2025 மே 19, திங்கட்கிழமை

'பிள்ளை' முன்வைக்கும் காரணங்கள்

Kanagaraj   / 2014 மார்ச் 02 , பி.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஐயூப்

தற்போது அரசாங்கம் எதிர்நோக்கியிருக்கும் பிரதான பிரச்சினை ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா சமர்ப்பிக்கவிருக்கும் பிரேரணையை எதிர்நோக்குவது எவ்வாறு என்பதாகத் தான் இருக்க வேண்டும். அந்தப் பிரேரணை மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு ஒரு நாளில் அதாவது மார்ச் 29ஆம் திகதி மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவிருக்கின்ற போதிலும் அந்தத் தேர்தல்களை எதிர்நோக்குவது அரசாங்கத்திற்கு ஒரு பிரச்சினையல்ல.

சில வேளைகளில் அந்தப் பிரேரணை இத் தேர்தல்களின் போது அரசாங்கத்திற்கு சாதகமாக அமையவும் கூடும் ஏகாதிபத்தியவாதிகள் இப் பிரேரணையின் மூலம் புலிகளை தோற்கடித்த தலைவரை பழிவாங்குகிறார்கள் என்று அரசாங்கம் பிரசாரம் செய்யலாம். அது ஆளும் கட்சிக்கு தேர்தலில் சில வாக்குகளையாவது பெற்றுக் கொடுக்கலாம். இதே காரணத்திற்காகவே அரசாங்கம் மார்ச் 29ஆம் திகதியே இத் தேர்தல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக சில எதிர்க் கட்சிகள் கூறி வருகின்றன.

கடந்த வருடத்தில் போலவே இவ் வருடமும் மனித உரிமை பேரவையின் மார்ச் மாத கூட்டத்திற்கு முன்னர் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டு இருக்கிறார். அரசாங்கம் அதற்கான தமது பதிலையும் வெளியிட்டு இருக்கிறது. கடந்த கால அனுபவங்களின் பிரகாரம் அரசாங்கத்தின் பதிலைப் பார்த்து அமெரிக்காவோ அல்லது மனித உரிமை ஆணையாளரோ தமது திட்டங்களை மாற்றிக் கொள்ளப் போவதில்லை.

இம் முறை மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையானது இது வரை ஐ.நா. அமைப்பின் தலைவர்களால் இலங்கை விடயத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் மிகவும் பாரதூரமான அறிக்கையென்றே கூற வேண்டும். ஏனெனில் இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக சர்வதேச விசாரணை பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

அதேபோல் அமெரிக்கப் பிரேரணை இந்த அறிக்கையின் அடிப்படையில் அமையப் போவதாக ஏற்கெனவே சில செய்திகள் கூறியிருக்கின்றன .கடந்த வருடங்களில் போலவே இம் முறையும் அமெரிக்கப் பிரேரணையின் மூலம் இலங்கை விடயத்தில் சர்வதேச விசாரணையொன்று கோரப்பட மாட்டாது என இதற்கு முன்னர் சில செய்திகள் கூறின. ஆனால் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை சர்வதேச விசாரணையொன்றை கோருவதனால் அதை அடிப்படையாகக் கொள்ளப் போகும் அமெரிக்கப் பிரேரணையும் சர்வதேச விசாரணையொன்றை கோரும் என ஊகிக்க முடிகிறது.

இந்த அறிக்கையில் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. அதாவது போர் குற்றங்கள் தொடர்பாக புலிகள் அமைப்புக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்;டுள்ளமையே. இந்த விடயமும் அமெரிக்கப் பிரேரணையில் இடம்பெறுமா என்பது இப்போதைக்கு தெளிவாக தெரியவில்லை.

இதற்கு முன்னர் ஐ.நா. தலைவர்களும் அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் போர் குற்றங்களைப் பற்றிப் பேசும் போது இலங்கை அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்றே வலியுறுத்தி வந்தனர். தமிழ்நாட்டுத் தலைவர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் பொதுவாக இலங்கையில் போரில் ஈடுபட்ட இரு சாராரும் போர் குற்றங்களை புரிந்ததாக பொதுவாக கூறிய போதிலும் விசாரணை என்று வரும் போது அரச படைகளுக்கு எதிராக விசாரணை நடத்துவதைப் பற்றியே அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

சர்வதேச அறிக்கையொன்று புலிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டும் என்று நேரடியாகவே கூறிய முதல் முறை இதுவாகும். அக் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டும் என்று கூறுவது மட்டுமல்லாது அவற்றை விசாரிக்காததையிட்டு பிள்ளை அரசாங்கத்தை குறை கூறுகிறார். எனவே புலிகளின் ஆதரவாளர்கள் இந்த அறிக்கையைப் பற்றி முன்னைய அறிக்கைகளுக்குப் போல் ஆதரவை தெரிவிப்பார்களா என்பது சந்தேகமே.

