2025 மே 19, திங்கட்கிழமை

தோலுரிக்கப்படும் இந்தியா

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள்  மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் எல்லாமே இந்தியாவை சர்ச்சைக்குள் மாட்டி விடுபவையாகவே இருக்கின்றன.

கடந்த இரண்டு வருடங்களைப் போலல்லாது, இந்தமுறை மாறுபட்ட முடிவை எடுத்திருந்தபோதிலும், சர்ச்சையிலிருந்து இந்தியாவினால் விடுபட முடியாதுள்ளது.

இந்தியா ஏன் இந்த முடிவை எடுத்தது?  இந்தியாவின் சார்பில் இந்த முடிவை எடுத்தது யார்? என்ற விவாதங்கள் இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

புதுடெல்லியை கடந்த 10 வருடங்களாக ஆட்சி செய்த காங்கிரஸ் அரசாங்கத்தின் அந்திம காலத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவாக இது இருப்பதால், இது குறித்த விவாதங்கள் அதிகளவில் நடப்பது தவிர்க்க முடியாதது. ஏனென்றால், பெரும்பாலும் ஆட்சி மாற்றம் நிகழப்போவது உறுதியாகிவிட்டதால், இந்தியாவின் இந்த முடிவு அடுத்து வரப்போகின்ற அரசாங்கத்தையும் பாதிக்கும் ஒன்றாக இருக்கும்.

எனவே, அடுத்து அமையப்போகும் அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தவல்ல இந்த முடிவு குறித்து ஊடகங்களும் இராஜதந்திரிகளும் அரசியல் தலைமைகளும் சற்றுக் கூடுதலாகவே கவனம் செலுத்துவதைக் காணமுடிகிறது.

இந்தப் பின்னணியில் இந்தியாவினது முடிவு குறித்து எழுகின்ற விவாதங்களும் விமர்சனங்களும் இந்திய வெளிவிவகார அமைச்சை சற்றுக் குழப்பத்துக்குள்ளாக்கி விட்டுள்ளது போலவே தோன்றுகிறது. ஏனென்றால், கடந்த இரண்டு வருடங்களாக இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்த இந்தியா, திடீரென இம்முறை நடுநிலை வகித்தது சர்ச்சையாகவே பார்க்கப்படுகிறது.

எனவே, இந்திய வெளிவிவகார அமைச்சு வழக்கத்தை விடவும் கூடுதலாகவே தம்மை நியாயப்படுத்தி விளக்கமளிக்க முனைந்துள்ளதைக் காணலாம். ஜெனீவா தீர்மானத்துக்குப் பின்னதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு பல சந்தர்ப்பங்களில் தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்த முனைந்துள்ளது.

ஜெனீவாவில் இந்தியப் பிரதிநிதி திலிப் சின்ஹா வெளியிட்ட அறிக்கை, அதற்கடுத்து புதுடெல்லியில் இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங் வெளியிட்ட அறிக்கை, அதற்கடுத்து அவர் பி.ரி.ஐக்கு வழங்கிய பேட்டி, கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் யஸ்வந்த்குமார் சின்ஹா வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கு நடத்திய செய்தியாளர் சந்திப்பு  என்று ஜெனீவா நிலைப்பாடு குறித்து நியாயப்படுத்த பல்வேறு முயற்சிகளையும் இந்தியா மேற்கொண்டுள்ளது.

இதில் இன்னொரு விவகாரமும் கவனிக்கத்தக்கது.

அதாவது ஜெனீவா தீர்மானம் குறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், நாராயணசாமி, சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் தவிர இந்திய மத்திய அரசின் மூத்த அமைச்சர்களோ, இந்தியப் பிரதமரோ, காங்கிரஸ் தலைவர்களோ எந்தக் கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை.

இது தேவையற்ற சர்ச்சையை தேர்தல் நேரத்தில் வளர்த்துக்கொள்வதை தவிர்ப்பதற்கான உத்தியாக இருக்கலாம். தற்போதைய நிலையில் ஜெனீவா நிலைப்பாடு குறித்து மத்திய அமைச்சர்களோ, காங்கிரஸ் தலைமையோ கொடுக்கக்கூடிய எந்தவொரு விளக்கமும் விபரீதமான விளைவுகளுக்கு வித்திடும் வாய்ப்புகள் உள்ளன.

