2025 மே 19, திங்கட்கிழமை

அந்த முப்பது நாட்கள்...

Super User   / 2013 ஜூலை 18 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தொடர் - 2)


-றிப்தி அலி


அந்த அனுபவங்களை மனைவியிடம் தொலைபேசியூடாக பகிர்ந்துக்கொள்வதற்கு பொருளாதாரம் ஈடுகொடுக்கவில்லை. அதற்கிடையில் உறவுகளின் நலன்விசாரிப்பு, தாய் மண்ணின் நடப்புகள் இவற்றையெல்லாம் மின்னல் வேகத்தில் பகிர்ந்துகொண்டேன்.

வாழ்வில் மறக்கமுடியாத அனுபவங்களை முழுமையாக பகிர்ந்துக்கொள்ள முடியாத ஏக்கம் இருந்தாலும் அமெரிக்காவுக்கு எதற்காக வந்தோமோ அதற்காக ஒக்லஹோமா பல்லைக்கழகத்திற்குள் நுழைகின்றேன். இந்த பல்கலைக்கழகத்திற்கு முன்னதாக இந்த மாநிலம் பற்றி கூறியே ஆகவேண்டும். ஏனென்றால், நியுயோர்க், வொஷிங்டன் என அமெரிக்காவிலுள்ள பல நகரங்களை பற்றி கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், ஒக்லஹோமா பற்றி ஓரிரு சம்பவங்கள் மட்டுமே எமது ஞாபகத்தில் நிற்கின்றன.

ஒக்லஹோமா மாநிலம்

டெக்ஸார், கலிபோனியா போன்று சுமார் 50 மாநிலங்கள் அமெரிக்காவில் உள்ளன. அவற்றில் ஒன்றே இந்த ஒக்லஹோமாவாகும். இந்த மாநிலம் அமெரிக்காவின் மத்திய பகுதியில் அமையப்பெற்றுள்ளது. எமது நாட்டின் மத்திய பகுதி குளிர் பிரதேசமாக காணப்படும்.

எனினும், இந்த ஒக்லஹோமா மாநிலம் இலங்கையை போன்று வெப்ப காலநிலையை கொண்ட பிரதேசமாகும். கொழும்பிற்கும் ஒக்லாஹோமாவிற்கும் இடையிலான நேர வித்தியாசம் சுமார் -10.30 மணித்தியாலங்களாகும். சுமார் 3.815 மில்லியன் மக்கள் சனத்தொகையினை கொண்ட இந்த மாநிலத்தின் தலைநகராக ஒக்லஹோமா சிற்றி உள்ளது. இதற்கு அடுத்த படியாக துல்ஸா மற்றும் நோர்மன் ஆகிய நகரங்கள் உள்ளன.

அமெரிக்காவின் 46ஆவது மாநிலமாக 1907ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்ட இந்த மாநிலம், அமெரிக்காவின் 20ஆவது பெரிய மாநிலமாகும். இதன் தலைநகரான ஒக்லஹோமா சிற்றியிலே மாநிலத்தின் அவை, உயர் நீதிமன்றம் மற்றும் விமான நிலையம் போன்ற முக்கியமானவைகளும் உள்ளன.

இந்த நகரில் மாத்திரம் இரண்டு விமான நிலையங்கள் உள்ளன. உள்ளூர் விமான நிலையங்களான அவை இரண்டிற்கும் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த இந்த பிரதேசத்தை சேர்ந்த இருவரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

ஒக்லஹோமா பல்கலைக்கழகம்

ஒக்லஹோமா சிற்றியிலிருந்து அரை மணி நேர பயண தூரத்திலே இந்த மாநிலத்தின் மூன்றாவது பெரிய நகராகவுள்ள நேர்மனிலே இந்த பல்கலைக்கழகம் காணப்படுகின்றது. இந்த பல்கலைக்கழகம் எமது நாட்டிலுள்ள போரதனை பல்கலைக்கழத்தை போன்று இயற்கையோடு ஒன்றிணைந்ததாக காணப்படுகின்றது.

நவீன ஊடகங்கள் தொடர்பிலான செயலமர்வில் கலந்துகொள்வதற்காக இந்த நகரில் சுமார் மூன்று வாரங்கள் நான் தங்கியிருந்தேன். அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஏற்பாட்டிலான இந்த செயலமர்வு ஒக்லஹோமா பல்கலைக்கழகத்தின் ஊடக மற்றும் வெகுசன தொடர்புசாதனத்திற்கான ஹேலோர்ட் கல்லூரியில் இடம்பெற்றது.

எமது நாட்டு பல்கலைக்கழகங்களிலுள்ள பீடங்களுக்கு சமமானதாகவே ஹேலோர்ட் கல்லூரியும் காணப்படுகின்றது. 1890ஆம் உருவாக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் வருடாந்தம் சுமார் 30,000 மாணவர்கள் பதிவு செய்யப்படுகின்றனர். மருத்துவம், பொறியியல், முகாமைத்துவம் மற்றும் ஊடகம் என 15 பீடங்கள் இந்த பல்கலைக்கழகத்தில் காணப்படுகின்றன.

