2025 மே 19, திங்கட்கிழமை

அந்த முப்பது நாட்கள்...

Super User   / 2013 ஜூலை 11 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தொடர் - 1)


-றிப்தி அலி


ஆசை அறுபது நாட்கள் மோகம் முப்பது நாட்கள் என்பர். எனது வாழ்க்கையில் திருமணம் முடித்த சில நாட்களுக்குள் அதிர்ஷ்டம் அடித்துவிட்டது என்றால் அதனை வாழ்நாளிலேயே மறக்கமுடியாது. ஒருவனின் வளர்ச்சிக்கு பின்னால், இன்றேல் வீழ்ச்சிக்கு பின்னால், "பெண்ணொருவர்" இருப்பாள் என்பர்.

என்னை பொறுத்தவரையில் "முயற்சி", "உழைப்பு", "உத்வேகம்", "தூரசிந்தனை" இவையெல்லாம் வாழ்க்கையின் வளர்ச்சிப்படிகள் என்பதனை எனது வாழ்க்கையில் தத்ரூபமாகவே நான் கண்டிருக்கின்றேன். வாழ்க்கையை எப்படியும் வாழலாம் என்பதனை விடவும் ஒரு குறிக்கோளுடன் கோடுபோட்டு வாழ்வதே, வாழ்க்கையை இன்னுமின்னும் ரம்மியமாக்கும்.

அந்த வகையில் கொலம்பஸ்  கண்டுபிடித்த மண்ணில் காலடிவைக்கபோகிறோம் என்பதனை நினைக்கையில் உலகத்தையே சுற்றிவந்துவிட்டதைபோலவே நான் உணர்ந்தேன். 25 மணி நேர பயணக் களைப்பில் அந்த மண்ணில் காலடிவைத்தபோது என்னையே நான் மறந்திருந்தேன். அந்த ரம்மியத்தை உளமார அனுபவிப்பதற்கு முன்னதாகவே "அனைவரும் வாகனத்தில் ஏறுங்கள்" என்ற அந்த கடுந்தொனி இரும்பு சம்பாத்துக்காரனை ஞாபகமூட்டிவிட்டது.

அன்று... ஞாயிற்றுக்கிழமை சுமார் நான்கு மணியிருக்கும். ஒவ்வொன்றையும் அனுபவித்து ரசிக்க வேண்டுமென மனதுக்குள் சிந்தனையோட்டத்தில் பறந்தாலும், மேகங்கள் திரண்டு முகத்தை முட்டுவதை போல சூழன்று கொண்டுவந்தது. நீல நிற வானம் வழமைக்கு மாறாக கருமையாகியது.

வானத்தை பார்த்தவுடனேயே பயமாகவிருந்தது. "அனைவரும் வாகனத்தில் ஏறுங்கள்" என்ற தொனி இன்னுமின்னும் பயமுறுத்திவிட்டது. அனைவரையும் ஏற்றிக்கொண்டு வாகனம் வேகமாக சென்று ஓரிடைத்தை அடைந்தது. ஒருபுறம் வேகம் மறுபுறம் எச்சரிக்கை ஒலி... என்ன நடக்கின்றது என்பதனையே ஊகித்துக்கொள்ள முடியவில்லை.

மிக பயமாகவிருந்தது. கனவுகள் எல்லாம் சிதைவடைந்துவிட்டது போல ஓர் எண்ணம். தாய்நாட்டுடன் தொடர்புகொள்ள முடியாத சூழல். அதற்கு மத்தியில் இறைவனிடம் பொறுப்படைத்துவிட்டு மனம் அமைதியடைந்தது.மின்னல் வேகத்தில் பறந்த அந்த வாகனம் பாதுகாப்புக்கான ஓர் இடத்தை சில நிமிட நேரத்திற்குள் அடைந்து.

எனினும், அபாய ஒலிமட்டும் காதை துளைத்துக்கொண்டிருந்தது. பாதுகாப்பான இடம் என்றாலும் அபாய ஒலியின் சத்தம் மனதிலிருந்த அபாயத்தை இன்னுமின்னும் படபடக்கவே செய்தது. ஒன்றுமே புரியவில்லை... வெளிச்சத்தை கௌவும் இருட்டு, கண்விழிகளை இருளாக்க செய்கையில் துளையிட்டுக்கொண்டிருந்த அபாய ஒலி மௌனமானது.

