2025 மே 19, திங்கட்கிழமை

காதலன் மரணமும் பதற்றமும்: தமிழகத்தில் சூடுபிடிக்கும் போராட்டக் காட்சிகள்

A.P.Mathan   / 2013 ஜூலை 08 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் களம் அதிரடியாக தமிழகத்தில் சூடுபிடித்து நிற்கிறது. "தர்மபுரியில் நடந்த காதல் திருமணத்தில் காதலன் தற்கொலை", "சேது சமுத்திரத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்" என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழகமெங்கும் ஆர்பாட்டம்- குறிப்பாக 90 வயது தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையிலேயே நாகபட்டினத்தில் ஆர்பாட்டம்! சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் "இஸ்லாமியர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு கேட்டு தடையை மீறி போராட்டம்- கைது"! லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் "நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் ஐந்து சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கக்கூடாது" என்பதை முன்னிறுத்தி தொடர் போராட்டம்!- இப்படி வரிசையாக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் எல்லாம் திபுதிபுவென போராட்டக் களத்தில் குதித்துள்ளன. இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே எஞ்சியிருக்கின்ற நேரத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றம் வாக்காளர்கள் மனதை தங்கள் கட்சிகளின் சார்பில் இழுக்க எடுக்கப்படும் தீவிர முயற்சி!
 
காதல் திருமணம்: காதலன் மரணமும் பதற்றமும்!
தர்மபுரி "காதல் திருமண" விவகாரத்தில் "இனி நான் கணவருடன் செல்ல மாட்டேன்" என்று ஆணித்தரமான பேட்டியைக் கொடுத்தார் காதலி திவ்யா. இதன் பிறகு மனமுடைந்த காதலன் இளவரசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான். இது தற்கொலையா? கொலையா என்பது இன்னும் முடிவு ஆகவில்லை. முதல் முறை பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு, அதை காதலனின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், சென்னை உயர்நீதிமன்றம் "காதலனின் உடலை பதப்படுத்தி வையுங்கள்" என்று உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து எந்த நேரமும் காதலனின் தந்தை கேட்பது போல் இரண்டாவது பிரேதப் பரிசோதனை நிகழலாம். அனைத்துக் கட்சிகளுமே டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சியை இது விடயத்தில் மறைமுகமாக குற்றம் சாட்டிவிட்டன. காதலனின் பெற்றோரோ அவர்கள் மீது குற்றம் சாட்டியே தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் புகார் செய்துவிட்டார். தர்மபுரி மாவட்டத்தில் மட்டுமின்றி, அருகில் உள்ள மாவட்டங்களிலும் குறிப்பாக வன்னியர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் வசிக்கும் மாவட்டங்களில் எல்லாம் டென்ஷன் உச்சகட்டத்தில் இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க.வினர் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி நடத்தும் போராட்டத்திற்கே அனுமதி மறுத்து விட்டார் அம்மாவட்ட ஆட்சித் தலைவர். அந்த அளவிற்கு அங்கும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
 
இந்த "காதல் மரணத்தை" வைத்து அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களை ஏற்கனவே சொல்லத் தொடங்கி விட்டார்கள். புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, "சி.பி.ஐ. விசாரணை வேண்டும்" என்றதுடன், "தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தி செயல்பட்டார்கள். அப்போதே அரசு நடவடிக்கை எடுத்து அதை அடக்கத் தவறி விட்டது" என்று குற்றம் சாட்டினார். விடுதலை சிறுத்தைகள் அமைப்பு தலைவர் தொல். திருமாவளவன், "என்னால் இளவரசனை காப்பாற்ற முடியவில்லையே என்ற குற்ற உணர்வு என்னை வாட்டுகிறது. காதல் திருமணம் தொடங்கி காதலர்கள் பிரிக்கப்பட்ட வரை பாட்டாளி மக்கள் கட்சி, கட்சி அரசியல் நோக்கங்களை மனதில் வைத்து பின்னணியில் இருக்கிறது. கலப்பு திருமணம் செய்த தம்பதிகளைக் காப்பாற்ற அரசு தவறிவிட்டது" என்று கூறியிருக்கிறார்.
 
