2025 மே 19, திங்கட்கிழமை

ஜெனிவா பொறிக்குள் இந்தியாவையும் தள்ள முனையும் இலங்கை

A.P.Mathan   / 2014 ஜனவரி 30 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே.சஞ்சயன்
 
வன்னியில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு ஒப்பான படுகொலைகள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம், வடக்கு மாகாணசபையில் கடந்த திங்கட்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
வரும் மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25ஆவது அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில், தான் வடக்கு மாகாணசபையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
இந்தக் கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மூன்றாவது தீர்மானத்தையும் கொண்டு வரும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது.
 
இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் தீர்மானம் கொண்டு வரப்படுவது உறுதி என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
 
இத்தகைய சூழலில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாகவே, வடக்கு மாகாணசபையின் தீர்மானமும் அமைந்துள்ளது.
 
வடக்கு மாகாணசபையில் ஆளும் கட்சியாக விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, வரும் ஜெனிவா கூட்டத்தொடர் குறித்து இரண்டு கவலைகள் இருக்கின்றன. முதலாவது கவலை, அமெரிக்காவினது தீர்மானம் கடுமையானதாக - இலங்கை அரசுக்கு கடிவாளம் போடத்தக்கதொன்றாக இருக்க வேண்டும் என்பது.
 
இரண்டாவது, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் பெரும்பான்மையான உறுப்பு நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்பது.
 
கடந்த ஆண்டு கூட அமெரிக்கா, ஆரம்பத்தில் சமர்ப்பித்த தீர்மான வரைவு கடைசி நேரத்தில் இந்தியாவின் தலையீட்டினால், நீர்த்துப் போகச் செய்யப்பட்டது.
 
அதுபோன்றில்லாமல், இந்தமுறை தீர்மானம் கடுமையானதாக இருக்க வேண்டும் என்பதே – அதாவது போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்வதேச விசாரணை கோரும் தீர்மானமாக அது அமைய வேண்டும் என்பதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்பார்ப்பு.
 
அடுத்து, அமெரிக்கா கடுமையான தீர்மானத்தை முன்வைப்பதால் மட்டும் பயனில்லை. அதற்கு இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளினது ஆதரவும் தேவை.
 
சர்வதேச விசாரணை கோரும் தீர்மானத்தை அமெரிக்கா முன்வைத்தால், பல நாடுகளின் ஆதரவை இழக்க நேரிடலாம் என்பது அமெரிக்காவினது கவலை மட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் உள்ள கவலை தான்.
 
வடக்கு மாகாணசபையில், நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், வடக்கிலுள்ள தமிழ்மக்களின் ஒட்டுமொத்த கருத்தாகவே பார்க்கப்படும் என்பதால், இது அமெரிக்காவுக்கும் சரி, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும் சரி – அழுத்தம் கொடுக்கும் ஒன்றாகவே இருக்கும்.
 
இந்தக் கட்டத்தில் தான், இம்முறை ஜெனிவா தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் களத்தில் இறங்கத் தீர்மானித்துள்ளது.
 
ஏற்கனவே, 2012ஆம் ஆண்டு, முதல்முறை அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்த போதே, அந்த தீர்மானத்துக்கு ஆதரவு திரட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா செல்ல வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
 
ஆனால், அப்போதைய உள்நாட்டு அரசியல் சூழல் சாதகமாக இல்லாததால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா செல்லவில்லை. பின்னர், கடந்த ஆண்டும் அதேபோன்ற கோரிக்கையும் எதிர்பார்ப்பும் எழுந்தது.
 
ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரபூர்வமாக ஜெனிவா கூட்டத் தொடரில் பங்கேற்கவில்லை.
 
அமெரிக்கா கொண்டு வரும் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கக் கோரி, உறுப்பு நாடுகள் அனைத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடிதங்களை அனுப்பியது.
 
இம்முறை, ஜெனிவா கூட்டத்தொடருக்கு கூட்டமைப்பு செல்ல வேண்டும் என்ற அழுத்தங்கள் கோரிக்கைகள் உருவாக முன்னரே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜெனிவாவில் பிரசாரத்தில் ஈடுபடுவது குறித்து அறிவித்துள்ளார்.
 
