2025 மே 19, திங்கட்கிழமை

போரில் இறந்தவர்களை நினைவு கூறலும் நல்லிணக்கமும்

Kanagaraj   / 2013 டிசெம்பர் 01 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஐயூப்

போருக்குப் பின்னரான காலத்தில் தாம் வட பகுதியில் பல அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையிலும் அப் பகுதி மக்கள் ஆளும் கட்சிக்கு கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது பெருமளவில் வாக்களிக்கவில்லை என்று தென் பகுதியில் சில அரசியல்வாதிகள் கவலைப் படுகிறார்கள். போர் நடைபெற்ற காலத்தில் வாழ்ந்ததைப் பார்க்கிலும் நிம்மதியாக வாழும் நிலையிலும் வட பகுதியில் சிலர் இன்னமும் புலிகளை பூஜித்து வருகிறார்களே என்பதும் சிலரது ஆதங்கமாக இருக்கிறது.

2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான அரச படைகளின் போர் முடிவடைந்து இரண்டு வருடங்களாக புலிகளின் மாவீரர் தினம் வட பகுதியில் வெளிப்படையாக கொண்டாடப்பட்டதாக தெரியவில்லை. தமிழ் ஊடகங்களும் அக்காலத்தில் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக தமிழ் பத்திரிகைகள் வட பகுதியில் இது தொடர்பாக இடம்பெற்ற பல நிகழ்வுகளை அறிக்கையிட்டுள்ளன.

கடந்த வருடம் கார்த்திகை தீப நிகழ்வும்; புலிகளின் மாவீரர் தினத்தோடு சம்பந்தப்பட்டது. இரண்டும் ஒரே தினங்களில் கொண்டாடப்பட்டதால் புலிகளின் நிகழ்வை தடுக்க முற்பட்ட பாதுகாப்புப் படையினர் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டனர். அவர்கள் பல இடங்களில் கார்த்திகை தீபமேற்றியவர்களையும் புலிகளுக்காக தீபமேற்றியவர்களாக நினைத்து கைது செய்ய முற்பட்டதாக செய்திகள் வந்தன.

இவ் வருடமும் புலிகளின் மாவீரர் தினம் தொடர்பாக சில சர்ச்சைகள் எழுந்தன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் கடந்த செவ்வாய்க்கிழமை  நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது புலிகளையும் அவ்வமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் பாராட்டிப் பேசினார். பின்னர் அவ்வுரை ஹன்ஸாட்டிலிருந்து நீக்கப்பட்டது. அவரது உரையை தாம் அங்கீகரிக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பின்னர் டெய்லி மிரர் பத்திரிகைக்குக் கூறியிருந்தார்.

வட மாகாண முதலமைச்சர் யாழ்ப்பானத்தில் வட மாகாண கல்வி அமைச்சு வளாகத்தில் புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு மர நடுகையில் ஈடுபட்டதாக சில செய்திகள் கூறின. ஆனால் அவர் சட்டம் தெரிந்தவர் என்பதால் அவரது உரை பொதுவானதோர் நிகழ்வில் நிகழ்த்தபட்டதைப் போன்றதாகவே அமைந்திருந்தது.

அவர் புலிகளை பாராட்டிப் பேசியிருந்தால் பல தமிழர்கள் அதைப் பற்றி மகிழ்ச்சியடைந்து இருப்பார்கள். அதைப் போலவே அரசாங்கமும் மகிழ்ச்சியடைந்திருக்கும். ஏனெனில் அவர் பிரிவினைக்கு எதிராக செய்து கொண்ட சத்தியப்பிரமானத்தை மீறினால் மாகாண சபையை கலைத்துவிட அரசாங்கத்திற்கு சட்ட அதிகாரம் கிடைத்துவிடும். அரசாங்கம் அதற்கான வாய்ப்பு வரும் வரை காத்துக்; கொண்டு இருக்கிறது.

இந்த விடயத்தை தென் பகுதி மக்களும் அரசியல்லாதிகளும் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதை தமிழ் தலைவர்களும் தமிழ் மக்களும் அறிந்திருப்பது முக்கியமாகும். புலிகள் வட பகுதியை நிர்வகித்த காலத்தில் இருந்த நிலைமையையும் புலிகள் வட மாகாணத்தை மட்டுமாவது கைப்பற்றிக் கொண்டு தமிழீழத்தை பிரகடனப்படுத்தியிருந்தால் ஏற்பட்டு இருக்கக்கூடிய நிலைமையையும் புலிகளின் செயற்பாடுகளினால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையையும் தற்போதைய வட பகுதி நிலைமையோடு ஒப்பிடும் சில சிங்கள ஊடகங்கள் தமிழ் மக்கள் புலிகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்து மீண்டும் போர் காலத்தை அடைய விரும்புகிறார்களா என்று கேள்வி எழுப்புகின்றன.

உண்மையிலேயே போர் காலத்தில் நிலவியதைப் பார்க்கிலும் இன்றைய வட பகுதி நிலைமை நல்லது தான். இப்போது புலிகள் தமது பிள்ளைகளை போருக்காக பிடித்துச் செல்வார்கள் என்று மக்கள் அச்சப்படத் தேவையில்லை. விமானப் படை கண்மூடித்தனமாக குண்டுகளைப் போட்டு தாம் குடும்பத்தோடு அழிந்து விடுவோமோ என்று மக்கள் பயப்படத் தேவையில்லை.

