2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ரமபோசவின் புதிரான விஜயம்

Kanagaraj   / 2014 ஜூலை 13 , பி.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஐயூப்

இலங்கையில் இடம்பெற்ற 30ஆண்டு கால போரின் ஆரம்ப காலத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்த 1983ஆம் ஆண்டு தமிழ் விரோத தாக்குதல்களை அடுத்து இந்தியா, இலங்கையின் இனப்பிரச்சினையில் நேரடியாகவே தலையிட்டதோடு, அதற்காக சிறப்புத் தூதுவர் ஒருவரை இலங்கைக்கு அனுப்பியது. அவர் தான் கோபாலசுவாமி பார்த்தசாரதி. அவர் பின்னர் இந்திய வெளியுறவுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் இலங்கையின் இனப் பிரச்சினை விடயத்தில் தலையிட்டு செயலாற்ற இந்தியா மற்றொரு சிறப்புத் தூதுவரை அனுப்பியது. அவ்வாறு வந்த ரொமேஷ் பண்டாரியும் பின்னர் இந்திய வெளியுறவுச் செயலாளரானார்.

இந்திய சிறப்புத் தூதுவர்களது செயற்பாடுகளின் பலாபலன்களை இலங்கை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையில் தான், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க,இனப் பிரச்சினையில் தலையிடுமாறு 1999ஆம் ஆண்டு நோர்வேக்கு அழைப்பு விடுத்தார். அதன் பிரகாரம் 2000ஆம் ஆண்டில் நோர்வேயின் சிறப்புத் தூதுவரான எரிக் சொல்ஹெய்ம், இலங்கைக்கு அடிக்கடி வரத் தொடங்கினார்.

அவரது தூதுப் பணியின் இடையே இனப் பிரச்சினை பூரணமாகவே சர்வதேசமயமாகியது. இந்த சர்வதேசமயமாக்கலின் பயனாக அவரது தூதுப் பணியின் காலத்திலேயே மற்றொருவரும் சிறப்புத் தூதுப் பணியில் இறங்கினார். ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூஷி அகாஷியே அந்தத் தூதுவர். இந்தப் பட்டியலில் புதிதாக சேர்ந்திருப்பவர் கடந்த திங்கட்கிழமை(07) இலங்கைக்கு விஜயம் செய்த தென் ஆபிரிக்க பிரதி ஜனாதிபதி சிறில் ரமபோச ஆவார்.

இந்த தூதுவர்களின் வருகையில் காணப்பட்ட சிறப்பு அம்சம் என்னவென்றால், இவர்களில் இருவர் மட்டுமே இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் வந்தார்கள். சொல்ஹெய்மும் ரமபோசவுமே அவ்வாறு அழைக்கப்பட்டவர்கள். மற்றவர்கள் அவரவரது நாட்டினால் நியமிக்கப்பட்டவர்கள். இந்திய சிறப்புத் தூதுவர்கள் இந்திய நலனுக்காக நியமிக்கப்பட்டனர். அகாஷி, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சமாதானத் திட்டத்தின் அவசியத்தால் அவரது நாட்டினால் நியமிக்கப்பட்டார்.

இந்த அழைப்புக்களிலும் ஒரு முக்கியத்துவம் என்னவென்றால், வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு இடம் கொடுத்ததாக ஐக்கிய தேசிய கட்சியை சாடும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான அரசாங்கங்கள் இவர்களை அழைத்தமையே.
சமாதானத்துக்காக இவர்கள் உழைப்பதாக கூறப்பட்ட போதிலும், இதுவரை வந்த சிறப்புத் தூதுவர்களின் காலத்தின் பிரச்சினை பூதாகாரமாக வளர்ந்து மாபெரும் போரொன்றே வெடித்தது. ஆரம்ப காலத்தில் ஆங்காங்கே காவலில் நின்ற படையினரின் பின்னால் சைக்கிள்களில் வந்து சுட்டுவிட்டு தப்பி ஓடிய புலிகள் அமைப்பு, அக் கால கட்டத்திற்குள் காலாட்படை, விமானப்படை மற்றும் கடற்படைகளைக் கொண்ட பாரிய சக்தியாக மாறி பின்னர் 2009ஆம் ஆண்டு ஏறத்தாழ முற்றாகவே அழிக்கப்பட்டுவிட்டது.

