2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அரசுக்கு வரப்போகும் இரண்டு சவால்கள்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 06 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

வரப்போகும் நாட்களில் இலங்கை அரசாங்கம் முக்கியமான இரண்டு பிரச்சினைகளை எதிர்கொள்ளப்போகிறது. முதலாவது பிரச்சினை  சர்வதேச அளவில் ஐக்கிய நாடுகளின் ஒரு அங்கமான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து வரப்போகிறது. இரண்டாவது பிரச்சினை இந்தியாவிடமிருந்து வரப்போகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும்  மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான குழு அடுத்த சில நாட்களுக்குள் நியமிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வின் தொடக்க உரையிலோ, அதற்கு முன்னதாகவோ இந்த விசாரணைக்குழுவை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்  ஆணையாளர் நவநீதம்பிள்ளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விசாரணைக்குழு நியமிக்கப்பட்டதும், அரசாங்கம் அடுத்து என்ன செய்யப் போகிறது என்பது முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
ஏனென்றால், ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரிப்பதாகவும் அதன்படி அமைக்கப்படும் விசாரணைகளையோ, அதன் முடிவையோ ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் இலங்கை அரசாங்கம் முன்னரே கூறிவிட்டது.

ஆனால், ஐ.நா. வின் இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று  இன்னமும் ஐ.நா. வுக்கு அதிகாரபூர்வமாக அரசாங்கம் அறிவிக்கவில்லை.

விசாரணைக்குழு அமைக்கப்பட்டதும் அது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தமக்குத் தெரியப்படுத்தியதும் இலங்கை அரசின் நிலைப்பாடு ஐ.நா. வுக்குத் தெரியப்படுத்தப்படும் என்று அரசாங்கம் கூறுகிறது.

ஆனால், விசாரணைக்குழு தொடர்பான நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று ஜனாதிபதியும் அமைச்சர்களும் கூறி வருகின்றனர்.
அதை விட, யார் விசாரணைகளை நடத்தினாலும் அது இலங்கை அரசாங்கத்தை குற்றவாளியாகக் கூண்டில் நிறுத்தும் என்று அமைச்சர்கள் பலரும் கூறிவருகின்றனர். அந்தளவுக்கு அவர்களிடம் தெளிவானதொரு நிலை காணப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காமல் நழுவக் கூடும் என்பதையும் இந்த விசாரணைகளை பக்கச்சார்பானதாகக் காட்டுவதற்கு முயற்சிக்கும் என்பதையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் அறியாததல்ல.

ஏற்கெனவே, ஐக்கிய நாடுகள்  பொதுச்செயலர் பான் கீ மூன், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை என்று பலரும் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும்  மீறல்கள் குறித்து விசாரிக்க முற்பட்டதால், அவர்களும் புலிகளின் அனுதாபி என்றும் ஆதரவாளர் என்றும் அவர்களிடம் இலஞ்சம் பெற்றவர்கள் என்றும் பெயர்களைச் சுமக்க வேண்டியதாயிற்று.

எனவே, இப்போது அமைக்கப்படும் விசாரணைக்குழுவும் அது போன்றே விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பது நவநீதம்பிள்ளைக்கோ, ஐ.நா. உயர் அதிகாரிகளுக்கோ தெரியாமலிருக்காது.

எனவேதான், இந்த விசாரணைகளிலிருந்து  அதற்கு உதவும் பொறுப்பிலிருந்து இலங்கை அரசாங்கம் நழுவிக்கொள்ளாத வகையிலும் வெளிப்படையானதும் சுதந்திரமானதுமான விசாரணைகள் அமைய வேண்டும் என்று நவநீதம்பிள்ளை கருதுவதாகத் தெரிகிறது,

அதனால், உலகளவில் நம்பிக்கைக்குரிய – இலங்கை அரசாங்கத்தினால் நிராகரிக்க முடியாத ஒருவரை இந்த விசாரணைக்குழுவின் தலைவராக நியமிக்க ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் முயற்சிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவ்வாறு நியமிக்க முயற்சிக்கும் நபர்களின் பட்டியலில் மிக முக்கியமானவராக இருப்பவர் ஐ.நா. வின் முன்னாள் பொதுச்செயலர் கொபி அனான் என்று கூறப்படுகிறது. ஆனால், இவர் விசாரணைகளை மேற்கொள்வதில் முக்கியமானதொரு பிரச்சினை உள்ளது. அது என்னவென்றால், முன்னர் தனது தலைமையின் கீழ் பணியாற்றிய அதிகாரிகளிடமே இவர் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டியதொரு  கௌரவப் பிரச்சினை  இருக்கிறது.

