லலித் மோடி மீதான புகார்கள் எழுந்தபோது இந்த புகாரும் சேர்ந்தே வந்தது. அதனால் சசிதரூர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதுதான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது இன்னிங்ஸில் நிகழ்ந்த முதல் ராஜினாமா. அடுத்து, தி.மு.க. வடிவில் திருகுவலி வந்தது. அக்கட்சியைச் சேர்ந்த அ.ராஜா "கம்யூனிக்கேஷன் மற்றும் இன்பர்மேஷன்" துறைக்கு மத்திய அமைச்சராக இருந்தார். அவருக்கு எதிராக இந்திய கணக்காயம் 1.76 லட்சம் கோடி ரூபாய் நஷ்ட அறிக்கை ஒன்றைக் கொடுக்க, 2-ஜி அலைக்கற்றை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதனால் நாடாளுமன்றம் முடங்க, சி.பி.ஐ. விசாரிக்க ஒரு வழியாக ராஜா அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். இது இரண்டாவது ராஜினமா. அடுத்து பலியானதும் தி.மு.க. மத்திய அமைச்சர்தான். அவர் டெக்ஸ்டைல் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன். "ஏர்செல்- மாக்ஸி" கம்பெனி டீலிங் விவகாரத்தில் தனது அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தினார் என்று சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரிக்கத் தொடங்கியதும், தயாநிதி மாறனும் ராஜினாமா செய்தார். இது மூன்றாவது ராஜினாமா! இந்த இரு ராஜினாமாக்களும், கனிமொழி கைதும் தி.மு.க.விற்கும்- காங்கிரஸுக்கும் இடையே உள்ள இடைவெளியை பெரிது படுத்தியது. இறுதியில் இலங்கை பிரச்சினையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இந்தியாவின் நிலைப்பாட்டை கண்டித்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகியது தி.மு.க.
 
இது ஒரு புறமிருக்க, இன்னொரு கூட்டணிக் கட்சியான திரினாமூல் காங்கிரஸும் "ராஜினாமா படலத்தை" தொடக்கியது. அது வேறுவகையில். மத்திய ரயில்வே துறை அமைச்சராக இருந்தார் மம்தா பாணர்ஜி. ஒரு கட்டத்தில் அவர் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். அவரது கட்சி அங்கே ஆட்சி அமைத்தது. அதனால் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு, மேற்கு வங்க முதலமைச்சரானார் மம்தா பாணர்ஜி. அவருக்கப் பதிலாக அவர் கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி ரயில்வே அமைச்சரானார். மம்தாவை கலந்து ஆலோசிக்காமல் ரயில்வே பட்ஜெட் தயாரித்தார் என்ற குற்றச்சாட்டில் அவரை நீக்க வேண்டும் என்று மம்தா போர்க்கொடி தூக்கினார். அதனால் திரிவேதி போய், முகுல் ராய் ரயில்வே அமைச்சரானார். இவரும் மம்தாவின் கட்சியைச் சேர்ந்தவரே. ஆனால் சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற்றார் மம்தா பாணர்ஜி. அதனால் ரயில்வே அமைச்சராக இருந்த முகுல் ராய் பதவி விலகினார். தி.மு.க. விலகுவதற்கு முன்பே மம்தா பாணர்ஜி ஐக்கிய முற்போக்கு கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டார். ஆகவே ஒரு கட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தி.மு.க.வும் இல்லை. மம்தா பாணர்ஜியும் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.
 
அதைவிட முக்கியமாக காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்களே ஊழல் புகார்களில் சிக்கிக்கொள்வதும், அதற்கு பதில் சொல்ல முடியாமல் பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் முழிப்பதும் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்திற்கு சவாலாக அமைந்து விட்டன. சசிதரூர் முதலில் ராஜினாமா செய்த பிறகு பல அமைச்சர்கள் இது போன்ற சிக்கலில் மாட்டிக் கொண்டார்கள். வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார் எஸ்.எம்.கிருஷ்ணா. அவருடைய கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த போது எழுந்த "நிலக்கரி சுரங்க" புகாரில் அங்குள்ள லோக்அயுக்தா நீதிமன்றம் அறிக்கை கொடுத்தது. அதேபோல் இங்கிலாந்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியைப் பார்க்கச் சென்றார் என்ற சர்ச்சையும் வெடித்தது. இதுபோன்ற சூழ்நிலையில் அவரை அமைச்சராக வைத்திருக்க முடியாமல் போனது. எனவே எஸ்.எம். கிருஷ்ணாவே தன் பதவியை ராஜினாமா செய்தார். அதுவும் யூ.பி.ஏ- டூவின் மிகப்பெரிய அமைச்சரவை விரிவாக்கத்திற்கு முன்பு தன் பதவியை ராஜினாமா செய்தார். இதன் பிறகு "நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு" இந்திய கணக்காயத்தின் அறிக்கையால் வெளிச்சத்திற்கு வந்தது. அதுவும் 1.86 லட்சம் கோடி நஷ்ட அறிக்கை. இன்னும் சொல்லப் போனால் 2-ஜி அலைக்கற்றை விவகாரத்தை விட பெரிய நஷ்டம்.
 
"நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு" விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தபோது சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த சுபோத் காந்த் சகாய் சிக்கினார். அவருக்கு வேண்டிய ஒரு கம்பெனிக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்ய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதினார் என்ற சர்ச்சை வெடித்தது. அதனால் அவரும் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்து நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் அவர் கழற்றி விடப்பட்டார். ஆனால் இதே பிரச்சினையில் புகார் சுமத்தப்பட்ட நிலக்கரித்துறை அமைச்சர் "ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால்" இன்னும் அதே பதவியில்தான் தொடருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் அதற்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு நடைபெற்றது பெரும்பாலும் பிரதமர் மன்மோகன்சிங் நிலக்கரித்துறை அமைச்சர் பொறுப்பையும் வகித்த காலத்தில் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எப்படி ஜெய்ஸ்வால் காப்பாற்றப்பட்டோரோ அதே மாதிரி சட்ட அமைச்சராக இருந்த சல்மான் குர்ஷித்தும் காப்பாற்றப்பட்டார். அவர் மனைவி நடத்தும் டிரஸ்ட் பற்றி புகார் எழுந்து பெரும் சர்ச்சையாக மாறிய நேரத்தில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில்தான் அவர் அங்கிருந்து மாற்றப்பட்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 
 
இவர் தவிர சிறு மற்றும் குறு தொழில்துறை மத்திய அமைச்சராக இருந்த காங்கிரஸைச் சேர்ந்த வீர்பத்ர சிங் மீது ஹரியானா மாநிலத்தில் ஊழல் வழக்கு தொடரப்பட்டது. அவர் அங்கு முதலமைச்சராக இருந்த போது நடந்ததாக கூறப்படும் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட, அவர் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அந்த வரிசையில் இப்போது ரயில்வே துறை அமைச்சர் பவன்குமார் பன்ஸால் மாட்டிக் கொண்டார். இந்திய ரயில்வே வாரியத்தில் உறுப்பினர் பதவிக்கு 10 கோடி ரூபாய் பேரம் பேசி, அதில் ஒரு பகுதியாக 90 லட்சம் ரூபாயை அமைச்சரின் நெருங்கிய உறவினர் வாங்கும் போது சி.பி.ஐ. போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர். "நான் அப்பாவி" என்று பவன்குமார் பன்ஸால் சொன்னாலும், எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கவே, வேறு வழியின்றி அவரை ராஜினாமா செய்ய வைத்துள்ளது காங்கிரஸ் கட்சி. ஊழல் புகாரில் காங்கிரஸ் அமைச்சரின் உறவினர் ஒருவர் பணம் வாங்கினார் என்று இந்த ஒன்பது ஆண்டு கால காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் எழுந்த முதல் புகார் இது. அந்த வகையில் ரயில்வே துறையின் ஐந்தாவது அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார் சி.பி.ஜோசி. பல வருடங்களுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் சார்பில் இரண்டாவது அமைச்சராக வந்திருக்கும் ரயில்வே அமைச்சர் இவர்.
 
இன்னொரு ராஜினாமா இந்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் தொடர்புடையது. பிரதமர் மன்மோகன்சிங் நிலக்கரித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் நடைபெற்ற ஒதுக்கீடு தொடர்பாக கூறப்பட்ட முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. அது இந்திய சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் நடைபெறும் விசாரணை. அது தொடர்பான அறிக்கையை சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யும் முன்பு சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் சி.பி.ஐ. டைரக்டர் ரஞ்சித் சின்காவை அழைத்துப் பேசினார். அந்த அறிக்கையின் மையப்பகுதியில் சில திருத்தங்களை செய்தார் என்பது குற்றச்சாட்டு. இது பற்றி விசாரித்த இந்திய சுப்ரீம் கோர்ட், "சட்ட அமைச்சருக்கு அப்படியொரு அதிகாரம் இருக்கிறதா?" "இனிமேல் சி.பி.ஐ. யாரிடமும் அறிக்கையைக் காட்டக் கூடாது" என்றெல்லாம் கடுமையாக சில கண்டனங்களைத் தெரிவித்தது. "என் மீது கண்டனங்கள் ஏதுமில்லை" என்று அஸ்வனிக்குமார் சொன்னாலும், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றிக்குப் பின்னனயில் இந்த சர்ச்சை தொடருவது நல்லதல்ல என்று காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி கருதினார். "அஸ்வனி குமார் ராஜினாமா செய்ய வேண்டியதில்லை" என்று பிரதமர் மன்மோகன்சிங் கருதினாலும், முதல் முறையாக அவரது கருத்தையும் மீறி, அஸ்வனி குமாரை ராஜினாமா செய்ய வைத்தார் சோனியா காந்தி. கட்சியா அல்லது பிரதமரா என்ற பந்தயத்தில் கட்சியே பெரிது என்பது அஸ்வனி குமார் ராஜினாமா விவகாரத்தில் வெளிச்சத்திற்கு வந்தது.
 
