2025 மே 19, திங்கட்கிழமை

நரேந்திரமோடியை தவிக்கவிடும் தமிழக பா.ஜ.க

A.P.Mathan   / 2014 ஜனவரி 06 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திரமோடிக்கு பல மாநிலங்களில் தர்மசங்கடம் உருவாகியிருக்கிறதென்றால், தமிழகத்தில் வேறு வடிவில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. "அவரை பிரதமர் வேட்பாளர்" என்று அறிவிக்க முனையும் கட்சிகளுடன் பா.ஜ.க. கூட்டணி வைக்க விரும்பவில்லை. இரு திராவிடக் கட்சிகளும வேண்டாம். வேறு கூட்டணி நம் தலைமையில் வைப்போம் என்று கூறும் கட்சி தலைவர்களின் தலைமையை பா.ஜ.க. ஏற்றுக்கொள்ள தயங்குகிறது. இப்படி அடுக்கடுக்கான பிரச்சினைகள் தோரணம் கட்டி நிற்க, தமிழகத்தில் தனியாக ஓர் அணி அமைப்பதே சிக்கலாகிக் கொண்டிருக்கிறது. அவர் தலைமை தாங்கும் பாரதீய ஜனதாக் கட்சிக்கு தமிழகத்தில் காலூன்றி நிற்கும் அளவிற்கு வாக்கு வங்கி இல்லாததே இந்த கஷ்டகாலத்திற்கு முக்கியக் காரணம். அக்கட்சி தோன்றிய பிறகு 1980இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பத்து சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில், அப்படிப் போட்டியிட்ட அந்த பத்து தொகுதிகளிலும் செக்யூரிட்டி தொகையை (அந்த தொகையைத் திரும்பப் பெற குறைந்த பட்ச வாக்கு வங்கி வாங்க முடியாமல் போனது) பறிகொடுத்தது. ஆனால் அடி எடுத்து வைத்த முதல் தேர்தலில் அக்கட்சி தமிழகத்தில் பெற்ற வாக்கு வங்கி வெறும் 0.07 சதவீதம் மட்டும்தான் என்றால் இன்று யாரும் நம்ப மாட்டார்கள். இதுதான் பா.ஜ.க.விற்கு தமிழகத்தில் "தலைவலியும்" "திருகுவலியும்" கொடுப்பதாக அமைந்து விட்டது.
 
தமிழக தேர்தலில் அக்கட்சி முதலில் போட்டியிட்டதிலிருந்து இன்று 34ஆவது வருடம் ஆரம்பித்து விட்டது. ஆனால் அக்கட்சியின் வாக்கு வங்கி உயரவில்லை. கடைசியாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி 204 தொகுதிகளில் போட்டியிட்டு 2.22 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. அதாவது பதிவு செய்யப்பட்ட 3 கோடியே 67 லட்சத்து 56 யிரத்து 813 வாக்குகளில், பா.ஜ.க. பெற்றது  8 லட்சத்து 19, 577 வாக்குகள் மட்டுமே! தமிழகத்தில் இப்படியொரு வாக்கு வங்கியை வைத்துக் கொண்டு, "நாங்கள் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டோம். எங்கள் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை ஏற்றுக் கொள்வோருடன் மட்டும்தான் கூட்டணி. ஒரே கூட்டணியில் இரு பிரதமர் வேட்பாளர் இருக்க முடியாது. அதனால் எங்களுக்கு அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள முடியாது. காங்கிரஸும், தி.மு.க.வும் ஊழல் கட்சிகள். அவர்களுடனும் கூட்டணி வைத்துக் கொள்ள முடியாது. விஜயகாந்த் தலைமையை ஏற்றுக் கொண்டு தமிழகத்தில் அவர் தலைமையிலும் கூட்டணி வைத்துக்கொள்ள முடியாது" என்று தங்களுக்கு ஏதோ 30 சதவீத வாக்கு வங்கி தமிழகத்தில் இருப்பது போல் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர்கள் பேசி வருவதுதான் தமிழகத்தில் நரேந்திரமோடிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு காரணம் என்றால் சாலப் பொருத்தமானதாகவே இருக்கும். அது மட்டுமின்றி, இங்குள்ள மாநில தலைவர்கள் அகில இந்திய பா.ஜ.க. தலைவர்களையும் நம்ப வைத்து, தமிழகத்தில் இன்னும் ஒரு உருப்படியான அல்லது உருவம் காட்டக் கூடிய கூட்டணியை அமைத்துக் கொள்ள முடியாமல் நரேந்திரமோடி தவிப்பதற்கும் இதுவே காரணம்.
 