இதுவொரு சுனாமி அனுபவம் போலவே இருந்தாலும் சுனாமி வரவேயில்லை. 2004ஆம் ஆண்டு சுனாமியை எவ்வாறு மறக்கமுடியாதோ அதேபோன்று கடந்த மே மாதம் அமெரிக்காவில் ஏற்பட்ட டொனாடோ புயலின் அனுபவும் என் ஞாபகங்களிலிருந்து விடுபடுவதாய் இல்லை.

டொனாடோ

இது வாழ்நாளில் மறக்கமுடியாததொன்றாகும். இந்த புயலினால் எந்தவித பாதிப்புமின்றி நாடு திரும்பியமைக்காக இறைவனுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.  கடந்த 2004 ஆண்டு சுனாமி அனர்த்தம் இலங்கையில் ஏற்பட்டதை போன்று பாரிய சூறாவளி அனர்த்தமொன்று எமது நாட்டின் கிழக்கு மாகாணத்தில் 1978ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஏற்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் நான் பிறக்கவில்லை என்றாலும் தாயின் அனுப பகிர்வு, புயலை ஒவ்வொரு முறையும் தத்ரூபமாக படம்பிடித்து காட்டிக்கொண்டே இருக்கிறது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அழைப்பின் பேரில் நவீன ஊடகம் தொடர்பிலான செயலமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவுக்கு நான் சென்றிருந்த போதே டொனாடோ புயலின் அனுபவத்தை உணரமுடிந்தது.

இந்த விஜயத்தின் முதற்கட்டமாக ஒக்லஹோமா மாநிலத்தில் மூன்று வாரங்கள் தங்கியிருந்தேன். கொழும்பிலிருந்து சுமார் 25 மணித்தியால விமான பயணத்தின் பின்னரே குறித்த மாநிலத்தை சென்றடைந்தேன். எங்களை வரவேற்பது போலவே அடுத்த நாளே டொனாடோ புயல் ஆரம்பித்தது.

இந்த புயல் முதற் தடவையாக 2010ஆம் ஆண்டே ஒக்லஹோமா மாநிலத்தில் வீசியுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு வருடமும் மே 15ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் புயல் வீசுவது வழமையாகியுள்ளது. முதற் தடவையாக ஏற்பட்ட இந்த அனர்த்தத்தினால் நூற்றுக்கானக்கான உயிர்கள் பலியொடுக்கப்பட்டதுடன் இலட்சக்கணக்கான டொலர் பெறுமதியான அழிவுகள் ஏற்பட்டன. புயலிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான எந்த வசதிகளும் அமெரிக்காவில் அன்று மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.


இதன் பின்னரே புயலிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான பாதுகாப்பிடங்கள் நிர்மாணிக்கப்பட்டன. இந்த பாதுகாப்பிடங்களாக குளியலறை, ஏணிப் படியின் கீழ் பகுதி மற்றும் குகை போன்ற அமைப்பிலான இடங்களை பயன்படுத்தினர். இதனை வீடுகளிலும் பொது இடங்களிலும் நிர்மாணித்தனர்.

இந்த புயலின்போது குளியறையில் பாதுகாப்பு பெறுவது என்றால் அங்கு காணப்படும் குளியல் தொட்டியில் இருக்க வேண்டும் அல்லது ஏணி படியின் கீழ் பகுதியில் இருக்க வேண்டும்.  இதற்கு மேலதிகமாக பல வீடுகளில் குகை போன்ற அமைப்பில் டொனாடோ பாதுகாப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளமையையும் அவதானிக்க முடிந்தது.

பாதுகாப்பிடங்கள்

இந்த பாதுகாப்பிடங்கள் வீடுகளில் காணப்படும் தோட்டங்களின் மத்தியிலேயே நிர்மாணிக்கப்படும். இதற்காக சுமார் 3,000 முதல் 10,000 டொலர் வரை செலவழிக்கப்படுகின்றது. இது நிலத்திலிருந்து சுமார் ஆறு அடி உயரம் வரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

டொனாடோ எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டவுடன் வீடுகளில் இருக்கும் மக்கள்  குகைகளுக்குள் சென்று பாதுகாப்பாக இருந்து கொள்வர். இதுபோன்ற அமைப்பு வீடுகளில் இல்லாதவர்கள் பொது இடங்களில் காணப்படும் டொனாடோ பாதுகாப்பிடங்களை சென்று பாதுகாப்பை தேடிக்கொள்வார்கள்.

