2025 மே 19, திங்கட்கிழமை

ஸ்டீவன் ரெப் இலங்கை அரசாங்கத்திற்கு விட்டுச் சென்ற செய்தி

Kanagaraj   / 2014 ஜனவரி 18 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஐயூப்

அமெரிக்க அரசாங்கம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கவிருக்கும் பிரேரணைக்கான ஆதாரங்களை திரட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் உலக குற்றவியல் நீதி அலுவலகத்தின் போர் குற்றங்கள் தொடர்பான தூதுவர் ஸ்டீவன் ஜே. ரெப்பின் இலங்கை விஜயமும் அந்த ஆயத்தத்தின் ஓரங்கமாகவே கருத வேண்டியுள்ளது.

தமிழீழ விடுதலை புலிகளுடனான இறுதிப் போரின் போது இலங்கையில் இடம் பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் விடயத்தில் அமெரிக்க அரசாங்கத்தின் நிலைப்பாடு எவ்வாறானது என்பதும் அவரது அந்த விஜயத்தின் போது காணக்கூடியதாக இருந்தது. அமெரிக்க தூதரகத்தின் டுவீட் ஒன்றில் இந்தக் நிலைப்பாடு; தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டு இருந்தது.

ரெப் தமது விஜயத்தின் போது முல்லைத்தீவுக்கும் சென்றிருந்தார். அங்கு புதுக்குடியிருப்பில் சென்.அன்தனீஸ் மைதானத்தில் அவரும் இலங்கையின் அமெரிக்க தூதுவர் மிஷெல் சிசனும் இருக்கும் படமொன்று அந்த டுவீட்டில் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. அந்த படத்திற்கான விவரணத்தில் 'நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கொள்ளப்பட்ட இடம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நிச்சயமாக சர்ச்சைக்குரிய குறிப்பாகும். ஏனெனில் அவ்வாறானதோர் சம்பவம் இடம்பெற்றதாக இது வரை எவ்வித விசாரணையின் மூலமும் நிரூபிக்கப்படவில்லை.

இவ்வாறான குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறே அமெரிக்க அரசாங்கமும் சர்வதேச சமூகமும் இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்தி வருகின்றன. எனவே இலங்கை அரசாங்கமோ வேறு எந்தவொறு நிறுவனமோ விசாரணை நடத்துமுன் அவ்வாறு நூற்றுக் கணக்கான குடும்பங்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அரசாங்கம் எவ்வாறு முடிவு செய்தது என அமைச்சர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியிருந்தார். ஆயினும் தமது டுவீட்டை மாற்றுவதில்லை என அமெரிக்க தூதரகம் தெரிவித்தது. இலங்கையில் மனித உரிமை மீறல் விடயத்தில் அமெரிக்க அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எடுத்துக் காட்ட இது சிறந்த உதாரணமாகும்.

கடந்த இரண்டு வருடங்களிலும் அமெரிக்க அரசாங்கம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை விடயத்தில் இரண்டு பிரேரணைகளை முன்வைத்தது. இவ்வருடமும் தமது அரசாங்கம் மற்றொரு பிரேரணையை முன்வைக்க இருப்பதாக ஸ்டீவன் ரெப் இம் முறை இலங்கை விஜயத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் கூறியிருந்தார். மேற்படி நிலைப்பாட்டுடன் அமெரிக்க அரசாங்கம் முன்வைக்கும் பிரேரணை எவ்வாறானது என்பதை ஓரளவுக்கு ஊகித்துக் கொள்ளலாம்.

இலங்கையில் போரின் இறுதிக் கட்டத்தின் போது போர் குற்றங்கள் இடம்பெற்றதாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளின் தலைவர்களும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அடுத்த ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டமும் நெருங்கி வருகிறது. இதற்கு முன்னர் இரண்டு முறை இலங்கை விடயத்தில் அப் பேரவைக்கு பிரேரணைகளை சமர்ப்பித்த நாடு அமெரிக்கா. அந்த நிலையில அந் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை விடயம் தொடர்பாகவே கடமையாற்றும் ஒரு அதிகாரி இலங்கையில் மேற்கொள்ளும் விஜயம் எதற்காக என்பதை இலங்கை தலைவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் இல்லை.

மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் இலங்கை விடயத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் பிரேரணைக்காகவே அமெரிக்கா தயாராகிறது என்பது இலங்கை அரசாங்கத்திற்கு தெரிந்த போதிலும் அதனை தடுக்க இலங்கை அரசாங்கத்தால் எதனையும் செய்ய முடியாது.

ரெப் தமது விஜயத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களை மடடுமன்றி வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன மற்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களையும் யாழ்ப்பாண ஆயர் தோமஸ் சௌந்திரநாயகம் அவர்களையும் சந்தித்தார். சசிதரன் மற்றும் ஆயர்களுடனான சந்திப்பு பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல் பிரிவு தலைவராகவிருந்த எழிலனின் மனைவியே ஆனந்தி. அவர் தமது கணவர் உட்பட பலர் தம் கண்முன்னே இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும் பின்னர் அவர்கள் காணாமற்போனதாகவும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழ முன் கூறியிருந்தார். அவர் அந்த விடயங்களை ரெப்பிடமும் கூறியிருப்பார் என்று ஊகிக்க முடிகிறது.

போரின் போது இலங்கைப் படையினர் கொத்தணிக் குண்டுகளையும் இரசாயனக் குண்டுகளையும் பாவித்ததாக ஆயர்கள் ரெப்பிடம் கூறியிருந்தனர். ரெப் நாடு திரும்பு முன்னரே இலங்கைப் படையினர் அதனை மறுத்தனர். அதேபோல் இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் சார்பில் மெல்கம் சஞ்ஜித் கார்தினால் அவர்களும் கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் பிதா பெனடிக்ட் ஜோசப் அவர்களும் வட மாகாண ஆயர்களின் குற்றச்சாட்டு அவர்களது தனிப்பட்ட கருத்தென்றும் அது திருச்சபையின் கருத்தல்ல என்றும் கூறினர். இக் குற்றச்சாடடு நிரூபிக்கப்படாதது என பிதா ஜோசப் அவர்கள் கூறியிருந்தார்.

ரெப் இக் கருததுக்களை ஏற்றுக் கொண்டாரோ தெரியாது. எனினும் அவர் இது போன்ற பல தகவல்களை திரட்டிக் கொண்டே நாடு திரும்பினார்.
2002 ஆம் அண்டு அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற காலத்தில் புலிகளுக்கு எதிராக கொத்தணி குண்டுகளை பாவிக்குமாறு அமெரிக்கா இலங்கைக்கு ஆலொசனை வழங்கியதென ரெப் நாடு திரும்பிய உடன் ஆங்கில பத்திரிகையொன்றில் செய்தியொன்று வெளியாகியது. இது கொத்தணிக் குண்டு சம்பந்தமான ஆயர்கள் அளித்த தகவலை ரெப் எதிர்க் காலத்தில் எதற்கும் பாவிப்பதை தடுக்கும் நோக்குடனான செய்தி என்பது தெளிவானதாகும்.

அமெரிக்க அரசாங்கமும் அந்த செய்தியை நிராகரிக்கவில்லை. அமெரிக்க ஆயுதங்களை உற்பத்தி யெ;யும் நாடாகும். எனவே அவர்கள் தம்மிடமுள்ள கொத்தணிக் குண்டுகளையும் இரசாயன குண்டுகளையும் ஏனைய ஆயுதங்களையும் விற்பனை செய்யும் வழிவகைகளையே தேடுவார்கள். ஆனால் தேவையேற்படின் அவ் ஆயுதங்களை பாவித்த நாடுகளுக்கு எதிராக நடவடிக்கையும் எடுப்பார்கள். ஈராக் அதற்கு சிறந்த உதாரணமாகும்.