அதாவது, வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளிக்கப்பட்டுள்ள மக்கள் ஆணை என்ற கவசத்தையும், பலத்தையும் வைத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா களத்தில் குதிக்கப் போகிறது.
 
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யார், யார் ஜெனிவா கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர் என்று உறுதியாகவில்லை. இப்போதைக்கு அனந்தி சசிதரன் - ஜெனிவா செல்வது மட்டும் உறுதியாகியுள்ளது.
 
இந்தச் சூழலில், வடக்கு மாகாணசபை நிறைவேற்றிய, சர்வதேச விசாரணை கோரும் தீர்மானத்தை தேவையற்றதொன்று என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
 
குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்வதற்குப் போதுமான சட்டங்கள் உள்நாட்டிலேயே இருக்கின்ற போது, எதற்காக சர்வதேச விசாரணை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது கோரிக்கை சர்வதேச விசாரணை பற்றியதாக இருந்தாலும், அமெரிக்கா இன்னமும் தமது தீர்மானம் சர்வதேச விசாரணையைக் கோரும் ஒன்றாகவே இருக்கும் என்று உறுதியாக கூறவில்லை.
 
அமெரிக்காவினால் மட்டும் இதனை தீர்மானிக்க முடியாது. 
 
தீர்மான வரைவு, உறுப்பு நாடுகளின் மத்தியில், உலாவ விடப்பட்டு, முன்மொழியப்படும் திருத்தங்கள் செய்யப்பட்டே, இறுதி வரைவு தயாரிக்கப்பட்டு சபையில் சமர்ப்பிக்கப்படும். இந்தநிலையில், சர்வதேச விசாரணையை கோரும் தீர்மானத்தை அமெரிக்கா முன்வைத்தாலும் கூட, அதனை பெரும்பான்மையான உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொள்ளும் நிலை இருந்தால் தான், அது சாத்தியமாகும்.
 
சர்வதேச விசாரணையைக் கோரும் தீர்மானத்தை முன்வைப்பது குறித்து அமெரிக்கா இன்னமும் முடிவு செய்யாத நிலையில், இலங்கை அரசாங்கமோ, அமெரிக்கத் தீர்மானம் சர்வதேச விசாரணை கோரும் ஒன்றாக இருக்கலாம் என்பதை மையப்படுத்தியே கருத்துகளை வெளியிட்டு வருகிறது.
 
அத்தகைய விசாரணையால், நாட்டில் குழப்பங்கள் ஏற்படும் என்றும், இராணுவத்தினர் மத்தியில் ஒழுக்கம் குலையலாம் என்றும் வொசிங்டனில் வைத்து ஒரு மிரட்டல் விடுத்திருக்கிறார் ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க.
 
அதுமட்டுமன்றி, சர்வதேச விசாரணை நடத்துவதானால், 1980இல் இருந்து நடந்த சம்பவங்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும், அத்தகைய விசாரணை வளையத்துக்குள் இலங்கைப் படையினர் மட்டுமன்றி முன்னாள் போராளிகளும், இந்திய அமைதிப்படையினரும் கூட அகப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
சர்வதேச விசாரணையைக் கோருவதைப் பலவீனப்படுத்தும் உத்தியை இப்போது இலங்கை அரசாங்கம் கையாளத் தொடங்கியுள்ளது.
 
வெளிநாடுகளில் உள்ள புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு எதிராகவும் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவதன் மூலம் புலம்பெயர் தமிழர்களின் அழுத்தங்களை குறைக்க முனைகிறது அரசாங்கம்.
 
அதுபோலவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், புலிகளுக்கும் இருந்த தொடர்பை வைத்து மிரட்டும் முயற்சிகளும் நடக்கின்றன.
 
மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை புனர்வாழ்வுக்கு அனுப்பவுள்ளதாகவும் மிரட்டல்கள் வெளியாகின.
 
இவையெல்லாம் தமிழர் தரப்பில் இருந்து சர்வதேச விசாரணை அழுத்தங்களை குறைப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்.
 
அதுபோலவே, இந்திய அமைதிப்படையினரின் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தும் விசாரிக்க நேரிடும் என்று மிரட்டுவதன் மூலம் இந்தியாவின் ஆதரவையும் இழக்கச் செய்யும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது.
 
இத்தகைய விசாரணை ஒன்றுக்கு முகம் கொடுப்பதற்கு இந்தியா விரும்பாது. ஏனெனில் அது இந்தியாவினது கௌரவத்தைப் பாதிக்கும்.
 