ஏனென்றால், இந்தியாவினது முடிவு சர்ச்சைக்குரியதானதாகவும் குழப்பங்கள் நிறைந்ததாகவும் உள்ளது. தெளிவான விதத்தில் இந்தியாவினது நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டிருந்தால், இந்தச் சர்ச்சை வலுப்பெற்றிருக்காது.

கடந்த வருடங்களில் கூட இந்தியா தீர்மானத்தை ஆதரித்திருந்தாலும், அந்த தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்வதிலும் முக்கிய பங்காற்றியதான குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன.

அந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என்று இந்திய அரசு எத்தனையோ முறை மறுத்திருந்தாலும், அது கருத்தில் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், மீண்டும் இந்தமுறை தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் தடுப்பதற்கும் அதனை நீர்த்துப்போகச் செய்வதற்கும் பாகிஸ்தானுடன் கூட வெளிப்படையாக கைகோர்த்து நின்றது இந்தியா.

எனவே, கடந்த முறைகளில் தீர்மானங்களைப் பலவீனப்படுத்துவதற்கு இந்தியா எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்று கூறியதும் உண்மைதானா என்ற கேள்வியை எழுப்ப வைத்துள்ளது.

இந்தப் பின்னணியில் எதற்காக இந்தியா இந்தமுறை நடுநிலை வகிக்கும் முடிவை எடுத்தது என்ற கேள்விக்கு சரியான, உறுதியான ஒரே பதில் இந்தியாவிடமிருந்து வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அதாவது யாருடைய நலனுக்காக இந்தியா இந்த முடிவை எடுத்தது என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை.

ஜெனீவா தீர்மானத்துக்குப் பின்னதாக, இந்தியத் தரப்பில் கருத்து வெளியிட்டவர்கள் பலரும் பலவித காரணங்களைக் கூறியுள்ளனர்.

இந்தியாவினது தேசிய நலன் கருதி என்று, இலங்கையில் உள்ள தமிழர்களினது நலன் கருதி என்று, தமிழ்நாட்டு மீனவர்களின் நலன் கருதி என்று, சீனத் தலையீட்டை கட்டுப்படுத்துவதற்காக என்று, இலங்கையின் மீது அளவற்ற தலையீட்டைச் செய்வதால் என்று இந்தியாவினது நிலைப்பாட்டுக்கான காரணங்கள் வேறுபட்டுள்ளன.

எவ்வாறாயினும், ஒன்றை மட்டும் விளங்கிக்கொள்ள முடிகிறது. அது என்னவென்றால், எல்லாத் தரப்பினரையும் திருப்பதிப்படுத்த இந்தியா முனைகிறது என்பதே அது. அதனால் தான், அவரவருக்கேற்ப காரணத்தை கூறிச் சமாளிக்க முனைகிறது.

இந்தியாவை பொறுத்தவரையில், இலங்கையின் உள்விவகாரங்களுக்குள் வெளிநாட்டுத் தலையீடுகள் இருக்கக்கூடாது என்பதே அதன் ஒரே நிலைப்பாடாக உள்ளது. அதனால், சர்வதேச விசாரணை என்ற விடயத்தை அதனால் ஏற்க முடியாதுள்ளது. இது தான் முதலும் இறுதியுமான இந்தியாவினது முடிவுக்கான காரணம்.

மற்றெல்லாமே துணைக் காரணங்களாகவோ அல்லது எல்லாத் தரப்புகளையும் திருப்திப்படுத்துவதற்காக கூறப்பட்ட காரணங்களாகவோ இருக்கலாம்.

எதற்காக சர்வதேச விசாரணை என்பதை இந்தியா எதிர்க்கிறது என்ற பார்த்தால், அது இலங்கையினது நலனைக் காப்பாற்றுவதற்கான முயற்சியாகவே வெளித் தெரியலாம்.

