2025 மே 19, திங்கட்கிழமை

அரசாங்கமும் தமிழ் தரப்பும் சந்தித்தே தான் ஆக வேண்டும்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 29 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனப் பிரச்சினையை மையமாகக் கொண்டு அரசியலமைப்பு திருத்தத்திற்காக அரசாங்கம் நியமித்துள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவையும் படையினருக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரின் போது நிகழ்ந்த உயிர் சேதம் மற்றும் பொருட் சேதம் ஆகியவற்றை கண்டறிவதற்கான குடிசன மதிப்பீட்டையும் நிராகிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் தலைவர்களின் கூட்டத்தை அடுத்து தெரிவித்துள்ளனர்.

இதில் நீர்ப்பாசன அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் தலைமையில் தெரிவுக் குழுவை நிராகரிப்பதென்ற முடிவு புதியதல்ல. அக்குழு நியமிக்கப்படும் முன்னரே தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை நிராகரித்திருந்தது. குடிசன மதிப்பீட்டை நிராகரிப்பதற்கான முடிவு தான் இவற்றில் புதிய முடிவாகும்.

இனப்பிரச்சினை தொடர்பான தெரிவுக் குழுவை நிராகரித்தாலும் பேச்சுவார்த்தைக்கு வருமாரு கடந்த 20ஆம் திகதி ஜனாதிபதி விடுத்த அழைப்பை கூட்டமைப்பு நிராகரிக்கவில்லை. வரவு - செலவு திட்டத்தின் மீதான விவாதத்தின் இறுதி நாள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி, கூட்டமைப்பின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால் தாம் பேச்சுவார்த்தைகளை நிராகரிக்கவில்லை என்றே இதற்கு பதிலளித்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருந்தார்.

தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதுவும் இல்லை என்றும் அவர்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஏற்பதைத் தவிர தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வில்லை என்றும் ஜாதிக்க ஹெல உருமய, தேசிய சுதந்திர முன்னணி போன்ற அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் கூறி வருகின்றன. இந்த நிலையில் தான் ஜனாதிபதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருக்கிறார்.

சம்பிக்க ரணவக்க மற்றும் விமல் வீரவன்ச போன்ற தமது அமைச்சர்கள் எதைக் கூறினாலும் தமிழ் தேசிய கூட்டமப்புடன் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் இருப்பதை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டிருப்பதனாலேயே அவர் பேச்சுவார்ததை நடத்த வருமாறு கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கிறார். தெரிவுக்குழுவை நியமித்ததன் மூலமும் பேச்சுவார்த்தைக்கான அவசியத்தை அரசாங்கம் உலகத்தார் முன்னிலையில் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

தமிழ் தரப்பினரும் பிரச்சினைகளை முன்வைத்த வண்ணமே தான் இருக்கிறார்கள். அதிகாரப் பரவலாக்கல், காணிப் பிரச்சினை, பெண்களின் பாதுகாப்பு, காணாமற் போனோர்களின் பிரச்சினைகள் என்று பலவற்றை அவர்கள் முன்வைக்கிறார்கள். இவற்றையும் தீர்த்துக்கொள்ள பேச்சுவார்த்தையைத் தவிர வேறு வழியில்லை.

அரசாங்கமும் தமிழ் தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றே சர்வதேச சமூகமும் அடிக்கடி வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஜனாதிபதியின் அழைப்பின் நோக்கத்தை எதிர்க்கட்சிகள் சந்தேகிக்கின்றன. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத்தை இலக்காக வைத்தே ஜனாதிபதி, தமிழ் தேசிய கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருக்கிறார் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல கூறியிருந்தார்.

கடந்த வருடம் மார்ச் மாதமும் இவ்வருடம் மார்ச் மாதமும் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு பாதகமான இரண்டு பிரேரணைகள் நிரைவேற்றப்பட்டன. அதிகார பரவலாக்கலை முறைப்படுத்த வேண்டும் என்ற கருத்தும் அந்தப் பிரேரணைகளின் இருந்தது. எனவே தாம் அந்த விடயத்தில் நடவடிக்கை எடுத்துள்ளதாக மனித உரிமை பேரவைக்கு எடுத்துக் காட்ட அரசாங்கத்திற்கு ஏதாவது ஆதாரம் அவசியமாக இருக்கிறது. எனவே தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து இருந்தால் அதனை ஆதாரமாக எடுத்துக் காட்டலாம். அதைத் தான் கிரியல்ல கூறுகிறார்.

இதற்கு முன்னரும் அரசாங்கம் இவ்வாறு நடந்துகொண்டுள்ளமையும் அவர் அவ்வாறு கூறுவதற்கு காரணமாக இருந்திருக்கலாம். போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் தாம் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வரும் நிலையிலேயே புலிகள் போராடுகிறார்கள் என்று உலகத்;தார் முன் எடுத்துக்கூற அரசாங்கம் முயற்சித்தது.

அதற்காக அக்காலத்தில் ஜனாதிபதி சர்வ கட்சி மாநாடொன்றை கூட்டினார். பின்னர் அந்த மாநாடு சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவொன்றை நியமித்தது. அக்குழு ஒரு வருடத்திற்கு மேலாக கூட்டங்களை நடத்தி போர் முடிந்த உடன் அதாவது 2010ஆம் ஆண்டு அதன் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தது. அவ்வளவு தான். அந்த அறிக்கை காணாமற்போய்விட்டது.

