2025 மே 19, திங்கட்கிழமை

சட்டபூர்வமானாலும் தேர்தல்கள் நீதியானவையாவதில்லை

Kanagaraj   / 2014 பெப்ரவரி 14 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஐயூப்

இது தேர்தல் காலம். மார்ச் மாதம் 29 ஆம் திகதி நடைபெறவிருக்கும் மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் தென் மாகாண சபை தேர்தலைப் பற்றி சிறுபான்மை மக்கள் அனேகமாக அக்கறை காட்டாமல் இருக்கலாம் ஆனால் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெருமளவில் வாழும் மேல் மாகாண சபை தேர்தல் அம் மக்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

எல்லோரும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலைப் பற்றிப் கூச்சலிடுகின்ற போதிலும் இலங்கையில் தேர்தல்கள் சுதந்திரமாகவோ அல்லது நியாயமாகவோ நடைபெறாத ஒரு சூழலை இந் நாட்டு சட்டமே உருவாக்கியுள்ளது. இதுகாலவரை நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் தமக்கு சாதகமாக தேர்தல்களை நடத்தும் வகையில் சட்டங்களை உருவாக்கியிருப்பதே இதற்குக் காரணமாகும்.

சட்டங்கள் தேர்தல் மோசடிகளுக்கு சாதகமாக இருந்த போதிலும்; அரசியல்வாதிகள் நேர்மையாக நடந்து கொள்ள அது தடையாக இருக்கப் போவதில்லை. ஆனால் நாட்டில் அவ்வாறு நியாயமாக நடந்து கொள்ளும் நேர்மையான அரசியல் கட்சிகள் இல்லை.

தேர்தல்களின் போது தேர்தலை நடத்த முடிவு செய்யும் போதே அநீதி ஆரம்பிக்கிறது. காரணம் என்னவென்றால் சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்றத்தினதோ அல்லது மாகாண சபைகளினதோ அல்லது உள்ளுராட்சி மன்றங்களினதோ பதவிக் காலம் முடிவடைந்தே எப்போதும் அடுத்த தேர்தல்களுக்கான திகதி நிர்ணயிக்கப்படவேண்டும். ஆளும் கட்சிகளுக்குத் தேவையான திகதிகளிலேயே தேர்தல் நடைபெறுகிறது. இந்த அதிகாரம் ஏனைய கட்சிகளுக்கு இல்லை.

ஜனாதிபதித் தேர்தல் விடயத்திலும் நிலைமை இதுவே. ஒரு ஜனாதிபதி பதவிக்கு வந்து நான்காண்டுகள் சென்ற பின் அதே ஜனாதிபதி விரும்பினால் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியும். 1981 ஆம் ஆண்டு அப்போதைய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியான சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமை ரத்துச் செய்யப்பட்டு இருந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி மீண்டும் தாமே ஜனாதிபதியாக வேண்டும்.

என்பதற்காக அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவரதனவே இந்த சட்டத்தை கொண்டு வந்தார்.

அச்சட்டம் நியாயமற்றது என்றும் நாகரிகமற்றது என்றும் ஸ்ரீலசுக உட்பட அன்றைய எதிர்க்கட்சிகள் கூறின. ஆனால் தாம் பதவிக்கு வந்ததன் பின்னர் அச்சட்டத்தை ரத்துச் செய்ய அக்கட்சிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

மாறாக எவ்வித வெட்கமுமின்றி அதே சட்டத்தை பாவித்தே 1994ஆம் ஆண்டு பதவிக்கு வந்த சந்திரிகா குமாரதங்க தமக்குச் சாதகமான சந்தர்ப்பம் என்று நினைத்து 1999ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலை நடத்தினார். சட்டப்படி அத் தேர்தல் 2000ஆம் ஆண்டிலேயே நடத்தப்பட வேண்டியிருந்தது.

இம்முறை மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களும் உரிய காலத்திற்கு முன்னரே நடைபெறுகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே அதனை முடிவு செய்தார் என்பது இரகசியமல்ல. தேர்தலில் போட்டியிடும் ஒரு கட்சிக்கு மட்டும் தேர்தல் காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் கிடைத்திருக்கிறது. இது அநாகரிகமானதாக இருந்த போதிலும் சட்ட விரோதமாவதில்லை.