மற்றப்படி, சர்வதேச அளவில் மதிப்புக்குரியவராக கருதப்படுபவரும் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவரும் என்பதால் கொபி அனான் தலைவராக நியமிக்கப்படுவதில் சர்ச்சைகள் ஏற்படாது.

ஆனால், கொபி அனான் விசாரணைக்குழுவின் தலைவராக இலங்கைக்கு வருவதற்கு அரசாங்கம் வீஸா வழங்குமா என்பது குறித்து இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.

அவர் சுற்றுலா வீஸாவில் வரலாம் என்றும் கூறிய அவர், ஐ.நா. வின் விசாரணைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காது என்றும் தெரிவித்திருந்தார்.

இதிலிருந்தே கொபி அனான் என்ன, வேறு யாராக இருந்தாலென்ன விசாரணைகள் என்று, இலங்கைக்கு வர முடியாது என்று மறைமுகமாக கூற முற்பட்டுள்ளது.

இன்னொரு பக்கத்தில், கொபி அனான் இன்னமும் ஐ.நா. விசாரணைக்குழுவில் இடம்பெறுவாரா என்பது பற்றிய அறிவிப்பு வெளியிடப்படாத நிலையிலேயே, அவருக்கு எதிரான கருத்துக்கள் சிங்கள ஊடகங்களில் வெளியாகத் தொடங்கி விட்டன.

2004ஆம் ஆண்டு போர்நிறுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளராக இருந்த கௌசல்யன் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அப்போது ஐ.நா. பொதுச்செயலராக இருந்த கொபி அனான் இரங்கல் வெளியிட்டிருந்தார்.

அதனைச் சுட்டிக்காட்டி புலிகளுக்காக இரங்கல் வெளியிட்டவர், அவர்களின் அனுதாபி என்று சிங்கள ஊடகங்கள் காட்ட முனைந்துள்ளன.
இதிலிருந்து  இலங்கைக்கு எதிரான எந்த விசாரணைகளை மேற்கொள்பவராக இருந்தாலும், அவர் எத்தகைய உயர் மதிப்புக்குரியவராக இருந்தாலும், சிறுமைப்படுத்துவது, புலி என்று பட்டம் கட்டுவதும் இங்கு வழக்கமானதொரு பாரம்பரியம் என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.

இப்படியான நிலையில், கொபி அனானுக்கு அரசாங்கம் வீஸா கொடுத்து, செங்கம்பளம் விரித்து, விசாரணைகளை மேற்கொள்ள இடமளிக்கும் என்று நம்பமுடியவில்லை. ஒருவேளை அரசாங்கம், கொபி அனானையோ அல்லது விசாரணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்படக்கூடிய எவரையோ நாட்டுக்குள் வருவதை நிராகரிக்க வழியில்லாத சூழல் ஏற்பட்டாலும், தனது கூட்டணியில் உள்ள கடும்போக்குவாதக் கட்சிகளின் உதவியுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்து அவர்களைத் தடுக்க முனையலாம்.

முன்னர், ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனுக்கு எதிராக அமைச்சர் விமல் வீரவன்ச உண்ணாவிரதம் இருந்ததை இங்கு நினைவிற்கொள்ளலாம்.
எவ்வாறாயினும் ஐ.நா. வின் விசாரணைக்குழு அமைக்கப்பட்டதும், அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதா என்ற விவகாரத்தில் தொடங்கி அதன் இறுதி அறிக்கை வரையாக அரசாங்கத்துக்கு இனிச் சிக்கல்கள் தொடரப் போகின்றன.

அந்த அறிக்கை அரசாங்கத்துக்கு எதிராகவே அமையும் என்று அமைச்சர்களே கருத்து வெளியிடும் நிலையில், அது குறித்து அரசாங்கம் எத்தகைய பிரதிபலிப்பை வெளியிடும் என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது.