இதனை அரசாங்கம் புரிந்து வைத்துக் கொண்டு தான், சர்வதேச விசாரணை வந்தால், இந்தியாவும் ஆபத்து இருக்கிறது என்று அரசாங்கம் மிரட்டத் தொடங்கியுள்ளது.
 
சர்வதேச விசாரணை ஒன்றையே அமெரிக்கா வலியுறுத்தும் என்ற கோணத்திலேயே அரசாங்கம் கருத்துகளை வெளியிட்டு வருகின்றது.
 
ஆனால், அமெரிக்கா கோருவது போன்று சுதந்திரமானதொரு விசாரணைப் பொறிமுறைக்கு இன்னமும் இணங்க அரசாங்கம் தயாராக இல்லை.
 
இருந்தாலும், இலங்கை அரசின் சுதந்திரமான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை என்பது எந்தளவுக்கு, நம்பகமானதாக இருக்கும் என்ற கேள்வி சர்வதேச சமூகத்திடம் உள்ளது.
 
உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை மேற்குலகம் வலியுறுத்தினாலும் அத்தகைய விசாரணை நம்பகமானதாக இருக்கும் என்ற நம்பிக்கை அவர்களிடத்தில் இல்லை.
 
ஏனென்றால், அத்தகைய நம்பிக்கையை உருவாக்கும் வகையில் இலங்கை நடந்து கொண்டிருக்கவில்லை.
 
போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஓர் இராணுவ விசாரணை நீதிமன்றம் நியமிக்கப்பட்டது.
 
பொதுமக்களை இலக்கு வைத்து படையினர் தாக்குதல் நடத்தவில்லை என்று அந்த நீதிமன்றம் இறுதியான முடிவை அறிவித்தது. 
 
அதனை உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை.
 
அந்த விசாரணை அறிக்கை நம்பகமானதாக இருந்திருந்தால், அமெரிக்கத் தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில், 2009 ஜனவரியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படையினரின் ஷெல தாக்குதலில் கொல்லப்பட்ட இடம் என்று இரணைப்பாலை சென். அந்தனிஸ் மைதானத்தை அடையாளப்படுத்தியிருக்க முடியாது.
 
இரண்டாவது, கடந்த ஆண்டு வெலிக்கடை சிறையில் நடந்த கலவரத்தின் போது, 27 கைதிகள் கொல்லப்பட்டது குறித்த விசாரணை அறிக்கையும் சர்ச்சைக்குரியதொன்றாகவே கருதப்படுகிறது.
 
இது இன்னமும் வெளியிடப்படாத போதிலும், கைதிகள் தமக்குத் தாமே சுட்டுக் கொண்டு இறந்ததாகவே விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக, தகவல்கள் கசிந்துள்ளன.
 
தப்பியோடிய கைதிகள், நடுவீதியில் வைத்து இராணுவத்தினரால் சரமாரியாக சுட்டுக்கொல்லும் காட்சிகள் ஊடகங்களால் வெளிப்படுத்தப்பட்டன.
 
ஆனாலும், அதையெல்லாம் அனுபவமில்லாத கைதிகள் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுக்கொண்டதால் ஏற்பட்ட மரணங்கள் என்று விசாரணை அறிக்கை கூறியுள்ளதே, உள்நாட்டு விசாரணை ஒன்றின் நம்பகத் தன்மை எத்தகையதாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
 
சர்வதேச விசாரணைக் கோரிக்கையை வலுவிழக்கச் செயவதற்குப் பதிலாக அதை வலுப்படுத்துவதிலேயே இதுவரை கவனம் செலுத்திய அரசாங்கம், இப்போது, அந்தப் பொறியில் எல்லோரும் மாட்டிக் கொள்ள நேரிடும் என்று கூறி தப்பிக்க முனைகிறது.
 
இது எந்தளவுக்கு அரசாங்கத்தைக் காப்பாற்றும் என்பது, ஜெனிவாவில் தான் தீர்மானிக்கப்படும்.

You May Also Like

  Comments - 0

  • M.Ragunathan Tuesday, 04 February 2014 07:03 AM

    இலங்கையில் சமாதானம் வர வேண்டும் என்றால் எம்மை பதுகாக்க சட்டம் அவசியம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X