சற்று வித்தியாசமாக இரு கம்யூனிஸ்ட் தலைவர்களும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தார்தள். அப்படிச் சந்தித்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் ஆகிய இருவரும், "சமூக நீதியின் தடம் பதித்த மாநிலத்தில் சாதியின் அடிப்படையில் இப்படியொரு சம்பவம் நடைபெற்றதற்காக நாமெல்லாம் வெட்கி தலைகுனிய வேண்டும். இளவரசன் மரணத்திற்கு காரணமான சாதீய சக்திகளை தமிழக மக்கள் தூக்கியெறிய வேண்டும்" என்று கூறினார்கள். தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகனும் கூட, "இரு தனி நபர்களுக்கு இடையே உள்ள உறவுகளை பகடைக்காயாக வைத்து அரசியல் ரீதியாக லாபம் பெற நினைப்பது சமுதாயத்திற்கு நல்லதல்ல" என்று சுட்டிக்காட்டினார். இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற் போல் தி.மு.க. தலைவர் கருணாநிதி, "தமிழகத்தில் இத்தகைய கொடுமை இனியும் நடக்கக்கூடாது. இந்த நிகழ்ச்சியே ஒரு பாடமாக இருந்திட வேண்டும். சாதி வெறிக்கு சமுதாயத்தில் இனியும் இடமில்லை என்பதை நிலைநாட்ட பாடுபடுவோம் என்று அனைவரும் சபதம் ஏற்போம்" என்று அறைகூவல் விடுத்தார். ஆனால் இதில் இதுவரை கருத்துச் சொல்லாத கட்சி அ.தி.மு.க. மட்டுமே. ஆளுகின்ற கட்சியாக இருப்பதால், இளவரசன் மரணத்தை ஒரு சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக கருதி நடவடிக்கை எடுத்து வருகிறதே தவிர, நடந்த சம்பவத்திற்கு இன்னும் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த காதல் மரணத்தால் ஏற்பட்டுள்ள பதற்றம், அனைத்து அரசியல் கட்சிகளையும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக திருப்பி விட்டுள்ளது. பா.ம.க. தமிழக தேர்தல் களத்தில் தனிமைப்படுத்தப்பட்டு நிற்கிறது.
 
சேதுசமுத்திரத்திட்டம்: எம்.ஜி.ஆர். கனவும் தி.மு.க. போராட்டமும்
தி.மு.க. சார்பில் சேது சமுத்திரத் திட்டத்தை கையிலெடுத்துள்ளார்கள். தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள் எல்லாம் போராட்டத்தில் குதித்துள்ளார்கள். நாகபட்டினத்தில் கலைஞர் கருணாநிதி, தூத்துக்குடியில் ஸ்டாலின், கடலூரில் கனிமொழி, புதுச்சேரியில் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் என்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்தப் போராட்டம் நடக்கிறது. ஆனால் மதுரையில் மு.க. அழகிரி போராட்டத்தில் பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் போராட்டம் நடத்துகிறார். அதேபோல் தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கோவை மருத்துமனையில் அனுமதிக்கப்படுகிறார். அதனால் அவரும் இந்த போராட்டத்தில் ஈடுபடவில்லை. சிறுபான்மையினர் வாக்குகளை மனதில் வைத்து முன்னெடுத்துச் செல்லப்படும் இந்த போராட்டம், மத்திய அரசை சாடுகிறதோ இல்லையோ, பாரதீய ஜனதா கட்சியையும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் சாடும் விதத்தில் அமைந்துள்ளது. போராட்டத்தில் பங்கேற்கும் முன்பு திருவாரூரில் பேசிய கலைஞர் கருணாநிதி, "என் உயிரைக் கொடுத்தாவது இந்த திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவேன்" என்று ஆவேசப்பட்டிருக்கிறார். ஆளும் அ.தி.மு.க. அரசு இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டாம் என்று இந்திய உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், "இத் திட்டம் எம்.ஜி.ஆர் கண்ட கனவு" என்று கூறி அ.தி.மு.க.விற்கு இடியாப்பச் சிக்கலை தோற்றுவித்துள்ளார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.
 