பின்னர் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை விடயத்தில் தமக்கு ஆலோசணை வழங்குவதற்காக மர்சூகி தருஸ்மான் தலைமையில் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுத்த போது இலங்கை அரசாங்கம் 2010ஆம் ஆண்டு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்ற பெயரில் ஆணைக்குழுவொன்றை நியமித்தது. அக்குழு 2011 ஆண்டு தமது அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தது. அவர் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அவ்வறிக்கையை சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொண்டது. எனவே அரசாங்கமும் அந்த அறிக்கையை காட்சிப் பொருளாகிக் கொண்டது.

ஆனால் தாம் நியமித்த அந்த ஆணைக்குழுவின் சிபார்சுகளை நிறைவேற்ற அரசாங்கம் தயங்கி வருகிறது. கைது செய்யப்பட்டு காணாமற்போனவர்கள், செனல் 4 விடியோ, போன்ற பல விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என அவ்வறிக்கையில் கூறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால் அரசாங்கம் அவற்றைப் பற்றி நடவடிக்கை எடுக்க தயங்கி வருகிறது.

தெரிவுக் குழுவை நியமிக்கு முன்னரும் அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தது. அந்த காலத்திலும் அரசாங்கம் அப்பேச்சுவார்தைகளையும் உலகுக்கு காட்டி இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக தாம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி வந்தது.

இதனிடையே தான் அரசாங்கம் திடீரென தெரிவுக் குழுவை நியமிக்கும் ஆலோசனையை முன்வைத்தது. அந்த நிலையில் தாம் அரசாங்கத்துடன் நடத்தும் பேச்சுவார்த்தைகளின் முடிவை தெரிவுக்குழுவின் அடிப்படையாகக்கொள்ள வேண்டும் என தாம் கூறியதாகவும் அரசாங்கம் அதற்கு இணங்கியதாகவும் தமிழ் கூட்டமைப்பு அப்போது கூறியது.

ஆனால் தாம் அதற்கு இணங்கவில்லை என பின்னர் அரச பிரதிநிதிகள் கூறினர். இதன் காரணமாகவே தமிழ் கூட்டமைப்பு தெரிவுக் குழுவை நிராகரித்தது. ஆனால் அரசாங்கம் தெரிவுக் குழுவை நியமித்தது. அதற்காக ஆளும் கட்சியிலிருந்து 19 பேர் நியமிக்கப்பட்டனர். ஆனால் ஏனைய கட்சிகள் தமது பிரதிநிதிகளை நியமிக்கவில்லை. எனவே தெரிவுக்குழு கூடாமலே அதன் தொழிற்படும் காலம் கடந்து விட்டது.

எனவே தான் சில தினங்களுக்கு முன்னர் அரசாங்கம் அதன் காலத்தை நீடித்தது. அவ்வாறு தெரிவுக் குழுவின் காலம் நீடிக்கப்பட்டதன் பின்னர் தான் ஜனாதிபதி பேச்சுவார்ததைக்கு வருமாறு சம்பந்தனையும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் அழைத்திருக்கிறார்.
இந்த பேச்சுவார்த்தை விடயத்தில் அரசாங்கத்தின் நோக்கமும் சந்தேகமாக இருக்கிறது தான். அதேவேளை இலங்கையின் சமாதான பேச்சுவார்ததை வரலாறும் அவ்வளவு திருப்திகரமானதாக இல்லை தான். ஆனால் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேறு என்ன வழி இருக்கிறது என்பதே இங்குள்ள கேள்வியாகும்.

பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கான உலகம் ஏற்றுக்கொண்ட நாகரிகமான ஒரே வழி பேச்சுவார்த்தையே. பேச்சுசார்த்தைகளின் போது சம்பந்தப்பட்ட தரப்புக்கள் ஒருவருக்கொருவர் பல நெருக்குவாரங்களை ஏற்படத்தலாம். இருந்த போதிலும் பிரச்சினைகள் இருப்பதாக ஏற்றுக்கொள்வதாக இருந்தால் அரசாங்கம் தமிழ் தரப்போடு பேச்சுவார்த்தை நடத்தியே ஆக வேண்டும்.

அல்லது வேறு வார்த்தைகளில் கூறுவதாயின் தமிழ் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியே தான் ஆக வேண்டும். அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மனித உரிமை பேரவையில் காட்சிப் பொருளாக பாவிக்கலாம் என்ற சந்தேகம் இருந்தால் மார்ச் மாதத்தின்; பின்னராவது பேச்சுவார்த்தை நடத்துவதைத் தவிர இருசாராருக்கும் வேறு வழியில்லை.

You May Also Like

  Comments - 0

  • தயா Sunday, 29 December 2013 12:59 PM

    தமிழர்கள் 64 வருடம் இலங்கை அரசாங்கத்துடன் எந்தச் சந்தர்ப்பத்திலும் தம்மை விலகிக் கொண்டவர்கள் அல்ல. இலங்கை அரசாங்கமே தமது இனவாத அரசியலை தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக திணிக்க நினைப்பதாக செயல்பட்டு வந்துள்ளது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X