2025 மே 19, திங்கட்கிழமை

திரிசங்கு சொர்க்கத்தில் நரேந்திரமோடி

A.P.Mathan   / 2014 மார்ச் 25 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் உருவான தேசிய ஜனநாயக கூட்டணி அணி திரிசங்கு சொர்க்கத்தில் நிற்கிறது. பா.ஜ.க. தலைமையில் இதுவரை தி.மு.க.வோ அல்லது அ.தி.மு.க.வோ தமிழகத்தில் அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தது. ஆனால் இந்தமுறை புதிய கட்சிகள் இக்கூட்டணிக்கு வந்துள்ளன. குறிப்பாக விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க., வைகோ நடத்தும் ம.தி.மு.க., ராமதாஸ் தலைமையேற்கும் பா.ம.க. ஆகிய கட்சிகள்தான் இப்போது தமிழக தேசிய ஜனநாயக கூட்டணியை அலங்கரிக்கின்றன. இக்கூட்டணி யாருடைய வாக்கு வங்கியை சுற்றி வளைத்து இழுத்துக் கொண்டு போகப் போகிறது என்பதுதான் தமிழக தேர்தல் களத்தின் சுவாரஸ்யமான காட்சி.

முன்பு வாஜ்பாய்க்கு இருந்தது போன்ற இமேஜ் நரேந்திரமோடிக்கு இருக்கிறது. ஆனால் உற்ற நட்புக் கட்சியாக இருந்த அ.தி.மு.க.வை இந்த முறை நரேந்திரமோடியை தமிழகத்தில் ஏற்றுக் கொண்டு அவர் தலைமையில் களம் அமைக்க கை கொடுக்கவில்லை. காரணம் "பிரதமர் பதவி' என்பதை முன்கூட்டியே பிரசார மைதானத்திற்குக் கொண்டு வந்து விட்ட அ.தி.மு.க.வால், நரேந்திரமோடியை இனி ப்ரஜெக்ட் பண்ணுவது இயலாத காரியம். ஆனால் இக்கூட்டணியில் வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் அனைவருமே ஒன்று சேருவார்கள் என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்காத ஒன்று. இந்த திடீர் இணைப்புக்கு காரணம் இல்லாமல் இல்லை.

வைகோவிற்கும், ராமதாஸிற்கும் தங்கள் கட்சியின் தேர்தல் கமிஷன் அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம். இந்த முறை விட்டால் பிறகு எந்த முறையும் வராது என்பது அவர்களுக்குத் தெரியும். விஜயகாந்திற்கு தி.மு.க.வுடன் போய் தன் எதிர்கால அரசியல் வியூகத்தை விட்டுக் கொடுக்க மனமில்லை. மோடியைக் காட்டி எவ்வளவு அதிக வாக்குகள் பெற்றாலும் அது 2016 சட்டமன்ற தேர்தலுக்குச் செய்யப்படும் முதலீடு என்று நினைக்கிறார் விஜயகாந்த். அதேநேரத்தில் தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ இப்போது நாம் மோடியுடன் கூட்டணி வைப்பது 2016 சட்டமன்றத் தேர்தலுக்குக்கு செய்யும் "இழப்பீடு' என்று கருதுகின்றன. இவற்றையெல்லாம் மனதில் வைத்துத்தான் "சரியான தலைவர். ஆனால் தவறான கட்சியில் இருக்கிறார்' என்று வாஜ்பாயைத் திட்டி விட்டு பிறகு கூட்டணி கண்ட தி.மு.க. கூட, இப்போது நரேந்திரமோடியுடன் சேரத் தயங்குகிறது.

இதெல்லாம் ஒரு புறமிருக்க, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது பெங்களூரில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கும், தி.மு.க. மீது இருக்கும் 2ஜி அலைக்கற்றை ஊழல் களங்கமும் பா.ஜ.க.வை இந்த இரு கட்சிகள் பக்கமும் இப்போதைக்கு போக முடியாமல் வைத்திருக்கிறது என்பதும் ஒரு முக்கியக் காரணமே. எப்படியோ அணிகள் தமிழக தேர்தல் களத்திற்கு அமைந்து விட்டன. ஆறு முனைப் போட்டிக்கு தமிழகம் தயாராகிக் கொண்டிருக்கிறது. சுயேட்சைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், ஏழு முனைப் போட்டியாகி விடும். ஏன் சமாஜ் வாடிக் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி போன்றவையும் வேட்பாளர்களை நிறுத்தினால் தமிழகத்தில் எட்டுமுனை, ஒன்பது முனைப் போட்டியாகக் கூட மாறிவிடும்.

