2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தமிழக மீனவர்கள் கைதும் தத்தளிக்கும் தமிழக அரசியலும்

Kanagaraj   / 2014 ஜூன் 09 , பி.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.காசிநாதன்

தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுவது, தமிழக அரசியல் தலைவர்கள் மத்தியில் முன்பெல்லாம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும். அனைவருமே மத்திய அரசை விமர்சித்து அறிக்கை விடுவார்கள். இலங்கை அரசை கண்டிக்க வேண்டும் என்று குரல் கொடுப்பார்கள்.

ஆனால், இந்த முறை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைந்த பிறகு, தமிழகத்தில் உள்ள தலைவர்கள் மத்தியில் மனமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஒருவித வித்தியாசமான அணுகுமுறை உருவாகியிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி தன் தேர்தல் பிரச்சாரத்தின் போது, வலிமையான மத்திய அரசு இல்லாததால்தான் குஜராத் மற்றும் தமிழக மீனவர்கள் சிரமப்படுகிறார்கள் என்று கூறியிருந்தார்.

அதற்கு ஏற்றாற்போல், அவருடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகளான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம் போன்ற கட்சிகளின் தலைவர்களான வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் போன்றோரும் மோடியின் கருத்தை வழிமொழிந்தார்கள்.

அனைவருமே காங்கிரஸ் அரசின் மீதே இந்தப் பழி அனைத்தையும் தூக்கிப் போட்டார்கள். காங்கிரஸ் அரசு, இலங்கை அரசுடன் நட்பு பாராட்டுகிறது. அதனால்தான் தமிழக மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுகிறார்கள். இலங்கை கடற்படையால் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற தோற்றத்தை மிகப் பலமாக தமிழகத்தில் தோற்றுவித்தார்கள்.

இதற்கு திராவிட முன்னேற்றக் கழகமும் ஆட்சியிலிருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், சற்றும் குறைவில்லாமல் காங்கிரஸ் எதிர்ப்புக் கவசத்தை அணிந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள்.

குறிப்பாக, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதற்கு, காங்கிரஸ் அரசின் மெத்தனம்தான் காரணம் என்பதை மீனவ வாக்காளர்கள் உள்ள பகுதிகளில் எல்லாம் பிரசாரம் செய்தார்.

அது மட்டுமின்றி, அப்போது இருந்த காங்கிரஸ் அரசுக்கு மீனவர்கள் பிரச்சினையில் எண்ணற்ற கடிதங்களை அனுப்பினார்.
இலங்கை மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற காலத்தில், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். மீனவர்களை விடுவிக்கவில்லை என்றால் பேச்சுவார்த்தை கிடையாது என்ற தன் தீர்க்கமான முடிவிற்கு கிடைத்த வெற்றி என்றே பேசினார்.

அ.தி.மு.க.வினரும் சரி, தமிழக ஊடகங்களும் சரி இந்த வெற்றியை ஏதோ மத்திய - மாநில அரசுகளின் முயற்சி என்ற ரீதியில் எடுத்துக் கொள்ளாமல், தமிழக அரசுக்கு மட்டுமே கிடைத்த வெற்றி என்ற ரீதியில்தான் எழுதினார்கள். ஏனென்றால் அது தேர்தல் நேரம்.

ஆனால் இன்று, தேர்தல் முடிந்து புதிய மத்திய அரசு அமைந்து விட்டது. தமிழக கூட்டணிக் கட்சிகள் எல்லாம் பிரசாரம் செய்தது போல், மீனவர்களின் பிரச்சினை குறித்து அக்கறை கொண்டுள்ள அரசு பதவியேற்றுள்ளது. அது மட்டுமின்றி தனித்து ஆட்சி செய்யும் அளவிற்கு வலிமையான அரசு மத்தியில் உருவாகியிருக்கிறது. ஆனாலும் மீனவர்கள் கைது நிற்கவில்லை.
நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, இருமுறை மீனவர்கள் கொத்துக் கொத்தாக கைது செய்யப்பட்டு விட்டார்கள்.

இந்த இரு முறையும் முதலமைச்சர் ஜெயலலிதா புதிய ஆட்சி அமைத்;தாலும், தமிழக மீனவர்கள் நிலைமையில் முன்னேற்றம் இல்லை என்ற ரீதியில் சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அடுத்தமுறை இப்போதும் கடிதம் எழுதியிருக்கிறார்.

