2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கல் முதலாவது கல்லல்ல

Kanagaraj   / 2014 ஜூன் 23 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஐயூப்

அளுத்கமை, பேருவளை மற்றும் வெலிபென்ன ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மற்றும் திங்கட்கிழமை இடம்பெற்ற தீவைப்பு, கொலை மற்றும் தாக்குதல்கள் அந்த சேதமான உயிர்களுக்கும் உடமைகளுக்கு மட்டும் சேதம் விளைவிக்கவில்லை. அவற்றினால் நாட்டுக்கும் சமூகத்துக்கும் சமயங்களுக்கும் விளைவிக்கப்பட்ட சேதம் மிகப் பாரதூரமானதாகும்.

நாட்டுக்கு விளைவிக்கப்பட்ட சேதத்தை நாட்டின் தலைவர்களில் எத்தனை பேர் உணர்ந்து கொண்டார்கள் என்பது சந்தேகமே. இந்த அழிவுக்கு காரணமாகவிருந்த குற்றவாளிகளை குற்றவாளிகளாக காண்பதில் அவர்கள் காட்டும்; தயக்கமும் சம்பவங்களை கண்டிக்கவோ அல்லது குறைந்த பட்சம் அவற்றைப் பற்றி கவலை தெரிவிக்கவோ அவர்கள் காட்டும் தயக்கமும் பல தலைவர்களின் நோக்கங்கள் மீது சந்தேகத்தை எழுப்புகிறது.

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாடு முழுவதிலும் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களின் போதும் இதே போன்றதோர் நிலைமை காணப்பட்டது. அந்த தாக்குதல்களின் ஐந்தாவது நாள் தான் அப்போதைய ஜனாதிபதியாகவிருந்த ஜே.ஆர். ஜயவர்தன நிலைமையைப் பற்றி வாய் திறந்தார். ஜூலை 29ஆம் திகதி வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜயவர்தன, பாதிக்கப்பட்ட மக்களின் தலைவர்களான தமிழ் தலைவர்களை குறை கூறினாரே தவிர, ஏற்கெனவே இடம்பெற்றிருந்த அழிவை செய்தவர்களை கண்டித்து ஒரு வார்த்தையேனும் கூறவில்லை.

ஏற்கெனவே அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, 54 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் அமைப்புகளும், ஐ.நா. மனித உரிமை உயர் ஸ்தானிகர் நவநீதம் பிள்ளையும் அளுத்கமை, பேருவளை மற்றும் வெலிபென்ன தாக்குதல்களை கண்டித்துள்ள அதேவேளை, தமிழ்நாட்டிலுள்ள முஸ்லிம்களும் பிரிட்டிஷ் முஸ்லிம்களும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறார்கள்.

இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும் தமது பிரஜைகளுக்கு அவுஸ்திரேலியா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆறு முஸ்லிம் நாடுகளினதும் அமெரிக்காவினதும் தூதுவர்கள், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமை சந்தித்து நிலைமையைப் பற்றி உரையாடியிருக்கிறார்கள்.

தற்போது ஐ.நா. மனித உரிமை பேரவை ஜெனீவாவில் கூடியிருக்கிறது. இம் முறை அதன் கூட்டத் தொடர் ஆரம்பமான தினமே, இலங்கையின் மனித உரிமை பிரச்சினைகளைப் பற்றிய விசாரணை அறிவிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையொன்றே அந்த விசாரணைக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. அந்தப் பிரேரணையிலும் இலங்கையில் சிறுபான்மை மதத்தவர்கள் இம்சிக்கப்படுவதாக கூறப்பட்டது. இப்போது அளுத்கமை பிரச்சினை இலங்கைக்கு எதிரான அந்தக் குற்றச்சாட்டுகளை மேலும் வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமேயில்லை.

