2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஹிந்தி திணிப்பு

Kanagaraj   / 2014 ஜூன் 23 , பி.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொழிப்போர் மீண்டும் தலை தூக்கி விடுமோ என்று தமிழகத்தில் அனைவரும் அச்சப்படும் சூழ்நிலை அரங்கேறியது. இலங்கை தமிழர்களுக்காக நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் தமிழுக்காக தொடங்கி விடுமோ என்ற எச்சரிக்கை உணர்வு சட்டம், ஒழுங்கில் கவனம் செலுத்த வேண்டிய சீனியர் அதிகாரிகளுக்கே ஏற்பட்டது.

ஹிந்தி மொழியை தமிழகத்தில் திணிப்பது என்பது அந்த அளவிற்கு தமிழகத்தில் உள்ளவர்களின் உணர்வுகளோடு ஒன்றிப் போன பிரச்சினை என்பதுதான் இதற்கு காரணம். ஹிந்தி திணிப்பை எதிர்த்து 1938லிருந்து ஏகப்பட்ட போராட்டங்களைப் பார்த்தது தமிழகம். ஹிந்தியை எதிர்த்ததற்காக முதலில் சிறை சென்ற தலைவர் மூக்கையாத் தேவர் என்பது வரலாறு.

அவர் காலகட்டத்தில்  பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி, வைகோ என்று அனைவருமே இந்த போராட்டக் களத்தில் ஈடுபட்ட தலைவர்கள்தான். இன்றைக்கும் தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற கல்லக்குடி போராட்டம் படு பேமஸ்.  தமிழக அரசியல் தலைவர்களுடன் இணைந்து போன இந்தி எதிர்ப்புப் போராட்டம், 1965களில் பெரும் எழுச்சி கொண்ட மாணவர் இயக்கமாகவே மாறி, காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் இருந்து அகன்று போவதற்கு முழு முதல் காரணமாக இருந்தது. அன்றைக்கு ஆட்சியை இழந்த காங்கிரஸ் இது வரை தமிழகத்தில் தலை தூக்க முடியவில்லை.

இப்படி எரிமலை போல் இருக்கும் மொழிப் பிரச்சினையில் திடீரென்று, இந்திய அரசின் பேஸ்புக், டுவிட்டர், ப்ளாக்ஸ், கூகுள் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் ஹிந்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவு, தேன் கூட்டில் கல் எறிந்த கதையாக மாறியது. இந்த உத்தரவு பற்றி அறிந்தவுடன் முதலில் இதை எதிர்த்துக் கண்டனக் குரல் எழுப்பியவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அவர் அறிக்கை சற்று கடுமையாகவே இருந்தது.

ஏனென்றால் ஹிந்தி மொழிப் போராட்டத்திற்காக சிறை சென்றவர். அடக்குமுறையைச் சந்தித்தவர். தன் சட்டமன்ற உறுப்பினர் பதவியையே கூட இழந்தவர். அவர் வெளியிட்ட கண்டன அறிக்கையில்,  1965 ஆம் ஆண்டில் ஹிந்தி ஆட்சி மொழிச் சட்டம் நடைமுறைக்கு வருமென்று அறிவித்த போது ஏற்பட்ட பேரெழுச்சியையும், கிளர்ச்சியையும் சரித்திரம் விரிவாகப் பதிவு செய்து வைத்திருக்கிறது. மொழிப் போர்க்களம் இன்னும் உலர்ந்து போய் விடவில்லை என்று 91 வயதிலும் சற்று கோபமாகவே எச்சரித்தார்.

அது மட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சியையும், சமூக மேம்பாட்டையும் முன்னெடுத்துச் செல்வதிலேயே கருத்தூன்றிச் செயல்பட வேண்டும் என்பதே நாட்டின் நலன் நாடுவோர் அனைவரது விருப்பமும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு அறிவுரை செய்வது போன்றும் கூறி, தொடர்பு மொழிப் பிரச்சினையில் அவசரப்பட்டு ஈடுபாடு காட்டுவது கால விரயத்தையும், கவனச்சிதறலையும் ஏற்படுத்தி விடும் என்றும் சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தில் 1938 களில் ஆரம்பமாகி 1965களில் உச்சத்திற்குச் சென்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்ட வரலாற்றை புரிந்து வைத்துள்ள நரேந்திரமோடி உடனடியாக களத்தில் இறங்கினார். அந்த உத்தரவு இந்தியாவில் உள்ள ஹிந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஹிந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைத் திணிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று அவசர அவசரமாக தெளிவுபடுத்தினார்.

பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு தமிழகத்தில் மீண்டும் மொழிப்போர் துவங்காமல் தடுத்தது. ஆவேசமடைந்த தலைவர்கள் அமைதியானார்கள். தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு அவசரக் கடிதம் எழுதி இந்தி திணிப்பை கண்டித்தார்.

அவரைத் தொடர்ந்து  தமிழகத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் குறிப்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எப்போதும் போல் சற்று உணர்ச்சிப் பிழம்பாக மாறி கண்டித்தார். ஹிந்தி பேசாத மாநிலங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்று அறிவிப்பு வெளிவந்தாலும், மத்திய அரசுக்கு ஹிந்தியை எப்பாடு பட்டாவது வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதோ என்கிற அச்சத்தை ஹிந்தி பேசாத மக்கள் மத்தியில், குறிப்பாக தமிழகத்தில் உருவாக்கியிருக்கிறது.

இப்படியொரு திடீர் சலசலப்பு உருவாக இப்போது ஆட்சிக்கு வந்துள்ள பா.ஜ.க. மட்டும் காரணமல்ல. முன்பிருந்த காங்கிரஸ் அரசுதான் முதல் காரணம் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. விட்ட குறை தொட்ட குறை என்பது போல் ஆட்சியை விட்டுச் செல்லும் நேரத்தில் கூட தமிழகத்திற்கு தொல்லை தரும் இந்த உத்தரவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெளியிட்டு விட்டுத்தான் போயிருக்கிறது.

அதுவும் குறிப்பாக, 16வது நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, மார்ச் 10ம் திகதி இப்படியொரு உத்தரவை வெளியிட்டிருந்தது. இந்திய உள்துறை அமைச்சகம். அதற்கு அமைச்சராக அப்போது இருந்தவர் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான  சுஷில் குமார் ஷிண்டே! இப்படி காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை முதலில் சுட்டிக்காட்டிய பெருமை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குத்தான் சேரும். அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில்தான் இந்த விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. 

முதல்வர் ஜெயலலிதா  பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதிய கடிதத்தில், 1968லிருந்து ஹிந்தி பேசாத மாநிலங்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையில் உள்ள கடிதப் போக்குவரத்து ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்றிருக்கும் விதியைச் சுட்டி மத்திய அரசு இதில் அவசரம் காட்டக் கூடாது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூட தான் முக்கியமாகப் பங்கேற்ற அரசில்தான் இப்படியொரு உத்தரவு பிறப்பக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொண்டராகத் தெரியவில்லை.

ஏனென்றால் அவர் வெளியிட்ட அறிக்கையில், இது போன்ற விஷயங்களில் பா.ஜ.க. அரசு கவனமுடன் செயல்பட வேண்டும். ஏனென்றால் ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்ற மாநிலம் தமிழகம் என்ற ரீதியில் கருத்துச் சொன்னார். ஆனால் இந்த மொழிச் சர்ச்சைக்கு மீண்டும் பூமி பூஜை நடத்தியது காங்கிரஸ் தலைமையில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான்!

காங்கிரஸ் ஆட்சியில் வெளியிடப்பட்ட உத்தரவினை வலியுறுத்தி பா.ஜ.க. ஆட்சியில் இப்போது கடிதம் எழுதப்பட்டதுதான் இந்த சர்ச்சை வெளிச்சத்திற்கு வரக் காரணமாக அமைந்தது.  தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் ராஜ் நாத் சிங், ஹிந்தி பெல்ட் மாநிலங்களின் தாய் என்று அழைக்கப்படும் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து வந்தவர். இதைச் சாதகமாகப் பயன்படுத்தி  நரேந்திரமோடி பதவியேற்ற மறு தினமே இப்படியொரு விவகாரமான உத்தரவை போட்டிருக்கிறார்கள்.