பா.ஜ.க.வின் அகில இந்திய தலைவர்களுக்கு இருக்கும் "ஆட்சி அமைக்கும் நோக்கம்" அடிக்கடி மாறிப் போய் விடுகிறது. முதலில் "எங்கள் அடிப்படைக் கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்" (ராமர் கோயில் கட்டுவது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவது, காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது) என்று பேசினார் அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங். பிறகு "வளர்ச்சி திட்டங்களே" எங்களுக்கு முக்கியம் என்று நரேந்திரமோடி போன்றவர்கள் கருத்துச் சொல்ல ஆரம்பித்தார்கள். அடுத்து "ஊழலை ஒழிக்கப் போகிறோம்" என்றார்கள். "பிறகு ஒரே இந்தியா" என்றார்கள். இப்போது மீண்டும் "காங்கிரஸிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்" என்கிறார்கள். இதனால் பா.ஜ.க. அகில இந்திய தலைவர்களின் தேர்தல் பிரசார நோக்கம் என்னவென்று தெளிவாக விளக்கமால் வாக்காளர்களை குழப்பி வருகிறார்கள். நரேந்திரமோடிதான் "மாஜிக்" என்பது போன்ற பிரசாரத்தை முதல் ரவுண்டில் துவக்கியவர்கள், திடீரென்று வாஜ்பாய் பற்றி புகழ் பாட ஆரம்பித்தார்கள். அவரது பிறந்த நாளை "சிறந்த நல்லாட்சி" நாளாக நாடுமுழுவதும் கொண்டாடப் போகிறோம் என்றார்கள். அதே நேரத்தில் இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் "இல்லந்தோறும் மோடி" என்ற பிரசாரத்தை தொடங்கியிருக்கிறார்கள்.  அக்கட்சியின் அகில இந்திய தலைவர்களுக்கு "நரேந்திரமோடியை" மட்டும் முன்னிறுத்தினால் வாக்காளர்களை கவர முடியாது என்று நினைத்தார்களா அல்லது கூட்டணி கட்சிகள் வர மாட்டார்கள் என்று நினைத்தார்களா என்று தெரியவில்லை. திடீரென்று வாஜ்பாய் புகழ் பரப்பத் தொடங்கி விட்டார்கள்.
 
இப்போது "காங்கிரஸ் கட்சியை மத்திய ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்" என்ற முழக்கத்தை எழுப்புகிறார்கள். ஆனால் அதற்கு போதிய கூட்டணிக் கட்சிகளை சேர்ப்பதற்கு பல கொள்கை பிரச்சினைகள் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். "கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை" என்ற கதையாக ஒரு பக்கம் ஹரியானாவில் ஓம் பிரகாஷ் சவுதாலா கட்சியுடன் கூட்டணி வைக்கத் தயராகிறார்கள். இன்னொரு பக்கம் எடியூரப்பாவை கட்சியில் சேர்க்க விரும்புகிறார்கள். இன்னொரு பக்கம் தமிழகத்தில் தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ தங்கள் அணிக்கு வராதா என்று ஏங்குகிறார்கள். ஆந்திராவில் ஜெகன் ரெட்டி வந்தாலும் பரவாயில்லை. சந்திரபாபு நாயுடு வந்தாலும் பரவாயில்லை என்று நினைக்கிறார்கள். ஆனாலும் வெளிப்புறத் தோற்றத்திற்கு தங்களுக்கு "ஊழல் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள விரும்பவில்லை" என்பது போல் அறிவிக்கிறார்கள். இந்த நாடகத்தை அந்த மேடையில் ஏன் அரங்கேற்றுகிறார்கள் என்று வாக்காளர்களே குழம்பிப் போயிருக்கிறார்கள். "ஊழல் எதிர்ப்புதான் அவர்களின் இலக்கு" என்றால் அதை முதலிலேயே தெளிவுபடுத்தி அதுபோன்ற கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்திருக்க வேண்டும். அதை விடுத்து ஊழல் வழக்கு ஒரு சில கட்சி தலைவர்களுடன் கூட்டணி, வேறு சில தலைவர்களுடன் கூட்டணி இல்லை என்பது போன்ற "குழப்பக்" கொள்கையை குடைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் தமிழகத்தில் மட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும் கூட நரேந்திரமோடிக்கு ஆதரவாக ஒரு கூட்டணி உருவாவதற்கு தடைக் கல்லாக நிற்கிறது.
 