இதற்கு முன்னர் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டு மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு பிரேரணைகளையும் தாம் நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் கூறியது. ஆயினும் அப் பிரேரணைகளின் மூலம் வலியுறுத்தப்பட்ட பல விடயங்களை நிறைவேற்ற அல்லது நிறைNவுற்றுவதாகக் காட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

குறிப்பிட்ட துறைகக்குப் பொறுப்பான ஐ.நா. அதிகாரிகளுக்கு நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தமை, வட மாகாண சபைத் தேர்தலை நடத்துதல், வட பகுதியிலிருந்து படையினரை குறைத்தல், போரின் போது இடம்பெற்றதாக் கூறப்படும் மனித உரிமை மீறல்களைப் பற்றி விசாரணை செய்வதற்காக இராணுவ நீதிமன்றமொன்றை நிறுவுதல், வடக்கு கிழக்கு பகுதிகளில் காணாமற்போனவர்களைப் பற்றி விசாரணை செய்வதற்காக ஆணைக்குழுவொன்றை நியமித்தல், பேரின் போது இடம்பெற்ற உயிர் மற்றும் உடமை சேதங்களை கண்டறிவதற்கான கணக்கெடுப்பை நடத்துதல், உண்மையை கண்டறிவதற்கான ஆணைக்குழுவொன்றை நியமிக்க சில நடவடிக்கைகளை எடுத்தல் அவற்றில் சிலவாகும்.

ஆனால் இவற்றின் மூலம் மனித உரிமை ஆணையாளரை திருப்திப்படுத்த அரசாங்கத்திற்கு முடியவில்லை என்பதையே அவரது அறிக்கை காட்டுகிறது. எனவே தான் அவர் சர்வதேச விசாரயையை வலியுறுத்துகிறார்.

குறிப்பிட்ட துறைக்குப் பொறுப்பான ஐ.நா. அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தமை சம்பந்தமாக குறிப்பிடுகையில் அவர் ஏற்கனவே விடுக்கப்பட்டஅழைப்புக்கள் வரவேற்கக் கூடியதாக இருந்த  போதிலும் காணாமற்போனோர்கள் மற்றும் சிறுபான்மையினர் பிரச்சினைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று கூறுகிறார்.

அரசாங்கம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தியமை வரவேற்கக் கூடியதாக இருந்த போதிலும் புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாகாண நிர்வாகிகளுடன் அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று பிள்ளை கூறுகிறார். இது உள்நாட்டு விவகாரங்களில் தலையீடாக தெரிந்த போதிலும் அதிகாரபரவலாக்கல் என்ற விடயம் கடந்த முறை அமெரிக்கப் பிரேணையில் குறிப்பிடப்பட்டு இருந்தமையினால் மாகாண நிர்வாகிகளுடன் அரசாங்கம் ஒத்துழைக்கவேண்டும் என்று கூறுவதிலும் தவறு இல்லை என்றும் வாதிடலாம்.

வட பகுதியிலிருந்து பெருமளவில் படையினரை குறைத்ததாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் மேலும் படைகுறைப்பு நடைபெற வேண்டும் என்று பிள்ளை தமது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார். காணாமற் போனோர் தொடர்பான ஆணைக்குழுவை அரசாங்கம் நியமித்த போதிலும் அது 1990 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்களையும் வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களையும் மட்டுமே ஆராய்கிறது. எனவே அதன் கால வரையறையும் நீடிக்கப்பட்டு நாடு முழுவதிலும் இடம்பெற்ற சம்பவங்களைப் பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆணையாளர் கூறுகிறார்.

