2025 மே 19, திங்கட்கிழமை

வட மாகாண சபையின் பிரேரணையும் நல்லிணக்கமும்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 05 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொடர்பாக (சரியாகக் கூறுவதாயின் இலங்கைக்கு எதிராக) அமெரிக்கா இவ்வருடமும் மற்றொரு பிரேரணையை ஐ.நா.மனித உரிமை பேரவையில் சமர்ப்பிப்பது இப்போது உறுதியாகியுள்ளது. கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய அலுவல்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் அதனை சூசகமாக உறுதிப்படுத்திவிட்டுத் தான் நாடு திரும்பினார்.

ஆனால் அதேவேளை சர்வதேச சமூகம் போரின் இறுதிக் கட்டத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களைப் பற்றி விசாரணை செய்வதற்காக உள்நாட்டு பொறிமுறையொன்றை கோருவதாகவும் அவர் வலியுறுத்திக் கூறினார். அதாவது இவ்வருடம் அமெரிக்கா இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமை பேரவையில் பிரேணையொன்றை சமர்ப்பித்தாலும் அது போர் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணையொன்றை கோரும் பிரேரணையாகவே இருக்காது என்று தான் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

பிஸ்வாலின் இலங்கை விஜயத்தின் போது அவர் சந்தித்த சிலரது நிலைப்பாட்டை பார்க்கும் போது அமெரிக்கா சர்வதேச விசாரணை தொடர்பான பிரேரணைக்காக ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் தெரிகிறது. அவர் வட மாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் மற்றும் யாழ்ப்பாண ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் அவர்களை சந்தித்து பல முறை தாக்குதலுக்குள்ளான உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கும் விஜயம் செய்தார்.

ஆனால் அமெரிக்கப் பிரேரணை பெரும்பாலும் சர்வதேச விசாரணையொன்றை கோருவதாக அல்லாது அதனை ஒருபடி நெருங்கியதாகவே அமையும் என்றே கூறப்படுகிறுது. போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக அரசாங்கம் உள்நாட்டு விசாரணையொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அடிப்படையிலேயே அமெரிக்கா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் இந்த வருடமும் சர்வதேச சமூகம் திருப்திப்படும் வகையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்து வரும் ஆண்டுகளில் சர்வதேச விசாரணையொன்று வருவது நிச்சயம் என்பதே அதன் அர்த்தமாகும்.

இலங்கையிலுள்ள சில தமிழ் அரசில்வாதிகளுக்கோ தமிழக அரசியல்வாதிகளுக்கோ புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கோ அவசரம் இருக்கின்ற காரணத்தினால் சர்வதேச சமூகம் அவசரப்படுவதில்லை. அச்சமூகத்திற்கே உரிய முறைகளும் உரிய வேகமும் உரிய நோக்கங்களும் இருக்கின்றன. அதன் பிரகாரம் தான் அச்சமூகம் செயற்படுகின்றது.

இலங்கை அரசாங்கம் தொடர்பாக மட்டுமல்லாது புலிகள் தொடர்பாகவும் சர்வதேச சமூகம் இவ்வாறு தான் நடந்து கொண்டது. புலிகள் எவ்வளவோ பயங்கர வன்செயல்களில் ஈடுபட்டும் சர்வதேச சமூகம் அவ்வமைப்பை எடுத்த எடுப்பில் தண்டிக்க முற்படவில்லை. அச்செயல்கள் அளவு கடந்து நடைபெறும் நிலையிலேயே அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 25 நாடுகளும் கனடாவும் அவ்வமைப்பை தடை செய்ய முடிவு செய்தன.

அக்காலத்தில் புலிகள் ஏதாவது உரிமை மீறலில் ஈடுபடும் போது பலம் வாய்ந்த நாடுகள் அதனை கண்டித்து அறிக்கை விடும். அப்போது புலிகள் தாம் அதற்குப் பொறுப்பல்ல என்று அறுப்க்கை விடுவார்கள் ஆனால் சர்வதேச சமூகம் அதனை நம்புவதில்லை. உலக நாடுகள் தாம் கூறுவதை நம்பவில்லை என்பதை புலிகளுககும் தெரியும்.

