2025 மே 19, திங்கட்கிழமை

புலி வேட்டையின் ஓட்டைகள்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கிலும் கிழக்கிலும் கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக நீடித்த புலிவேட்டை, மூன்று பேரின் மரணங்களுடன்  முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மார்ச் மாத தொடக்கத்தில் பளைப் பகுதியில் விநியோகிக்கப்பட்டதாக கூறப்படும் துண்டுப்பிரசுரங்களுடன் தான் இந்தப் புலிவேட்டை ஆரம்பிக்கப்பட்டது.

முதலில் கோபி என்ற செல்வநாயகம் கஜீபனைத் தேடுவதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அறிவித்தது.  அடுத்தடுத்த நாட்களிலேயே கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் அவரைச் சுற்றிவளைத்தபோது, பொலிஸ் அதிகாரி ஒருவரைச் சுட்டுவிட்டு கோபி தப்பிச் சென்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக ஜெயக்குமாரி என்ற பெண்ணும் அவரது மகள் விபூசிகாவும் பிடிக்கப்பட்டனர். இதனுடன் தேடுதல் வேட்டைகளும் சுற்றிவளைப்புகளும் இராணுவக் கெடுபிடிகளும் ஆரம்பித்தன.

அத்துடன் கோபியுடன், அப்பன் என்ற நவரட்ணம் நவநீதனும் தேடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், தேவியன் எனப்படும் சுந்தரலிங்கம் கஜீபன் என்பவரையும் தேடுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த மூவரினதும் புகைப்படங்களுடனான சுவரொட்டிகளும் துண்டுப்பிரசுரங்களும் ஆயிரக்கணக்கில் வெளியிடப்பட்டன. ஒவ்வொருவரினது தலைக்கும் இலட்சக்கணக்கான ரூபா விலையும் மதிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக நடந்த இந்தத் தேடுதல் வேட்டைகள், சோதனைகள், விசாரணைகளின் விளைவாக 10 பெண்கள் உள்ளிட்ட 65 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் பலரும் சந்தேக நபர்களின் தாயார் அல்லது மனைவி அல்லது வேறு உறவினர்களாக இருந்தனர்.

இவற்றின் மூலம் கிட்டத்தட்ட வடக்கு, கிழக்கில் ஐந்து வருடங்களுக்கு முந்திய அச்சம் நிறைந்த ஒரு போர்ச் சூழ்நிலை மீளவும் உருவாக்கப்பட்டது.

கடந்த 11ஆம் திகதி நெடுங்கேணிக்கு தெற்கே சுமார் 15 கிலோமீற்றர் தொலைவில் உள்ள வெடிவைத்தகல்லு காட்டுப்பகுதியில்  தேடப்படுவதாக அறிவிக்கப்பட்ட கோபி, அப்பன், தேவியன் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், இந்த வேட்டை முடித்துவைக்கப்பட்டது.

இந்த ஒரு மாதகாலத்தில் நடந்த எல்லாச் சம்பவங்களுமே நிறையக் கேள்விகளையும் சந்தேகங்களையும் மக்களின் மனங்களில் எழுப்பியிருக்கிறது.

ஏனென்றால், எல்லாமே சர்ச்சைக்குரிய வகையில் தான் நடந்து முடிந்திருக்கின்றன. பல சம்பவங்கள் இடம்பெற்ற சூழலும் அவற்றின் பின்னால் உள்ள மர்மங்களை துலக்க அரச தரப்போ, படைத் தரப்போ முன்வராததும் அவை நியாயப்படுத்தப்பட்ட விதமும் இந்தச் சர்ச்சைகளுக்கும் சந்தேகங்களுக்கும் காரணமாகியுள்ளன.

இந்தப் புலி வேட்டையின் ஊடாக அரசாங்கம், விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைய முனைகிறார்கள் என்ற செய்தியை உள்நாட்டிலும் வெளியுலகிலும் பரப்பியது.

இறுதியில் அந்த முயற்சியை தாம் முறியடித்து விட்டதாகவும் இனியொருபோதும் புலிகளை ஒருங்கிணைய விடமாட்டோம் என்றும் அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

மீண்டும் புலிகள் ஒருங்கிணைய முயன்றனர் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பில் ஏகப்பட்ட கேள்விகள் இருக்கின்ற நிலையில், இதனை வைத்து அரசாங்கம் தனக்குத் தேவையான பல காரியங்களை நிகழ்த்தியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இந்தப் புலி வேட்டையை வைத்து அரசாங்கம், வடக்கில் படையினர் நிலைகொண்டிருப்பதை ஜெனீவாவில்  நியாயப்படுத்தியுள்ளது. புலிகள் மீள ஒருங்கிணைய முனைகிறார்கள் என்ற சாக்கில் வெளிநாடுகளில் இயங்கும் அமைப்புகளையும் தனி நபர்களையும் தடைசெய்துள்ளது.