வெளிநாட்டு சிறப்புத் தூதுவர்களின் செயற்பாடுகளினால் இலங்கை அரசியலில் பாரிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக இந்திய சிறப்புத் தூதுவர்களின் தலையீட்டினால் இலங்கையில் ஆட்சி முறையே மாறும் வகையில் இந்நாட்டு அரசியலமைப்பும் மாற்றி அமைக்கப்பட்டது. அவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் விளைவாக இலங்கையில் அதிகார பரவலாக்கல் முறையாக மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

1987ஆம் ஆண்டு இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் பயனாக இந்த அரசியலமைப்புத் திருத்தம் கொண்டு வரப்பட்ட போதிலும் இந்தியா தொடர்ந்தும் பார்த்தசாரதி, பிடித்துக் கொடுத்த பிடியை பிடித்துக் கொண்டே தான் இருக்கிறது. ரொமேஷ் பண்டாரிக்குப் பின்னர் இந்திய சிறப்புத் தூதுவர்கள் இல்லாவிட்டாலும் அடிக்கடிஇனப் பிரச்சினை விடயத்தில் இந்தியா, இலங்கை மீது நெருக்குதல் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது.

சொல்ஹெய்ம் மற்றும் அகாஷி ஆகிய சிறப்புத் தூதுவர்களின் காலத்தில் இனப் பிரச்சினை உத்தியோகபூர்வமாகவே சர்வதேசமயமாக்கப்பட்டது. இலங்கையின் இனப் பிரச்சினை தொடர்பாக, அமெரிக்காவில் வொஷிங்டன் மற்றும் ஜப்பானில் டோக்கியோ ஆகிய நகரங்களில் சர்வதேச மாநாடுகள் நடத்தப்பட்டன. ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் அவற்றில் கலந்து கொண்டன. அக் காலத்தில் இருந்த சமாதானத் திட்டத்தின் கீழ் அந்நாடுகள் இலங்கையின் அபிவிருத்திற்காக உதவி வழங்கவும் முன்வந்தன. வடக்கு, கிழக்கு பகுதிகளின் அபிவிருத்திப் பணிகளுக்காக சர்வதேச கண்காணிப்பில் நிதியொன்றும் உருவாக்கப்பட்டது. அதனை நிர்வகிக்கும் பணி சாதாரண வங்கியொன்றுக்கு அல்லாது உலக வங்கிக்கே வழங்கப்பட்டது.
எனவே, தமிழீழத்தை மனதில் வைத்துக் கொண்டிருந்த புலிகள் இந்த விடயத்தில் நேர்மையாக நடந்துக் கொண்டிருந்;தால் இன்று நாட்டின் நிலைமை வித்தியாசமானதாகவே இருக்கும்.

கடந்த நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய அமைப்பு நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டுக்காக வந்திருந்த தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜாகொப் ஸ_மாவை சந்தித்த, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தென் ஆபிரிக்காவின் உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவை (உண்மைக் கமிஷனை) போன்றதோர் பொறிமுறையை உருவாக்க உதவுமாறு கோரிக்கை விடுத்தார்.

அதன் பிரகாரம் கடந்த பெப்ரவரி மாதம் தென் ஆபிரிக்க ஜனாதிபதி சூமா அந் நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றம் போது இலங்கையின் சமாதான முயற்சி விடயத்தில் சிறப்பு தூதுவராக, பிரதி ஜனாதிபதி ரமபோசவை நியமிப்பதாக கூறினார். அதே மாதம் 20ஆம் திகதி அமைச்சர் நிமல் சிறிபால் டி சில்வாவின் தலைமையில் உயர் மட்ட தூதுக் குழுவொன்று இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு தென் ஆபிரிக்காவுக்குச் சென்றது. அதனை அடுத்து ஏப்ரல் மாதம் தமிழத்; தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சமபந்தனின் தலைமையில் அக் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்றும் தென் ஆபிரிக்காவுக்குச் சென்றது.

