2025 மே 19, திங்கட்கிழமை

வடக்கிற்கு ஏனிந்த வஞ்சனை?

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 26 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

வடக்கு மாகாணசபையில் கடந்தவாரம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்று, எந்தவித அர்த்தமும் இல்லாத வகையில், தெற்கில் சர்ச்சைக்குரிய விவகாரமாக்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையில், மீண்டும் கப்பல் சேவையையும், பலாலியில் இருந்து தமிழ்நாட்டுக்கு விமான சேவையையும் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரும் தீர்மானமே அது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் சர்வேஸ்வரனால் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம் ஒன்றும், சட்டவிரோதமானதோ தேசவிரோதமானதோ அல்ல.

ஆனாலும், தெற்கில் அரசாங்க அமைச்சர்களும் அரசியல் கட்சிகளும் இதற்கெதிராக கிளப்பியுள்ள எதிர்ப்பு விந்தையானது. இந்த விவகாரம், இரண்டு விடயங்களைத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது.

எதையுமே ஆராய்ந்து பாராமல், எடுத்த எடுப்பில் வடக்கிலுள்ள மக்களினதும் நிர்வாகத்தினதும் கோரிக்கைகளை தவறான கண்ணோட்டத்துடனும் விளங்காத்தனத்துடனும் பார்ப்பது முதலாவது. வடக்கு என்பது எந்த அபிவிருத்தியுமின்றி, முடக்கப்பட்டிருக்க வேண்டும், எதற்கும் தெற்கையே சார்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் சிங்கள அரசியல் தலைமைகளிடம் இருந்து நீங்கவில்லை என்பது இரண்டாவது.

வடக்கு மாகாணசபை அமைக்கப்பட்ட காலத்தில் இருந்தே, தெற்கிலுள்ள சிங்களத் தேசியவாத சக்திகள் அதனை விரோதமாகப் பார்க்கத் தொடங்கினர். வடக்கு மாகாணசபையை வைத்து தமிழர்கள் தனிநாடு ஒன்றைப் பெற்று விடுவார்கள் என்று, சிங்களத் தேசியவாத சக்திகள் பிரசாரம் செய்து வந்தன.

இந்த சந்தேகம் அவர்களிடம் ஏற்பட்டதற்கு, தனியே அவர்களின் இனவாதக் கொள்கையை மட்டும் காரணமாக சொல்ல முடியாது.

1988இல் வட-கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்ட பின்னர், இந்திய அமைதிப்படையின் துணையுடன் ஆட்சியை நடத்திய வரதராஜப்பெருமாள் தலைமையிலான அரசு, 1990இல் இந்தியப் படையினர் வெளியேறிய போது, தமிழீழப் பிரகடனம் செய்து விட்டுச் சென்றிருந்தது.

அதுபோன்று வடக்கு மாகாணசபையும், தமிழீழத்தைப் பிரகடனம் செய்து விடலாம் என்ற சந்தேகம், தெற்கிலுள்ள மக்களில் சிலருக்கு இன்னமும் இருப்பதை மறுக்க முடியாது.

வடக்கு மாகாணசபையால், மத்திய அரசாங்கத்தை மீறி எதையும் செய்து விட முடியாது என்பதை அறிந்திருந்தும், சிங்களத் தேசியவாத சக்திகள், இதனை ஒரு பேராபத்தாக பிரசாரம் செய்து, இந்த தவறான கருத்தை சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியுள்ளன.

அதேவேளை, மத்திய அரசாங்கத்தை மீறி வடக்கு மாகாணசபையால், எதையும் செய்ய முடியாது என்ற உண்மையை அரசாங்கம் மக்களுக்குத் தெளிவுபடுத்தத் தவறியதுடன், சிங்களத் தேசியவாத சக்திகளின் பிரசாரங்களுக்கு அது ஊக்கம் கொடுத்தும் வந்தது.

இதனால், வடக்கு மாகாணசபையின் எல்லா நகர்வுகளையுமே சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதும், அதனை வைத்து அரசியல் நடத்துவதும் வழக்கமாகி விட்டது.

அதுபோலவே, சிங்கள அரசியல் தலைமைகள், இப்போது என்ன ஏதென்று கேள்விக்கிடமின்றி, வடக்கு மாகாணசபை எதைச் செய்தாலும், அதை குரோத எண்ணத்துடன் பார்ப்பதும் வழக்கமாகி விட்டது.

அதன் காரணமாகவே, இந்த தீர்மானமும் சர்ச்சைக்குரியதாக்கப்பட்டுள்ளது.

உண்மையில், வடக்கு மாகாணசபை நிறைவேற்றிய தீர்மானத்துக்கும், தெற்கிலுள்ள இனவாத சக்திகளும் அரசாங்கமும் எம்பிக் குதிப்பற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

தமிழ்நாட்டுக்கும், வடக்கு மாகாணத்துக்கும் இடையில் விமான, கப்பல் சேவையை ஆரம்பிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை, வடக்கு மாகாணம் தனியான கப்பல், விமான சேவையை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதாக சிங்களத் தேசியவாதிகளால் அர்த்தப்படுத்தப்பட்டது மிகவும் அபத்தமானதொரு செயல்.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கார ஜெயரத்ன, மூன்றாவது சர்வதேச விமான நிலையத்தை அமைக்கும் எண்ணம் அரசாங்கத்துக்குக் கிடையாது என்று கூறினார்.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவோ, விமான நிலையங்களும் துறைமுகங்களும் 13ஆவது திருத்தச்சட்டத்தில் மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்டவை, வடக்கு மாகாணசபை இதற்கு உரிமை கோர முடியாது என்றார்.