முந்தைய காங்கிரஸ் அரசும், மீனவர்கள் கைது செய்யப்படும் போது சில நடவடிக்கைகளை எடுத்தது. அரசு மட்டத்தில் எடுக்கப்பட்ட அந்த நடவடிக்கைகள் பற்றி தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை. பத்திரிக்கைக் குறிப்புகளாக வெளியிடவில்லை. ஆனால், இந்த முறை  உள்ள பா.ஜ.க. அரசிடம் இந்த விடயத்தில் மாற்றம் தெரிகிறது.

முதல்வர் ஜெயலலிதாவின் கடிதம் சென்றவுடன், மத்திய அரசின் சார்பில் வெளியுறவுத்துறை அதிகாரிகள் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகிறார்கள். இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை அறிவிக்கிறார்கள்.

முன்பு போல் தமிழகத்தில், மத்திய அரசுக்கு எந்த கெட்ட பெயரும் வந்து விடக்கூடாது என்பதில், நரேந்திர மோடி தலைமையிலான அரசு மிகத் தெளிவாக இருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

இந்திய வெளியுறவுத்துறையின் நடவடிக்கைகள் அவ்வப்போது பத்திரிக்கையாளருக்கு தெரிவிக்கப்படுவதன் பின்னணி இதுதான். இரண்டாவது முறை பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் ஜெயலலிதா, என் முதல் கடிதத்திற்கு மதிப்பளித்து தமிழக மீனவர்களின் விடுதலைக்கு பாடுபட்டதற்கு நன்றி என்றும் பிரதமரை பாராட்டியுள்ளார்.

அதேசமயத்தில், அடுத்த கைது அவரை மீண்டும் மத்திய அரசுக்கு கடிதம் எழுத வைத்துள்ளது. ஆகவே தமிழக மீனவர்கள் கைது பிரச்சினையும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதும் புதிய அரசு அமைந்த பிறகும் தொடருகிறது.

இந்நிலை எப்போதுவரை தொடரும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. தமிழக முதல்வரைப் பொறுத்தவரை, ஏன் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்ததற்கு காங்கிரஸ் அரசுதான் காரணம் என்பதை வெகு அழுத்தமாக தமிழக மக்கள் மத்தியில் பதிய வைத்துள்ளார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் அரசு அமைந்த பிறகும் கைது தொடர்வது இங்குள்ள அரசியல் கட்சிகளை, குறிப்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கொஞ்சம் திணற வைத்துள்ளது. ஏனென்றால், ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும் போதும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு சாதகமான மத்திய அரசு அமைவதில்லை.

அப்படியில்லையென்றால் சாதகமான மத்திய அரசு காலப்போக்கில் அவருக்கு பாதகமாக மாறி விடுகிறது.
கடந்த மூன்று வருட அ.தி.மு.க. ஆட்சியில், மத்திய அரசுக்கு எதிர்ப்பு என்ற மந்திரத்தை வைத்தே அரசியலை நடத்தி விட்டார்கள். இந்நிலையில் புதிய அரசு அமைந்தவுடன் தமிழகத்திற்கு தேவையான வசதிகளை, வளர்ச்சித் திட்டங்களை பெற முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் அதற்கு நேர் மாறாக தமிழக எம்.பி.க்களின் தயவு இல்லாமலேயே மத்திய அரசு பதவியேற்று விட்டது.

இந்த சூழ்நிலையில், மத்திய அரசுடன் நட்பு பாராட்டி, தமிழகத்திற்கு தேவையான நிதியுதவிகளைப் பெறுவதும் திட்டங்களைப் பெறுவதும் அ.தி.மு.க. அரசின் இலக்காக இருக்க வேண்டும். அதுதான் அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும். ஏனென்றால் இனியும் மத்திய அரசு எதிர்ப்பு என்ற ஆயுதத்தைக் கையிலெடுத்தால் தமிழக மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது என்றுதான் அரசியல் பார்வையாளர்கள், பொதுமக்கள் அனைவருமே நினைக்கிறார்கள்.

அப்படி நட்பு பாராட்டும் பொருட்டே, பிரதமர் நரேந்திர மோடியைச் சென்று சந்தித்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இந்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்தார். ஆனால் அந்த சுற்றில் மீனவர்கள் பிரச்சினை இருப்பதால், அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படியொரு சந்திப்பு நடக்கவில்லை.