தமது சந்தேக வளையத்துக்குள் இருந்தவர்களையெல்லாம் பிடித்து தடுத்துவைத்துள்ளது அல்லது விசாரணைக்குட்படுத்தியுள்ளது. மீண்டும் புலிகள் என்ற பூச்சாண்டியை காட்டி தெற்கிலுள்ள மக்களையும் திசை திருப்பி தேர்தலில் வாக்குகளைக் கவர முயன்றது.

மீளவும் வடக்கிலுள்ள மக்களை அச்சுறுத்தி அடக்கி வைப்பதில் வெற்றி கண்டுள்ளது. புலிகள் இயக்கத்தையோ அல்லது அது போன்ற ஒரு அமைப்பையோ உருவாக்க முனைந்தால் இது தான் கதி என்ற தெளிவான செய்தியை எடுத்துக் கூறியுள்ளது. இப்படியாகப் பல காரியங்களை அரசாங்கம் சாதித்துள்ளது.

அதுவும், ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும்போதே, இவற்றையெல்லாம் அரசாங்கம் செய்து முடித்திருக்கிறது.

இதன் மூலம் ஜெனீவாவில் கொண்டுவரப்படும் தீர்மானங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை என்ற செய்தியையும் இலங்கை வெளிப்படுத்தியதாகவே பலரும் கருத்து வெளிப்படுத்தியுள்ளனர்.

அதாவது ஜெனீவாவில் கொண்டுவரப்படும் தீர்மானங்கள், இலங்கையை ஜனநாயக வழிக்குக் கொண்டுவரும் என்ற மேற்குலகின் நம்பிக்கைக்கு முரணாக நடந்துகொண்டதன் மூலம், தாம் புறநடையாகவே செயற்பட விரும்புகிறது என்ற தகவலையும் அரசாங்கம் எடுத்துக் கூறியுள்ளது.

மிகவும் முக்கியமான இந்தக் காலகட்டத்தில் அரசாங்கம் நடத்திய புலி வேட்டைக்கு நெடுங்கேணிக் காட்டில் முடிவு கட்டப்பட்டுள்ளது. இந்தப் புலிவேட்டை முடித்து வைக்கப்பட்ட சூழலும் அது நடந்த விதமும் பலத்த கேள்விகளைத் தோற்றுவித்துள்ளன.

நெடுங்கேணிக்கு தெற்கே 15 கிலோமீற்றர் தொலைவில் சேமமடுக்குளம் நோக்கிச் செல்லும் வீதியில் அமைந்துள்ள வெடிவைத்தகல்லு  என்ற இடத்தில் தான் இந்தப் புலி வேட்டையின் உச்சக்கட்டம் இடம்பெற்றது.

கடந்த 11ஆம் திகதி அதிகாலையில் பொதுமக்கள் எவரும் வசிக்காத இந்த இடத்திலுள்ள அடர்ந்த காட்டுக்குள் கோபி, அப்பன், தேவியன் ஆகிய மூவரும் படையினரின் சுற்றிவளைப்பிலிருந்து தப்பிச்செல்ல முயன்றபோது சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதற்கு முதல் நாள் 10ஆம் திகதி காட்டுப்பகுதியில் உணவும் மருந்துப்பொருட்களும் உடைகளும் அந்தக் காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே அந்த தேடுதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு கூறியது.

சுமார் 3,000 படையினர் அந்தக் காட்டுப்பகுதியைச் சுற்றிவளைத்தபோது, அதிகாலையில் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுடன், லான்ஸ் கோப்ரல் கமல்ராஜா என்ற ஒரு தமிழ் இராணுவப் புலனாய்வு அதிகாரியின் சடலமும் பதவியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

முதலில் கோபி உள்ளிட்டோரைத் தேடும்போது நடந்த மோதலிலேயே அவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், பின்னர் பாதுகாப்பு அமைச்சு, அவர் வவுனியா வடக்கில் வேறோரு பயிற்சியின்போது தவறுதலாக மற்றொரு சிப்பாயின் துப்பாக்கி வேட்டுக்கு இலக்காகியே அவர் மரணமானதாக கூறியது.

எவ்வாறாயினும், வெலிஓயா என இப்போது அழைக்கப்படும் மணலாற்றுக் காட்டுப்பகுதியில் நடந்த இந்த நான்கு உயிர்ப் பலிகளும் ஒன்றுடனொன்று தொடர்புபட்டதாகவே சந்தேகிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக சுதந்திரமாக செய்திகள் சேகரிக்க ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை.

