2025 மே 19, திங்கட்கிழமை

அரசியலுக்கு வெட்கம் தேவையில்லை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 27 , பி.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஐயூப்

மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தையும் ஹம்பாந்தோட்டை ருஹூணு மாகம்புர துறைமுகத்தையும் நேரடியாக பார்வையிட்டு தகவல் திரட்டுவதற்காக அவ்விரண்டு இடங்களுக்கும் கடந்த 17ஆம் திகதி சென்ற ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது குண்டர்கள் முட்டை வீசியும் அவர்களை மிரட்டியும் இம்சிப்பதை தொலைகாட்சித் திரைகளில் நாடே கண்டது.

அந்த குண்டர்கள் மத்தியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயைச் சேர்ந்த ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோவும் இருப்பதையும் நாட்டு மக்கள் கண்டனர். ஆனால் இந்த தாக்குதலுக்கு தமது கட்சி பொறுப்பல்ல என்றும் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை ஐ.தே.க. விமர்சிப்பதனால் ஆத்திரமுற்ற சாதாரண மக்களே இந்த எம்.பிக்களை தாக்க முற்பட்டுள்ளனர் என்றும் ஆளும் கட்சியின் தலைவர்கள் கூறுகிறார்கள்.

இது போன்று 'சாதாரண மக்கள்' ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்குவதை இதற்கு முன்னரும் நாடு கண்டு இருக்கறது. வட பகுதி மக்களே அண்மையில் இவ்வறான தாக்குதல்களை கூடுதலாக கண்டு இருக்கிறார்கள் என்று கூறலாம்.

அமெரிக்கா இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இதுவரை மூன்று பிரேரணைகளை ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்துள்ளது. அவை போர் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக மட்டும் சமர்ப்பிக்கப்படவில்லை. அதற்கு பின்னர் மக்கள் நடத்திய போராட்டங்களின் போது நடத்தப்பட்ட தாக்குதல்களும் அவற்றுக்கு காரணமாகின.

எனவே ஹம்பாந்தோட்டை தாக்குதல்கள் மனித உரிமை பேரவையின் பிரேரணைகளுக்கு நியாயம் கற்பிக்கிறது என ஐ.தே.க.வின் தலைமைத்துவ பேரவையின் தலைவர் கரு ஜயசூரிய கூறியிருந்தார். அதேபோல் இந்த தாக்குதல்களைப் பார்க்கும் போது மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் நியாயமானவையே என ஜனநாயகக் கட்சியின் தலைவர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் கூறினார்.

இந்த சம்பவத்தின் போது சில அரசியல்வாதிகள் நடந்து கொண்ட விதத்தை நினைக்கும் போது அரசியல்வாதியாவதற்கு வெட்கமே இருக்கக் கூடாது என்று தான் தோன்றுகிறது. அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை ஐ.தே.க. விமர்சிப்பதையும் இந்தத் திட்டங்களில் ஊழல் இடம்பெற்றள்ளதாக கூறுவதையும் மக்கள் பொறுத்துக் கொள்ளாததினாலேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன என துறைமுக மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன கூறியிருக்கிறார். அபிவிருத்தித் திட்டங்களை விமர்சிப்பதை மக்கள் பொறுத்துக் கொள்வதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கூறியிருந்தார்.

இந்த சம்பவத்தின் போது தாம் கைத்துப்பாக்கியுடன் ஐ.தே.க. எம்.பிக்களை விரட்டி வருவதை ஊடக படப்பிடிப்பாளர்கள் படம் பிடித்ததை அறிந்த ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோ ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பிரகாரமே தாம் அங்கு சென்றதான முதலில் கூறினார். நாமல் ராஜபக்ஷ அதனை மறுத்த போது பாதுகாப்பு வழங்குமாறு ராஜபக்ஷ முன்னொரு நாள் தம்மிடம் கேட்டதாகவும் ஆனால் அன்றைய தினம் அவர் அவ்வாறு கேட்டுக் கொள்ளவில்லை என்றும் கூறினார்.

தம்மிடம் துப்பாக்கி இருக்கவில்லை என்று முன்னர் கூறிய அவர் மறுநாள் தம்மிடம் இருந்தது சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுத் துப்பாக்கியே என கூறினார். தாம் குண்டர்களிடம் இருந்து ஐ.தே.க. எம்.பிக்களை பாதுகாக்கவே ஓடி வந்ததாகவும் அவர் கூறினார். எனவே தான் அரசியலுக்கு வெட்கமில்லாத் தன்மை தகைமையாகியுள்ளதாக முதலில் கூறினோம். பொது பல சேனா அமைப்பினர் குழப்பங்களை விளைவிக்கும் போது கை கட்டி பார்த்துக் கொண்டு இருப்பதைப் போலவே இந்த சந்தர்ப்பத்திலும் பொலிஸார் ஒதுங்கி பார்த்துக் கொண்டிருப்பதையும் மக்கள் தொலைக்காட்சியில் காணக்கூடியதாக இருந்தது.

