2025 மே 19, திங்கட்கிழமை

தடை வெல்லுமா?

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 1373 தீர்மானத்துக்கு அமைவாக,  வெளிநாடுகளில் செயற்படும் விடுதலைப் புலிகள் மற்றும் அவர்கள் சார்பு புலம்பெயர் தமிழர் அமைப்புகளான 16 அமைப்புக்களை  அரசாங்கம் வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளாக பிரகடனம் செய்துள்ளது.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்ட பின்னணியில் தான் இந்த எதிர் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. ஆனால், அரசாங்கம் சொல்லும் காரணம் அதற்கு முரணானது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மீள உயிர் கொடுக்க வெளிநாடுகளில் உள்ள புலிகள் சார்பு அமைப்புகள் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியே அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் அமெரிக்காவினால் விவாதத்துக்கு விடப்பட்ட பின்னர், வடக்கில் புலிகளைத் தேடும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

அரச படையினரின் இந்தத் தேடுதல்கள், சுற்றிவளைப்புகள், கைதுகள், கெடுபிடிகள் எல்லாமே வடக்கில் போர்க்காலத்தை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. கிழக்கிலும் அந்த நிலை மெல்ல மெல்ல உருவாக்கப்பட்டு வருகிறது.   

புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் உயிர்கொடுக்க முயன்றவர்கள் என்று சிலரைத் தேடும் நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன.

பலர் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையிலும், எவ்வாறு புலிகள் இயக்கத்தை தோற்றுவிக்க முயன்றார்கள் என்றோ  அதன் மூலம் எதைச் சாதிக்க முயன்றார்கள் என்ற நம்பகரமான  எந்தத் தகவல்களையும் அரசாங்கம் வெளியிடவில்லை.
வடக்கில் தொடர்ந்து படைகளை நிலை நிறுத்தி வைத்திருப்பதற்கு வலுவான காரணம் ஒன்று தேவைப்படுவதாலேயே, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பரவலான கருத்துகள் உள்ளன.

இவையெல்லாம் வெறும் ஜெனீவாவை வைத்து மேற்கொள்ளப்படும் நகர்வுகளாகவே பார்க்கப்பட்டு வந்த நிலையில், இதனை ஒரு சர்வதேச விவகாரமாக அரசாங்கம் மாற்றத் தொடங்கியுள்ளதைக் கவனிக்கலாம்.

அதாவது வடக்கில் அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்புக் கெடுபிடிகளை வெறுமனே வடக்கில் படைகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கான நகர்வாக மட்டுமன்றி, அதற்கு அப்பாற்பட்டதாகவும் அரசாங்கம் கொண்டு சென்றுள்ளது.

வடக்கில் புலிகள் மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியுள்ளனர் என்பதை வெறும் பிரசாரமாக நியாயப்படுத்திக்கொண்டிருக்காமல், சர்வதேச அளவில் ஒரு பிரகடனமாக மாற்ற அரசாங்கம் முயன்றுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவும் கூட, பல சந்தர்ப்பங்களில் புலிகள் இயக்கம் மீண்டும் தலையெடுக்க முனைவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இது புலிகள் இயக்கத்தை வைத்து அரசாங்கம் சர்வதேச அளவில் மீண்டும் அரசியல் செய்யத் தொடங்கிவிட்டது என்பதை உறுதிப்படுத்தியிருந்தது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அது தலையெடுக்க முனையும் புலிகளுக்கும் அவர்களின் ஆதரவுச் சக்திகளுக்கும் ஊக்குவிப்பாக இருக்கும் என்று ரவிநாத் ஆரியசிங்க குறிப்பிட்டதை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தம்.
இது புலிகள் மீண்டும் உருவாக இடமளித்து விடாதீர்கள் என்றும் உறுப்பு நாடுகளுக்கு மறைமுகமாகச் சொல்லப்பட்ட செய்தி என்பதை மறுக்க முடியாது.

போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகளாகி விட்ட நிலையில், அரசாங்கம் உருவாக்கிய அமைதியைக் குலைக்கும் எந்தவொரு வன்முறைச் சம்பவங்களும் நடந்திராத நிலையில், திடீரெனத் தோன்றியுள்ள இந்தச் சூழலின் அடிப்படையை சர்வதேச நாடுகள் அதிகம் புரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால், மூன்று தசாப்தகால போருக்குள் இருந்து மீண்டுள்ள இலங்கை இன்னொரு போர்ச் சகதிக்குள் சிக்கிக் கௌ;வதை எந்தவொரு நாடும் விரும்பாது என்பது மட்டும் உறுதி.

அமெரிக்கத் தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு இது கைகொடுக்கும் என்று அரசாங்கம் கருதியது. எனவே தான், புலிகளைக் காட்டி ஜெனீவாவில் அரசாங்கம் தன்னைச் சமாளித்துக்கொள்ளப் பார்த்தது. ஆனால், அந்த முயற்சி வெற்றியளிக்காத நிலையில் இரண்டாவது கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இப்போது, அரசாங்கம் வீசியுள்ள தடை என்ற பாசக்கயிறு தனியே புலிகளின் எச்சங்களாக இருக்கும் சிலரையும் புலிகள் ஆதரவு அமைப்புகளையும் தான் குறிவைக்கிறது என்று கருதினால் அது தவறானது.

ஏனென்றால், இது ஒரு பரந்தளவிலான இராஜதந்திரத்துடன் கூடிய நகர்வு என்பதை மறந்து விடலாகாது.

கிட்டத்தட்ட கலாநிதி றொகான் குணரத்ன போன்றவர்கள் தான் இதன் மூளையாக செயற்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன.

புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் அமைப்புகளைத் தோற்கடிக்காதவரை புலிகளுக்கு எதிரான போரில் அரசாங்கம் நிரந்தரமான வெற்றியைப் பெற்றுவிட்டதாக கூறமுடியாது என்பது தான், கலாநிதி றொகான் குணரத்ன போன்றவர்களின் நிலைப்பாடு.

அதற்கமையவே, விடுதலைப் புலிகளை சர்வதேச அரங்கில் எவ்வாறு ஓரம்கட்டி ஒழித்துக் கட்டியதோ அதுபோலவே, புலம்பெயர் தமிழர் அமைப்புகளையும் ஒழித்துக் கட்டுவதற்கு அரசாங்கம் இந்த நகர்வில் இறங்கியுள்ளது.

இது இலங்கை அரசியலில் போர்க்கால மீறல்களுக்குப் பொறுப்புக்கூறும் விவகாரங்களில் புலம்பெயர் தமிழர்கள் செலுத்திவரும் செல்வாக்கை அடியோடு பெயர்த்தெடுப்பதற்கான முயற்சி என்பதில் சந்தேகமில்லை.

போரில் வெற்றி பெற்ற அரசாங்கத்தால், தமிழர்களுடன் ஒரு நிரந்தர இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை.இதற்குக் காரணம் புலம்பெயர் அமைப்புகளே என்ற கருத்து அரசாங்கத்திடம் ஊறிப்போயுள்ளது.

உள்நாட்டில் தமிழர் அரசியலில் புலம்பெயர் தமிழர்களின் செல்வாக்கும் அதிகமென்றே கூறலாம். அதற்கு அவர்களிடம் உள்ள நிதிவளமும் ஒருகாரணம். ஆனால், எல்லா வேளைகளிலும் உள்நாட்டிலுள்ள தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிப்பவர்களாக புலம்பெயர் தமிழர்கள் இருப்பதாக கூறமுடியாது.

குறிப்பாக வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் புலம்பெயர் தமிழர்கள் முழுமையாக ஒத்துப்போயினர் என்று கூற முடியாது. ஆனால், தேர்தல் முடிவு புலம்பெயர் தமிழர்களை கூட்டமைப்பை நோக்கி ஒன்றிணைத்து விட்டது.

உள்ளூர் தமிழ் அரசியல்வாதிகள் பலரும் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தி வந்தனர் என்பதை மறுக்க முடியாது.