பதவியா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நால்வரினது உடல்களும் அநுராதபுரத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கேயே பிரேத பரிசோதனைகள், மரண விசாரணைகள் எல்லாம் நடத்தப்பட்டு இரகசியமாகவே அவை அடக்கமும் செய்யப்பட்டன.

நெடுங்கேணிக் காட்டில் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட படையினர் பற்றிய படங்களை வெளியிட்ட படைத்தரப்பு, கொல்லப்பட்ட எவரது படத்தையும் வெளியிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

அது மட்டுமன்றி, சித்திரைப் புத்தாண்டுக்காக பிரதான அச்சு ஊடகங்கள் எல்லாமே ஞாயிற்றுக்கிழமைக்கான வெளியீடுகளை வெள்ளியன்றே அச்சிட்டுவிட்டு விடுமுறைக்காக மூடப்படும் சூழலில் தான் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றன.

இதன் மூலம் அச்சு ஊடகங்கள் இந்தச் சம்பவங்கள் குறித்து கேள்விகளை எழுப்பவோ, சந்தேகங்களை கிளப்பவோ அல்லது சில இரகசியங்களை அவிழ்த்து விடவோ முடியாத நிலையிருந்தது.

இவையெல்லாவற்றையும் ஒருங்கிணைத்துப் பார்த்தால், பல விடயங்கள் அம்பலத்துக்கு வருவதை அரசாங்கமும் படைத்தரப்பும் விரும்பவில்லை என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.

கோபியின் உடலை அவரது மனைவி, தாய் அடையாளம் காட்டியதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டபோதும், ஏனைய இருவரினதும் உடல்களை யார் அடையாளம் காட்டினர் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.

எதற்காக அரசாங்கம் அவசர அவசரமாக இவர்களின் உடல்களை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தது என்பதும் சந்தேகத்துடனேயே நோக்கப்படுகிறது.

அது மட்டுமன்றி, புலிகள் இயக்கத்தை மீள ஆரம்பிக்க முயன்றதாக கூறப்பட்ட மூவரும், தம்மைப் படையினர் தேடுகிறார்கள் என்று தெரிந்ததும், வெடிவைத்தகல்லு காட்டுக்குள் போய் ஒளிந்துகொள்ள வேண்டிய தேவை என்ன என்ற கேள்வியும் உள்ளது.

குடிமனைகளை அண்டிய காடுகளில் ஒளிந்திருந்தால் தான், அவர்களுக்குத் தேவையான எதையும் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், குடிமனைகளற்ற காட்டில் அவர்களுக்கு எங்கிருந்து உணவு கிடைக்கும் என்பதைவிட, அதன் மூலம் அவர்கள் எதையுமே சாதிக்கவும் முடியாது.

மேலும், கொல்லப்பட்ட மூவரும் புலிகள் இயக்கத்தை மீள ஒருங்கிணைக்க முயன்றதாக கூறப்பட்டாலும், அவர்கள் தப்பிச்செல்ல முயன்றபோது ஏன் கைதுசெய்ய முயற்சிக்கவில்லை?

அவர்கள் படையினருடன் சண்டையிட்டுக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றதாகத் தெரியவில்லை.

ஏனென்றால், கொல்லப்பட்ட பின்னர் அவர்களிடமிருந்து ஒரேயோரு கைத்துப்பாக்கியையும் இரண்டு கைக்குண்டுகளையும் மீட்டதாகத் தான் படைத்தரப்பு கூறியுள்ளது. 3,000 படையினருக்கு முன்பாக இந்த ஆயுதங்களால் எதையும் சாதிக்க முடியாது. நிச்சயமாக படையினர் நினைத்திருந்தால், மூவரையும் உயிருடன் பிடித்திருக்கலாம்.

ஆனால், ஒரேயொரு துப்பாக்கியுடன் இருந்தவர்களை சுட்டுக்கொன்றது ஏன் என்ற கேள்வியும் உள்ளது.

உயிருடன் பிடித்திருந்தால் தான், புலிகள் இயக்கத்தை மீள ஆரம்பிக்க உதவியவர்கள் பற்றிய எல்லா விபரங்களையும் படைத்தரப்பினால் திரட்ட முடிந்திருக்கும்.

அத்தகைய வாய்ப்பைக் கெடுக்கும் வகையில் மூவரையும் சுட்டுக்கொன்று விட்டதாக மார்தட்டிக்கொள்வது எந்த வகையிலும் கிளர்ச்சி அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் ஒரு இராணுவத்தினது புத்திசாலித்தனமான அணுகுமுறையாக இருக்க முடியாது.