மக்களின் கணக்கில் போட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் எதிர்க் கட்சியினர் மீது ஆளும் கட்சியினர் தாக்குதல்களை மேற்கொண்ட முதலாவது முறை இதுவல்ல. வட மாகாணத்தில் தமிழ் மக்களிடம் கேட்டால் அவர்கள் இதற்கு பல உதாரணங்களை தருவார்கள். கடந்த இரண்டு வருடங்களை மட்டும் எடுத்துக் கொண்டால் வடக்கில் எதிர்க் கட்சிகள் நடத்திய பல ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்கள் மீது 'பொது மக்கள்' தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் அவ்வாறு கூறாவிட்டாலும் அந்தக் கருத்துப் படவே கருத்து வெளியிட்டு இருந்தனர். அந்த 'பொது மக்கள்' யார் என்பதையும் மக்கள் அனுமானத்திலாவது அறிந்து இருக்கிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய விடயமாகும்.
2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிறைச்சாலையில் இடம்பெற்ற நிமலரூபனின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் செய்த போது 'இனந் தெரியாதோர்' அல்லது 'பொது மக்கள்' ஆரப்பாட்டக்காரர்கள் மீது கழிவு எண்ணெய் தெளித்து விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக விசாரணை செய்வதாக பொலிஸார் கூறிய போதிலும் எவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டதாக இதுவரை தெரிய வரவில்லை.

அதே ஆண்டு ஓக்டோபர் மாதம் சிறுவர் தின நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்த முன்னோடி சோஷலிஸ கட்சியின் தலைவர்களில் ஒருவரான திமுத்து ஆட்டிகல உட்பட பலர் மீதும் கழிவு எண்ணெய் தாக்குதல் நடத்தப்பட்டது. அது தொடர்பாகவும் எவரும் தண்டிக்கப்பட்டார்களா என்பது தெரியவில்லை.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் பல தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து யாழ்ப்பாணத்தில் கூட்டம் ஒன்றை நடத்தும் போது அங்கு வந்த சிலர் அக் கூட்டத்தை குழப்ப முயற்சி செய்தனர். ஆனால் அவர்களை பொலிஸார் கைது செய்யவில்லை. எதிர்க் கட்சித் தலைவருக்கே இந்த நிலைமையென்றால் ஏனையோரைப் பற்றி கேட்கவா வேண்டும்?

அதே ஆண்டு மார்ச் மாதம் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் கூட்டம் ஒன்றை நடத்தும் போதும் இந்த 'பொது மக்கள்' திடீரென அங்கு வந்து கல்லெறிந்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். அது போன்ற சில சந்தர்ப்பங்களில் உண்மையான பொது மக்கள் தாக்குதல் நடத்தும் இந்த 'பொது மக்களை' பிடித்து பொலிஸாரிடம் கையளித்த போதிலும் அவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வரப்படவில்லை.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது 'ஆத்திரமடைந்த பொது மக்கள்' தாக்குதல் நடத்தியதாக முதன் முதலாக கூறியவர் முன்னாள் ஜனாதிபதி டி.பி. விஜேதுங்கவே. அவர் பிரதமராக இருக்கும் போதே அவர் இந்தக் கூற்றை கூறியிருந்தார். 1992ஆம் ஆண்டு அந்த சம்பவம் இடம்பெற்றது. அப்போது அமைச்சர்களாகவிருந்த லலித் அத்துலத்முதலி மற்றும் காமிணி திஸாநாயக்க ஆகியோர் ஆளும் ஐ.தே.க.விலிருந்தும் அரசாங்கத்திலிருந்தும் விலகி ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியை உருவாக்கியிருந்தனர்.

அப்புதிய கட்சி அரசாங்கத்தின் அடாவடித்தனங்களுக்கு எதிராக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முன் ஒரு நாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் போது குண்டர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பொலிஸார் அதனை தடுக்கவில்லை. இன்று போல் அன்றும் அவர்கள் வேடிக்கை பார்த்தனர். இது தொடர்பாக நாடாளுமனறம் கூடிய போது கேள்வி எழுப்பப்பட்டது. ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் கீழ் பிரதமராகவிருந்த விஜேதுங்க அதற்கு பதிலளித்து நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்தார். இவர்கள் ரயில் நிலையத்தின் முன் ஆரப்பாட்டம் நடத்தியதால் தமது பயணங்களுக்கு இடையூறு ஏற்பட்டதன் காரணமாக ஆத்திரம் கொண்ட பொது மக்களே இவர்கள் மீது தாக்குதல் நடத்தினர் என அவர் கூறினார்.