ஏனென்றால், அவர்களின் அரசியல் எதிர்காலத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்கும் அரசியல் கொள்கைகளை வலுப்படுத்திக்கொள்வதற்கும் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் அந்த ஆதரவு அவர்களுக்கு அவசியமாகத் தேவையானது.

முக்கியமான 16 புலம்பெயர் தமிழர் அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளாக அரசாங்கத்தினால் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு தமிழ் அரசியல்வாதிகளால்  இந்த அமைப்புகளுடன் இனிமேல் எந்தத் தொடர்பையும் வைத்துக் கொள்ளவோ, அவற்றிடம் இருந்து உதவிகளைப் பெறவோ முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று அரச எதிர்ப்பு பிரசாரங்களில் ஈடுபடுவதையும் கூட இந்தத் தடை முடிவுக்கு கொண்டு வரும் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது.

அண்மைக் காலங்களில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி மாகாணசபை, உள்ளூராட்சி உறுப்பினர்களும் கூட ஜெனீவா போன்ற வெளிநாட்டுத் தலைநகரங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.

ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், மாகாணசபை உறுப்பினர்கள் அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம், வலிவடக்கு உள்ளூராட்சிசபை உறுப்பினர் சஜீவன் போன்றோர் அரசாங்கத்துக்கு எதிரான உரைகளை நிகழ்த்தியிருந்தனர். இதுவும் அரசாங்கத்துக்கு ஒரு தொந்தரவாக மாறியிருந்தது.

இத்தகைய எதிர்ப்புப் பிரசாரங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றால், இவர்களுக்குப் பின்புலமாக உள்ள புலம்பெயர் தமிழர்களுடன் கொண்டுள்ள உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்று அரசாங்கம் கருதியது.

அதாவது எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது தானாக அடங்கும் என்ற கோட்பாடு தான் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

போர்க்குற்றங்களுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறியாக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கும் இந்த புலம்பெயர் அமைப்புகள், அமெரிக்காவினது இப்போதைய தீர்மானத்தினால் திருப்தி கொள்ளவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்தக் கடும்போக்கு வாதமும் கூட அரசாங்கம் கடும் நடவடிக்கையில் இறங்குவதற்குக் காரணமாக இருந்தது.

என்னதான் அரசாங்கம் ஜெனீவா தீர்மானத்துக்கும் இந்தத் தடைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நியாயம் கூறினாலும், உண்மை என்னவோ அதுவாகவே உள்ளது.

ஜெனீவாவில் அரசாங்கம் பந்தாடப்படுவதற்கு முக்கிய காரணம் புலம்பெயர் தமிழர் அமைப்புகளே என்று அரசாங்கம் கருதுகிறது.

கனடா, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ளூர் அரசியலிலும் செல்வாக்குச் செலுத்தத்தக்கவர்களாக மாறத் தொடங்கியுள்ள புலம்பெயர் தமிழர்கள், தமது அரசியல் பலத்தை இலங்கை அரசுக்கு எதிராகத் திருப்பி விடத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக இலங்கை மீதான பொறுப்புக்கூறல் அழுத்தங்கள் தீவிரமடைந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.

குறிப்பாக ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை வெற்றி பெற வைப்பதற்காக தடைசெய்யப்பட்ட இந்தப் புலம்பெயர் அமைப்புகள் பலவும் வெளிப்படையான இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட்டன.

இவையெல்லாவற்றையும் மனதிற்கொண்டே இந்தத் தடையின் மூலமாக அரசாங்கம் ஒட்டுமொத்த புலம்பெயர் அமைப்புகளையும் நசுக்க முனைகிறது.

இதற்குள் தீவிரப்போக்குள்ள அமைப்புகளும் உள்ளன. மென்போக்குள்ள அமைப்புகளும் உள்ளன. இது புலம்பெயர் தமிழர்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நிரந்தரப் பகை ஒன்று மூளுவதற்கான ஏதுநிலையை உருவாக்கியுள்ளது. எப்போதும் ஒரு நடவடிக்கையின்போது ஒரு இடைவெளி விடப்படுவதுண்டு. ஆனால், இங்கு அந்த வெளியை விட்டு வைக்க அரசாங்கம் விரும்பவில்லை.

