2025 மே 19, திங்கட்கிழமை

ஜெனீவா மாநாட்டுக்கு முன்னரான பிரசாரப் போரில் தமிழ் பிரபாகரனும் சிற்சபேசனும்

Menaka Mookandi   / 2014 ஜனவரி 05 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு மிகவும் முக்கியமான மாதமாகும். ஏனெனில் மார்ச் மாதத்தில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டம் கூடவிருப்பதோடு இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் விசாரணை நடத்தாவிட்டால் அக்கூட்டத்தின் போது தாம் சர்வதேச விசாரணையொன்றை கோருவதாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளரம் நவநீதம்பிள்ளையும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரனும் கூறியிருக்கின்றனர்.

இந்த நிலைவயில் இலங்கை அரசாங்கத்திற்கும் பல தமிழ் தரப்பினர்களுக்கும் இடையே இந்த மனித உரிமை பேரவையின் கூட்டத்தை குறிக்கோளாகக் கொண்ட பிரசாரப் போரொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இலங்கைக்கு வந்து விஸா நிபந்தனைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நாடு கடத்தப்பட்ட தமிழக ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரனினதும் அதன் பின்னர் இலங்கைக்கு வந்த கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனினதும் இலங்கை பயணங்களும்; இந்தப் பிரசார போரின் அங்கங்களாகவே தெரிகின்றன.

தமிழ் பிரபாகரன் நாடு கடத்தப்பட்ட போதிலும் சிட்சபேசன் அவ்வாறான நிலைமையை எதிர்நோக்கவில்லை. அனால் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக ஒரு செய்தி வந்தது. அதனை அவரே பின்னர் மறுத்து இருந்தார். எனினும் அவரது நடவடிக்கைகளை இலங்கை அதிகாரிகள் மிகவும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அவர் இலங்கைக்கு வந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனை சந்தித்து இருந்தார். அதனை அடுத்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள் ஸ்ரீதரனை அது தொடர்பாக விசாரித்து இருந்தனர். இவையும் அந்த பிரசார போரின் அங்கமாகவே கருத வேண்டியுள்ளது.

இது வரை ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக இரண்டு பிரேரணைகள் நிரைவேற்றப்பட்டுள்ளன. அவற்றுக்கு முன்னர் இலங்கையில் போரின் இறுதிக் கட்டத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்று பல முக்கிய நாடுகளும் இலங்கை விடயத்தில் தமக்கு ஆலோசனை வழங்குவதற்காகவென ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ முனினால் நியமிக்கபட்ட குழுவும் கூறிவந்தன.

ஆனால் 2012ஆம் ஆண்டு மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிரைவேற்றப்பட்ட பிரேரணை மூலம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் அமுலாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதன் காரணமாக சர்வதேச விசாரணையென்ற கோஷம் மங்கிவிட்டது. 2013ஆம் ஆண்டு பிரேரணைக்கு முன்னர் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மனித உரிமை பேரவைக்கு அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தார். அதில் இலங்கை அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுலாக்க போதியளவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அடிப்படையில் மீண்டும் சர்வதேச விசாரணை கோரப்பட்டு இருந்தது.

ஆனால் 2013ஆம் ஆண்டு பிரேரணையின் மூலமும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளே மீண்டும் வலியுறுத்தப்பட்டன. எனவே அப்போதும் சர்வதேச விசாரணையென்ற கருத்து எடுபடவில்லை. ஆனால் மீண்டும் இலங்கை அரசாங்கம் தமது பொறுப்புக்களை சரியாக நிறைவேற்ற முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டுக்காக இலங்கைக்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் பிரதமர் கமரன், மார்ச் மாதத்திற்கு முன்னர் மனித உரிமை மீறல்கள் விடயத்தில் விசாரணை நடத்துவதற்காக இலங்கை அரசாங்கம் உள்நாட்டு பொறிமுறையொன்றை ஆரம்பிக்காவிட்டால் தாம் மனித உரிமை பேரவை மூலம் சர்வதேச விசாரணையொன்றை கோருவதாக கூறினார்.

