- கே.சஞ்சயன்
புதிய ஆண்டு இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் சோதனைகளுடன் தான் பிறந்திருக்கிறது. அதுவும் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களும், இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், என்றுமில்லாதளவுக்கு நெருக்கடியைக் கொடுக்கின்ற ஒன்றாக அமைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.
இது ஒன்றும் ஜோதிடக் குறிப்பு அல்ல. ஜெனிவாவில் இலங்கை அரசு நிறைவேற்ற நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, அந்த இலக்கை அடைவதற்கு இலங்கை அரசாங்கம் பயணித்துள்ள தொலைவு, அதற்காக அரசாங்கம் செய்துள்ள அர்ப்பணிப்பு என்பனவற்றை யதார்த்தமாக மதிப்பிடும் ஒருவரால், இந்தக் கணிப்பை முன்வைப்பது ஒன்றும் கடினமில்லை.
இதற்குப் பெரிய ஜோதிட அறிவோ, அரசியலைக் கணிக்கும் ஆற்றலோ வேண்டியதில்லை.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுகளை இன்னமும் முழுமையாக நிறைவேற்றவும் இல்லை, அதற்கு முழு முயற்சிகளை எடுக்கவுமில்லை.
இந்தநிலையில், இன்னும் சரியாக மூன்று மாதங்களில் ஜெனிவாவில் தொடங்கப் போகும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25ஆவது அமர்வு இலங்கைக்கு சாதகமானதாக அமையும் என்று எவரும் எதிர்பார்க்க முடியாது.
இலங்கை அரசாங்கமே கூட, தாம் ஜெனிவாவில் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது என்று கூறுகின்ற நிலையில், அது மிகவும் கடினமான சவால் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
எனினும், ஜெனிவாவில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் நகர்த்தப் போகும் காய்களை முறியடிப்பதற்கான வியூகங்களை இலங்கை அரசாங்கமும் வகுத்துச் செயற்படாமல் இல்லை.
மூன்று கட்டங்களாக இந்த நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.
கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு மனிதஉரிமைகள் நிலை குறித்து விரிவாக விளக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுபோலவே, வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களும் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களுக்கு விளக்கமளிக்கவுள்ளன.
அடுத்து, ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க தலைமையிலான குழுவொன்று ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழு மற்றும் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் முயற்சியிலும் இறங்கவுள்ளது.
அரசாங்கத்தின் முக்கியமான அமைச்சர்கள் அதிகாரிகளுக்கு அடுத்த மூன்று மாதங்களும் நிம்மதியான உறக்கம் வரப் போவதில்லை. ஏனென்றால், கடந்த இரண்டு ஆண்டுகளையும் விட கடுமையான நிலைப்பாட்டை மேற்குலகம் எடுப்பதற்கு வாய்ப்புள்ளதால், அதை முறியடிப்பதற்கு, எல்லா வழிகளிலும் முயற்சிக்க வேண்டிய கட்டாயம் அரசாங்கத்துக்கு உள்ளது.
எனவே, அரசாங்கம் தனது முழு வளங்களையும் ஒன்று திரட்டி சர்வதேச அளவில் பிரசாரத்தில் இறங்கி, ஜெனிவா நெருக்கடியில் இருந்து தப்பிக்க முனையும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தப் பின்னணியில், வரும் 10ஆம் திகதி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
பொதுவாக, ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு முன்னதாக, அதுபற்றிய இலங்கை அரசாங்கத்தை எச்சரித்து, இணங்கி நடக்கும்படி கோருவதற்காக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தமது உயர்நிலை அதிகாரிகளை கொழும்புக்கு அனுப்புவது வழக்கம்.
கடந்த ஆண்டும் அதற்கு முந்திய ஆண்டும், பெப்ரவரி மாதத்தில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கொழும்புக்கு வந்திருந்தனர். ஆனால், இந்த மாதம் கொழும்பு வரவுள்ள நிஷா தேசாய் பிஸ்வால் தலைமையிலான குழு அத்தகைய இறுதி எச்சரிக்கையை விடுப்பதற்கான குழுவாக இருக்குமா என்பது சந்தேகம் தான்.
ஏனென்றால், ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு இன்னமும் மூன்று மாதங்கள் உள்ளன.
ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தமது அறிக்கையை மார்ச் 26ஆம் திகதியே சமர்ப்பிக்கவுள்ளார்.
எனவே, இந்த மூன்று மாதகால இடைவெளிக்குள் இலங்கை அரசாங்கம் முன்னேற்றகரமான எந்த சமிக்ஞையையும் காட்டாது என்று இப்போதே தீர்மானிக்க முடியாது.
போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை நடத்தும் அழைப்பை இதுவரை அமெரிக்கா விடுத்திருக்கவில்லை.
உள்ளகப் பொறிமுறை மூலம் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்றே அமெரிக்கா ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறது. அது முடியாத கட்டத்தில் தான் அடுத்த கட்டங்கள் குறித்து சிந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று குறிப்பிட்டதே தவிர, எந்தவொரு சந்தர்ப்பத்திலும், சர்வதேச விசாரணை பற்றிய எச்சரிக்கை அமெரிக்காவிடம் இருந்து வந்ததில்லை.
அதுபோல, வரும் மார்ச் மாதத்துக்குள் சுதந்திரமான நம்பகமான உள்ளக விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்கத் தவறினால் தான், சர்வதேச விசாரணையை வலியுறுத்த வேண்டிய வரும் என்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனும், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் குறிப்பிட்டிருந்தனர்.
அதற்கிடையில், ஜெனிவா நெருக்கடியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, வரும் மார்ச் மாதத்துக்கு முன்னதாக, தென்னாபிரிக்காவின் உதவியுடன் உண்மை நல்லிணக்க ஆணைக்குழு வொன்றை அரசாங்கம் அமைக்கவுள்ளதாகவும் பரவலாக கருத்து நிலவுகிறது.
இத்தகைய பின்னணியில், வரும் மார்ச் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக மற்றொரு தீர்மானம் கொண்டு வரப்போவது தொடர்பான இறுதி எச்சரிக்கையை இப்போதே அமெரிக்கா வெளிப்படுத்த முனையாது.
ஆனால், நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் எந்தளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளன, ஜெனிவா தீர்மானத்தை அரசாங்கம் மதித்துச் செயற்படுகிறதா என்பதை நிஷா தேசாய் பிஸ்வால் உன்னிப்பாக கண்காணிப்பார் என்பதில் சந்தேகமில்லை.
அடுத்தடுத்த கட்ட நகர்வுகளுக்கான ஒரு முன்னாயத்த நடவடிக்கை என்றும் இதனைக் குறிப்பிடலாம்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த நிஷா தேசாய் பிஸ்வால், இந்தப் பதவிக்கு பெயர் பிரேரிக்கப்பட்ட போது செனெட் வெளிவிவகாரக் குழு முன்பாக நிகழ்த்திய உரையும் சரி, நியமனம் உறுதியான பின்னர் வொசிங்டனில் வெளியிட்ட கருத்தும், இலங்கை அரசாங்கத்தினால் வெறுப்புடனேயே நோக்கப்பட்டது.
அதாவது, இலங்கை தொடர்பான கடும் போக்கிலான கருத்தையே அவர் முன்வைத்திருந்தார். எனவே, அவர் தனது முதலாவது இலங்கைப் பயணத்தின் போது, அரசாங்கம் விரும்புகின்ற வகையில் செயற்படவோ கருத்துகளை வெளியிடவோ வாய்ப்புகள் குறைவு.
நிஷா தேசாய் பிஸ்வால் வரும் 10ஆம் திகதி கொழும்பு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஆனால், இது இன்னமும் இலங்கை அரசாங்கத்தினாலோ, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினாலோ உறுதிப்படுத்தப்படவில்லை.
எனினும், நிஷா தேசாய் பிஸ்வால், கொழும்பு வருவதற்கு வெளிவிவகார அமைச்சின் அனுமதியைக் கோரியுள்ளார் என்பதை, வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த வருகை எப்படியும் நடக்கும் என்பதால், அரசாங்கத்துக்கு புதிய ஆண்டு நெருக்கடியுடன் தான் பிறந்துள்ளது.
நிஷா தேசாய் பிஸ்வாலை சமாளிப்பது மட்டும் அரசாங்கத்துக்கு இப்போதுள்ள பிரச்சினையல்ல. அதற்கு அப்பாலும் இந்த ஆண்டில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், ஜெனிவா அமர்வுக்காக பல்வேறு மட்டங்களில் தகவல்களையும் தரவுகளையும் திரட்டி வருவதாகவும் தெரிகிறது.
இவையெல்லாம் இந்த ஆண்டு ஜெனிவாவில் இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்துள்ளது.
ஆக, போர் முடிவுக்கு வந்த பின்னர், சர்வதேச அரங்கில் அரசாங்கம் மிகப்பெரிய சிக்கல்களை சந்திக்கப் போகும் ஆண்டாக 2014ஆம் ஆண்டு அமையலாம்.