இந்நிலையில், மீனவர்கள் கைது பற்றி இப்போது இரண்டாவது கடிதம் எழுதி விட்டார் முதல்வர் ஜெயலலிதா. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதே தமிழக அரசிற்கும் மத்திய அரசுக்கும் பழையபடி மோதலை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் அதிகாரிகள் மத்தியிலேயே ஏற்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.  அப்படியொரு மோதல் உருவாகட்டும் என்றுதான் தமிழக அரசியல் கட்சிகள் காத்திருக்கின்றன.

குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி பதவிக்கு வந்த பிறகு, தமிழக மீனவர்கள் இரு முறை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதி வாய் திறக்கவில்லை. கண்டன அறிக்கையும் விடவில்லை. மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தும் அறிக்கை விடவில்லை.

தி.மு.க. பங்கேற்றிருந்த காங்கிரஸ் அரசை குறை கூறினீர்கள். இப்போதுதான் காங்கிரஸ் அரசு இல்லை. பிரதமர் மோடியின் அரசு இருக்கிறது. தமிழக மீனவர்கள் விடுதலை பற்றிப் பேச வேண்டியது அ.தி.மு.க. அரசின் பொறுப்பு என்று நினைத்து அமைதி காக்கிறது அந்தக் கட்சி. அது மட்டுமல்ல, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாக்குறுதியை நம்பித்தான் தமிழக மீனவர்கள் ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க.விற்கு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்தார்கள் என்று கருதுகிறது தி.மு.க. தலைமை.

அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, மீனவர்கள் கைது பற்றி அறிக்கை விடாமல் இருப்பதற்கு அதுவும் ஒரு முக்கியக் காரணம். இராமேஸ்வரம் மீனவர்கள் மட்டும்தான், எங்கள் மீனவர்களை விடுதலை செய்யவில்லையென்றால், கடலுக்குப் போக மாட்டோம் என்று அறிக்கை விடுத்துள்ளார்கள். மற்றபடி தி.மு.க. உள்ளிட்ட எந்த அரசியல் கட்சியும் மீனவர்கள் கைது பற்றி பெரிய அளவில் ஆர்பாட்டமோ, ஆவேச அறிக்கைகளையோ விடவில்லை என்பது தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்.

இந்த மாற்றம் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே உள்ள உறவில், திடீர் மோதலை உருவாக்கும் சக்தி மிக்கது. இன்னும் இரு வருடங்களில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறது அ.தி.மு.க. இன்னும் சொல்லப் போனால் ஒன்றரை வருடம்தான் இருக்கிறது. மீதியுள்ள ஆறு மாதம் தேர்தல் பரபரப்பில் ஓடி விடும்.
இந்நிலையில், மீனவர்கள் கைது தொடர்ந்து அரங்கேறினால், மத்தியில் இப்போது வந்துள்ள அரசும் பலவீனமான அரசு என்ற பிரசாரத்தைக் கையிலெடுப்பதைத் தவிர அ.தி.மு.க.விற்கு வேறு வழியில்லை. ஆனால், அப்படியொரு பிரசாரத்தை அசுர வேகத்தில் கொண்டுசெல்ல தடைக் கல்லாக இருப்பது ஒன்றே ஒன்றுதான்.

முன்பிருந்த காங்கிரஸ் அரசு கூட்டணி அரசு. ஆனால், இப்போதுள்ள பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு தனி அரசு. அதாவது எந்த கூட்டணிக் கட்சிகளின் தயவும் இன்றி தன் கட்சியின் சொந்த பலத்தில் இருக்கும் அரசு. இது போன்ற அரசுகள் இருக்கும் போது பொதுவாக மாநில அரசுகள், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மத்திய அரசை விமர்சிப்பதை இதுவரை தவிர்த்தே வந்திருக்கின்றன.

அந்த மாதிரி நெருக்கடிதான் இப்போது அ.தி.மு.க. அரசுக்கும் இருக்கிறது.  அதற்காக, தமிழக மீனவர்கள் கைது பிரச்சினையில் தன் அரசுக்கு ஏற்படப் போகும் கெட்ட பெயரை தடுக்காமல் இருப்பாரா தமிழக முதல்வர் ஜெயலலிதா? இந்தக் கேள்விக்கான பதிலில்தான் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் உள்ள அடுத்த கட்ட மோதலுக்கு அச்சாரமாக அமையும் ஆபத்து இருக்கிறது.

ஆக, தமிழக மீனவர்கள் கைது பிரச்சினை ஒரு புறம் இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையே உள்ள வெளியுறவுப் பிரச்சினை என்றாலும், இன்னொரு புறம் தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையே உள்ள தீராத தலைவலியாக மாறும் அபாயம் காத்திருக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X