ஆனால், இந்தியா சர்வதேச விசாரணை முயற்சிகளை எப்போதுமே எதிர்த்து வந்ததற்கு இந்தியாவினது தேசிய நலனே பிரதான காரணம்.
சர்வதேச விசாரணைக்கு இந்தியா ஆதரவளித்தால், தானும் ஒரு கட்டத்தில் பொறியில் சிக்கிக்கொள்ள நேரிடும் என்ற கலக்கம் இந்தியாவுக்கு உள்ளது. காஷ்மீரில் இந்தியாவினது மனித உரிமை மீறல்கள் குறித்து எப்போதும் பாகிஸ்தான் பிரச்சினை எழுப்பி வந்துள்ளது.

1994ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச்சபையில் இந்தியாவின் மனித உரிமை மீறல்களுக்கு  எதிரான தீர்மானத்தை பாகிஸ்தான் கொண்டுவந்தது. அது இந்தியாவினது இறைமைக்குப் பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்டது.

அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அட்டல் பிகாரி வாஜ்பாய், இப்போதைய இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் இணைந்து, ஐ.நா. விவாதத்தில் பங்கேற்று, இந்தியாவை நெருக்கடியில் இருந்து பாதுகாத்திருந்தார்.

அதுபோன்ற நிலை வரக்கூடாது என்பதற்காகவே இந்தியா இத்தகைய விவகாரங்களில் குறிப்பாக மனித உரிமை மீறல் விவகாரங்களைச் சுட்டிக்காட்டி கொண்டுவரப்படும் தீர்மானங்களை ஐ.நா.வில் ஆதரிப்பதில்லை. அது இந்தியாவின் ஒரு கொள்கையாகவே கடைப்பிடிக்கப்படுகிறது.
அதையும் மீறித்தான், உள்நாட்டு நெருக்குவாரங்களிலிருந்து தப்பிப்பதற்காக இலங்கைக்கு எதிராக 2012ஆம் 2013ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை இந்தியா ஆதரித்திருந்தது.

இந்தமுறை அத்தகைய நேரடி அரசியல் அழுத்தங்கள் இந்திய அரசுக்கு இருக்கவில்லை. அதுமட்டுமன்றி, ஜெனீவா தீர்மானத்தினால்,  காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியினால், தமிழ்நாட்டில் ஆதாயம் தேடிக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கவில்லை. எனவே, முடிவெடுக்கும் விடயத்தில் மத்திய அரசு தலையீடு செய்ய முனையவில்லை.

அது இந்திய வெளிவிவகார அமைச்சின் கதவுகளை அகலத் திறந்துவிட்டது. அதன் வழியாகவே புதுடெல்லியினது முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால், இப்போது இந்த முடிவை எடுத்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளதுடன், ஒருவரையொருவர் சாட்டிக்கொண்டு ஒதுங்க முனைவதையும் காணமுடிகிறது.

ஜெனீவா தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும் என்பதே தமது கருத்து என்று கூறியிருந்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், இது அமைச்சரவையிலோ, காங்கிரஸ் கட்சி செயற்குழு மட்டத்திலோ எடுக்கப்பட்ட முடிவல்ல என்றும் வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவே இது என்றும் கூறியிருந்தார்.

ஆனால், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் சுஜாதா சிங், பி.ரி.ஐக்கு அளித்திருந்த பேட்டியில் வெளிநாட்டுக்கொள்கை விவகாரங்களில் அரசியல் தலைமையின் முடிவுகளின் அடிப்படையிலேயே அதிகாரிகள் முடிவுகளை எடுப்பதாகவும் அதுபோலவே இதுவும் அரசியல் மட்டத்தின் முடிவே என்றும் குறிப்பிட்டிருந்தார்.

வெளிப்படையாக கூறுவதானால், நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் கருத்தை நிராகரித்தார் என்று கூறலாம்.

இதற்கிடையே ஜெனீவாவில் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடப்பதற்கு முதல் நாள் அதாவது, கடந்த மாதம் 26ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் தம்முடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, இம்முறை இந்தியா வேறுபட்ட அணுகுமுறையை கடைப்பிடிக்கவுள்ளதாக கூறியதாக இலங்கை  வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அலரி மாளிகையில் நடந்த உயர்மட்டக் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.