இந்நிலையில் தமிழகத்தைப் பொறுத்தமட்டில், பா.ஜ.க.விற்கு ஏதாவது எம்.பி. கிடைக்க வேண்டுமென்றால் அ.தி.மு.க. அல்லது தி.மு.க. ஆகிய இரு கட்சிகளில் ஒன்றுடன்தான் கூட்டணி வைக்க முடியும். கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலத்திற்கு ஒரு காரணம் சொல்லி கூட்டணி வைப்பார்கள். அதேபோன்று பா.ஜ.க.வும் "இது மாநிலக் கட்சிகளின் காலம். அதனால் அந்தந்த மாநிலங்களில் நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கூட்டணி வைப்போம்" என்று சிம்பிளாக அறிவித்து விட்டு கூட்டணிக்கான ஏற்பாடுகளில் இறங்கியிருக்க வேண்டும். அதை விடுத்து "தேசியக் கட்சியின் கொள்கையை மாநிலக் கட்சிகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று நினைப்பது கூட்டணிக்கு அச்சாரம் அமைக்காது. அதுதான் இன்று நடக்கிறது. பா.ஜ.க. விரும்பியிருந்தால், தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழக முதல்வர் ஜெயலலிதாதான் எங்கள் கூட்டணி தலைவர் என்று கூறிவிட்டு, அவருடன் கூட்டணி சேர்ந்திருக்கலாம். ஏனென்றால் அவரது பதவியேற்பு விழாவிற்கு குஜராத்திலிருந்து வந்து கலந்து கொண்டவர்தான் நரேந்திரமோடி. அப்படியில்லையென்றால், "நரேந்திரமோடி நல்லவர்" என்று பாராட்டிய தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் நெருங்கிச் சென்றிருக்கலாம். ஆனால் தமிழகத்தில் அ.தி.மு.க.வை பகைத்துக் கொள்ளாமல் ஒரு கூட்டணியை அமைத்து விடுவோம். தேர்தல் முடிந்த பிறகு அ.தி.மு.க.வின் ஆதரவை பெற்றுக் கொள்வோம் என்று பா.ஜ.க.வின் ஒரு தரப்பினர் கருதுவதால், அந்த முயற்சியும் கை கூடவில்லை. ஆகவே தமிழகத்தில் வெற்றி பெறக்கூடிய அணி அமைக்கும் வாய்ப்பு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க.வின் குறிப்பாக மாநில பா.ஜ.க.வின் "உள்குத்து அரசியலுக்குள்" சிக்கி தவிக்கிறது.
 
இந்த இரு கட்சிகளும் இல்லாவிட்டால் மூன்றாவது அணி ஒன்று அமைப்போம் என்று களத்தில் குதித்தார்கள். இதற்காக காந்தி மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் முயற்சி செய்தார். அதற்காக பா.ஜ.க., பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்காக அக்கட்சிகளுக்கு இல்லாத வாக்கு வங்கியை இருப்பது போல் முன்னிறுத்தி பேட்டிகள் எல்லாம் கொடுத்தார். அந்த முயற்சியும் கைகூடவில்லை. அடுத்த படியாக பா.ஜ.க.வே நேரடியாக களத்தில் இறங்கியது. அக்கட்சியின் மாநிலத் தலைவர்கள் முயற்சி செய்தார்கள். அதில் எளிதில் அகப்பட்டுக் கொண்டது வைகோ மட்டும்தான். அவரும் கூட தொகுதி பங்கீடு முடியும் வரை இப்படியே "நரேந்திரமோடி பிரதமராவார்" என்பதைச் சொல்வாரா என்பது சந்தேகம்தான். அவரது மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி, "நரேந்திரமோடி பிரதமர் ஆவார். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்போம்" என்று அறிவித்திருப்பது இறுதியானது அல்ல. ஏனென்றால் கூட்டணி பற்றி பொதுக்குழுவில் முடிவு எடுப்போம் என்றும் கூறியிருக்கிறார். அது தனக்கு கிடைக்கும் தொகுதிகளின் அடிப்படையில் முடிவு எடுப்பார் என்பதையே இது காட்டுகிறது. அடுத்து பாட்டாளி மக்கள் கட்சி. அக்கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் தனக்கு ஏற்படும் முக்கியத்துவத்தைப் பயன்படுத்தி தி.மு.க. தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க. பொதுச் செயாலளர் ஜெயலலிதா போன்றோரிடமே கறாரான தொகுதி பங்கீட்டுப் பேரத்தை செய்பவர். அவர் பா.ஜ.க. இழுத்த இழுப்பிற்கு எல்லாம் இணங்கி வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அதனால்தான் சமீபத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் "சமுதாய கூட்டணி" தொடரும் என்று அறிவித்து விட்டு, போட்டியிடும் தொகுதிகளையும் அறிவித்துள்ளார். பா.ஜ.க. கூட்டணி பற்றி வாய் கூட திறக்கவில்லை.
 
