2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பொற்காலம் முடிவுக்கு வருமா?

Suganthini Ratnam   / 2014 மே 02 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் அண்மைக்காலமாக நிகழும் சம்பவங்களை அவதானிக்கும்போது, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொற்காலம் முடிவுக்கு வருகிறதா என சந்தேகம்  தோன்றுகிறது.

இந்த அரசாங்கம் கிட்டத்தட்ட  10 வருடங்களுக்கு முன்னதாக எவ்வாறு பலம் பெற்று எழுச்சி கொண்டதோ, இப்போது அதே வேகத்தில் கீழ் நோக்கிச் சரியத் தொடங்கியுள்ளது.

இது வெறுமனே அண்மையில் நடந்துமுடிந்த மாகாணசபைத் தேர்தல் முடிவுகளை மட்டும் கருத்தில் கொண்ட கணிப்பல்ல.

இந்த அரசாங்கத்துக்குப் பலம் சேர்த்து நின்ற ஒவ்வொரு தூண்களும் இப்போது ஆட்டம் காணத் தொடங்கியுள்ளன. அதனால் தான், இந்த அரசாங்கத்தின் பொற்காலம் முடிவுக்கு வரப் போகிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு முன்னின்று உழைத்த கட்சிகள், இப்போது அதைக் கைவிடத் தயாராகிவிட்டதாகவே தெரிகிறது.

ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட போர்நிறுத்த உடன்பாட்டைக் கிழித்தெறிவதற்காகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற புதிய கூட்டணியை அமைக்க மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) ஜாதிக ஹெல உறுமயவும் முன்வந்தன.

ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவினாலும் அப்போதைய அமைதி முயற்சிகளுக்கு எதிரான அவற்றின் பிரசாரங்களாலும்தான், 2001இல் இழந்த ஆட்சியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் மீளப் பெறமுடிந்தது.

அதுபோலவே, 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை வேட்பாளராக்கி அவரை வெற்றி பெற வைப்பதிலும் இந்தக் கட்சிகளின் பங்கு கணிசமானது என்பதை மறந்துவிடலாகாது.

ஆயினும், வடக்கில் தேர்தலைப் புறக்கணிக்க வைத்து  மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிபீடம் ஏற தெளிவான வகையில் உதவியவர்கள் விடுதலைப் புலிகளே என்பதில் சந்தேகமில்லை.

எவ்வாறாயினும், வடக்கில் தேர்தல் புறக்கணிப்பு இடம்பெற்றிருந்தாலும், ஜே.வி.பி. மற்றும்  ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவு இல்லாமல்  மஹிந்த ராஜபக்ஷவினால் ஒருபோதும் வெற்றி பெற்றிருக்க முடியாது.

பின்னர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் மற்றும் அதில் பெற்றுக்கொண்ட வெற்றியைப் பயன்படுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் அதிகாரத்தை வலுப்படுத்திக்கொண்டது.

அசைக்க முடியாதொரு அரசாங்கமாக அது கடந்த பத்தாண்டுகளையும் கழித்துவிட்டது. இதனை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்  பொற்காலம் என்றால் மிகையில்லை.

போர்நிறுத்த உடன்பாடு முறிந்து, நோர்வேயின் சமாதான முயற்சிகள் கைவிடப்பட்ட சூழ்நிலையில், அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக்கொண்டது ஜே.வி.பி. ஆனாலும், அரசாங்கத்தை அசைக்க முடியாத நிலையே இருந்து வந்தது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் இணைந்து நிறுத்தியபோதிலும், வெற்றி பெற முடியவில்லை.

போரில் ஈட்டிய வெற்றி, இதுவரையான எல்லாத் தேர்தல்களிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் காப்பாற்றியே வந்துள்ளது.

வடக்கு, கிழக்கு தவிர்ந்த நாட்டின் மற்றெல்லாப் பகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொற்காலத்துக்கு இதுவரை பெரும் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், இப்போது நிலைமைகள் மாற்றமடையத் தொடங்கியுள்ளன.

ஒரு பக்கத்தில் அரசாங்கத்தின் செல்வாக்கு குறையத் தொடங்கியுள்ளது. இன்னொரு பக்கத்தில் எதிர்க்கட்சிகள் பலமடையத் தொடங்கியுள்ளன.
மற்றொரு பக்கத்தில், அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்து வந்த கூட்டணிக் கட்சிகளும் மெல்லக் கழன்று செல்வதற்கான சாத்தியங்கள் தென்படுகின்றன.

இவையெல்லாவற்றுக்கும் அப்பால், அரசாங்கத்துக்கு சர்வதேச அழுத்தங்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

தென் மற்றும் மேல் மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கூட்டணியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியைப் பெற்றுள்ளபோதிலும், கணிசமான இழப்பைச் சந்தித்துள்ளது.

ஆசன ரீதியாகவும் வாக்குகள் ரீதியாகவும் விகிதாசார ரீதியாகவும் அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சி கண்டுள்ளதை இந்தத் தேர்தல்கள் எடுத்துக் காட்டியுள்ளன.

இரண்டு மாகாணங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, சுமார் இரண்டரை இலட்சம் வாக்குகளை இழந்துள்ளது.