போரில் புலிகள் வெற்றி பெற்றிருந்தால் ஏற்பட்டு இருக்கக்கூடிய நிலைமையை எவராலும் விவரிக்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் அவ்வாறானதோர் நிலைமையை விரும்புவார்கள் என்று கூறவும் முடியாது. ஆயினும் புலிகள் போரில் தோல்வியடைந்ததை தமிழ் மக்களும் தமிழ் அரசியல்வாதிகளில் பலரும் விரும்பவில்லை.

புலிகளின் நிர்வாகத்தை விரும்பாதவர்களும் அதை விட அரசாங்கம் தமிழ் மக்கள் விடயத்தில் நடந்து கொள்ளும் முறையை விரும்பாமையே அதற்குக் காரணமாகும். வட பகுதியல் வீதிகள் நிர்மானிக்கப்பட்டு, தொலைத்தொடர்பு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு, பாடசாலைகள் புனரமைக்கப்பட்டு, மருத்துவமனைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு பல துறைகளில் மேம்பாடு காணப்படுவதை எவராலும் மறுக்க முடியாது.
ஆனால் அங்கு மக்கள் அரசாங்கத்தை தமது அரசாங்கமாக மதிக்கத் தயாராக இல்லை. அவர்கள் கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது அந்த செய்தியைத் தான் அரசாங்கத்திற்கு வழங்கினார்கள். இதைத் தான் தென் பகுதியில் பலரால் விளங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறது.
இந்த நிலையில் தான் அவர்கள் புலிகளின் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதை ஆச்சரியத்தோடு நோக்குகிறார்கள்.

வட பகுதி மக்கள் போரில் இறந்த தமது பிள்ளைகளை நினைவு கூற உரிமை இருக்க வேண்டும் என்று பல தமிழ் அரசியல்வாதிகள் வாதிடுகிறார்கள். இதனை வட பகுதியில் கடமையாற்றும் இராணுவ அதிகரிகளுக்கும் நிராகரிக்க முடியாத விடயமாக இருக்கிறது. ஏனெனில் ஒருவருக்கு என்ன குற்றத்தை செய்தாலும் தமது பிள்ளை பிள்ளையே என்ற உண்மையை அவர்களாலும் நிராகரிக்க முடியாது. எனவே மக்கள் தமது பிள்ளைகளுக்காக தீபமேற்றலாம், ஆனால் அதனை பகிரங்கமாக செய்ய முடியாது என கடந்த வருடம் மூத்த இராணுவ அதிகாரிகள் கூறினர்.

நவம்பர் 27 ஆம் திகதி இந்த நினைவு கூறல்கள் இடம்பெறுவதனாலேயே இந்த விடயத்தில் மோதல் ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கிறது. ஏனெனில் புலிகள் போரில் இறந்த தமது இயக்கத்தின் முதலாவது போராளியான சங்கரின் இறந்த தினமான நவம்பர் 27 திகதியையே மாவீரர் தினமாக பிரகடனப்படுத்தியிருந்தனர்.

அது தமிழீழத்திற்காக உயிர் தியாகம் செய்த முதலாவது போராளி இறந்த நாளும் அல்ல. தமிழீழத்திற்காக உயிர் தியாகம் செய்த முதலாவது போராளியான உரும்பிராய் சிவகுமாரன் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் திகதியே இறந்தார். எனவே நவம்பர் 27 என்பது புலிகள் இயக்க போராளிகளை நினைவு கூறுவதற்காகவே ஒதுக்கப்பட்ட நாளாகும். எனவே போரில் பிள்ளைகளை இழந்தவர்கள் அப் பிள்ளைகள் இறந்த தினங்களில் அவர்களை நினைவு கூறாது நவம்பர் 27 அம் திகதியே நினைவு கூறுவதே அரசாங்கத்திற்கு பிரச்சினையாக தெரிகிறது.

ஆனால் அதற்கும் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் பதிலளித்துள்ளார். இரண்டு கிளர்ச்சிகளில் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணி தமது போராளிகளை பகிரங்கமாகவே நினைவ கூற முடியும் என்றால் புலிகளை நினைவு கூறுவதில் என்ன தவறு இருக்கிறது என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆனால் தமிழகத்திலேயே புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகள் தடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் இலங்கை அரசாங்கத்திடம் அவ்வாறானதோர் நிலைமையை எதிர்ப்பார்க்க முடியாது. ஆனால் இது நல்லதோர் வாதம் என்பதில் சந்தேகமே இல்லை.

இது ஒரு உணர்வு பூர்வமான பிரச்சினையாகும். எனவே தான் போரில் இறந்த சகலரையும் நினைவு கூற பொதுவானதோர் தினத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என ஐ.தே.கு. நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் கூறியிருக்கிறார். இது உணர்வு பூர்வமான விடயம் என்பதால் இரு சாராரும் பக்குவமாக நடந்து கொள்வது போலவே நல்லிணக்கத்தையும் மனதில் இருத்தி செயற்படுவது நாட்டுக்கு நல்லதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X