எனவே, அடுத்த சில நாட்களில் தொடங்கப்போகும் விசாரணைக்குழு நெருக்கடியிலிருந்து அரசாங்கத்தினால் இப்போதைக்குத் தப்பிக்க முடியாது.
அடுத்து, 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரத்திலும் இலங்கைக்கு அழுத்தங்கள் அதிகரிக்கும் சாத்தியங்கள் தென்படுகின்றன.

கடந்த 27ஆம் திகதி புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துப் பேசியபோதே, 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அதற்கு அப்பால் செல்வது குறித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளன.

இந்தியா இது பற்றி முன்னரும் வலியுறுத்தி வந்தபோதிலும், அதனை இலங்கை அரசாங்கம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால், மன்மோகன் சிங்கின் ஆட்சிக்கும் இப்போதைய ஆட்சிக்கும் இடையில் நிறையவே வேறுபாடுகள் உள்ளன.

இப்போதைய நரேந்திர மோடி அரசாங்கம் வலுவானதாகவும் கொள்கை சார்ந்த விடயங்களில் விட்டுக்கொடுப்புக்கு இடமற்றதொன்றாகவும் இருப்பது இலங்கை அரசாங்கத்துக்கு பாதகமான நிலையாகும்.

எனவே, மன்மோகன் சிங் அரசாங்கத்தை ஏமாற்றியதுபோல, 13ஆவது திருத்தச்சட்ட நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் நரேந்திர மோடி அரசாங்கத்தை ஏமாற்றிவிட முடியாது.

13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே இந்திய அரசாங்கத்தினது நிலைப்பாடு என்று பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர்கள் தெளிவாக கூறியுள்ளனர்.

அது மட்டுமல்லாது, இந்த வாக்குறுதிகளை இலங்கை காப்பாற்றும் என்றும் அது இலங்கைக்கே நல்லது என்றும் சற்று அச்சுறுத்தும் பாணியிலும் அவர்கள் கூறுவதை அவதானிக்க முடிகிறது.

ஆனால், இலங்கை அரசாங்கமோ 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்கிறது, அதிலுள்ள சிலவற்றை நடைமுறைப்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் ஆலோசிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அதற்காகவே நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டது என்ற உண்மையையும் அவர் அண்மையில் போட்டுடைத்துள்ளார். அதாவது இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக என்பதை விட, 13ஆவது திருத்தச்சட்டத்தை வலுவிழக்கச் செய்வதற்கே இந்த தெரிவுக்குழு அமைக்கப்பட்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கெனவே சுட்டிக்காட்டியது.

ஆனால், அப்போது அதனை மறுத்த அரசாங்கமே இப்போது 13ஆவது திருத்தச்சட்டம் குறித்து தீர்மானிக்கவே தெரிவுக்குழு அமைக்கப்பட்டதாக ஒப்புக்கொண்டுள்ளது.

இன்னொரு பக்கத்தில், வடக்கு மாகாணத்துக்கு முதல்வராக சி.வி.விக்னேஸ்வரன் இருக்கும் நிலையில், பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்து கொடுப்பதில் பிரச்சினையில்லை என்று அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.

ஆனால், 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் நிலை ஏற்பட்டாலும் கூட காணி, பொலிஸ் அதிகாரங்கள் ஒருபோதும் பகிர்ந்தளிக்கப்பட மாட்டாது என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படாது என்றும் இது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு இந்தியப் பிரதமருக்கு கடந்த 27ஆம் திகதி சந்திப்பிலேயே எடுத்துக் கூறப்பட்டு விட்டதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நரேந்திர மோடி அரசாங்கம் வலியுறுத்தும் நிலையில்,  அதனை நடைமுறைப்படுத்துவதில்லை என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

இந்த நிலையில், அடுத்த ஐந்தாண்டுகளிலும் இந்த விடயத்தில் எப்படி இரண்டு நாட்டு அரசாங்கங்களும் ஒன்றிணைந்து செயற்படப் போகின்றன என்ற கேள்வி எழுகின்றது.

இதற்கிடையே, இலங்கைப் பிரச்சனையை கையாள்வதற்கு சிறப்புப் பிரதிநிதி ஒருவரை நியமிப்பது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இது எந்தளவுக்கு உண்மை அல்லது நடைமுறைச் சாத்தியம் என்று இன்னமும் தெளிவாகவில்லை.