இவை எதுவும் நாட்டுக்கு நல்லது என்று கூற முடியாது. ஆனால், சம்பந்தப்பட்டவர்களோ அல்லது சம்பந்தப்பட்ட தலைவர்களோ அதனை உணர்ந்ததாக தெரியவில்லை. அவர்களில் பலர் சம்பவங்களை கண்டிப்பதோடு நியாயப்படுத்தவும் முயற்சி செய்கிறார்கள். இந்த சம்பவங்களால் நாட்டில் சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டு வரும் குரோத மனப்பான்மை அச் சமூகங்களின் வளர்ச்சிக்கே தடையாக அமையும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, பொது பல சேனா போன்ற தீவிரவாத அமைப்புக்களின் செயற்பாடுகளால் சகல மதத்தவர்களின் மனங்களும் வெறுப்பினாலும் குரோதத்தினாலும் நிரப்பப்பட்டுள்ளன. இது அந்தந்த சமயங்களின் நோக்கங்களுக்கே முரணானதாகும். குறிப்பாக தாக்குதல்களை நடத்துவோரின் சமயமான பௌத்தத்தின் மெத்தா என்ற காருண்யக் கொள்கையை இத் தாக்குதல்கள் கேளிக்கூத்தாகின்றன. எனவே தான் இச் சம்பவங்கள் நாட்டுக்கும் சமூகத்திற்கும் சமயங்களுக்கும் தீங்கிழைக்கின்றன என்று ஆரம்பத்தில் கூறினோம்.

இன்றும் சில அதி தீவிரவாத சிங்கள தலைவர்கள், அளுத்கமை பகுதியில் இடம்பெற்ற அழிவுகளுக்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்று நிரூபிக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறார்கள். அதற்காக தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இரண்டு சாரதிகளுக்கு இடையில் இடம்பெற்ற பிரச்சினையை காரணம் காட்டுகிறார்கள். தாக்குதல்கள் இடம்பெற்ற முதல் நாள் முஸ்லிம்களே முதலாவது கல்லை எறிந்தார்கள் என்று கூறுகிறார்கள்.

அந்த முதலாவது கல் எறியப்படும் காட்சியைக் கொண்ட வீடியோ படமொன்று இப்போது சமூக வலைத்தளங்களில் உலாவித் திரிகிறது. அந்த காணொளியை யார் எடுத்தார்கள் அந்த முதலாவது கல்லை யார் எறிந்தார் என்பதும் இன்னமும் தெளிவாகவில்லை.

ஆனால், மேற்படி சாரதிகளுக்கு இடையிலான சண்டை இடம்பெறுவதற்கு முன்னர் இரண்டு வருடங்களாக முஸ்லிம்களுக்கு எதிரான ஆத்திரமூட்டல்கள் இடம்பெற்று வந்தமையும் தாக்குதல்கள் இடம்பெற்று வந்தமையும் சகலரும் அறிந்த விடயமாகும். அந்த முதலாவது கல் எறியப்படும் முன்னர் வன்முறையில் ஈடுபடுவதில்லை என்ற உத்தரவாதத்தை தாம் பொது பல சேனாவிடமும் அளுத்கமை முஸ்லிம்களிடமும் பெற்றதாக, பொலிஸ் மா அதிபர் இலங்ககோன் கடந்த வாரம் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாடொன்றின் போது கூறினார்.

அதாவது, அந்த முதல் கல் எறியப்படாவிட்டாலும் மற்றொரு கல் அல்லது வேறெதாவது எத்தரப்பினரிடமிருந்தும் வரக் கூடிய சாத்தியக்கூறுகள் இருந்ததை பொலிஸ் மா அதிபர் ஏற்றுக் கொள்கிறார். எனவே, அதனை தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுத்தார்களா என்பதே எழும் முக்கியமான கேள்வியாகும்.