எனவே சர்வதேச விசாரணையென்ற கோஷம் மீண்டும் பலம் பெற்று வருகிறது. அதனை தடுக்க இலங்கை அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருகிறது. அதேவேளை சர்வதேச விசாரணையொன்றை பெற்றுக்கொள்வதற்காக புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் இலங்கையில் தமிழ் ண்சிய கூட்டமைப்பும் கனடா போன்ற நாடுகளும் முயன்று வருகின்றன. தத்தமது நோக்கங்களை நிரைவேற்றிக் கொள்வதற்காக இரு சாராரும் உலக மட்டத்தில் பிரசாரப் போரில் ஈடபட்டு வருகின்றனர்.

இலங்கை அரசாங்கம் மனித உரிமை பேரவையின மார்ச் மாத கூட்டத்தை குறிக்கோளாகக் கொண்டு அமைச்சர்கள் மட்டத்திலான ஓரிரு குழுக்களை பல நாடுகளுக்கு அனுப்பவிருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. அதேபோல் தமிழ் தேசிய கூட்டமைப்பும் சில நாடுகளின் பிரதிநிதிகளை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக அக்கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் டெய்லிமிரருக்குத் தெரிவித்து இருந்தார்.

அண்மைக் காலமாக இலங்கை அரசாங்கம் ஆபிரிக்க நாடுகளுடன் உறவுகளை பலப்படுத்தி வருவது தெரிந்ததே. எனவே புலம்பெயர் தமிழ் குழுவொன்றும் ஆபிரிக்க நாடுகளுக்குச் சென்று இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரசாரம் செய்யப் போவதாகவும் செய்தியொன்று வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தான் மகா தமிழ் பிரபாகரனும் சிற்சபேசனும் இலங்கைக்கு வந்தனர்.

அதில் ஒருவரான தமிழ் பிரபாகரன், விஸா நிபந்தனைகளை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டார். மற்றவர் விஸா நிபந்தனைகளை மீறுவார் என்று தான் பலர் எதிர்ப்பார்த்தனர். ஏனெனில் மேற்குறிப்பிடப்பட்ட பிரசார போரின் போது அவ்வாறானதோர் நிலைமை அவசியம் என்பதனாலேயே. அதே தேவையினால் தான் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்ற வதந்தியும் பரவியது.

அண்மைக் காலத்தில் விஸா சட்டங்களை மீறியதாக அரசாங்கம் வெளிநாட்டவர் மீது நடவடிக்கை எடுத்த அல்லது எடுத்ததாக கூறப்பட்ட ஐந்து சந்தர்ப்பங்கள் இருக்கினறன. அவற்றில் சம்பந்தப்பட்டவர்களில் மூவர் தமிழர்கள். தமிழ் பிரபாகரன், சிற்சபேசன் மற்றும் எழுத்தாளர் ஜெயபாலன் அம்மூவர்களாவர். அவர்களிலும் சிற்சபேசனும் ஜெயபாலனும் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்கள்.

இந்த ஐந்து சம்பவங்களில் முதலாவது சம்பவம் கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி இடம்பெற்றது. அன்று சர்வதேச ஊடகவியலாளர்களின் சம்மேளனத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் ஜகலய்ன் பார்க், கொழும்பு ஹோட்டல் ஒன்றில் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பாசறையொன்றை நடத்திக் கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த குடிவரவு அதிகாரிகள் அவரது விஸா நிபந்தனைகளின் படி அவருக்கு அது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த முடியாது என்று கூறி அவரை தடுத்து இரண்டு நாட்களுக்குப் பின்னர் நாடுகடத்தினர்.

ஜகலய்ன் விஸா நிபந்தனைகளை மீறியமை உண்மை தான். ஆனால் அவர் இதற்கு முன்னரும் சுமார் 20 முறை இலங்கைக்கு வந்து இது போன்ற பயிற்சிப் பாசறைகளை நடத்தியுள்ளார். அவை நாட்டின் பதுகாப்பிற்கு தீங்கிழைப்பவையல்ல. ஆனால் அவர் விஸா நிபந்தனைகளை மீறியதனால் அதிகாரிகளின் வாதமும் பிழையல்ல.

அதற்கு 10 நாட்கள் கழித்து பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு கொழும்பில் நடைபெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்னர் அதாவது நவம்பர் 10ஆம் திகதி அவுஸ்திரேலிய பெண் செனட்டர் ஒருவரும் நியூசீலாந்து பெண் எம்.பி. ஒருவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொழும்பு அலுவலகத்தில் ஊடகவியலாளர்கள் மாநாடொன்றை நடத்த முற்பட்டனர். அவர்களும் குடிவரவு அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டு நவம்பர் 12ஆம் திகதி நாடு கடத்தப்பட்டனர். அவர்களும் ஜகலய்னைப் போலவே சுற்றுலா விஸாவிலேயே இலங்கைக்கு வந்திருந்தனர்.