மோடி பதவியேற்றது மே 26 ஆம் திகதி. ஹிந்தி திணிப்பு உத்தரவு வெளியானது மே 27 ஆம் திகதி. உள்துறை அமைச்சர் பதவியேற்ற உடனே போடப்பட்டுள்ள இந்த உத்தரவின் பின்னனி என்ன? என்று பார்த்தால்  தங்களுக்கு இப்போது ஹிந்தி பெல்ட் மாநிலங்களான உத்தரபிரதேசம், பீஹார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்றவற்றில் கிடைத்துள்ள வெற்றியை தக்க வைத்துக் கொள்ள உதவும் என்று பா.ஜ.க. கருதியிருப்பது காரணமாக இருக்கலாம் என்று நம்ப முடிகிறது.

இது அக்கட்சிக்கு ஹிந்தி பேசும் மாநிலங்களில் பெரிய நன்மையை அடுத்த தேர்தலில் கொடுத்து விட முடியாது. ஆனால் இந்த உத்தரவு தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு பொல்லாப் பகையை ஏற்படுத்தி விடும். அது மட்டுமல்ல, கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலுங்கானா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களிலும், புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசத்திலும் பா.ஜ.க.வின் இமேஜ், ஹிந்தி வெறிக் கட்சி என்ற தோற்றத்தைக் கொடுத்து விடும். 2016ல் ஆட்சியைப் பிடிப்போம் என்று தமிழகத்தில் பேசத் தொடங்கியுள்ள பா.ஜ.க. வுக்கு 1965களில் காங்கிரஸýக்கு ஏற்பட்ட ஒட்டு மொத்த வெறுப்பை தமிழகத்தில் பெற்றுக் கொடுத்து விடும்.

ஏனென்றால் இந்த முறை பா.ஜ.க. வெற்றி பெற்றது அக்கட்சியின் அடிப்படைக் கொள்கையின் அஸ்திவாரத்தில் அல்ல.  ராமர் கோயில் கட்டுவோம் என்றோ, இட ஒதுக்கீட்டில் சீர்திருத்தம் செய்வோம் என்றோ, ஹிந்தி மொழியை வளர்ப்போம் என்றோ , பொதுச் சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்றோ பிரதானமாக பிரச்சாரம் செய்து வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வரவில்லை. அதற்கு மாறாக பொருளாதார வளர்ச்சி, ஊழலற்ற அரசாங்கம், நிர்வாகத்திறன் கொண்ட அரசாங்கம் போன்ற வித்தியாசமான வாக்குறுதிகளை முன் வைத்து களத்தில் பிரச்சாரம் செய்தது.

 அதனால் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவைப் பெற்று  ஆட்சிக்கு வந்திருக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி. ஏறக்குறைய 25 வருடங்களுக்கும் மேற்பட்ட கூட்டணி ஆட்சி முறையை மத்தியில் முறியடித்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பா.ஜ.க. கைப்பற்றி இருப்பதற்கும் இதுதான் முக்கியப் பின்னனி.

நிர்வாகத்தை சீர்திருத்த வேண்டிய மிகச்சீரிய கடமையில் கவனம் செலுத்த வேண்டிய பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு  பொது சிவில் சட்டம் பற்றி விவாதம், ரயில் கட்டண உயர்வு,இந்தி மொழியை வளர்க்க புது யுக்தி, என்றெல்லாம் திசை மாறக்கூடாது என்பதே பா.ஜ.க.விற்கு வாக்களித்தவர்களின் மனமாக இருக்க முடியும்.

ஏனென்றால், வரவு-செலவுத்திட்டத்திற்கு முன்பு வெளியிட்ட காங்கிரஸின் கட்டண உயர்வுகளை எதிர்த்த பா.ஜ.க. இப்போது அது தலைமையிலான அரசின் பட்ஜெட்டிற்கு முன்பே,  ரயில் கட்டண உயர்வு அறிவித்திருக்கிறது. அதுவும் 14 சதவீதத்திற்கு மேல் கட்டண உயர்வு.  மஹாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் காங்கிரஸாரின் மாபெரும் போராட்டத்திற்கு இப்போதே இந்த ரயில் கட்டண உயர்வு தீணி போட்டிருக்கிறது.