எத்தனை முனைப் போட்டி வந்தாலும், தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிக்கு இருக்கும் சிக்கலே அ.தி.மு.க.வை எதிர்த்து பிரசாரம் செய்ய முடியவில்லை என்பதுதான். தமிழகத்தில் அ.தி.மு.க.விற்கு அதிக இடங்கள் கிடைத்து விட்டால் அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலலிதாவிடம் நாம் பேச முடியாதே என்பதுதான் இந்த தயக்கத்திற்கு காரணம். ஆனால் இதுவே நரேந்திரமோடிக்கு வாக்கு திரட்டலை தடுத்து நிறுத்தி விடும் என்ற அச்சம் பா.ஜ.க.வின் வெற்றியை விரும்பும் அரசியல் பிரமுகர்கள் மத்தியிலேயே இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் காங்கிரஸ் என்பது ஒரு செத்த பாம்பு என்றே அரசியல் விமர்சகர்கள் நினைக்கிறார்கள். ஏனென்றால் 6 சதவீதம் உள்ள அக்கட்சியை சீமான் முதல் ஜெயலலிதா வரை அனைவரும் விமர்சித்து விட்டார்கள். அதே விமர்சனத்தை மோடியும் செய்வதால் ஒரு பலனும் வரப்போவதில்லை என்று நினைக்கிறார்கள். அவர்கள் பார்வையில் தமிழகத்தில் வாக்கு வங்க வேண்டுமென்றால் இப்போதைக்கு அ.தி.மு.க.வை விமர்சிக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அதைத்தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்துள்ள விஜயகாந்த், வைகோ, ராமதாஸ் அனைவருமே விரும்புகிறார்கள்.

ஆனால் இதிலும் பல சிக்கல்கள். விஜயகாந்திற்கு இருக்கும் வேகம் அ.தி.மு.க. அரசை விமர்சிப்பதில் வைகோவிற்கு இல்லை. ராமதாஸýக்கு இருக்கும் வேகமும் கூட வைகோவிற்கு இல்லை. இவர்களை எல்லாம் கைகோர்த்து இழுத்துச் செல்லும் பா.ஜ.க. தலைமைக்கும் அ.தி.மு.க.வை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை. அதனால் வெறும் காங்கிரஸ் எதிர்ப்பை மட்டும் வைத்து இந்த அணி எப்படி வாக்குகளை வாங்கிவிடப் போகிறது என்ற கேள்வி பிறந்திருக்கிறது. என்னதான் அடித்துலும் உதைத்தாலும் காங்கிரஸýக்கு என்று இருக்கின்ற அந்த 6 சதவீத வாக்குகள் வேறு யாருக்கும் போகப் போவதில்லை. அதே போல் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வின் அடிப்படை வாக்கு வங்கிகள் அசைந்து கொடுக்கப் போவதில்லை. ஆனால் நடுநிலை வாக்காளர்களுக்கு இப்போது தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க.வை விமர்சிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதை இப்போதைக்கு தி.மு.க. மட்டுமே தீவிரமாகச் செய்கிறது. அதனால் அ.தி.மு.க.வின் எதிர்ப்பு வாக்குகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கோ, காங்கிரஸ் கட்சிக்கோ போவதற்குப் பதில் தி.மு.க.விற்கு போகும் வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் தி.மு.க. வேட்பாளரால்தான் அ.தி.மு.க. வேட்பாளரை தோற்கடிக்க முடியும் என்ற எண்ணம்தான் வாக்காளர்கள் மனதில் மேலோங்கி நிற்கும்.