எனவே ஆயர்களின் குற்றச்சாட்டை ரெப் நம்பினால் அமெரிக்கா அதனை மனித உரிமை பேரவையில் பாவிக்க மாட்டாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. ஏனெனில் தாம் குற்றமிழைத்தோம் என்பதற்காகவும் அமெரிக்கா மற்ற நாடுகள் மீது குற்றம சுமத்தத் தயங்குவதில்லை. ஈராக், ஆபகானிஸ்தான் போன்ற நாடுகளில் பாரியளவில் மனித உரிமைகளை மீறும் அமெரிக்கா ஏனைய நாடுகளின் மனித உரிமை மீறல்களை கண்டிக்காமல் இருப்பதில்லை. ஏனெனில் இலங்கை அரசியலில் போலவே சர்வதேச அரசியலிலும் நாகரிகம் என்பது முக்கிய விடயம் அல்ல.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போரின் இறுதிக் கட்டத்தின போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையொன்றை கோறுகிறது. அக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் கடந்த 7ஆம் திகதி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் வைத்து ரெப்பை சந்தித்து கலந்துரையாடினர். அவர்களும் நிச்சயமாக ரெப்பிற்குத் தேவையான பல தகவல்களை வழங்கியிருக்கலாம்.

ரெப் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையும் சந்தித்தார். இலங்கை அரசாங்கம் செய்ய வேண்டியிருந்தது புனர்வாழ்வளிப்பதற்குப் பதிலாக புலி உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதே என ரெப் அப்போது கூறியதாக மற்றொரு செய்தி வெளியாகியிருந்தது. போர் குற்றங்களைப் பற்றி ஆராயும் ஒரு அதிகாரி புனர்வாழ்வு சம்பந்தமாக ஏன் பேச வேண்டும்? தாம் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளித்ததாக ராஜபக்ஷ கூறியிருக்கிறார் போலும். அதற்குத் தான் ரெப் பதிலளித்து இருக்கிறார் போலும்.

அவரது வாதம் தர்க்க ரீதியாக சரியாகவே இருக்கிறது. புலிகள் இயக்கத்திற்காக பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பலர் தண்டிக்கப்பட்டும் விசாரணையின்றி நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டும் இருக்கும் நிலையில் இறுதிப் போரின் போது கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்தவர்கள் தொழில் பயிற்சி வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டமை மனிதாபிமான செயலாக இருந்த போதிலும் தர்க்க ரீதியாக அமையவில்லை.

ஆனால் புலி உறுப்பினர்கiளுக்கு புனர்வாழ்வளிப்பதை இதற்க முன்னர் அமெரிக்க அரசாங்கமோ வேறு எந்தவொரு அரசாங்கமோ விமர்சிக்கவில்லை. முதன் முறையாக அந்தத் திட்டத்தை ரெப் தான் விமர்சித்து இருக்கிறார். இது அனேகமாக போர் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை மூடி மறைக்க இலங்கை அரச தலைவர்கள் முன் வைக்கும் வாதமொன்றுக்கு ரெப் வழங்கிய பதிலாக இருக்கலாம்.
போரின் இறுதிக்க கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய கற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படும் பல சந்தர்ப்பங்களில் அரச தலைவர்கள் போருக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட புனர்வாழ்வு மற்றும அபிவிருத்தி; திட்டங்களைப் பற்றி குறிப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. அந் நடவடிக்ககைகள் பாராட்டக்ககூடியவையாக இருந்த போதிலும் அக் குற்றச்சாட்டுகளுக்கு அவை மாற்றீடாக அமையப்போவதில்லை. புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்கத் தேவையில்லை என்பதன் மூலம் அதைத் தான் ரெப் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் போலும்.

புனர்வாழ்வுத் திட்டங்களைப் பற்றிக் குறிப்பிடுவதன் மூலம் போரின் போது குற்றமிழத்தவர்களை தாம் தண்டிக்கவில்லை என்றும் அவ்வறிருக்க தம்மை ஏன் தண்டிக்க வேண்டும் என்றும் கோட்டாபய ராஜபக்ஷ கேட்கிறாரோ என ரெப் நினைத்திருக்கலாம். அதனாலும் ரெப் புலிகளுக்கு புனர்வாழ்வு அளித்திருக்கத் தேவையில்லை என்று கூறியிருக்கலாம்.

