2025 மே 19, திங்கட்கிழமை

சாரி சாரியாக புதிய அரசியலமைப்புக்கள், ஆனால் என்ன பயன்?

Kanagaraj   / 2013 ஜூன் 01 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஐயூப்

அரசியலமைப்பை திருத்துவதற்காக மூன்று குழுக்கள் தற்போது முயற்சி செய்து வருகின்றனர். அல்லது உண்மையிலேயே திருத்துவார்களோ இல்லையோ திருத்துவதற்கான திட்டங்களை முன் வைத்திருக்கிறார்கள். 

முதலாவதாக மாதுலுவாவே சோபித்த தேரர் மற்றும் அரசியலமைப்புத்துறை சட்டத்தரணி ஜே.சீ வெலிஅமுன ஆகியோர் ஒரு திட்டத்தை சமர்ப்பித்தனர். பின்னர் ஜாதிக ஹெல உருமயவும் அதனை அடுத்து ஐக்கிய தேசிய கட்சியும் வௌ;வேறு திட்டங்களை சமர்ப்பித்துள்ளனர்.

சோபித்த தேரின் தலைமையிலான குழுவினர் சமர்ப்பித்துள்ள திட்டத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்துச் செய்வது என்ற விடயத்திற்கே முதலிடம் கொடுக்கப்பட்டுள்து. இனப்பிரச்சினையை தீர்ப்பது என்ற விடயத்திற்கு அதில் எந்தளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகவில்லை. ஆனால் அந்தக் குழுவில் உள்ள சோபித்த தேரரை தவிர்ந்த ஏனையோர்களைப் பார்க்கும் போது அவர்கள் அதிகார பரவராக்கலை அரசியலமைப்பிலிருந்து நீக்கிவிடுவார்கள் என்று கருத முடியாது.

சோபித்த தேரர் ஒரு காலத்தில் அதாவது 1990களில் சிங்கள தேசியவாதத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்தார் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவருமான காலஞ்சென்ற எம். எச். எம். அஷ்ரபினால் அக்காலத்தில் கொண்டு வரப்படவிருந்த கல்வியில் சம வாய்ப்புச் சட்டம் மற்றும் ஹலால் சட்டம் ஆகியவற்றை கடுமையாக எதிர்த்தவர்களில் அவரும் ஒருவர். அதிகார பரவலாக்கல் திட்டத்தையும் அவர் எதிர்த்தார்.

இலங்கையில் இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை என்று வாதாடியவர்களில் அவரும் முன்னணியில் இருந்தார்.
ஆனால்,அதன் பின்னர் நீண்டகாலமாக அவர் அரசியல் ரீதியாக முடங்கிப் போய் இருந்தார். சமூக விடயங்களிலும் அவரைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் காணப்படவேயில்லை. ஆனால் அண்மைக் காலமாக அவர் ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்க முன்வந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. அதில் ஒரு அங்கமாகவே அவர் சட்டத்தரணி வெலிஅமுன போன்றவர்களுடன் இணைந்து நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்துச் செய்வதை முதன்மையாகக் கொண்ட அரசியலமைப்பு நகலொன்றை தயாரிப்பதில் தமது பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.

அவரது அண்மைக்கால நடவடிக்கைகளில் இனவாதம் காணக்கூடியதாக இல்லை. ஹலால் உனவு வகைகளைப்பற்றி தவறான கருத்துக்களை பரப்பிக் கொண்டு உணவு வகைகளை ஹலால், ஹராம் என்று வகைப் படுத்துவதை அவர் அக்காலத்தில் மிக மோசமாக எதிர்த்தார். ஆனால் அண்மைக்காலத்தில் பொது பல சேனா, ஹெல உருமய, சிஹல ராவய மற்றும் ராவணா சக்தி போன்ற குழுக்கள் ஹலால் முத்திரைக்கு எதிராக பெரும் போராட்டம் நடத்தினாலும் அவர் அவ் அமைப்புகளுக்கு ஆதரவாக ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே, அவர்களது அரசியலமைப்பு நகலில் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படக்கூடிய எதுவும் இல்லை என்று நம்ப வேண்டியுள்ளது. ஆனால் எந்தவொரு அரசியல் கட்சியும் அதனை இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவ்வரசியலமைப்பு நகலை சட்டமாக்குவது எவ்வாறு என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது.

ஹெல உருமய கட்சி முழுமையான அரசியலமைப்பு நகலொன்றை சமர்ப்பிக்கவில்லை. மாறாக அக்கட்சி அரசியலமைப்புத் திருத்த நகலொன்றையே சமர்ப்பித்துள்ளது. அதன் மூலம் அக் கட்சி அதிகார பரவலாக்கல் முறையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்றே பிரேரித்துள்ளனர். எனவே, அக்கட்சியினர் அதிகார பரவலாக்கலுக்கு சட்ட அடிப்படையாக தற்போது அமுலில் உள்ள அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை ரத்துச் செய்வதை நோக்கமாக கொண்ட அரசியலமைப்புத் திருத்த நகலொன்றையே முன் வைத்துள்ளனர்.

அது அண்மைக்காலமாக சில முக்கியஸ்தர்களின் பின்புல ஆதரவுடன் நாட்டில் வளர்ந்து வரும் இனவெறியின் ஒரு கட்டமாகவே கருத வேண்டியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்திருக்கும் அரசியலமைப்பு நகலில் அதிகார பரவலாக்கலைப் பற்றி குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் அதைப் பற்றிய தெளிவான திட்டமொன்று முன்வைக்கப்படவில்லை. அந் நகலில் அதிகார பரவலாக்கலைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதி தெளிவானதோர் திட்டத்தை முன்வைப்பதை விட அவ் விடயத்தில் அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது போல் தான் தெரிகிறது.