அதாவது, அதிகாரிகள் மட்டத்திலேயே இம்முறை முடிவெடுக்கப்படும் என்று சல்மான் குர்ஷித் கூறியதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.
இது இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங்கினது கருத்துக்கு முரணானதாகவே உள்ளது.

இந்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கருத்தும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் கருத்தும் கிட்டத்தட்ட ஒத்துப்போகின்றன.
அவ்வாறாயின், இந்திய வெளிவிவகார அமைச்சு மட்டும் எதற்காக இதனை அரசியல் முடிவாக காட்ட முனைகிறது என்ற கேள்வி எழுகிறது.
ஒருவேளை இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு இந்த முடிவை எடுப்பதற்கு பச்சைக்கொடி காண்பித்து விட்டு, இந்திய அரசியல் தலைமை ஒதுங்கியிருந்திருக்கலாம்.

எவ்வாறாயினும், இந்த முடிவை திரும்பத் திரும்ப நியாயப்படுத்த முனைகிற எந்தத் தரப்புமே, இந்த முடிவுக்குத் தாமே பொறுப்பு என்று கூறத் தயாராக இல்லை.

ஏனென்றால், இந்த முடிவின் தாக்கம் ஜெனீவா கூட்டத்தொடருடன் முடிந்து போகக்கூடிய ஒன்றல்ல.அதையும் தாண்டி இலங்கை விவகாரத்தில் இந்தியாவினது உறவு விடயத்தில், இதன் தாக்கம் தொடர்ந்து செல்லும் வாய்ப்புகள் உள்ளன.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் மூலம் சர்வதேச விசாரணை  நடத்தப்படவுள்ள நிலையில், இந்தியாவின் நிலை குறித்த கேள்விகள் தொடர்ச்சியாக எழுவதற்கு வாய்ப்புகளுண்டு. அதிலும் உள்ளக விசாரணையை இந்தியா வலியுறுத்த ஆரம்பித்துள்ளது.

அதாவது, சர்வதேச விசாரணைகளுக்குப் பதிலாக இலங்கை அரசின் உள்ளக விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் உதவ வேண்டும் என்று இந்தியத் தூதுவர் யஸ்வந்த் குமார் சின்கா கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

இங்கு இந்தியாவினது பரிதாப நிலை என்னவென்றால், இதுவரை இலங்கை அரசாங்கம் உள்ளக விசாரணைகளை நடத்தத் தயாராகவில்லை.
இந்த நிலையில், சர்வதேச விசாரணைக்கு எதிரான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்திவிட்ட இந்தியா, தமிழர்களின் நலன் கருதியே அந்த முடிவை எடுத்ததாகக் கூறிய இந்தியா, எவ்வாறு தமிழர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கப் போகிறது என்பது கேள்வியாக உள்ளது.
சர்வதேச விசாரணைப் பொறிமுறையை நிராகரிப்பதற்காக உள்ளக விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்த முனைந்துள்ள இந்தியா, அந்த உள்ளக விசாரணைப் பொறிமுறையின் உருவாக்கத்தில் எவ்வாறு பங்களிக்கப் போகிறது என்பது சிக்கலான விடயம்.

ஏனென்றால், ஏற்கெனவே இந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளே இலங்கை அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படாத நிலையில், இதனை  நடைமுறைப்படுத்துவது இந்தியாவினால் முடியுமா என்று தெரியவில்லை.

அதைவிட, உள்ளக விசாரணைப் பொறிமுறை ஒன்றை அமைக்க இலங்கையை இணங்கவைக்க முடியுமென்றால், அதை ஏன் கடந்த இரண்டு வருடங்களில் செய்யவில்லை என்ற கேள்வியையும் இந்தியா எதிர்நோக்க வேண்டி வரலாம்.

இந்த வகையில் பார்க்கும்போது ஜெனீவா என்பது இலங்கைக்கு கொடுக்கும் நெருக்குவாரங்களை விட, இந்தியாவுக்கு கொடுக்கின்ற நெருக்குவாரங்களே அதிகம் போலத் தெரிகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X