பின்னர் புலிகள் மற்ன்றூரு இடத்தில் உரிமை மீறுவார்கள் அப்போதும் உலக நாடுகள் கண்டிக்கும் புலிகளும் அதனை மறுப்பார்கள். சர்வதேச சமூகம் அதனை ஏற்பதில்லை ஆனால் தாம் அதனை ஏற்கவில்லை என்று புலிகளுடன் வாதிட்டுக் கொண்டு இருப்பதும் இல்லை.

எனவே இவ்வாறு தொடரலாம் என்று புலிகள் நினைத்தர்கள். ஆனால் சர்வதேச சமூகத்தின் கோவைகளில் புலிகளின் எதேச்சாதிகார செயற்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்ட போது பல நாடுகள் புலிகளை சர்வதேச பயங்கரவாத இயக்கமாக பிரகடனப்படுத்தின. இலங்கை அரசாங்கத்திற்கம் சர்வதேச சமூகம் இவ்வாறு தான் சந்தர்ப்பம் வழங்கி வந்துள்ளது.

ஆரம்பத்தில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூனே நேரடியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப்புக் கூறும் விடயத்தைப் பற்றி கலந்துரையாடினார். ஜனாதிபதியும் கூட்டறிக்கை ஒன்றின் மூலம் பொறுப்புக் கூறலுக்கு இணக்கம் தெரிவித்தார்.

ஓராண்டு கடந்த பின்னரும் அரசாங்கம் உருப்படியான எதனையும் செய்யாத நிலையில் பான் கீ மூன் தருஸ்மான் குழுவை நியமித்தார். அதற்கான ஆயத்தங்களை கண்ட அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவை நியமித்தது.

ஆனால் அதன் பின்னரும் அரசாங்கம் சர்வதேச சமூகம் திருப்திப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கத் தவறியதை அடுத்து 2012ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான முதலாவது பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. அதன் மூலம் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகள் அமுலாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தாம் நியமித்த ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுலாக்கவே அரசாங்கம் மேலும் தயங்குவதாக உலக நாடுகள் அதன் பின்னரும் கருதின. இதன் நேரடி விளைவே 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டாவது பிரேரணை. அதன் பின்னர் இலங்கை அரசாங்கம் காணாமற் போனவர்கள் தொடர்பான ஆணைக்குழுவை நியமித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்த போதிலும் சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பார்ப்புகளை சந்திக்க அந்நடவடிக்கைகள போதுமானதாக இருக்கவில்லை. எனவே தான் இப்போது அமெரிக்கா மூன்றாவது பிரேரணைக்கு தயாராகி வருகிறது.

சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகள் நியாயமாக இருக்கலாம் ஆனால் தற்போதைய நிலையில் அவை இலங்கையில் நல்லிணக்கத்திற்கு எந்தளவு சாதகமானவை என்ற கேள்வியும் எழாமலில்லை. அதங்கு இரண்டு காரங்கள் இருக்கின்றன. முதலாவதாக சர்வதேச விசாரணையொன்றின் மூலம் நிரப்பந்திக்கப்பட்டு இலங்கை அரசாங்கம் போரின் போது இடம்பெற்ற சம்பவங்களுக்கு பொறுப்புக்கூறும் நிலை ஏற்பட்டால் அது நல்லிணக்கத்திற்கு சாதகமாக அமையாது.

இரண்டாவதாக தற்போதைய சர்வதேச ஆயத்தங்களைப் பார்த்தால் அவ்வாறான விசாரணையொன்று அரசாங்கத்திற்கு எதிராக மட்டுமே நடைபெறும். போரின் போது மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக சர்வதேச சமூகமே கூறும் புலிகளுக்கு எதிராக விசாரணை நடைபெறும் என்று கூற முடியாது. இந்த விடயத்தில் அக்கறை காட்டும் பிஸ்வால், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரன், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை போன்றோர்கள் தத்தமது இலங்கை விஜயங்களின் போது ஆனந்தி சசிதரன் மற்றும் யாழ்ப்பாண ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் போன்றோர்களை சந்தித்தார்களேயல்லாமல் புலிகளின் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட எவரையும் சந்திக்கவில்லை.

புலிகள் இறுதிக்கட்டத்தில் மக்களை கேடயமாக பாவித்ததாக அவர்களே முன்னர் கூறியிருந்த போதிலும் அந்த விடயங்களை கண்டறிவதற்காக அவர்கள் எவரையும் சந்தித்தாக தகவல் இல்லை. எனவே தான் உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் புலிகளை ஆதரிப்போரும் சர்வதேச விசாரணையை ஆதரிக்கிறார்கள்.