மீதியிருப்பது தி.மு.க. எதிர்ப்பு வாக்குகள். இந்த வாக்குகள் ஏற்கனவே அ.தி.மு.க.விற்கே மெஜாரிட்டியாக போகும். ஆனால் இந்த முறை மோடி தலைமையில் உள்ள கூட்டணி இந்த வாக்குகளைப் பெறுவதில்தான் அக்கட்சி வேட்பாளர்கள் வாக்கு வங்குவதில் தெரியப் போகிறது. ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. அனைத்துமே "தி.மு.க. எதிர்ப்பு' வாக்குகள்தான். இந்த வாக்குகள் அப்படியே மோடி அணிக்குப் போய் சேர்ந்தால் அந்த அணி தப்பிக்கும். அப்போது கூட வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை சிங்கிள் டிஜிட்டின் ஆரம்ப கட்டத்திலேயே நின்றுவிடும் வாய்ப்புகள்தான் அதிகம். இது தி.மு.க. எதிர்ப்பு வாக்குகள் என்றாலும் தி.மு.க.விலிருந்து ஏற்கனவே பிரிந்த வாக்குகள். அந்த வகையில் அ.தி.மு.க.வை விமர்சிக்காத தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று நினைத்து அவர்கள் தி.மு.க.விற்கே திரும்ப வாக்களித்து விட்டால், இடியாப்பச் சிக்கலாக மாறி விடும். ஆகவே, "தி.மு.க. எதிர்ப்பு வாக்கு'களை தக்க வைத்துக் கொள்ளவும், "அ.தி.மு.க. எதிர்ப்பு வாக்கு'களை இழுக்கவும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசியல் பிரச்சாரம் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதில் அவர்களுக்கு ஆயிரத்தெட்டு தயக்கம் இருக்கின்றன என்றே தோன்றுகிறது. அதில்தான் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியின் பிரசார முழக்கம் முடங்கிப் போய் கிடக்கிறது.

இந்த பிரசசார சுணக்கத்தை தூக்கியெறிய நரேந்திரமோடி நான்கு, ஐந்து இடங்களிலாவது தமிழகத்தில் மீண்டும் பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆனால் அதற்கு அவருக்கு நேரம் இருக்கும் என்று தோன்றவில்லை. பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களின் தொகுதிகளுக்காவது அவர் வருவாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. வைகோவும், ராமதாஸýம், விஜயகாந்தும் களத்தில் இருக்கிறார்கள். ஆனால் விஜயகாந்தின் பேச்சில் ஒரு தெளிவு இல்லை. அவர் பேச்சைக் கேட்டு அவருக்கு மக்கள் வாக்களிக்கப் போவதில்லை என்பது ஒருபுறமிருந்தாலும், மோடியின் மகிமையை முழு வேகத்தில் எடுத்துச் சென்று வாக்காளர்களின் மனதை மயக்க விஜயகாந்தின் பேச்சு உதவாது. அதற்கு கலைஞர் கருணாநிதியின் பேச்சோ, அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவின் பேச்சோ மட்டுமே உதவ முடியும். அந்தக் கூட்டணி இல்லாததால், மோடியின் பெயரை மார்கெட் பண்ணுவதற்கே இப்போதுள்ள கூட்டணித் தலைவர்களுக்கு "பேச்சுவண்மை' இல்லை. அக்கூட்டணியில் உள்ள வைகோவிற்கு மட்டும் அது இருக்கிறது. ஆனால் அவர் எடுத்த எடுப்பிலேயே "தனி ஈழம்' "யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா' என்று இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்றெல்லாம் சொல்லி, பா.ஜ.க. மட்டுமல்ல, மோடியை ஆதரிக்கும் வாக்காளர்களிடம் இருந்து விலகிச் செல்கிறார்.

தி.மு.க,, மற்றும் அ.தி.மு.க.விற்கு மாற்று அணி என்று தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் சொல்லிப் பிரயோஜனமில்லை. அக்கூட்டணி அதை செயலில் காட்ட வேண்டும்.  அப்போதுதான் இந்த அணி வெற்றி பெறும் என்ற இமேஜ் வரும். அது அக்கூட்டணிக்கு ஒரு சில இடங்களில் வெற்றியையும், ஓவராலாக வாக்கு வங்கி பலத்தையும் பெற்றுக் கொடுக்கும். அப்படியில்லையென்றால், இக்கூட்டணி கூடிக் கலைகிற அணியாக இருப்பதற்கே சாத்தியக்கூறுகள் அதிகம். இந்த அணியை வெற்றி பெறும் இமேஜ் உள்ள கூட்டணியாக மாற்ற வேண்டிய பொறுப்பு பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் கையில் இருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு தி.மு.க., அ.தி.மு.க.வுடன் பேச வேண்டியதிருக்குமே என்பதை ஒதுக்கி வைத்து விட்டு, எவ்வளவு தூரம் நரேந்திரமோடி இப்படியொரு பிரசார வியூகத்தை தமிழகத்தில் கையிலெடுக்கப் போகிறார் என்பதை பொறுத்தே மூன்றாவது அணியின் சாதக, பாதகங்கள் அமையும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X