போரின் போது இடம்பெற்ற உயிர் மற்றும் சொத்து சேதங்களை கண்டறிவதற்காக நடத்தப்பட்ட கணிப்பீட்டைப் பற்றிக் குறிப்பிடுகையில் மொத்தமாக ஒரு குடும்பத்தில் சகலரும் உயிரிழந்தோ அல்லது காணாமற் போய் அல்லது வெளிநாடு சென்றிருந்தால் அவ்வாறான குடும்பங்களின் விவரங்கள் இந்த கணிப்பீட்டுக்குள் உள்வாங்கப்பட மாட்டாது என அவர் வாதிடுகிறார்.

சர்வதேச சமூகமும் ஐ.நா. மனித உரிமை பேரவையும் சுட்டிக் காட்டிய விடயங்களை நிறைவேற்றுவதற்காக தாம் எடுத்ததாக அரசாங்கம் முன்வைக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் இவ்வாறு விமர்சிக்கும் மனித உரிமை ஆணையாளர் அரசாங்கம் இந்தப் பிரச்சினைகளை தீர்க்கும் என்பதை ஏற்க முடியாது என்று வாதிடுகிறார் இந்த அடிப்படையிலேயே அவர் இந்தப் பிரச்சினைகளை தீர்க்க சர்வதேச விசாரணை பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறார்.

ஆரம்பத்தில் ஐ.நா வும் சர்வதேச சமூகமும் போர் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களைப் பற்றியே அரசாங்கத்தை குறை கூறி வந்தன. ஆனால் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை அண்மைக் கால சம்பவங்கள் விடயத்திலும் அரசாங்கத்தை குறை கூறியுள்ளது. 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம், வவுனியா சிறையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம், மற்றும் கடந்த வருடம் வெளிவேரியவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் அண்மைக் காலமாக சிறுபான்மை மக்களின் சமயத் தளங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் ஆகியன அவற்றில் சிலவாகும்.

இவை தொடர்பாகவும் அரசாங்கம் முன்வைக்கும் கருத்துக்களை பிள்ளை ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக சமாத் தளங்கள் மீதான தாக்குதல்கள் விடயத்தில் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் ஐ.நா. அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது. அதற்கு பதிலளிக்கும் நவநீதம் பிள்ளை சமயத்தளங்கள் மீதான பல சம்பவங்களின் போது பொலிஸார் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருப்பது வீடியோ படங்களில் காணக்ககூடியதாக இருப்பதாகக் கூறுகிறார். அதேவேளை தாக்குதல் நடத்தியோர் அப் படங்களில் தெளிவாகவே அடையாளம் காணக்க கூடியதாக இருப்பதாகவும் கூறுகிறார்.

இலங்கையில் சமயத்தளங்கள் தாக்கப்படவில்லை என்று இலங்கைத் தலைவர்கள் நாட்டுக்குள் கூட்டம் போட்டு கூறுகின்றனர். அதேவேளை அவ்வாறான தாக்குதல்களைப் பற்றி ஐ.நா. தலைவர்களிடம் தெரிவித்ததாக சிறுபான்மைத் தலைவர்களையும் கண்டிக்கின்றனர். ஆனால் அதே அரசாங்கம் கடந்த காலங்களில் இந்து ஆலயங்கள் 105 இன் மீதும் 41 கிறிஸ்தவ ஆலயங்கள் மீதும் 16 பௌத்த விகாரைகள் மீதும் 20 முஸ்லிம் பள்ளி வாசல்கள் மீதும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக ஐ.நா.விற்கு அறிவித்துள்ளது.

இந்து ஆலயங்களில் இடம்பெற்ற 105 சம்பவங்களில்; 95 சம்பவங்கள் கொள்ளைகள் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பௌத்த விகாரைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் எவ்வாறானவை என்று அரசாங்கம் தெரிவித்ததில்லை. எனவே ஏனைய சமயத்தவர்கள் விகாரைகளை தாக்கியிருப்பதாக வெளிநாட்டவர்கள் நினைக்கலாம். இலங்கையில் அவ்வாறு நடப்பதில்லை.

பொதுவாக ஐ.நா.வினதும் சர்வதேச சமூகத்தினதும் அக்கறையை இலங்கை அரசாங்கம் உரிய முறையில் சந்திக்க தவறியிருப்பதாலேயே தாம் சர்வதேச விசாரணையை கோருவதாகவே மனித உரிமை ஆணையாளர் கூறுகிறார்.   
 
   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X