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தைப் பொறுத்தவரை சொல்லவே வேண்டாம். "என்ன செய்யப் போகிறோம்" என்பதை கடைசி வரை சீக்ரெட்டாக வைத்திருப்பதில் அவர் வல்லவர். அப்படித்தான் 2006 மற்றும் 2009 தேர்தல்களில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்குமே டிமிக்கி கொடுத்தார். இப்போதும் கூட "என் தலைமையை ஏற்றுக் கொள்ளும் கட்சியுடன் கூட்டணி" என்றார். ஆனால் பா.ஜ.க.விற்கோ "அவர் தலைமையை எப்படி ஏற்றுக் கொண்டு ஒரு தேசியக் கட்சி கூட்டணி அமைப்பது" என்ற கௌரவம் இடிக்கிறது. தமிழகத்தில் விஜயகாந்திற்கு 10 சதவீதம் வாக்கு இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்றால் பா.ஜ.க.விற்கு 2.22 சதவீதம்தான் வாக்கு என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. இது மட்டுமல்ல, பா.ஜ.க. கூட்டணி சேர்க்க விரும்பும் கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி. மறுமலர்ச்சி தி.மு.க. போன்ற இரு கட்சிகளுக்குமே பா.ஜ.க.வை விட வாக்கு வங்கி அதிகம். அப்படியிருக்கையில் இவர்கள் எல்லாம் பா.ஜ.க. தலைமையை ஏற்று எப்படி கூட்டணி வைப்பார்கள்? அதுதான் இப்போது பா.ஜ.க.விற்கு தமிழகத்தைப் பொறுத்தமட்டில் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. வாஜ்பாயுடன் இருந்த கூட்டணிக் கட்சிகளில் சந்திரபாபு நாயுடு, வைகோ தவிர மற்ற எவரும் "உங்களுடன் கூட்டணி வைக்கத் தயார்" என்று இதுவரை சொல்லவில்லை. அதற்கு காரணம் மாநிலக் கட்சிகளின் பலத்தை பா.ஜ.க. உணராமல் இருப்பதும், அக்கட்சிகளை அரவணைத்து கூட்டணி அமைப்பதற்கு ஏற்ற மாநில அளவிலான தேர்தல் யுக்தியை உருவாக்காததுமே காரணம். இதனால் இப்போது தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தவிர்த்த மற்ற கட்சிகள் தலைமையிலான அணியையும் பா.ஜ.க. உருவாக்க முடியாமல் திண்டாட்டம் போடுகிறது.
 
இந்த திண்டாட்டம் பா.ஜ.க. தானே உருவாக்கிக் கொண்ட ஒரு சூழ்நிலை என்பது உண்மை. ஏனென்றால் தமிழகத்தில் அக்கட்சிக்கு விழும் வாக்குகள் சாதரணமாகவே அ.தி.மு.க.விற்கே விழும். பா.ஜ.க.விற்கு வாக்களித்தும் அந்த வேட்பாளர் வெற்றி பெறப் போவதில்லை. பிறகு ஏன் அக்கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். தி.மு.க. வேட்பாளரை தோற்கடிக்க அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களிப்போம் என்பதுதான் தமிழகத்தில் உள்ள பா.ஜ.க. வாக்காளர்களின் இயற்கையான எண்ணம். அந்த எண்ணவோட்டத்தில்தான் கடந்த காலத்தில் வாக்களித்தார்கள். அக்கட்சி தி.மு.க.வுடன் கூட்டணியாக இருந்த நேரத்தில் கூட இப்படி "வியூக வாக்களிப்பு" தான் பா.ஜ.க. வாக்குகள் தங்களுக்கு வராது என்ற சிந்தனையை தி.மு.க.விற்கு ஏற்படுத்தியது. ஆகவே நாம் வேறு யாருடனாவது (அ.தி.மு.க. தவிர) கூட்டணி வைத்தால் நம் வாக்குகளே நமக்கு வராது என்ற குழப்பம் பா.ஜ.க. தலைவர்களுக்கு இருக்கிறது. அது மட்டுமல்ல, தேர்தலுக்கு முன்புள்ள கூட்டணியையும், அதற்கு பிறகு வரும் கூட்டணியையும் போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் குழப்பம் பா.ஜ.க.விற்கு மட்டுமல்ல. அக்கட்சிக்கு ஆலோசனை சொல்வோர் மனதிலும் இருக்கிறது. ஏற்கனவே ஒரு முறை "அ.தி.மு.க. எங்கள் இயற்கையான கூட்டணி" என்று அத்வானி போன்றவர்களே சொன்னார்கள். அதனால் தேர்தலுக்குப் பிறகு அதிக எம்.பி.க்கள் அ.தி.மு.க.விற்கு வந்தால், அக்கட்சி நம்மைத்தானே ஆதரிக்கப் போகிறது. ஏன் இப்போது அ.தி.மு.க.விற்கு எதிராக ஒரு பலமான கூட்டணியை அமைத்து அக்கட்சி தலைமையின் கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்ற அச்சமும் பா.ஜ.க.விற்கு இருக்கிறது.
 