"ராமர் பாலம்" என்று கூறி சேதுக் கால்வாய் திட்டத்தை தடுக்கிறார்கள் என்ற பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது தி.மு.க. இது முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் மத்தியில் அ.தி.மு.க.விற்குள்ள இமேஜை குறைக்கப் பயன்படுத்தப்படும் யுக்தி. அதனால்தானோ என்னவோ உடனடியாக மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ள பா.ஜ.க.வின் மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், "ராமர் பாலம் பாதிக்கப்படாத வகையில் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. அப்படி செயல்படுத்தத்தான் வாஜ்பாய் திட்டமிட்டார். ஆனால் அவருக்குப் பிறகு வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அவசர அவசரமாக இத்திட்டத்தை மற்றவர்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் நிறைவேற்ற விரும்பியது." என்று விளக்கமளித்துள்ளார். இதற்கு நேரடியாக இப்போதைக்கு எந்த எதிர்ப்பையும் காட்டாமல் அமைதி காக்கிறது அ.தி.மு.க. அதே நேரத்தில், ஒருவேளை நரேந்திரமோடியை முன்னிறுத்தி, பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. எதிர்கால கூட்டணியில் இடம்பெற்றால் அதற்கு இந்த போராட்டம் முட்டுக்கட்டையாக இருக்கட்டும் என்பதும் தி.மு.க.வின் இன்னொரு வியூகம் என்பதில் சந்தேகமில்லை. 
 
முஸ்லிம்கள் கோரும் 7.5 சதவீத இட ஒதுக்கீடும் போராட்டமும்
சமீபத்தில் நடந்து முடிந்த ராஜ்ய சபை தேர்தல்வரை அ.தி.மு.க.வுடன் நெருக்கமாக இருந்த கட்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். இதன் அரசியல் கட்சியான மனித நேய மக்கள் கட்சிக்கு இரு சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக சட்டமன்றத்தில் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் நடந்து முடிந்த ராஜ்ய சபை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு வாக்களித்தார்கள். அந்த வாக்கெடுப்பு முடிந்த பிறகு த.மு.மு.க. முஸ்லிம் வாக்காளர்களை ஒருங்கிணைக்கும் அவசர முயற்சியில் இறங்கியுள்ளது. "வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைத்து சென்னையில் மிகப் பிரமாண்டமான பேரணிக்கு அழைப்பு விடுத்தார்கள். ஆனால் திடீரென்று அப்பேரணிக்கு அரசு தடை விதித்தது. ஆனாலும் தடையை மீறி கைது ஆவோம் என்று கூறி பேரணியை நடத்தி, த.மு.மு.க.வினர் ஆயிரக்கணக்கானோர் கைதானார்கள். இவர்களின் பேரணிக்கு விதிக்கப்பட்ட தடையை தி.மு.க. தலைவர் கருணாநிதியே கண்டித்தார். "ஜனநாயக ரீதியில் செயல்பட விடாமல் அரசியல் கட்சிகளை தடுக்கிறது அ.தி.மு.க. அரசு" என்று குற்றம் சாட்டினார். 
 
இட ஒதுக்கீடு என்பது முஸ்லிம்களுக்கு மிகவும் சென்ஸிட்டிவான கோரிக்கை. இதற்கு உத்தரவாதம் கொடுங்கள் என்று அ.தி.மு.க. தலைமையிடம் அடம்பிடித்ததால்தான் நடந்து முடிந்த ராஜ்ய சபை தேர்தலில் த.மு.மு.க.வின் அரசியல் இயக்கமான மனித நேய மக்கள் கட்சி தி.மு.க. பக்கம் போக நேர்ந்தது. இதை சமாளிக்கும் விதத்தில் அனைத்து மசூதிகளுக்கும் இலவச அரிசி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனாலும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பதவியேற்பு விழாவிற்கு முதல்வர் ஜெயலலிதா அழைத்தது, அதன் பிறகு நரேந்திரமோடியின் பதவியேற்பு விழாவிற்கு முதல்வர் ஜெயலலிதா குஜராத் சென்றது, பா.ஜ.க.வின் பிரசார கமிட்டி தலைவராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்ட போது "அவர் எனது நண்பர்" என்ற ரீதியில் அவரை தமிழக முதல்வர் பாராட்டியது, "அரசு வேலை வாய்ப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் விடயத்தில் உத்தரவாதம் கொடுக்காதது" எல்லாம் சேர்ந்து அ.தி.மு.க.விற்கும், மனித நேய மக்கள் கட்சிக்கும் நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் பிரதிபலிப்பாக தன் வாக்கு வங்கியை உஷார் படுத்திக்கொள்ள மனித நேய மக்கள் கட்சி இந்த பேரணியை நடத்தி முடித்திருக்கிறது.
 