இதைக் கேட்டு நாடே சிரித்தது. சில காலம் செல்லும் வரை ஏதாவது அடாவடி சம்பவம் நடந்தால் 'ஆத்திரமுற்ற மக்கள்' அதனை செய்ததாக ஊடகங்கள் கேலி செய்தன. கேலிக்கை சித்திரங்களை வரைந்தன. அன்று அதனை கேலி செய்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் இன்று தாமும் அதனையே செய்து அதனையே கூறுகின்றனர். அன்று அதனை கூறி எதிர்க் கட்சியினரை கேலி செய்த ஐ.தே.க. அந்த ஆயுதத்தினாலேயே இன்று அடி வாங்குகிறது. என்றோ ஒரு நாள் மீண்டும் இவ் விரண்டு கட்சிகளும் இன்றைய பாத்திரங்களை மாற்றிக் கொண்டு மீண்டும் நடிக்கலாம். வரலாறு அவ்வாறானது.

எதிர்க் கட்சியினரின் ஆர்ப்பாட்டங்களை தாக்கிவிட்டு 'ஆத்திரமுற்ற மக்கள்' தாக்கியதாக தாம் கூறினாலும் எவரும் அதனை நம்புவதில்லை என்பது ஆளும் கட்சியினருக்குத் தெரியும் ஆனாலும் அவர்கள் அதற்காக வெட்கப்படுவதில்லை. அவ்வாறான சம்பவங்களின் போது கை கட்டிப் பார்த்துக் கொண்டிருந்த பொலிஸார் தாம் அது தொடர்பாக விசாரணை நடத்துவதாக பின்னர் கூறுவர். அவர்கள் அவ்வாறு கூறுவதற்கு வெட்கப்படுவதில்லை.

சுதந்திரத்தின் பின் பதவிக்கு வந்த எந்தவொரு அரசியல் கட்சியும் எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பு நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ளவில்லை. அதற்காக சில முக்கிய சம்பவங்களை சுட்டிக் காட்டலாம். தமிழ் மக்களுக்கு சில உரிமைகளை வழங்குவதற்காக செய்து கொள்ளப்பட்ட பண்டாரநாயக்க- செல்வநாயகம் ஒப்பந்தத்தை எதிர்த்து நடத்தப்பட்டஓர் ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற ஒரு சம்பவமும் தமிழ் மக்களுக்கு உரிமை கேட்டு நடத்தப்பட்ட ஓர் ஆர்ப்பாட்டத்தின் மீது குண்டர்களை ஏவி தமிழ் தலைவர்களை தாக்கிய ஒரு சம்பவமும் அவற்றில் முக்கியமானவையாகும்.

பண்டா-செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து 1958ஆம் ஆண்டு ஐ.தே.க. அன்றைய எதிர்க் கட்சித் தலைவர் ஜே. ஆர் ஜயவர்தனவின் தலைமையில் கொழும்பிலிருந்து கண்டி தலதா மாளிகைக்கு பாத யாத்திரை ஒன்றை ஏற்பாடு செய்தது. நோக்கம் எந்தளவு மோசமாக இருந்த போதிலும் இது ஜனநாயக முறையிலான போராட்டமாகும் ஆனால் வழி நெடுகிலும் அந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆளும் கட்சியினர் பல்வேறு இடையூறுகளை விளைவித்தனர். கம்பஹா இம்புல்கொட என்னுமிடத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.டி. பண்டாரநாயக்கவின் தலைமையிலான ஒரு கோஷ்டி வீதியை மறித்து அதனை முன் செல்ல முடியாதவாறு செய்தனர். பாத யாத்திரை அத்தோடு முடிவடைந்தது.

அதன் பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் முதலாவது பதவிக் காலத்தில் 1961ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் உரிமை கோரி அன்றைய நாடாளுமன்றத்தின் முன் காலி முகத்திடலில் உண்ணாவிரதம் இருந்தனர். அரசாங்கத்தின் குண்டர்கள் அவர்கள் மூத்த அரசியல்வாதிகள் என்பதையும் கவனியாது அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர் பலர் அதனால் பலத்த காயங்களுக்கு உள்ளானார்கள். சாத்வீகப் போராட்டங்கள் பலனளிக்காத காரணத்தினாலேயே தமிழர்கள் ஆயுதம் ஏந்தினர் என்பதற்கு ஆதாரங்களை சுட்டிக் காட்டுவோர் இந்தச் சம்பவத்தையும் சுட்டிக் காட்டுவது வழமையாகும்.

எனவே ஜனநாயகத்தைப் பற்றிப் பேச இந்த நாட்டில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும், குறிப்பாக பிரதான இரண்டு கட்சிகளுக்கும் தார்மிக உரிமையே இல்லை. ஆனால் தார்மிக உரிமை உள்ளவர்கள் மட்டும் தான் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசலாம் எனறிருந்தால் பேசுவதற்கு ஒருவருமே இருக்க மாட்டார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X