இந்த அச்சம்தான் தமிழகத்தில் வாக்கு வங்கியுள்ள எந்தக் கட்சி தலைமையிடனும் பா.ஜ.க. கூட்டணி பேச முடியாமல் திணற வைக்கிறது. அதனால் நாடு முழுவதும் ஆதரவு இருக்கிறது என்ற பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ள பா.ஜ.க. தமிழகத்தில் இன்னும் உருப்படியான கூட்டணியை உருவாக்க முடியாமல் இருக்கிறது. அதனால் நரேந்திரமோடி பற்றிய பிரச்சாரம் இப்போதைக்கு பா.ஜ.க.வுடன் மட்டுமே சுருங்கிப் போய் நிற்கிறது. தமிழகத்தில் அக்கட்சிக்கு வெற்றிக் கூட்டணி வேண்டுமென்றால் அ.தி.மு.க. அல்லது தி.மு.க. ஆகிய இரு கட்சிகளின் தலைவர்களில் ஒருவரை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த கட்சிகள் இரண்டுமே வேண்டாம். தனி அணி அமைப்போம் என்று கருதினால், குறைந்த பட்சம் விஜயகாந்தின் தலைமையை ஏற்று அணி அமைக்க வேண்டும். அது வெற்றிக் கூட்டணியாகுமா என்பது கேள்விக்குறி. ஆனால் அதனால் அ.தி.மு.க.வே லாபம் அடைந்தால், தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க.வினர் நினைப்பது போல் தானே முன் வந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பா.ஜ.க. ஆட்சியமைக்க ஆதரவு கொடுக்க மாட்டார். ஏனென்றால் கடந்த இரண்டரை வருடங்களாக "பிரதமர் ஜெயலலிதா" என்ற பிரசாரத்தை அ.தி.மு.க.வினர் செய்து தொலை தூரம் நடந்து சென்று விட்டார்கள். அவர் பிரதமர் என்று வாக்கு வங்கி ஜெயித்து விட்டு, நரேந்திரமோடியை பிரதமராக்க எப்படி அ.தி.மு.க. ஆதரவு தரும்? மாநிலத்திலும், மத்தியிலும் உள்ள பா.ஜ.க. தலைவர்களுக்கு இது தெரியாதது அல்ல. 
 
ஆனால் அவர்களின் இலக்கு தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் "வெற்றிக் கூட்டணி அமைகிறதோ, இல்லையோ" எக்காரணம் கொண்டும் தி.மு.க. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று விடக் கூடாது என்பதை மையமாக வைத்தே இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. தங்களை விட அதிக வாக்கு வங்கி உள்ள விஜயகாந்தின் தலைமையைக் கூட தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஏற்க மறுப்பது இதைத்தான் வெளிப்படுத்துகிறது! தேர்தல் கூட்டணி அமைப்பதில் தமிழகத்தைப் பொறுத்தவரை "பாலுக்கும் காவல். பூணைக்கும் காவல்" என்ற பா.ஜ.க.வின் போக்கு நரேந்திரமோடியை தவிக்க விட்டிருக்கிறது என்பதே நிதர்சனம்!

You May Also Like

  Comments - 0

  • A.Nagarajan Thursday, 09 January 2014 04:01 AM

    தவறான கட்டுரை,பீ ஜே பி யீன் வளர்ச்சி பிடிக்கவில்லையா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X