அதாவது இன்னொரு போராட்டத்தின் வேர்களை அழிக்க அரசாங்கம் நினைத்திருக்குமேயானால், இந்தக் கொலைகள் நிகழ்ந்திராது.
அது மட்டுமன்றி, இந்தக் கொலைகள் நடந்த சமநேரத்திலேயே, கிட்டத்தட்ட அதே பகுதியில் இராணுவ அதிகாரி ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதும் சந்தேகங்களை வலுப்படுத்துகிறது.

அதுவும், சாதாரண படையினர் என்றால் பரவாயில்லை. இராணுவப் புலனாய்வு அதிகாரியாக இவர் இருந்தது தான் இன்னும் அதிக குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இந்தப் புலிவேட்டை தொடங்கப்பட்டபோதே, இது வெறும் புரளி என்றும் நாடகம் என்றும் ஊடகங்கள் பலவும் செய்திகளை வெளியிட்டன. அதாவது, அரசாங்கம் வடக்கில் படையினரை நிறுத்தி வைத்திருப்பதை நியாயப்படுத்திக்கொள்வதற்காகவே இவ்வாறு நாடகமாடுவதாக விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

அத்தகைய விமர்சனங்களின் மீதுள்ள நியாயங்களை சற்றும் புறமொதுக்கித் தள்ளிவிட முடியாது. ஏனென்றால், இந்தப் புலி வேட்டையில் அந்தளவுக்கு ஓட்டைகள் இருந்தன.

இது புலிகளின் மீண்டெழும் முயற்சி என்றும் அதை அடக்கிவிட்டதாகவும் அரசாங்கம் கூறிக்கொண்டாலும், அதனை எந்தளவு மக்கள் நம்புகிறார்கள் என்பது கேள்வி தான்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அரசாங்கத்தின் இந்தக் கதை தம் மீதான அழுத்தங்களை அதிகரிப்பதற்கான உத்தி என்றே கருதுவதாகத் தெரிகிறது.

அந்த வகையில் இந்தப் புலி வேட்டை தமிழ் மக்களுக்கு அச்சத்தைக் கொடுத்துள்ளது மட்டுமன்றி, அரசாங்கம் மற்றும் படையினரின் நடவடிக்கைகள் மீது அவநம்பிக்கை கொள்ளவும் காரணமாகியுள்ளது.

இந்தப் புலி வேட்டையை தொடர்ந்து நடத்துவது, வடக்கின் அமைதியை முற்றாகவே சீர்குலைத்து விடும் ஆபத்தையும் அரசாங்கம் உணர்ந்தேயிருந்தது.

அதனால், புலி வேட்டையை நெடுங்காலத்துக்கு நீடிக்க முடியாது என்பது அரசாங்கத்துக்கு தெரியும். அதனால் தான் மூவரையும் சுட்டுக்கொன்றதுடன், புலி வேட்டைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.

இனிப் பெரியளவில் தேடுதல்களையோ, சுற்றிவளைப்புகளையோ படையினர் நடத்த முனையமாட்டார்கள். ஆனால், இராணுவத்தின் இருப்பில் எந்த மாற்றமும் இருக்காது.

இனிமேல் வடக்கிலிருந்து படையினர் அகற்றப்பட வாய்ப்பில்லை என்பதை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவினது கருத்தும் உறுதிப்படுத்துகிறது.
உண்மையில் புலிகள் இயக்கத்துக்கு மீளுயிர் கொடுக்கும் முயற்சிகள் நடந்ததா என்பதை உறுதிப்படுத்த அந்த மூவரும் உயிரோடு இல்லை.

எனவே, அரசாங்கத்தின் கதையை நம்ப முடியாதவர்களும் நம்பித்தான் ஆகவேண்டிய கட்டாயம் உள்ளது.

அதேவேளை, நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு புலி வேட்டை தடையை உருவாக்கும் என்பதால், அது சர்வதேச அளவில் சிக்கலைக் கொடுக்கும் என்பதால், அதை ஆரம்பித்து வைத்தவர்களே அதற்கும் முடிவு கட்டிவிட்டனர்.

எவ்வாறாயினும், போர் முடிவுக்கு வந்த பின்னர், நடந்துள்ள நான்கு துப்பாக்கிச் சூட்டு மரணங்களினதும் எல்லா உண்மைகளும் வெளிச்சத்துக்கு வரப்போவதில்லை. ஏனென்றால், உண்மைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் இந்த மரணங்கள் எதுவும் நிகழவில்லை.

உண்மைகள் வெளிவரக்கூடாது என்பதால் தான், ஆளரவமற்ற நெடுங்கேணியின் தெற்குப் புறக் காடுகள் இதற்கான களமாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கலாம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X