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்கா அடுத்த மாதம் பிரேரணையொன்றை சமர்ப்பிக்கவிருக்கிறது. இந்த நிலையில் இதோ ஏகாதிபதியவாதிகள், ஜனாதிபதியை மின்சார கதிரையில் அமர்த்தப் போகிறார்கள் என்று கூச்சலிட்டு தென்பகுதி மக்களிடையே ஜனாதிபதி மீது அனுதாபத்தை உருவாக்கி தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே அரசாங்கம் மார்ச் மாதத்திலேயே இந்த தேர்தல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

அரசாங்கம் அதனை நிராகரித்த போதிலும்; பயங்கரவாதத்திலிருந்து நாட்டை பாதுகாத்த தம்மை தண்டிப்பதற்காகவே மேற்கத்திய நாடுகள் இந்தப் பிரேரணையை கொண்டு வரப்போவதாக தேர்தல் நடைபெறும் இந் நாட்களில்; நடத்தி வரும் கூட்டங்களில் போது ஜனாதிபதி கூறி வருகிறார்.

சிலர் சோதிடர்களின் கருத்துப்படி தேர்தல் நாட்களை நிர்ணயிக்கிறனர். சிலர் ஜே.ஆர்.ஜயவர்தன செய்ததைப் போல் ஏனைய கட்சிகளுக்கு சாதகமில்லாத காலத்தில் தேர்தல்களை நடத்த முற்படுகிறார்கள். ஆயினும் எந்த ஆளும் கட்சியும் முன்கூட்டியே தேர்தல் நாட்களை நிர்ணயிப்பது சம்பந்தமாக ஒருபோதும் உண்மையைக் கூறுவதுமில்லை. ஆனால் அந்த அநீதிக்கு எதிராக எதனையும் சட்டத்தால் செய்ய முடியாது.

தேர்தல் தினத்தை அரசாங்கம் நிர்ணயிக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையாளரே அதனை நிர்ணயித்தார் என்றும் ஆளும் கட்சியினர் வாதிடலாம். சட்டப்படி அது தான் நடந்துள்ளது. ஆனால் நடைமுறையில் தமக்கு வேண்டிய தினத்தில் தேர்தல் ஆணையாளர் தேர்தலை நியமிக்கும் வகையில் ஆளும் கட்சி மாகாண சபையொன்றை கலைக்க முடியும். நடைமுறையில் அதுவே நடைபெறுகிறது. அதாவது ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு சட்டம் இடம் கொடுக்கிறது.

அதேவேளை அரசாங்கமோ அல்லது ஜனாதிபதியோ மாகாண சபைகளை கலைக்கவில்லை என்றும் அந்தந்த மாகாண சபைகளின் முதலமைச்சர்களின் வேண்டுகோளுக்கிணங்க அம் மாகாண சபைகளின் ஆளுநர்களே அவற்றை கலைத்தனர் என்றும் ஆளும் கட்சியினர் வாதிடலாம். அதுவும் சட்டப்படி சரி தான்.

ஆனால் அடுத்த முறை தமக்கே முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லாத நிலையில் எந்தவொரு முதலமைச்சரும் சுய விருப்பத்தில் தமது மாகாண சபையை முன் கூட்டியே கலைக்க ஆளுநருக்கு ஆலோசனை வழங்குவதில்லை. அதேவேளை பல மாகாண சபைகளில் முதலமைச்சர்களுக்கு ஒரே நேரத்தில் தத்தமது மாகாண சபைகளை கலைக்கும் எண்ணம் எவ்வாறு வர முடியும்?

ஆயினும் தற்போதைய நிலையில் வட மாகாண சபையை அரசாங்கம் இவ்வாறு கலைக்க முடியாது. ஏனெனில் அது ஆளும் சட்சியின் கட்டுப்பாட்டில் இல்லை. அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. அரசாங்கம் அம் மாகாண சபையை கலைப்பதாயின் அங்கு நிர்வாகத்தை நடத்த முடியாத நிலைமை ஏற்பட வேண்டும். அல்லது அவ்வாறான நிலைமையை அரசாங்கமே உருவாக்க வேண்டும். அதுவும் நடக்கலாம்.

மாகாண சபை பிரிவினை வாதத்திற்கு துணை போகிறது என்ற என்ற நிலைமை உருவாகினாலும் அரசாங்கம் மாகாண சபையை கலைக்க முடியும்.

