-கே.சஞ்சயன்
யாழ்ப்பாணத்தில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த சிறுவர் மாதிரிக் கிராமத் திறப்பு விழாவில், முதல் முறையாக வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தார்.
அங்கு அவர் வெளியிட்ட கருத்து குறித்து சிங்களத் தேசியவாதிகளால் திரிவுபடுத்தப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.
வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தனது உரையில் முதலில் மாகாணசபைகளின் அதிகாரங்களை விரிவுபடுத்த வேண்டும் என்றும், ஒற்றையாட்சி முறையைக் கைவிடும் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற அரசாங்கம் கூறிவரும் கருத்தை நிராகரிக்கும் வகையில் அவரது கருத்து அமைந்திருந்தது. “ஒரே தேசம் ஒரே மக்கள் என்றெல்லாம் மேடைக்கு மேடை கூக்குரல் எழுப்புவதில் பயனில்லை. ஏனென்றால் இது ஒரே தேசமாக இருக்கும் அதே நேரத்தில், வெவ்வேறு பின்புலங்களைக் கொண்ட மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை நாங்கள் மனதில் கொள்ள வேண்டும். ஒரே நாட்டில் வாழ்வதால் நாங்கள் ஒரே மக்களாகிவிட முடியாது. நாம் யாவரும் ஒரு நாட்டு மக்களே என்று பெருவாரியான பெரும்பான்மையின மக்கள் கூறும் போது, இது சிங்கள பௌத்த நாடு, எல்லோரும் சிங்கள பௌத்த பெரும்பான்மையினரின் கட்டுப்பாட்டின் கீழடங்கிய இந் நாட்டின் குடிமக்களே என்ற அடிப்படை எண்ணத்தில் தான் தமது கருத்தை வெளியிடுகின்றார்கள். இது தவறு என்று அவர்கள் எண்ணுவதில்லை” என்று அதற்கு விளக்கமும் கொடுத்திருந்தார்.
ஆனால், அரசியலமைப்பை மாற்றி ஒற்றையாட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டதை, சிங்கள பௌத்த தேசியவாத அமைப்புகள் சில அவர் நாட்டைப் பிரிக்க முனைவதாக அர்த்தம் கற்பிக்க முனைந்துள்ளன.
இலங்கைத் தீவு சுதந்திரம் பெற்ற பின்னர், இந்தளவுக்கு மோசமான நிலைக்குப் பின்தள்ளப்பட்டதற்கு, இதுபோன்ற தவறான புரிதல்களோ அல்லது திரிபுபடுத்தல்களோ தான் முக்கியமான காரணம்.
சிங்கள மக்களிடத்தில் தமிழர்களுக்கு எதிரான கருத்தை விதைப்பதன் மூலம், அரசியல் ஆதாயம் தேடுகின்ற பண்பு, கொழும்பு அரசியலில் புதியதொன்று அல்ல. விடுதலைப் புலிகள் இயக்கம் பலமாக இருந்தவரை, இதுபோன்ற மோசமான கருத்துகளை விதைப்பது சிங்களத் தேசியவாத சக்திகளுக்கு மிகவும் இலகுவானதாகவும் இருந்தது.
போர் முடிவுக்கு வந்த பின்னர், புலிகளை வைத்து நடத்தப்பட்ட இனவாத அரசியல் முடிவுக்கு வந்து விடும் என்று சில தரப்பினர் எதிர்பார்த்த போதிலும், அது தவறான கணிப்பாகவே இன்றுவரை இருந்து கொண்டிருக்கிறது.
அதற்கு ஓர் உதாரணம் தான், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் ஒற்றையாட்சிக்கு எதிரான கருத்து, பிரிவினைக்கு ஆதரவான கருத்தாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதைக் குறிப்பிடலாம்.
உலகில் ஒற்றையாட்சி முறை, சமஸ்டி ஆட்சிமுறை, மன்னராட்சி முறை என்று பல்வேறு விதமான ஆட்சி முறைகள் உள்ளன. இதில் ஒற்றையாட்சி முறையை மாற்றியமைக்க வேண்டும் என்பதே வடக்கு மாகாண முதல்வரின் கருத்தாக இருந்தது.
ஒற்றையாட்சி முறை ஒழிக்கப்பட்டு, சமஸ்டி ஆட்சிமுறை உருவாக்கப்பட்டால், தனிநாட்டை இலகுவாக உருவாக்கி விடலாம் என்று திட்டம் போடுகிறார் முதல்வர் விக்னேஸ்வரன் என்ற சிங்களத் தேசியவாதிகளின் கருத்து, சாதாரண சிங்கள மக்களிடத்தில் தவறான சமிக்ஞைகளையே காண்பிக்கும்.
சமஸ்டி ஆட்சிமுறையைக் கோருவதை அரசாங்கமும் சரி, பெரும்பாலான சிங்கள கட்சிகள் மற்றும் தலைவர்களும் சரி, ஏதோ ஒரு பெரிய குற்றம்போலவே பார்க்கின்ற நிலை உள்ளது.
ஒற்றையாட்சி நிர்வாக அலகு, தனது எல்லா மக்களுக்கும் சமமான உரிமைகளையும் வசதிகளையும் செய்யத் தவறும் போது தான் இந்த மாற்று ஆட்சிமுறை பற்றிய கோரிக்கைகள் எழுந்துள்ளன.