டொனாடோ எச்சரிக்கை ஒலி நிறுத்தப்பட்டவுடனே வெளியே வருவார்கள். சில சந்தர்ப்பங்களில் டொனாடோ எச்சரிக்கை ஒலி சுமார் இரண்டு மணித்தியாலங்கள் ஒலித்த சந்தர்ப்பங்களும் உண்டு. ஒக்லஹோமா மாநிலத்தில் தங்கியிருந்த முதல் 10 நாட்களில் நான்கு தடவைகள் டொனாடோ புயல் வீசியது.

இந்த அனுபவம் மறக்க முடியதாகும். இந்த சந்தர்ப்பங்களில் எந்தவித சேதமுமின்றி இறைவனால் பாதுகாப்பட்டோம். முதல் மூன்று தடவைகளும் புயல் காற்று வீசியபோது பல்கலைக்கழகமொன்றின் பாதுகாப்பிடத்திலேயே தங்கவைக்கப்பட்டிருந்தோம்.

எனினும், இறுதியாக மே 31ஆம் திகதியே பாரிய புயல் வீசியது. இதன்போது வீடுகளில் குகை போன்று நிர்மாணிக்கப்பட்ட பாதுகாப்பிடத்தில் நான் தங்கவைக்கப்பட்டேன். இது எனது வாழ்நாளின் மறக்கமுடியாத அனுபவமாகும். இதன்போது நேரடியாக டொனாடோ புயலின் அனுபவத்தினை உணர்ந்தேன்.

இதன்போது டொனாடோ புயல் எச்சரிக்கை மணி ஒலித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஊடகங்கள் வாயிலாகவும் இது தொடர்பான செய்திகள் ஊடனுக்குடன் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தன. இந்த வருடம் ஒக்லஹோமா மாநிலத்தில் ஏற்பட்ட டொனாடோ புயல் காரணமாக சுமார் 30 பேர் கொல்லப்பட்டதுடன் பல மில்லியன் டொலர் பெறுமதியான சேதங்கள் ஏற்பட்டன.


நிவாரண நடவடிக்கைகள்


இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் பொது இடங்களான பாடசாலைகள், சமய ஸ்தலங்கள் போன்ற இடங்களில் தங்கவைக்கப்பட்டு பாராமரிக்கப்பட்டனர். இதன்போது அனர்த்ததினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சமைத்த உணவு, சுகாதாரம் மற்றும் உளவளத்துணை போன்ற வசதிகள் இங்கு மேற்கொள்ளப்பட்டன. இதற்கு மேலதிகமாக செல்லப் பிராணிகளான நாய்களுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கையடக்க தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் உட்பட பல வழிகளில் நிதி சேகரிக்கப்பட்டது. அத்துடன் இன மற்றும் மத வேறுபாடுகளின்றி அனைவரும் இணைந்து நிவாரண நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த நிவாரண நடவடிக்கையில் பங்கெடுப்பதற்கான சந்தர்ப்பமும் எனக்கு கிடைத்தது.

இதற்கு மேலதிகமாக அனர்த்தத்தினால் ஏற்பட்ட இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கையில் அரசாங்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஈடுபட்டனர். அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ஒக்லஹோமா மாநிலத்திற்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு பாதிக்கப்ட்ட மக்களை சந்தித்தார்.

இதேகால பகுதியில் இந்த மாநிலத்தில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டமை குறிப்பிட்டத்தக்கது. இந்த இரண்டு அனர்த்தங்களும் குறித்த மாநிலத்தில் ஒரே காலப்பகுதியில் இடம்பெற்றது. இதன்போது கையடக்க தொலைபேசிகள் ஊடாக இலவச வானிலை எச்சரிக்கை குறுஞ்செய்திகள் வழங்கப்பட்டன.

சமகாலத்தில் இரண்டு பாரிய அனர்த்தங்களை ஒக்லஹோமா பிரதேச மக்களுடன் இணைந்து அனுபவித்த அனுபவத்திற்கு இடையில் மனைவிக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தபோது... (அடுத்த வாரம் தொடரும்...)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X