சர்வதேச விசாரணையை கோரி வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையும் அவ்வாறான பக்கச்சார்பான ஒன்றே. புலிகளின் செயற்பாடுகளையும் விசாரிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் தென் பகுதி மக்கள் முன் கூறி வருகின்ற போதிலும் வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் அந்தக் கருத்து இருக்கவில்லை. அக் கருத்தும் அதில் இருந்தால் தென் பகுதியியல் எவராலும் அதனை எதிர்க்க முடியாது.

அப்பிரேரணையை பாவித்து வட மாகாண சபையை கலைத்து விடும் முயற்சியொன்றும் சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் காணப்படுகிறது. வெளிநாட்டு உறவு என்பது மத்திய அரசாங்கத்தின் கீழ் வரும் விடயம் என்பதால் இந்தப் பிரேரணை சட்ட விரோதமானது என விமல் வீரவன்ச மற்றும் சம்பிக்க ரணவக்க போன்றோர்கள் மட்டுமல்லாது ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவும் கூறியிருக்கிறார்.

ஆனால் வட மாகாண சபையைச் சேர்ந்த எவராயினும் உத்தியோகபூர்வமாக அப்பிரேரணைனையை வெளி நாடொன்றிடம் அல்லது ஐ.நா. அதிகாரிகளிடம் சமர்ப்பிக்காவிட்டால் அது வெறும் அபிப்பிராய வெளியீடு மட்டுமே. அது சட்ட விரோதமாகாது. ஏனைய மாகாண சபைகள் இதற்கு முன்னர் அமெரிக்காவையும் ஐ.நா.வையும் கண்டித்ததில்லையா என்ற கேள்வியையும் ஒருவர் இங்கு எழுப்பலாம்.

ஆனால் இது கூட்டமைப்பின் காரியமே தவிர மாகாண சபையின் முன்னுரிமை பட்டியலில் இருக்க வேண்டியதொன்றா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. வட மாகாண சபைக்கான தேர்தலை நடத்தினால் அம்மாகாண சபை புலிகளின் நோக்கங்களுக்காக செயற்படும் என்று மாகாண சபைத் தேர்தலை எதிர்த்த பேரினவாதிகளுக்கு இது தீனி போட்டுள்ளது. எனவே இது சட்டபூர்வமானதாக இருந்த போதிலும் நல்லிணக்கத்தை பாதிக்கும் பிரேரணை என்று தான் கூற வேண்டும்.

கூட்டமைப்பு தமது மாநாடொன்றில் இவ்வாறானதோர் பிரேரணையை நிறைவேற்றினாலும் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம் ஆனால் மாகாண சபைக்கு வரக்கூடிய ஆபத்து கூட்டமைப்புக்கு வராது. நல்லிணக்கம் பாதிக்கப்படலாம் என்ற அடிப்படையில் இதற்கு முன்னர் கூட்டமைப்பே ஜெனிவா செல்வதை தவிர்த்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். 

தென்னாபிரிக்காவில் போல் அரசாங்கமே முன் வந்து விசாரணை பொறிமுறையொன்றை அமைத்தால் நிலைமை வேறு. அப்போது தென் பகுதி மக்கள் அதனை எதிர்க்கவும் மாட்டார்கள். புலிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும் விசாரிக்கப்படும் நிலை ஏற்படும். அப்போது நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்று கூற முடியாது. அதனை தான் சர்வதேச சமூகம் கடந்த நான்கு ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. ஆனால் இலங்கை அரசாங்கம் அதற்குத் தயாராக இருப்பதாக தெரியவில்லை. எனவே தான் சர்வதேச சமூகம் தாமாக அந்த விசாரணையை நடத்த முன் வருகிறது.

இலங்கை அரசாங்கத்தை விட்டு வைக்கக் கூடாது என்பதே அதன் அர்த்தமாகும். இந்த விடயத்தில் சர்வதேச சமூகம் இரண்டும் கெட்ட நிலையில் இருக்கிறது. இலங்கை அரசாங்கத்தை விட்டு வைக்கக் கூடாது என்று நடவடிக்கை எடுத்தால் இருக்கும் நல்லிணக்கமும் பாதிக்கப்படலாம். நல்லிணக்கத்தைப் பற்றிச் சிந்திக்கப்ப போனால் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றியதாக அமைந்து விடும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X