இந்த ஒவ்வொரு பீடங்களிலும் பல்வேறு வகையான கற்கைநெறிகள் கற்பிக்கப்படுகின்றன. சுமார் மூன்று வாரங்கள் இந்த பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்த எனக்கு இதன் எல்லையினை அடையாளப்படுத்த முடியவில்லை. இதற்கு மேலதிகமாக இன்னுமொரு விடயம் என்னவென்றால், எமது நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கு முன்னர் அதன் பெயர் பலகையினை நாம் கண்டுவிடுவோம்.

ஆனால் ஒக்லஹோமா பல்கலைக்கழகத்தின் பெயர் பலகையினை என்னால் காணவே முடியவில்லை. இந்த பெயர் பலகை தொடர்பாக என்னுடன் இந்த செயலமர்வில் கலந்துகொண்ட நண்பரொருவருடன் வினவியதற்கு, அவரும் பெயர் பலகையினை காணவில்லை என்றே சொன்னார்.

அந்தளவிற்கு பெரும் பரப்பளவைக்கொண்டதே இந்த பல்கலைக்கழகமாகும். இதுபோன்ற சுமார் பத்து பல்கலைக்கழங்கள் இந்த மாநிலத்தில் மாத்திரம் உள்ளன. அவை அனைத்திலும் பாரிய எண்ணிக்கையான மாணவர்கள் கல்வி பயில்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நவீன ஊடக செயலமர்வு

நான் கலந்துகொண்ட இந்த செயலமர்வில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய தெற்காசிய நாடுகளை சேர்ந்த சுமார் 20 பேர் கலந்துகொண்டனர். எனினும் இலங்கையிலிருந்து நவீன ஊடகங்களில் அதிக ஈடுபாடுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் என நான்கு பேர் என்னுடன் கலந்துகொண்டனர்.

இலங்கை தவிர்ந்த ஏனைய மூன்று நாடுகளிலும் இந்த செயலமர்விற்கான பங்குபற்றுநர்கள் திறந்த விண்ணப்பங்கள் ஊடாக தெரிவுசெய்யப்பட்டனர். ஆனால் இலங்கையிலிருந்து மாத்திரம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பதை மிக பெருமையுடன் தெரிவிக்கிறேன்.

மூன்றாவது தடவையாக ஒக்லஹோமா பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் இந்த செயலமர்வு தெற்காசிய நாட்டினருக்காக விசேடமாக தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த செயலமர்வு வழமையாக மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்களிலேயே இடம்பெறுவது வழமையாகும்.

பல்கலைக்கழக விரிவுரைகள்


அமெரிக்க பல்கலைக்கழகங்களின் விரிவுரைகள் எமது நாட்டினை போலன்றி முற்றிலும் மாறுப்பட்டதாகவே காணப்பட்டது. அதாவது வகுப்பறை விரிவுரைகளுடன் மாத்திரம் நின்றுவிடாது நேரடி பயிற்சி, கள விஜயம், தொண்டர் சேவை பயிற்சி மற்றும் தலைமைத்துவ பயிற்சி ஆகியன கலந்ததாகவே பல்கலைக்கழக விரிவுரைகள் காணப்பட்டன.

அதனை ஒத்தவாறே எமது நவீன ஊடக செயமர்வும் இடம்பெற்றது. தெற்காசிய நாடுகளில் காணப்படும் பல்கலைக்கழக விரிவுரை செயற்பாடுகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாகவே அமெரிக்க முறைமை காணப்பட்டதாக செயலமர்வில் கலந்துகொண்ட அனைவரும் தெரிவித்தனர்.

எமது நாட்டு பல்கலைக்கழகங்களின் விரிவுரைகளின் போது தொலைபேசி பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் விரிவுரை நேரங்களில் தொலைபேசி மாத்திரமல்ல, லெப்டொப், ஐபேட் போன்ற உபகரணங்கள் விரிவுரைகளுக்கு தொந்தரவின்றி பயன்படுத்த முடிவதுடன் சமூக ஊடகங்களையும் பயன்படுத்த முடியும்.

இதற்கு எந்த தடையுமில்லை, தண்டனையுமில்லை. இதன்மூலம் உலக விடயங்களை உடனுக்குடன் அறிய முடியும் என்பதாலேயே இந்த கட்டுப்பாடில்லை என அமெரிக்க விரிவுரையாளரொருவர் தெரிவித்தார். செயலமர்வில் கலந்துகொள்ளச் சென்ற நாங்கள், பல்கலைக்கழகத்திற்கு அண்டிய பிரதேசத்திலுள்ள தொடர்மாடி வீட்டு தொகுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தோம்.

இந்த ஒக்லஹோமா பல்கலைக்கழக பிரதேசமும் தொடர்மாடி பிரதேசமும் புகைத்தல் தடை செய்யப்பட்ட பகுதியாக காணப்பட்டது. அதாவது எமது மொழியில் கூறப்போனால் புகைப்பிடிப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாகும். எனினும் குறித்த தடையினையும் மீறி புகைப்பிடித்தால்... (அடுத்த வாரம் தொடரும்)

அனுபவ பகிர்வு:

தொடர் - 1

You May Also Like

  Comments - 0

  • Mohamed Thursday, 25 July 2013 04:45 AM

    எமது நாட்டின் பல்கலை கழகங்களிலும் விரிவுரைகளுக்கு மேலதிகமாக Field Visit - க‌ள விஜயம், Demonstrations - நேரடி பயிற்ச்சி, implant training - தொழில்சார் பயிற்ச்சி என்பன உண்டு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X