அந்த முதலாவது கல்லுக்கு முன்னர் பல பள்ளிவாசல்களுக்கும் முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கும் எத்தனையோ கற்கள் எறியப்பட்டன. அளுத்கமவில் எறியப்பட்ட முதலாவது கல் எவர் எறிந்தாலும் அது தற்போதைய நிலைமையை உருவாக்கிய முதலாவது கல்லல்ல. ஆனால், முஸ்லிம்கள் பொறுமை காத்ததன் காரணமாக பிரச்சினை பெரிதாக வளரவில்லை. குண்டர்கள் நினைத்திருந்தால் முஸ்லிம்கள் பொறுமை காத்த இடங்களிலும் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தி, இது போன்ற அழிவை ஏற்படுத்தியிருக்க முடியும். இங்கும் அந்த கல் எறியப்படாவிட்டாலும் இந்த அழிவு ஏற்படாது என்ற உத்தரவாதம் இருக்கவில்லை. அதனைத் தான் பொலிஸ் மா அதிபர் கூறுகிறார். எனவே அந்தக் கல்லை மட்டும் திட்டுவதிலோ அல்லது அதன் மீது முழுப் பொறுப்பையும் சுமத்துவதிலோ அர்த்தமில்லை.

ஆனால், அந்த முதலாவது கல்லை முஸ்லிம்கள் தான் எறிந்தார்கள் என்றால் அது எந்தளவுக்கு குண்டர்களுக்கு உதவியது என்பதை அவர்களும் உணர்ந்திருப்பார்கள். அதேவேளை வாகனங்களை ஓட்டும் போதும் நிறுத்தும் போதும் ஏனைய நடவடிக்கைகளின் போதும் அவர்கள் குழப்பங்களுக்காக காத்திருப்பவர்களுக்கு ஆயுதம் வழங்க முடியும் என்பதும் இந்த சமபவங்கள் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

ஒரு சம்பவம் நடந்து பதற்ற நிலைமை ஏற்பட்டதன் பின்னர், அதே இடத்தில் பொது பல சேனா போன்ற அமைப்பொன்றுக்கு கூட்டம் ஒன்றை நடத்த இடமளித்தமை தொடர்பாக, இப்போது பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. பௌத்தர்களின் பொசொன் நிகழ்ச்சியொன்றுக்காகவே பொது பல சேனா பிக்குகள் அன்று அளுத்கமைக்குச் சென்றார்கள் என் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஜூன் மாதம் 19ஆம் திகதி ஊடகத்துறை அமைச்சில்  நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாடொன்றின் போது கூறினார். ஆனால், சாரதிகளுக்கிடையில் சண்டை இடம்பெற்றதன் பின்னர் ஏற்படவிருந்த கலவரம் ஒன்றை தடுப்பதற்காகவே;ர அளுத்கமை கூட்டத்தை நடத்தியதாக பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் பி.பி.சி சிங்கள் சேவைக்கு கூறியிருக்கிறார். எவர் கூறுவது உண்மை.

அதேவேளை, இரண்டு நாட்களுக்கு முன்னர் பிக்கு ஒருவர் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அங்கு இது போன்றதோர் கூட்டத்தை நடத்தியமை பொருத்தமற்றச் செயலென பொதுபல சேனாவின் தவிசாளர் கிரம விமலஜோதி தேரர் பி.பி.சி சிங்கள சேவைக்கு தெரிவித்திருந்தார். அவர், பொது பல சேனாவின் செயல்களில்  சில காலமாக கலந்து கொள்வதில்லை.

அமைச்சர் ரம்புக்வெல்ல கூறுவதைப் போல் அங்கு பொசொன் நிகழ்ச்சியொன்று தான் நடந்தது என்று எவரும் கூறுவதில்லை. பொசொன் நிகழ்ச்சியொன்று தான் நடந்தது என்றால் குழப்பங்களில் ஈடுபடுவதில்லை என்று இரு சாராரிடமிருந்து உத்தரவாதத்தை பெற்றதாக பொலிஸ் மா அதிபர் கூறத் தேவையில்லை.