இதுவரை இரண்டாவது முறை அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 11 மத்திய அமைச்சர்கள் பதவி விலகியிருக்கிறார்கள். அவர்களில் முறைகேட்டுப் புகாரில் சிக்கி பதவியிழந்த தி.மு.க. அமைச்சர்கள் இருவர். கொள்கை முரண்பாட்டின் காரணமாக ராஜினாமா செய்த திரினாமூல் காங்கிரஸ் அமைச்சர்கள் மூவர். ஊழல் புகார் அல்லது முறைகேட்டுப் புகார் போன்றவற்றால் ராஜினாமா செய்த காங்கிரஸ் அமைச்சர்கள் ஆறு பேர். அதிலும் குறிப்பாக இந்த 11 அமைச்சர்களில் இந்திய சுப்ரீம் கோர்ட் வழக்கை விசாரிப்பதால் பதவியிழந்த அமைச்சர்கள் மூவர். அவர்களில் ராஜா, தயாநிதி மாறன் தி.மு.க.வை சேர்ந்தவர்கள். அஸ்வனி குமார் காங்கிரஸை சேர்ந்தவர். இப்படி முதலில் கூட்டணி கட்சி அமைச்சர்கள்தானே ஊழல் புகாரில் சிக்குகிறார்கள் என்று அமைதி காத்த காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்களே ஊழல் புகாரில் மாட்டிக் கொள்கிறார்கள்.
 
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடங்களே உள்ள நிலையில் பிரதமர் மன்மோகன்சிங்க் தலைமையிலான ஆட்சி "நிச்சயமற்ற" சூழ்நிலையில் இருக்கிறது. "இருப்பதா, போவதா" என்ற திசையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் "உறுதியான ஆதரவை" தரும் தி.மு.க., திரினாமூல் காங்கிரஸ் போன்ற கூட்டணிக் கட்சிகள் விலகி, "எந்த நேரத்திலும் கைவிடும்" கூட்டணிக் கட்சிகளான பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் காங்கிரஸை ஆதரிக்கின்றன. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் ஒரு தரப்பினர், "பிரதமர் மன்மோகன்சிங் அவர் இஷ்டத்திற்கு அரசை நடத்துகிறார்" என்று குறைபட்டுக் கொள்ளத் தொடங்கி விட்டார்கள். பல விஷயங்களில் பிரதமருக்கும், சோனியாவிற்கும் கருத்து வேறுபாடு இருக்கிறது என்பது தொடர்ந்து செய்திகளாக வெளிவருகின்றன. இப்போது அஸ்வனி குமார், பன்ஸால் ஆகியோர் ராஜினாமா செய்த விவகாரத்தில் கூட இந்த செய்தியே திரும்பவும் அடிபட்டது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. காங்கிரஸ் தலைமை அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை இக்கட்டான காலகட்டத்தில் நிற்கிறது. ஏனென்றால் அக்கட்சியின் சார்பில் பிரதமர் மன்மோகன்சிங்கைத்தான் மீண்டும் "பிரதமர் வேட்பாளராக" முன்னிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. 10 வருடம் அவர் தலைமையில் ஆட்சியை நடத்தி விட்டு, இன்று திடீரென்று ராகுல் காந்தியை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்த முடியாது. பா.ஜ.க.வின் தரப்பில் நரேந்திர மோடிதான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்ற பிரசாரம் உச்சத்தில் இருக்கின்ற வேளையில், "ராகுல் காந்திக்கும்- நரேந்திர மோடிக்கும்" போட்டி என்பதை விட, "பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும்- நரேந்திரமோடிக்கும்" போட்டி என்பது காங்கிரஸுக்கு கை கொடுக்கும் விஷயமாக இருக்கும் என்றே கருதுகிறது. ஏனென்றால் "நேர்மையான பிரதமர்" என்ற இமேஜ் மன்மோகன்சிங்கை இன்னும் தாங்கி நிற்கிறது.
 
மன்மோகன்சிங்கின் இந்த இமேஜை உடைக்கவே, "பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும்" என்ற போராட்டத்தை கையிலெடுத்துள்ளது இந்தியாவின் பிரதான எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சி. அது மட்டுமல்ல, இது தொடர்பாக அகில இந்திய அளவில் அந்தக் கட்சி போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ, "மூன்றாவது அணி அமையாதது. பா.ஜ.க.விற்குள் நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக நியமிப்பதில் உள்ள போட்டி. அக்கட்சிக்கும் மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கும் மோடி விஷயத்தில் உள்ள முரண்பாடு. இவை அனைத்தும் காங்கிரஸுக்கு கை கொடுக்கும்" என்ற திடமான நம்பிக்கையில் இருக்கிறது. அதனால்தான் "அஸ்வனிகுமார் மற்றும் பவன்குமார் பன்ஸால் ராஜினாமா விவகாரத்தில் பிரதமரும், சோனியாவும் சேர்ந்துதான் முடிவு எடுத்தார்கள்" என்பதை வெளி உலகிற்கு அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது. ஆனால் ஐந்து வருடத்திற்கு 11 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா அல்லது நீக்கம் என்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது இன்னிங்ஸில் அரங்கேறியுள்ள துரதிருஷ்டமே!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X