அதிகார பரவலாக்கல் என்ற தலைப்பின் கீழ் ஐ.தே.க இரண்டு முக்கிய விடயங்களை குறிப்பிட்டுள்ளது. முதலாவதாக ஒற்றை ஆட்சியின் கீழ் அதிகார பரவலாக்கலை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறுகிறது.

இரண்டாவதாக 2009 ஆம் ஆண்டு மே மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஐ.நா. செயலாளர் நாயகமும் கொழும்பில் வைத்து கையெழுத்திட்டு வெளியிட்ட கூட்டறிக்கையின் பிரகாரமும் ஐ.நா. மனித உரிமை பேரவையினால் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட இரண்டு பிரேரணைகளின் பிரகாரமும் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரணவின் தலைமையலான சர்வ கட்சி பிரதிநிதிகள் குழு வெளியிட்ட அறிக்கையின் பிரகாரமும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளின் பிரகாரமும் போர் முடிந்து ஓரிரு நாட்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் பிரகாரமும் அதிகார பரவாக்கலை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.தே.க. கூறுகிறது.

இவ் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தற்போதைய அரசாங்கம் அதிகார பரவலாக்கலை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் அவற்றில் திஸ்ஸ வித்தாரண அறிக்கை தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட அதிகார பரவலாக்கல் கட்டமைப்பொன்று சுட்டிக் காட்டப்படவில்லை. வெறுமனே அதிகார பரவலாக்கல் முறையை பலப்படுத்த வேண்டும் என்று மட்டுமே அவற்றில் குறிப்படப்பட்டு இருந்தது.

எனவே, இவற்றை வலியுறுத்துவதன் மூலம் நீங்கள் கூறிய படி அதிகார பரவலாக்கலை அமுலாக்குங்கள் என்று அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்க முடியுமேயல்லாமல் அதன் மூலம் ஐ.தே.க அதிகார பரவலாக்கல் விடயத்தில் ஏதாவது புதிய திட்டத்தை முன்வைத்ததாக ஏற்றுக் கொள்ள முடியாது.

அதை விட ஐ.தே.க வின் அரசியலமைப்பு நகலில் உள்ள பிரச்சினை என்னவென்றால் ஒற்றை ஆட்சியின் கீழ் அதிகார பரவலாக்கலை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறுவதேயாகும். ஒற்றை ஆட்சி என்பது சட்டமியற்றும் ஒரு நிறுவனத்தை (நாடாளுமன்றத்தை) வைத்திருக்கும் ஆட்சி முறை என்றும் அதிகார பரவலாக்கல் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட சட்டமியற்றும் நிறுவனங்களை (நாடாளுமன்றத்தையும் பிராந்திய சபைகளையும்) வைத்திருக்கும் ஆட்சி முறை என்றும் சர்வதேச நீதிமன்றத்தின் முன்னாள் உப தலைவர் பேராசிரியர் கிறிஸ்டோபர் வீரமன்திரி கூறுகிறார். இதன் அடிப்படையிலேயே பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் மற்றும் கலாநிதி நீலன் திருச்செல்வம் ஆகியோரால் வரையப்பட்டு 1995ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தில் இலங்கையானது ஒற்றையாட்சி நிலவும் நாடாகவின்றி பிராந்தியங்களின் ஒன்றியமாக விவரிக்கப்பட்டது.

எனவே, ஒற்றையாட்சியின் கீழ் அதிகார பரவலாக்கலை மேற்கொள்வோம் என்று கூறுவது சட்டமியற்றும் ஒரு நிறுவனம் வைத்திருக்கும் ஆட்சி அமைப்பின் கீழ் சட்டமியற்றும் பல நிறுவனங்களை வைத்திருப்போம் என்று கூறுவதற்கு சமமாகும்.
உண்மையிலேயே இலங்கையில் ஏற்கனவே அதிகார பரவலாக்கல் அமுலில் உள்ளது. மாகாண சபைகள் சில விடயங்கள் தொடர்பில் சட்டங்களை இயற்றுகின்றன. ஆனால் இலங்கை இன்னமும் ஒற்றையாட்சியுள்ள நாடாகவே தற்போதைய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனெனில், 1987ஆம் ஆண்டு 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் அதிகார பரவலாக்கலை அமுலாக்கிய போது ஒற்றையாட்சி என்ற சொல்லை அகற்றிவிட்டால் சிங்கள மக்கள் மேலும் ஆத்திரமடைவர் என அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன அச்சப்பட்டார். எனவே ஒற்றையாட்சி என்ற பதத்துடனேயே அவர் மாகாண சபைகளுக்கு ஓரளவுக்கேனும் அதிகாரங்களை பரவலாக்கினார். ஐ.தே.கவுக்கு இன்னமும் அந்த அச்சம் இருக்கிறது.

எல்லாவற்றையும் விட சுதந்திரத்தை அடுத்து கடந்த 65 ஆண்டுகளில் இலங்கை மக்கள் பெற்ற அனுபவத்தின் படி அவர்களிடம் உள்ள சந்தேகம் என்னவென்றால் ஒரு அரசியல் கட்சி உலகிலேயே மிகச் சிறந்த அரசியலமைப்புச் சட்டத்தை முன் வைத்தாலும் பதவிக்கு வந்ததன் பின்னர் அக் கட்சி அதனை அமுலாக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X