பொது சிவில் சட்டம் பற்றிய பா.ஜ.க.வின் கருத்துக்கள், காஷ்மீரில் அனல் பறக்கும் விவாதத்திற்கு விதை போட்டிருக்கிறது. ஹிந்தியை வளர்க்க எடுத்த பா.ஜ.க. முயற்சி தமிழகம் போன்ற மாநிலத்தில் பதற்றத்தை உருவாக்கி, எந்த நேரத்திலும் இந்தி திணிக்கப்படுமோ என்ற கவலையை அனைவர் மனதிலும் உருவாக்கியிருக்கிறது.

இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவசரப்பட்டு தொடர்பு மொழிப் பிரச்சினையில் ஈடுபாடு காட்டுவது காலவிரயத்தையும், கவனச்சிதறலையும் ஏற்படுத்தும், என்று மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசை உஷார் படுத்தியிருக்கிறார். பிரதமர் நரேந்திரமோடிக்கும் சேர்த்தை ஆலோசனை வழங்கியிருக்கிறார் கலைஞர் கருணாநிதி என்றே இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதே போல் முதல்வர் ஜெயலலிதாவும், தமிழை இந்தியாவின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக ஆக்கினால் அனைத்து மொழிகளையுமே மத்திய அரசின் சமூக வலைதளங்களில் பயன்படுத்தலாம் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் இருக்க வேண்டும், என்பது தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கோரிக்கை.
இதை இப்போது பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்திலும் வலியுறுத்தியிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

 ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவோ இந்தச் செயல் இந்திய ஒருமைப்பாட்டிற்கே கேடாக முடியும், என்று எச்சரித்ததோடு மட்டுமில்லாமல், ஹிந்தித் திணிப்பை எதிர்த்து ரத்தமும், கண்ணீரும் சிந்தி மகத்தான போராட்டங்களை தமிழகம் நடத்தியுள்ளது. ஆகவே தூங்கும் வேங்கையை இடறும் செயல்களை மத்திய அரசு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
கலைஞர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா, வைகோ ஆகிய மூவரில் கோபம் கொப்பளிக்க இருந்த அறிக்கை வைகோவின் அறிக்கை. அதுவும் குறிப்பாக பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியாக இருக்கும் ம.தி.மு.க. தலைவரிடமிருந்து வெளிவந்த அந்த அறிக்கை தமிழ் வைகோவிற்கு எவ்வளவு உணர்ச்சி மிக்கது என்பதை எடுத்துக் காட்டியது.

 அதையெல்லாம் விட முக்கியமாக, தமிழகத்தில் பிரதமராக மோடிக்கு வாக்களியுங்கள் என்று பா.ஜ.க.வுடன் கைகோர்த்து நின்ற கட்சிகள் எல்லாமே தமிழ் மொழிக்கு ஒரு தீங்கு என்றால் அதில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று ஒருமுகமாக எதிர்த்து நின்றது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்திற்கு காவிரிப் பிரச்சினை வந்திருக்கிறது.

முல்லைப் பெரியாறு பிரச்சினை வந்திருக்கிறது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் பிரச்சினை தொடருகிறது. ஏன் ஆந்திர மாநிலத்துடன் பாலாறு பிரச்சினை கூட இப்போது புதிதாக கிளம்பியிருக்கிறது. ஆனால், ஹிந்தி திணிப்பு என்ற பிரச்சினையில்தான் ஒட்டுமொத்த தமிழகமும் ஓரணியில் நின்றது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் கூட அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சிதம்பரம் கருத்துச் சொன்னார்.

ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்றெல்லாம் பாரபட்சமின்றி தமிழுக்காக கைகோர்த்து மத்திய அரசை எதிர்த்தார்கள். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. அதுதான், ஹிந்தி பேசாத மாநிலங்களுக்கு சமூக வலைதளங்களில் இந்தி பயன்படுத்த வேண்டும் என்று வெளியான உத்தரவு பொருந்தாது என்ற அறிவிப்பாகும். தமிழகம் சார்ந்த பிரச்சினைகளில் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நின்றால் மத்திய அரசு இறங்கி வரும் என்பதற்கு ஹிந்தி திணிப்பு சர்குலர் ஒரு சாட்சியமாக நிற்கிறது. தங்களுக்குள் மாநில நலனுக்காக ஒற்றுமையுடன் உரிமைக் குரல் எழுப்ப வேண்டும் என்று இனி புரிந்து கொள்ள வேண்டியது தமிழக அரசியல் தலைவர்கள்தான்!



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X