ஆனால், இத்தகையதொரு சிறப்புப் பிரதிநிதியை இலங்கைக்கு இந்தியா நியமிப்பது இதற்கு முன் நிகழ்ந்திராத ஒன்று அல்ல. இந்திரா காந்தி ஆட்சியிலிருந்தபோது, இலங்கையைக் கையாள, அப்போதைய ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கத்தைக் கையாள்வதற்காக மூத்த இராஜதந்திரியான ஜி.பார்த்தசாரதியை சிறப்புப் பிரதிநிதியாக நியமித்திருந்தார்.

அவருக்கு சிறப்பு அதிகாரங்கள் அளிக்கப்பட்டு பிரச்சினைகளைக் கையாள்வதற்கான பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தது. அதுபோன்றதொரு தூதுவரை மீண்டும் நியமிக்கவே நரேந்திர மோடி முயற்சிப்பதாகத் தெரிகிறது,

மன்மோகன் சிங் தலைமையிலான முன்னாள் இந்திய அரசாங்கமும் இவ்வாறானதொரு சிறப்புப் பிரதிநிதியை நியமிக்கப் போவதாக சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின.

அது பற்றி அறிந்துகொண்டதும் இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து, அத்தகைய முயற்சிகளை முடக்கிப் போட்டது.

ஆனால், தற்போதைய நரேந்திர மோடி அரசாங்கம் அத்தகைய சிறப்புப் பிரதிநிதி ஒருவரை நியமிக்க முடிவு செய்தால், அதனைத் தடுக்கின்ற அளவுக்கு இலங்கையால் செல்வாக்குச் செலுத்த முடியாது.

அவ்வாறானதொரு சிறப்புப் பிரதிநிதி நியமிக்கப்பட்டால், அது இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா போடும் கடிவாளமாகவே அமையலாம்.
ஏனென்றால், அத்தகைய சிறப்புப் பிரதிநிதி 13ஆவது திருத்தச்சட்டம் உள்ளிட்ட இலங்கையின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதைக் கண்காணிப்பவராகவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவுபவராகவும் இருப்பார்.

எப்போதும் தம்மைக் கண்காணித்துக்கொண்டிருக்கும் ஒருவர் இருப்பதை எந்த நாடும் விரும்பாது. எனவே இத்தகையதொரு சிறப்புப் பிரதிநிதி நியமிக்கப்படும் சூழல்  உருவானால், அது இரு தரப்பு உறவுகளுக்குச் சவாலானதாகவே அமையலாம்.

அதேவேளை சிறப்புப் பிரதிநிதியை இந்தியா நியமித்தாலும், எந்தப் பாதிப்பும் தமக்கு ஏற்படாது என்று அரசாங்கம் கூறியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவு உள்ள நிலையில், சிறப்புப் பிரதிநிதி நியமனத்தால் எந்தச் சிக்கலும் ஏற்படாது என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.

ஆனால், அது நடைமுறைக்கு வரும்போதுதான், அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தெரியவரும். எவ்வாறாயினும் சர்வதேச விசாரணை,  13ஆவது திருத்தம் குறித்த இந்தியாவின் அழுத்தங்கள் இந்த இரண்டு விவகாரங்களும் அடுத்து வரும் நாட்களில் இலங்கைக்கு சிக்கலைக் கொடுப்பதாகவே இருக்கும்.

இந்த இரண்டு சிக்கல்களிலிருந்தும் உடனடியாக விடுபட அரசாங்கத்தினால் முடியாது. இந்த இரண்டு சிக்கல்களையும் அல்லது சவால்களையும் எதிர்கொள்ள வேண்டுமானால், முதலில் போரில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் மீறல்கள் குறித்து நம்பகமான, சுதந்திரமான உள்நாட்டு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

அடுத்து, 13ஆவது திருத்தச்சட்டத்தின் அத்தனை அதிகாரங்களையும் வடக்கு மாகாணசபைக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். இந்த இரண்டையும் செய்வதற்கு அரசாங்கம் தயாராக இல்லாத நிலையில், இந்தச் சவால்களிலிருந்து அரசாங்கம் தப்பிப்பதும் முடியாததாகவே இருக்கப் போகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X