இந்த முடிவை வைத்து நோக்கும்போது ஒன்பது மாகாணங்களிலும் ஆகக் குறைந்தது ஏழு இலட்சம் வாக்குகளையாவது ஆளும் கட்சி இழக்கும் என்று கணிக்கப்படுகிறது.

இத்தகைய நிலையில், எதிர்க்கட்சிகள் மத்தியில் பொதுவான ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இணக்க முயற்சிகளும் நடப்பதாகத் தெரிகிறது.

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூடத் தகவல்கள் வெளியாகின்றன. அதாவது, எதிர்க்கட்சிகள் பலம் பெற்று வருவது அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஒரு அபசகுனம்தான்.

அதைவிட, ஜே.வி.பி.யும் சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சியும் கூட வளர்ச்சி காணத் தொடங்கியுள்ளதை அண்மைய மாகாணசபைத் தேர்தல்கள் எடுத்துக் காட்டியுள்ளன.

சிறுபான்மை மக்களின் ஆதரவை இந்த அரசாங்கம் வேகமாக இழந்துவரும் நிலையில், சிங்களப் பெரும்பான்மையினர் மத்தியிலும் அதன் செல்வாக்கு ஆட்டம் காணத் தொடங்கியிருப்பது மோசமான நிலையே.

இப்போதைய நிலையில் தேசிய அளவிலான தேர்தல் ஒன்று வருமானால், பல கட்சிகள் ஆளும் கூட்டணியை விட்டு விலகும் என்பதில் சந்தேகமில்லை.

குறிப்பாக, பிரதானமாக சிறுபான்மைக் கட்சிகள்  இவ்வாறு தனித்துப் போட்டியிட முனையலாம். அதைவிட ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி போன்ற சிங்களத் தேசியவாதக் கட்சிகளும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறத் தருணம் பார்த்துள்ளதாகவே தெரிகிறது.

அண்மையில் கசினோ தொடர்பான கட்டளைச் சட்டம் மீதான வாக்கெடுப்பில் அரசாங்கத்துக்கு எதிராக அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் அத்துரலிய ரத்தின தேரரும் வாக்களித்தமை முக்கியமான விடயம்.

விமல் வீரவன்சவும் கூட அரசாங்கத்திலிருந்து வெளியேறத் தயாராவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு பந்தயத்தில் குதிரை ஒன்று சற்று பலவீனப்பட்டாலும், அதன் மீது எவரும் பணம் கட்டமாட்டார்கள்.

அதுபோலத் தான் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்டம் காண்பதாக சற்று உணரத் தொடங்கினாலும், கூட்டணிக் கட்சிகள் கழன்று போகத் தொடங்கிவிடும்.

பொதுவாக எல்லா நாடுகளினதும் கூட்டணி அரசாங்கங்களில் இதுவே அரசியல் தர்மமாக  கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தனியே கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை இழப்பது மட்டும் இப்போதுள்ள ஆபத்தாகத் தெரியவில்லை.
அதற்கும் அப்பால், சந்திரிகா குமாரதுங்க போன்ற ஒரு வலுவான அரசியல் தலைமை உருவாகும் அறிகுறி தென்பட்டாலேயே, ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் பலர் அந்தப் பக்கம் தாவக்கூடும்.

கடந்த காலங்களில் ஐ.தே.க.வின் பக்கத்திலிருந்து பலர் சந்திரிகாவின் பக்கம் தாவியதும் பின்னர் ஐ.தே.க. ஆட்சிக்கு வரும் அறிகுறி தென்பட்டபோது, ரணில் விக்கிரமசிங்கவின் அரசுடன் இணைந்துகொண்டதும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வலுப்பெற்றபோது அவர்கள் ஓடி வந்து இணைந்துகொண்டதும் தான் வரலாறு. அதுபோன்று மீண்டும் நடக்காதென்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

தற்போதைய அரசாங்கத்துக்குள் இருக்கும் அனைத்து அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆட்சித் தலைமையின் மீது முழு விசுவாசம் கொண்டிருப்பதாகவோ, நம்பிக்கை வைத்திருப்பதாகவோ கருதமுடியாது.

பலருக்கும் பலவிதமான பிரச்சினைகள், மனக்கசப்புகள், மாற்றுக் கருத்துகள் எல்லாம் உள்ளன. அதிலும், சந்திரிகா குமாரதுங்க போன்ற ஒரு மாற்றுத் தலைமை போட்டிக்கு நிறுத்தப்பட்டால், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கட்சிகள் அவரது பக்கம் போய்விடக் கூடிய சாத்தியங்கள் அதிகமாகவே உள்ளன.

ஏற்கெனவே அமைச்சர்களான திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர போன்றோர் சந்திரிகா குமாரதுங்கவுடன் பேச்சுக்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூடச் செய்திகள் வெளியாகியுள்ளன.