மத்தியில் ஒன்று குவிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை, எல்லா சமூகங்களுக்கும் எல்லா மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் பயன்படுத்தப்படாத நிலை ஒன்றின் போது தான், மக்களுக்கு ஒற்றையாட்சி மீதான சலிப்பும், வெறுப்பும் ஏற்படுகிறது.
ஆரம்பத்தில் இருந்தே இலங்கையின் ஒற்றையாட்சி நிர்வாக அமைப்பு சிறுபான்மையின மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. அதற்குக் காரணம், இன ரீதியான அடக்குமுறைகளும் உரிமை மறுப்புகளும் தான். அதுவே ஒரு பெரும் போருக்கான காரணியாகவும் அமைந்தது.
அந்தப் போர் இன்னமும் மாறாத பெரும் வடுக்களுடன் முடிந்து போனாலும், இனப்பிரச்சினையை உருவாக்கிய ஒற்றையாட்சி மட்டும் இன்னமும் வலுவாக கோலோச்சுகிறது. இந்த ஒற்றையாட்சி கோட்பாடு மீண்டும் சிறுபான்மையின மக்களிடையே ஏமாற்றத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் ஒன்றாகவே மாறியுள்ளது.
இத்தகைய சூழலில், மாற்று ஆட்சி முறை ஒன்றின் ஊடாக, எல்லா இனங்களையும், மதங்களையும், சமூகங்களையும் ஒன்றிணைப்பது குறித்து ஆலோசிப்பதே பொருத்தமான அணுகுமுறையாக இருக்கும்.
போர் முடிவுக்கு வந்த பின்னர், ஒற்றையாட்சியை வலுப்படுத்த நினைத்த அரசாங்கம், அதனை சாதகமான முறையில் பயன்படுத்திக் கொண்டிருந்தால், மாற்று ஆட்சிமுறை ஒன்றை உருவாக்குவது பற்றிக் கூற வேண்டிய நிலை வடக்கு மாகாண முதல்வருக்கு ஏற்பட்டிருக்காது.
வடக்கு மாகாண முதல்வராகப் பதவியேற்று மூன்று மாதங்களேயான நிலையிலும், பெரிதாக எதையும் செய்ய முடியாத நிலையில் தான் அவர் முதல்வராக நீடிக்கிறார்.
எனவே மற்றெல்லோரையும் விட, ஒற்றையாட்சியின் குறைபாடுகளை அவரே நன்கறிந்தவராக இருக்க முடியும்.
ஒற்றையாட்சி முறையைத் தமது பலமாக எண்ணிக் கொண்டிருக்கிற சிங்களத் தேசியவாத சக்திகளுக்கு, அதுவே பெரும் பலவீனம் என்பதை ஒரு பெரும் போருக்குப் பின்னரும் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஒற்றையாட்சியின் மீதான ஒரு பகுதி மக்களின் அவநம்பிக்கை, ஒரே நாடு ஒரே மக்கள் என்ற கோட்பாட்டை ஒருபோதும் வலுப்படுத்தாது என்பதை அவர்களோ அரசாங்கமோ புரிந்து கொள்ளவில்லை.
வெளிநாடுகளின் நிர்ப்பந்தங்களினால் வடக்கு மாகாணசபையை உருவாக்க இணங்கிய அரசாங்கம், 13ஆவது திருத்தச்சட்டம் வழங்கியுள்ள அதற்குரிய அதிகாரங்களை பயன்படுத்த இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுத்து, எல்லா இனமக்களும் உரிமைகளை அனுபவிக்கின்ற சூழல் ஒன்றை உருவாக்கியிருந்தால், அரசாங்கத்துக்கு இப்போதுள்ள பல நெருக்கடிகள் எப்போதோ தீர்ந்திருக்கும்.
ஆனால், அரசாங்கம் அவ்வாறு செய்யத் தயாராகவும் இருக்கவில்லை.
அவ்வாறு அதிகாரங்களைப் பகிர அரசாங்கத்தை அனுமதிக்க, சிங்களத் தேசியவாத சக்திகளும் தயாராக இருக்கவில்லை. இதன் காரணமாகவே, ஒற்றையாட்சி மீதான தமிழர்களின் வெறுப்பு இன்னும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
சமஸ்டி ஆட்சிமுறை மூலமே தாமும் சமமாக மதிக்கப்படும் நிலையை உருவாக்க முடியும் என்ற கருத்தே பெரும்பாலான தமிழர்களிடம் உள்ளது.
இந்தநிலையில், ஒற்றையாட்சி முறையை ஒழித்து, புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றும் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஈடானது அல்ல. அதேவேளை, தனிநாடு தான் வேண்டும் என்று இன்னமும் ஒற்றைக்காலில் நிற்கின்ற அளவுக்கு தமிழர்கள் முட்டாள்களுமல்ல.
நீண்டதொரு போரையும், பேரழிவுகளையும் சந்தித்த ஓர் இனம், அதற்குள் தனிநாடு கோரிப் போராடுகின்ற அளவுக்கோ, அதைப் போய் அரசாங்கத்திடம் கோருகின்ற அளவுக்கோ இல்லை.
அது அரசாங்கத்துக்கும் சரி, சிங்களத் தேசியவாத சக்திகளுக்கும் சரி நன்றாகவே தெரியும்.
ஆனாலும், தமிழர்கள் நாட்டைப் பிரிக்க முனைவதாக கூறிக் கொண்டு, ஒற்றையாட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்குமேயானால், அது அரசியலமைப்பு மாற்றம், சமஸ்டி ஆட்சிமுறைக்கான கோரிக்கைகளைத் தான் இன்னும் இன்னும் பலப்படுத்தும்.