கடும்போக்கு, மென்போக்கு என்று பாராமல் எல்லா புலம்பெயர் அமைப்புகளையுமே பயங்கரவாத அமைப்புகளாக பட்டியலிட்டுள்ளது. இதனால், இந்த அமைப்புகள் வேறு பெயர்களில் இலங்கை அரசுக்கு எதிரான பரப்புரைகளை இன்னும் தீவிரப்படுத்த முனையலாம்.

ஆனால், அரசாங்கம் எதிர்பார்ப்பது என்னவென்றால் தடைசெய்யப்பட்ட அமைப்புகள் தமிழர்களுக்காக எதைக் கூறினாலும், அதனை பயங்கரவாத அமைப்புகளின் கருத்தாக வெளிப்படுத்தி முடக்கி விடலாம் என்பதைத் தான்.

எவ்வாறாயினும், புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு நடத்தாமல் ஒரு நிரந்தர அமைதியை உருவாக்க முடியாது என்ற கருத்து இலங்கை அரசாங்கத்துக்குள்ளே கூட இருக்கிறது.

இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு  ஒன்று அண்மையில்  புலம்பெயர் தமிழர்களுடன் சென்று பேச்சு நடத்தியிருந்தது.
அரசாங்கமும் கூட பின் கதவால் அவர்களுடன் தொடர்பைப் பேணவே முயன்றது.

ஆனால், ஜெனீவாவை நோக்கிய புலம்பெயர் தமிழர்களின் போராட்டத்தினால் இலங்கை அரசாங்கம் அங்கு எதிர்கொண்ட நெருக்கடிகள் இத்தகைய முடிவுக்கு இட்டுச் சென்றுள்ளன.

இந்தத் தடையின் மூலம் அரசாங்கம், உள்ளூரில் உள்ள தமிழர்களை தனித்து விடப்பட்ட நிலைக்கு கொண்டு வரலாம் என்றும் ஒரு தீர்வுக்கு இணங்க வைக்க முடியும் என்றும் நம்பலாம்.

ஆனால், புலம்பெயர் தமிழர்களுக்கும் இங்குள்ள தமிழர்களுக்கும் உள்ள தொடர்புகளை அரசாங்கத்தினால் முற்றாக அறுக்க முடியாது.
அவர்களின் குடும்ப உறவுகள் இங்கு தான் உள்ளனர். அவர்களின் சொத்துகள் இன்னமும் இங்கேயே உள்ளன.

இந்தத் தடையின் மூலம் இந்த உறவுகளை பணயம் வைத்து தமக்கு எதிரான வெளிநாட்டு அழுத்தங்களின் தீவிரத்தை குறைக்க முனைகிறது அரசாங்கம். ஆனால், இது எந்தளவுக்குப் பலனளிக்கும் என்று கூற முடியாது.

ஏனென்றால், அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு சர்வதேச நாடுகள் பலவற்றையும் நெருக்கடிக்குள் தள்ளும் முடிவாகும்.

இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ள ஐ.நா. தீர்மானத்தின் படி தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எல்லா நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும்.

அவ்வாறாயின், இந்தப் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் செயற்படும் மேற்கு நாடுகளும் கூட இதற்கு ஒத்துழைக்க வேண்டியிருக்கும்.
ஆனால், இலங்கை அரசின் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ளும் அந்த நாடுகள் அதற்கு ஒத்துழைக்குமா என்ற கேள்வி உள்ளது,

எவ்வாறாயினும், அரசாங்கத்தினது இந்தத் தடை உத்தரவு புலம்பெயர் தமிழர்களின் அரசியல் பலத்தை சிதைக்கும் ஒரு பெருந்திட்டம் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், அந்த முயற்சியில அரசாங்கம் எந்தளவுக்கு வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X