வலுவான மாற்று அணி ஒன்று உருவாக்கப்படுவதானது எதிர்க்கட்சிகளை இரண்டு விதத்தில் பலம் பெறச் செய்யும்.முதலாவது எதிரணியின் பலத்தை அதிகரிக்கச் செய்யும். இரண்டாவது ஆளும் கூட்டணியைப் பலம் இழக்கச் செய்யும். அத்தகையதொரு நிலையானது இயல்பாகவே ஆட்சிமாற்றத்தை உருவாக்கும் வலிமையைக் கொடுக்கும்.

கசினோ விவகாரத்தில் அரசாங்கம், சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளினது ஆதரவை மட்டுமன்றி, சிறுபான்மைக் கட்சிகளினதும் நம்பிக்கையையும் இழந்துள்ளது.

அதேவேளை, மத விவகாரங்களில் தலை தூக்கியுள்ள பிரச்சினைகளைக் கையாளும் விடயத்திலும் சிறுபான்மையின மக்களின் நம்பிக்கையை அரசாங்கத்தினால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.

போர் மற்றும் அதனைத் தொடர்ந்து போரின் வெற்றியைக் கொண்டு அரசாங்கம் உருவாக்கிய கோட்டையில் இப்போது ஓட்டை விழத் தொடங்கியுள்ளது.

போர் வெற்றி எல்லாக் காலங்களிலும் கைகொடுக்காது என்பதால் தான், அரசாங்கம் சீனா போன்ற நாடுகளின் காலைப் பிடித்து, பெறப்பட்ட நிதியைக் கொண்டு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டது.

அந்த அபிவிருத்திப் பணிகளும் கூட, அரசாங்கத்துக்கு போதியளவில் கைகொடுக்கும் போலத் தெரியவில்லை.

ஏனென்றால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் இந்தப் பத்தாண்டுகளில் செய்யப்படாத அபிவிருத்தி வேலைகள் ஏதுமில்லை.

வரண்டுபோய் கிடந்த பூமியை விமான நிலையம், துறைமுகம், மைதானங்கள், தொழிற்கூடங்கள் என்று வளம்மிக்க இடமாக மாற்றியது இந்த அரசாங்கம்.

ஆனால், கடந்த மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சி அம்பாந்தோட்டையில் 18 ஆயிரம் வாக்குகளை இழந்திருக்கிறது.

இது அபிவிருத்தி, பொருளாதார திட்ட மாயைகளுக்குள் மக்கள் அகப்பட விரும்பவில்லை என்பதையே சுட்டிக்காட்டியுள்ளது.
இங்கு மட்டுமல்ல, தென் மாகாணத்திலும் மேல் மாகாணத்திலும் கூட, அபிவிருத்தித் திட்டங்கள் அரசாங்கத்துக்கு கைகொடுக்கும் வகையில் அமைந்திருக்கவில்லை.

எனவே, மக்களின் எதிர்பார்ப்பு வேறேதோவொன்றை அடிப்படையாக கொண்டுள்ளது என்பதை உணர முடிகிறது.
இது அரசாங்கத்துக்குப் புரியாமல் இருக்காது.

இந்தச் சூழலில், அதிகரித்து வரும் சர்வதேச அழுத்தங்களை அரசாங்கம் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள முயன்றது. மாகாணசபைத் தேர்தலில் அதுவும் அவ்வளவாக கைகொடுக்கவில்லை. குறிப்பாக ஜெனீவா தீர்மானத்தை வைத்து வாக்குகளை கவர அரசாங்கம் போட்ட திட்டமும் தோல்வி கண்டுள்ளது.

இந்த நிலையில், இந்த அரசாங்கம் தனது செல்வாக்கை அதிரிகத்துக்கொள்வதற்கு புதிய உத்தியொன்றை நாட வேண்டிய தேவை எழுந்துள்ளது.
ஆனால், எப்போதுமே மக்கள் எந்தவொரு கட்சியும் தொடர்ச்சியாக ஆட்சியில் இருப்பதை விரும்புவதில்லை.

அது அரசியல் தலைவர்களினது தான் தோன்றித்தனத்துக்கு காரணமாகி விடும் என்று மக்கள் எப்போதுமே கருதி வந்துள்ளனர்.

பத்தாண்டுகளாக பழகிப்போன இந்த அரசாங்கத்தின் முகங்களைப் பார்த்துப் பார்த்து அவர்களுக்குச் சலிப்பு வரத் தொடங்கிவிட்டது.

எனவே, அவர்கள் புதிய முகம் ஒன்றைத் தெரிவுசெய்ய முனைவது தான் இயல்பு. இத்தகைய நிலையில், அரசாங்கம் உடனடியாகப் கவிழப் போகிறது என்றோ ஆட்சிமாற்றம் நடக்கப் போகிறது என்றோ கூற வரவில்லை.

இந்த அரசாங்கத்தின் பொற்காலம் மங்கத் தொடங்கி விட்டது என்பதே சரியானது.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய மறுத்தால், ஒருவேளை மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே ஆட்சிக்கு வரலாம்.

ஆனால், கடந்த முறையைப் போன்று வாக்குகளை அரசாங்கத்தினால் பெறவோ பலமான ஆட்சியை அமைக்கவோ முடியாது.

ஏனென்றால், மங்கிப் போகும் அந்தப் பொற்காலம் இனி மீளவும் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X