மாகாண சபையில் அங்கம் வகிக்கும் தீவிரவாத போக்குள்ள உறுப்பினர்கள் அவ்வாறானதோர் நிலைமையை உருவாக்கலாம். ஏனெனில் தமது மக்களின் நலனை காப்பதை விட தமிழ் மக்களை நோவினை செய்வதில் இன்பம் காணும் சிங்கள சக்திகள் இருப்பதைப் போலவே தமிழ் மக்களின் நலனை காப்பதைப் பார்க்கிலும் சிங்கள தலைவர்களை நோவினை செய்வதில் இன்பம் காணும் தமிழ் சக்திகளும் இருக்கின்றன. இவ்வாறானவர்கள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலும் இருக்கிறார்கள்.

தற்போதைய நிலையில் வட மாகாண சபையும் ஒரு சில உள்ளுராட்சி சபைகளும் தவிர்ந்த நாடாளுமன்றம் உட்பட சகல மக்கள பிரதிநிதிகள் சபைகளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன.

ஜனாதிபதியும் அக் கட்சியைச் சேர்ந்தவரே. எனவே தேர்தலின் போது பொலிஸாரை கட்டுப்படுத்தும் அதிகாரமும் தேர்தல் பிரசாரத்திற்கான அனுமதி வழங்கும் அதிகாரமும் அக்கூட்டணியிடமே இருக்கிறது. அக் கட்சியுடன் போட்டியிடும் ஏனைய கட்சிகளுக்கு அவ்வாறான அதிகாரம் இல்லை.

எனவே பொலிஸாரும் உள்ளுராட்சி மன்றங்களும் ஏனைய கட்சிகள் விடயத்தில் அநீதியாக நடந்து கொள்வதில் ஆச்சரியப்படத் தேவையில்லை. ஆனால் அவ்வாறான நிலைமையிலும் தேர்தல்கள் நீதியாக நடைபெற்றவையாகவே கருதப்படுகின்றன.

தேர்தல் காலத்தில் அரச செலவில் அபிவிருத்தி மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் மக்களுக்கு வேறு விதமான சலுகைகளை வழங்கவும் ஆளும் கட்சியினருக்கு அதிகாரம் இருக்கிறது. ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் அரச செலவிலேயே கூட்டங்களை நடத்தி இப் பணிகளை செய்துவிட்டு தமது கட்சிக்கு வாக்களிளக்குமாறும் கேட்க முடியும். வட மாகாண சபைத் தேர்தலின் போதும் ஆளும் கட்சியினர் இவ்வாறு தமது தேர்தல் பிரசார பணிகளுக்காக அரச பணத்தை செலவழித்தார்கள். ஆனால் அநீதியானாலும் இலங்கையில் அது சட்ட விரோதமானதல்ல. இந்தியாவில் இவ்வாறு செய்வது சட்ட விரோதமானதாகும்.

தேர்தல் காலத்தில் ஆளும் கட்சியினர் கிராமிய வீதிகளில் பஸ் சேவைகளை ஆரம்பிப்பார்கள் தேர்தல் முடிவடைந்து சில வாரங்களில் அல்லது சில மாதங்களில் அவை ரத்துச் செய்யப்படுகின்றன. சில பகுதிகளுக்கு தேர்தல் காலத்தில் மின் கம்பங்கள் கொண்டு வரப்படுகின்றன. ஆனால் அப்பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படாது தேர்தல் முடிவடைந்த பின்னர் சில வேளைகளில் அக் கம்பங்கள் மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டதும் உண்டு.

இது ஊழல் என்பதும் அநீதி என்பதும் சிறு குழந்தைக்கும் விளங்குகிறது. ஆனால் அது சட்ட விரோதமாவதில்லை.விந்தையான விடயம் என்னவென்றால் மக்கள் மீண்டும் மீண்டும் இதே கட்சிகளுக்கு வாக்களிப்தே. ஐ.தே.க. பதவியில் இருந்த 17 ஆண்டுகளிலும் நிலைமை இவ்வாறே இருந்த போதிலும் அக் காலத்திலும் மக்கள் தொடர்ந்தும் தேர்தல்களின் போது அக் கட்சிக்கே வாக்களித்தர்கள்.

அரசியல்வாதிகளும் மக்கள் புத்திசாளிகள் என்றும் தமது எதிரிகளால் அவர்களை ஏமாற்ற முடியாது என்றும் மேடை போட்டு குத்தலாக கூறுவார்கள். இத்தனைக்கும் இலங்கையில் தேர்தல்கள் நீதியானவையாகவே கருதப்படுகின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X