ரெப் நாடு திரும்பிய பின்னர் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அவரது விஜயத்தைப் பற்றிய அறிக்கையொன்றை வெளியிட்டு இருந்தது. 'போரின் இறுதியில இடம்பெற்ற சமபவங்கள் உட்பட பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதநேய சட்ட மீறல்களை நேரில் கண்டவர்களின் விவரங்களை ரெப் கேட்டறிந்ததாகவும் அதன் படி நடுநிலையானதும் நம்பகமானதுமான விசாரணையொன்றின் மூலம் உண்மையை கணடறியவும் தேவையான சந்தர்ப்பங்களில் வழக்குத் தாக்கல் செய்யவும் அமெரிக்கா இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிக்கிறது' என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் வார்த்தை பிரயோகத்தில் சில முக்கிய மாற்றங்களை காண முடிகிறது. இதற்கு முன்னர் சர்வதேச ஆவணங்களில் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளைப் பற்றிக் குறிப்பிடுகையில் 'இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதநேய சட்டங்கள்' என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது ஆனால் இந்த அறிக்கையில் 'இடம் பெற்றதாகக் கூறப்படும்' என்ற வார்த்தைகள் நீக்கப்பட்டு 'மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதநேய சட்டங்கள்' என சந்தேகமில்லாமல் ஒரு முடிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இடம்பெற்றதாக கூறப்படும் சந்பவங்களைப் பற்றி விசாரணை மேற்கோள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் அமெரிக்க அரசாங்கம் அச் சம்பவங்களைப்ப பற்றி இவ்வாறு முடிவு எடுத்திருப்பதைப் போல் கருத்து வெளியிடுவதும் நாகரிகமல்ல. ஆனால் அவ்வாறான நாகரிகமற்ற நிலையிலும் அமெரிக்கா இலங்கை விடயத்தில் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இம்முறையும் பிரேரணையொன்றை சமர்ப்பிப்பதை இலங்கை அரசாங்கத்தால் தடுக்க முடியாது. எனவே ரெப்பின் விஜயம் இலங்கை அரசாங்கத்திற்கு சந்தோஷமான விடயமல்ல.

மனித உரிமை மற்றும் சர்வதேச மனிதநேய சட்டங்களை மீறியதாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக உள் நாட்டில் விசாரணை மேற்கொள்ளப்படாவிட்டால் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அச்சுறுத்துவது அமெரிக்கா மட்டுமல்ல. பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டுக்காக இலங்கைக்கு வந்திருந்த போது பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரனும் மார்ச் மாதத்திற்கு முன்னர் உள் நாட்டில் விசாரணை மேற்கொள்ளப்படாவிட்டால் தாம் சர்வதேச விசாரணையொன்றை கோருவதாக கூறினார்.

இலங்கைக்கான தமது தகவல் திரட்டும் விஜயத்தை அடுத்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை கடந்த செப்டம்பர்; மாதம் இலங்கை வியத்தில் ஐ.நா. மனித உரிமை பேரவையில் ஒரு வாய்மூல அறிக்கையை சமர்ப்பித்தார். அதிலும் '2014ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் இலங்கை அரசாங்கம் உறுப்படியான பெறுபேறுகளுடன் நம்பகமான தேசிய நடைமுறையில் ஈடுபடாவிட்டால் சர்வதேச சமூகம் தமது சொந்த விசாரணை பொறிமுறைகளை நிறுவ நேரிடும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முயற்சிகள் நாகரிகமற்றவையென இலங்கை அரசாங்கம் கூறலாம். ஆனால் அவற்றின் நாகரிகத்தன்மையை கேள்விக்குறியாக்குவதன் மூலம் மட்டும் இலங்கை அரசாங்கம் வரப்போகும் பிரேரணையிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. அப் பிரேரணையை தடுக்கவோ அல்லது தோல்வியுறச் செய்யவோ அல்லது அதன் காரத்தை குறைக்கவோ அரசாங்கம் சர்வதேச சமுகத்தை திருப்தியடையச் செய்ய வேண்டும்.  

You May Also Like

  Comments - 0

  • sankar Saturday, 18 January 2014 03:49 PM

    வினை விதைத்தவன் வினை அருப்பான்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X