சிங்களத் தேசியவாத அரசியல் தலைவர்களான விமல் வீரவன்ச, குணதாச அமரசேகர, சம்பிக்க ரணவக்க, உதய கம்மன்பில, வசந்த பண்டார போன்றவர்கள், நாட்டைப் பிரிக்க வடக்கு மாகாணசபை முனைவதாகவும், இது நாட்டின் இறைமைக்கு ஆபத்தானது என்றும் கூச்சல் போட்டனர்.

அதுமட்டுமன்றி, வடக்கு மாகாணசபையைக் கலைக்க வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஒரு காரணமாகக் காட்டி, வடக்கு மாகாணசபையைக் கலைக்கக் கோரும் அளவுக்கு இந்த தீர்மானத்தில் எதுவும் இல்லை என்று தெரியாதளவுக்கு சிங்களத் தேசியவாத தலைமைகள் நுனிப்புல் மேய்பவர்களாகவே இருக்கின்றனரா?

அல்லது, கிடைக்கும் சந்தர்ப்பங்களையெல்லாம் தமிழர்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனரா?

எது எவ்வாறாயினும், வடக்கு மாகாணசபையின் தீர்மானம் தொடர்பாக, அரசாங்கத் தரப்பில் இருந்தும் சிங்களத் தேசியவாதிகளிடம் இருந்தும் எழுந்துள்ள எதிர்ப்புகளை அவதானிக்கும் போது, வடக்கிலுள்ள தமிழர்களின் உரிமையை அவர்கள் எந்தளவுக்கு அங்கீகரிக்க மறுக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

அதாவது, வடக்கில் உள்ள மக்கள் தமது பிரதேசத்துக்கென ஒரு சர்வதேச விமான நிலையத்தைக் கோருவதற்கும் உரிமையற்றவர்கள் என்று அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இது ஒன்றும் புதிதாக முன்வைக்கப்பட்ட அல்லது நடைமுறைச் சாத்தியமற்ற கோரிக்கையன்று.

ஹம்பாந்தோட்டையில் ஒரு சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கான சேவையை நடத்த முடியுமென்றால், வடக்கில் மட்டும் ஏன் அதைச் செய்ய முடியாது என்ற கேள்வி எழுவது இயல்பு.

முன்னர், பலாலியில் இருந்து திருச்சிக்கும் சென்னைக்கும் விமான சேவைகள் நடத்தப்பட்டிருந்ததும், இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையில் இராமானுஜம் என்ற கப்பல் சேவை நடத்தப்பட்டதும் எவருக்கும் மறந்து போயிருக்காது.

பலாலிக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலான விமானசேவை, 1970களின் இறுதியுடனும், கப்பல் சேவை 1980களின் நடுப்பகுதியுடனும் தான் நிறுத்தப்பட்டன.

அமைதியற்ற சூழலை காரணம் காட்டி, இடைநிறுத்தப்பட்ட கப்பல் மற்றும் விமான சேவைகளை மீள ஆரம்பிக்கக் கோருவது எந்தவகையில் தவறானது?

தமிழ்நாட்டுக்கும் வடக்கிற்கும் இடையில், இலங்கை அரசாங்கம் நிறுவப்பட முன்னரே, நெடுங்கால வணிகத் தொடர்புகள் இருந்து வந்துள்ளன.

இப்போது இந்த சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம், இந்த வணிகத் தொடர்புகளைப் பலப்படுத்தி, வடக்கை மேலும் அபிவிருத்தி செய்யலாம் என்பது அரசாங்கம் அறியாத ஒன்றாக இருக்க முடியாது.

ஆனாலும், இதனை தவறான கோரிக்கையாக அரசாங்கமே முன்னிலைப்படுத்தியுள்ளது, வடக்கை வஞ்சிக்கும் செயலாகவே கருத வேண்டும்.

தெற்கிலுள்ள மக்களுக்கு, கட்டுநாயக்க விமான நிலையம் தொலைவாக இருக்கிறது என்பதற்காக, ஹம்பாந்தோட்டையில் ஒரு சர்வதேச விமான நிலையத்தை அமைத்த அரசாங்கத்துக்கு, அதேபோன்று தொலைவில் உள்ள வடக்கிலுள்ள மக்களின் வசதி கருதி, பலாலியில் இருந்து விமான சேவையை ஆரம்பிக்க விடுக்கும் கோரிக்கை மட்டும் நியாயமற்றதாகத் தெரிகிறது.

இது உணர்த்துவது, வடக்கு எப்போதும் தெற்கின் கீழ் இருக்க வேண்டும் என்பதையா – வடக்கு அபிவிருத்தி செய்யப்படக் கூடாது என்பதையா- வடக்கிற்கு எந்த அதிகாரப்பகிர்வும் வழங்கப்படக்கூடாது என்பதையா- அல்லது இவை அனைத்தையுமா?

இத்தகைய குரோத எண்ணங்கள் தூண்டி விடப்பட்டதன் விளைவைத் தான் நாடு மூன்று தசாப்தங்களாக அனுபவிக்க நேரிட்டது.

அந்த வலியில் இருந்து மீள்வதற்கிடையில், மீண்டும் அதே சிந்தனைகள் தூண்டி விடப்படுவது, நிலையான அமைதியையோ - நல்லிணக்க சூழலையோ உருவாக்க இடமளிக்காது.

இந்த உண்மை தெற்கிலுள்ள அரசியல்வாதிகளுக்கு புரியவில்லையா அல்லது அவர்கள் அதைப் புரிந்துகொள்ள விரும்பவில்லையா?

You May Also Like

  Comments - 0

  • pathmadeva Wednesday, 26 February 2014 04:04 PM

    இந்தக் கட்டுரையை அப்படியே சிங்கள மொழியில் வெளியிட வேண்டும்!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X