என்.எல்.சி. பங்கு விற்பனையும் தொழிலாளர்கள் போராட்டமும்
நெய்வேலி அனல் மின்நிலையத்தின் (என்.எல்.சி) 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க வேண்டும் என்ற முடிவினை மத்திய அரசு எடுத்து அறிவித்தது. இந்த போராட்டம் 2003இலிருந்து நடைபெற்று வருகிறது. தனியாருக்கு விற்க மத்திய அரசு அறிவிப்பு செய்யும். உடனே மாநில அரசும், மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் எதிர்க்கும். உடனே அந்த முடிவு கைவிடப்படும். ஆனால் இந்தமுறை விற்கும் முடிவில் உறுதியாக இருக்கிறது மத்திய அரசு. "செபியின் வழிகாட்டுதல் படி பத்து சதவீத பங்குகளை தனியாருக்கு கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையிலேயே இப்போது 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்திருக்கிறோம்" என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சுதர்ஸன நாச்சியப்பன், புதுவையைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோரும் இதே கருத்தை சொன்னார்கள்.
 
தமிழக அரசின் சார்பில் பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஜெயலலிதா, "அந்த 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பதற்கு பதில் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களான டிட்கோ, டிக், சிப்காட் போன்றவற்றிடம் விற்பனை செய்யுங்கள்" என்று கோரிக்கை வைத்தார். தமிழக முதல்வர் சொல்லியுள்ள ஆலோசனையை கருத்தில் கொண்டு இதில் முடிவெடுங்கள் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு கடிதம் எழுதி விட்டு, அதன் நகல்களை பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும், நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் அனுப்பி வைத்தார். இந்நிலையில் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனத்திற்கு பங்குகளை விற்க முன் வந்திருக்கும் மத்திய அரசு, தமிழகத்திலிருந்து ஒரு சீனியர் அதிகாரியை ஆலோசனை நடத்த அனுப்பி வையுங்கள் என்று கூறியிருக்கிறது. ஆனால் இதற்கு திடீரென்று தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. "மாநில அரசின் பொதுத்துறை நிறுவனத்திற்கு விற்றாலும், செபியின் வழிகாட்டுதல் படி தனியாருக்கு 5 சதவீதத்தை விற்றே தீருவார்கள். ஆகவே இந்த பங்குகளை வாங்கும் முன்பு "இனி தனியாருக்கு 5 சதவீத பங்குகளை விற்க மாட்டோம்" என்று மத்திய அரசிடமிருந்து தமிழக அரசு உத்தரவாதத்தைப் பெற வேண்டும்" என்று கூறி, மாநில அரசு மத்திய அரசிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளது.
 
இந்த பேச்சுவார்த்தைகள் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும், என்.எல்.சி போராட்டம் ஐந்தாவது நாளாக தொடருகிறது. அத்துடன் சுரங்கப் பணிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மின் உற்பத்தி திறனும் படிப்படியாக குறைந்து வருகிறது. ஏற்கனவே மின்வெட்டு பிரச்சினையில் உள்ள தமிழகத்தில் இந்த "என்.எல்.சி." போராட்டம் மேலும் சிக்கலை தோற்றுவிக்கும். அது மட்டுமின்றி, அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரு முக்கியக் கட்சிகளின் தொழிற்சங்கங்களும் சேர்ந்து போராட்டத்தில் குதித்துள்ளதால், தொழிலாளர்கள் போராட்டம் சூடுபிடித்துள்ளது.
 
இப்போது தொடங்கியுள்ள இந்த நான்கு முக்கியப் போராட்டங்களும் வெறும் முன்னோட்டமே. இனி வருகின்ற மாதங்களில் இது மாதிரியான போராட்டங்கள் மேலும் அதிகமாகும். ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தல் வரும்போது ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு வேண்டிய களத்தை தேர்வு செய்து கொள்ள இதுபோன்ற போராட்டங்களையே அடித்தளமாக அமைத்துக் கொள்ளும். "போராட்ட களம்" சூடுபிடிக்க, அடுத்த தேர்தலுக்கான தேர்தல் அணியும் உருவாகத் தொடங்கும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X