அவ்விருவரும் வட பகுதிக்கு பிரயாணம் செய்து அங்கு பலரை சந்தித்து விட்டே ஊடகவிலாளர் மாநாட்டை நடத்த முற்பட்டனர். எனவே அவர்கள் விடயத்தில் அரசாங்கத்தின் அக்கறையை விளங்கிக்கொள்ள முடிகிறது.

ஜெயபாலனும் சுற்றுலா விஸாவிலேயே இலங்கைக்கு வந்தார். அவரும் நவம்பர் மாதம் 22ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கருத்தரங்கொன்றில் உரையாற்றினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நவம்பர் 26ஆம் திகதி நாடு கடத்தப்பட்டார். அவரும் அரசியல் ரீதியாக அரசாங்கத்திற்கு தீங்கிழைக்கக் கூடியவர் எனக் கூற முடியாது.

ஆனால் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும் அரசாங்கம், ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டமும் நடைபெறவிருக்கும் நிலையில் வெளிநாட்டு ஊடகவியலாளர்களினதும் தமிழ் இலக்கியவாதிகளினதும் கூட்டங்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதையும் விளங்கிக்கொள்ள முடிகிறது.

தமிழ் பிரபாகரனினதும் சிற்சபேசனினதும் பயணங்கள் அரசியல் நோக்கம் கொண்டவையாகவே இருக்க வேண்டும். இவ்விருவருக்கும் இலங்கைக்குள் பயணஞ் செய்வதற்கு அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் ஒத்துழைப்பு கிடைத்ததாகவே கூறப்படுகிறது.

சுற்றுலா விஸாவில் வந்து ஊடகத் தொழிலில் ஈடுபட்டார் என்றும் இராணுவ மற்றும் கடற்படை முகாம்களை சட்டவிரோதமாக படம் பிடித்தார் என்றுமே தமிழ் பிரபாகரன் குற்றஞ்சாட்;டப்பட்டார். அதன்படி டிசம்பர் 25ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர் 28ஆம் திகதி நாடுகடத்தப்பட்டார். சர்வதேச சமூகத்தின் முன்னும் ஐ.நா.வின் முன்னும் இலங்கை அரசாங்கத்தை அம்பலப்படுத்துவதே தமது நோக்கமாக இருந்தது என்று அவர் தமிழகத்திற்குச் சென்ற பின்னர் கூறியிருந்தார். ஜெனீவா மாநாட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே அவர் இவ்வாறு கூறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சிற்சபேசன் 2011ஆம் திகதி கனேடிய நாடாளுமன்றத்திற்கு தெரிவானார். கனேடிய நாடாளுமன்றத்திற்கு தெரிவான முதலாவது தமிழ் எம்.பி. அவரே. இலங்கை இந்தியா ஆகிய நாடுகளுக்கு வெளியே நாடாளுமன்றமொன்றுக்கு தெரிவான இரண்டாவது தமிழ் பெண் சிற்சபேசனே. 2001ஆம் ஆண்டு சிங்கப்பூர் நாடாளுமன்றத்திற்கு தெரிவான ரஞ்ஜனீ ராஜாவே முதலாவது தமிழ் பெண்ணாவார்.

சிற்சபேசன் நாடாளுமன்றத்திற்கு தெரிவானது முதல் மனித உரிமை விடயத்தில் இலங்கை அரசாங்கத்தை விமர்சித்து வருகிறார். இங்கு வந்தும் அவர் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வரும் ஸ்ரீதரன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் போன்றவர்களை சந்தித்தார். எனவே இவர்களின் பயணங்கள் அரசாங்கத்திற்கும் தமிழ் தரப்பினர்களுக்கும் இடையே எதிர்வரும் மனித உரிமை பேரவைக் கூட்டத்தை குறியாக வைத்து நடைபெறும் பிரசார போரின் அங்கமாகவே இடம்பெற்றுள்ளது என்று ஊகிக்கலாம்.

இரு தரப்பாரின் ஆயத்தங்களை பார்க்கும் போது இம்முறை ஜெனீவா மாநாட்டில் அரசாங்கம் பெரும் சவாலை எதிர்நோக்கப்ப போகிறது என்றே தெரிகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X