இந்தக் கலவரங்களுக்கு சவூதி அரேபியாவிலிருந்தும் நோர்வேயிலிருந்தும் உதவி பெறும் தீவிரவாதிகளே பொறுப்புக் கூறு வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச கூறுகிறார். முஸ்லிம்களிடையே தீவரவாதிகள் இருப்பதாக அவர் மட்டுமல்ல பல சிங்கள தலைவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அவ்வாறான தீவிரவாதிகள் முஸ்லிம்கள் மத்தியில் இருந்தால் பொது பல சேனா, சிஹல ராவய மற்றும் ராவணா பலய போன்ற அமைப்புக்கள் இரண்டாண்டுகளாக ஆத்திரமூட்டல்களில் ஈடுபட்டு வந்த போது அந்த தீவிரவாதிகள் செயற்படாமல் இருந்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக கடந்த வருடம் சிஹல ராவய அமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்மொன்றின் போது பன்றியின படத்தின் மீது அல்லா என்று எழுதிய பதாகையொன்றை எடுத்துச் சென்றார்கள். ஆனால், முஸ்லிம்கள் அதற்கும் பொறுமையாக இருந்தார்கள். எங்கே தீவிரவாதம்?
முஸ்லிம்கள் மத்தியில் தீவிரவாதிகள் இல்லாமல் இல்லை. ஆனால் அவர்கள் சமய அனுஷ்டான விடயங்களில் தான் தீவிரவாதிகளாக செயற்படுகிறார்கள். அரசியல் விடயங்களிலோ அல்லது ஏனைய சமூகங்களுடனான உறவுகளின் போதோ அவர்கள் ஏனைய முஸ்லிம்களைப் போல் தான் நடந்து கொள்கிறார்கள்.

நோர்வே உதவி பெறும் தீவிரவாதிகள் என்று வீரவன்ச, பொது  பல சேனாவையே குறிப்பிடுகிறார். 2011ஆம் ஆண்டு ஐந்து பிக்குகள் உட்பட எட்டு பேர் நோர்வே நாட்டுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். அங்கு அவர்கள் நோர்வே அமைச்சராக இருந்த எரிக் சொல்ஹெய்ம், சில தமிழ் அமைப்புக்கள் மற்றும் பல நோர்வே அதிகாரிகளை சந்தித்தனர். பின்னர் இதே குழுவினர் தான் 2012ஆம் ஆண்டு பொது பல சேனாவை ஆரம்பித்தனர். அந்த குழுவினரின் நோர்வே விஜயத்தை அடுத்து சமாதானத்திற்கான திட்டமொன்றுக்காக நிதி உதவி வழங்கப்பட்டதாக இலங்கையிலுள்ள நோர்வே தூதரகமும் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்திருந்தது. இதைத் தான் வீரவன்ச கூறுகிறார்.

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு பின்னால் அரசாங்கம் இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி கூறுகிறது. இதற்கு பதிலளித்த வீரவன்ச எதிர்காலத்தில தேர்தல்கள் இருக்கும் நிலையில் முஸ்லிம்களை பகைத்துக் கொள்வதில் அரசாங்கம் அடையும் இலாபம் என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார். அரசாங்கத்திற்கும் பொது பல சேனாவுக்கும் இடையிலான உறவு தெளிவாக இல்லை தான். ஆனால், வீரவன்சவின் வாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. ஏனெனில், முஸ்லிம்களை பகைத்துக் கொள்ள அரசாங்கத்திற்குத் தேவையில்லாவிட்டாலும் முஸ்லிம்களா சிங்களவர்களா என்ற நிலை ஏற்பட்டால் அரசாங்கம் சிங்களவர்களின் பக்கத்தையே எடுக்கும்.

அதனை பொது பல சேனா போன்ற அமைப்புக்களும் ஹெல உறுமய போன்ற கட்சிகளும் அறிந்திருக்கின்றன. எனவே, அவர்கள் அச்சமின்றி இது போன்ற கலவரங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். அதேவேளை அரசாங்கத்திற்குள்ளும் தீவிர இனவாதிகள் இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

ஆனால், எல்லாவற்றையும் அரசியல் கண் கொண்டு பார்க்கும் நிலைமை நாட்டில் இருப்பதால் அரசாங்கம் நினைத்தால் இவற்றை அடக்கலாம்;. அதனால் அரசியல் ரீதியாக அரசாங்கத்துடன் இருக்கும் மக்கள் எவரும் அரசாங்கத்தை விட்டு விலகுவதில்லை. உதாரணமாக போர் வெற்றிக்கு காரணமாக இருந்த இராணுவத் தளபதியையே சிறையிலிட்டும் அரசியல் கண் கொண்டு எதையும் அணுகுவதால் பெரும்பான்மையான மக்கள் அவருக்காக குரல் எழுப்ப முன்வரவில்லை.

எவ்வாறாயினும் சம்பந்தப்பட்டோர் வாயளவில் எதைக் கூறினாலும் இனி மேல் இது போன்ற தாக்குதல்கள் இடம்பெறாது என்ற உத்தரவாதம் இன்னமும் நாட்டு மக்களுக்கு கிடைக்கவில்லை. முஸ்லிம் அரசியல்வாதிகளாலும் எதையும் செய்யமுடியவில்லை அரசாங்கம் அவர்களை கணக்கிலெடுப்பதுமில்லை. இறை நம்பிக்கைக்கு புறம்பாக சர்வதேசத்தை அணுகுவதும் அடுத்த தேர்தல் வரட்டும் என்ற ரோஷமும் மட்டுமே முஸ்லிம்களிடம் எஞ்சியுள்ளதாக தெரிகிறது.

ஐ.நா மனித உரிமை உயர் ஸ்தானிகர் அலுவலகத்தால் நடத்தப்படவிருக்கும் விசாரணைக்கு எதிராக, அரசாங்கம் தாமாக முன்வராது பின் வரிசை உறுப்பினர்கள் மூலம் கொண்டு வந்த நாடாளுமன்ற பிரேணை கடந்த வாரம் இடம்பெற்ற மற்றொரு முக்கிய நிகழ்வாகும். இது மற்றைய கட்சிகளை கலந்தாலோசித்து விசாரணையை எதிர்க் கொள்வதற்காக கொண்டு வரப்பட்ட பிரேரணையல்ல. மற்றைய கட்சிகளை கலந்தாலோசித்து விசாரணையை எதிர்க் கொள்வதாக இருந்தால் அரசாங்கம் விசாரணையை நிராகரிப்பதாக முன்கூட்டியே மனித உரிமை பேரவையில் கூறத் தேவையில்லை.

இது அரசியல் நோக்கம் கொண்ட பிரேரணையாகும். இது ஏனைய கட்சிகள் துரோகிகள் என்று கூறுவதற்காக கொண்டு வரப்பட்டதாகும். அதேவேளை, ஏனைய கட்சிகளும் அதேபோல் அரசியல் ரீதியாகவே அதனை எதிர் கொண்டன. இது நாட்டைக் காட்டிக் கொடுக்கும் வண்ணம் ஜனாதிபதி ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கீ-மூனுடன் 2009ஆம் ஆண்டு செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் மேற்கொள்ளப்படும் விசாரணை என்று கூறிய ஐ.தே.க. அதனால் அரசாங்கத்தை ஆதரிக்க முடியாது என்றும் அதேவேளை, ஐ.நா. விசாரணையையும் ஆதரிக்க முடியாததினால் அதையும் ஆதரிக்க முடியாது என்றும் கூறி நாடாளுமன்ற பிரேரணையின் போது வாக்களிப்பை தவிர்த்துக் கொண்டது.

அரசாங்கம் தென் பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களையும் உட்;படுத்தி உள்நாட்டு விசாரணையொன்றை நடத்த விரும்பாததால் தாம் அரசாங்கத்தின் நாடாளுமன்ற பிரேரணையை ஆதரிக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணி வாக்களிப்பின் போது சபையில் இருக்கவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் அளுத்கமை தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த விவாதம் நடைபெற்ற நாட்களில் நாடாளுமன்றத்தை பகிஷ்கரித்தது. அதன் மூலம் அக் கட்சியும் நாடாளுமனற விவாதத்தையும் வாக்களிப்பையும் தவிர்த்துக் கொண்டது. அளுத்கமை தாக்குதல்களுக்கு எதிர்ப்பையும் தெரிவித்துக் கொண்டது. எனவே அரசாங்கத்தின் நோக்கம் நிறைவேறியதாக கூற முடியாது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X