இந்தப் பின்னணியிலேயே கடந்த திங்கட்கிழமை ரமபோச, இலங்கைக்கு வந்தார். அவர் இலங்கையில் ஆற்றப் போகும் பங்கு என்ன என்பது இன்னமும் தெளிவாகவில்லை. அவர் நடுவராக இருந்து அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையே பேச்சுவார்ததைகளை ஆரம்பிப்பார் என்பதைப் போன்றதோர் கருத்தை தமிழ் தலைவர்கள் வழங்கி வருகிறார்கள். ஆனால் அரசாங்கமோ அவர் எந்தவிதமான நடுவர் பங்கினையும் வகிக்க மாட்டார் என்கிறது.

ரமபோச, இலங்கையில் இருக்கும் போதே நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், தென் ஆபிரிக்க பங்களிப்பு, மத்தியஸ்த்தம் வகிப்பதோ அல்லது அனுசரணை வழங்கலோ அல்ல என்று கூறினார். தென் ஆபிரிக்காவில் நிறவெறி ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் அந்நாட்டில் நியமிக்கப்பட்ட உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவை (உண்மைக் கமிஷனை) போன்றதோர் பொறிமுறையை உருவாக்க அந்நாட்டின் அனுபவங்களை பெறுவதே தென் ஆபிரிக்காவிடம் இருந்து எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

இனப் பிரச்சினை விடயத்தில் தென் ஆபிரிக்கா உட்பட எந்தவொரு நாட்டினதும் மத்தியஸ்த்தத்தையோ அல்லது அனுசரணையையோ பெறக்கூடாது என அமைச்சர் விமல் வீரவன்ச, அண்;மையில் அரசாங்கத்திடம் சமர்ப்பித்த 12 அம்ச கோரிக்கைகளில் குறிப்பிட்டு இருந்தார். அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் தலைமையிலான ஜாதிக ஹெல உருமயவும் எந்தவொரு நாட்டினதும் உதவியை பெறக் கூடாது என்கிறது. எனவே, அரசாங்கம் இது மத்தியஸ்த்தம் அல்ல என்று கூறுகிறது போலும்.

ஆனால், கடந்த பெப்ரவரி மாதம் அமைச்சர் நிமல் சிறிபால தலைமையிலான உயர் மட்டக் குழு தென் ஆபிரிக்காவிற்கு செல்வதையிட்டு இதே வெளிநாட்டலுவல்கள் அமைச்சரின் அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், பிணக்கு தீர்த்தல் மற்றும் பேச்சுவார்த்தை நடத்துதல் ஆகியவற்றில் ரமபோசவின் நிபுணத்துவத்தையும் தென் ஆபிரிக்காவுக்கு சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் இருக்கும் அனுபவங்களையும் கருத்தில் கொண்டு ஜனாதிபதி சூமா, ரமபோசவை இலங்கைக்கான சிறப்புத் தூதுவராக நியமித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ரமபோசவின் பணி, அனுசரணையோ அல்லது மத்தியஸ்த்தமோ அல்ல என்பதை நிரூபிப்பதைப் போல்;, ரமபோச இலங்கையில் இருந்து நாடு திரும்பிய உடன் அரசாங்கம் இனப் பிரச்சினை தொடர்பாக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் பதவிக் காலத்தை மேலும் ஆறு மாதத்திற்கு நீடித்தது. தெரிவுக்குழுவின் மூலமே இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என அரசாங்கம் பல மாதங்களாக கூறி வருவது தெரிந்ததே.

தெரிவுக்குழு விடயத்தில் ரமபோசவுக்கு சம்பந்தப்பட முடியாது. ஏனெனில், நாடாளுமன்ற விடயமொன்றில் வெளிநாடுகள் தலையிட முடியாது.

தென் ஆபிரிக்கவின் உண்மை கமிஷனானது அந் நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது இடம்பெற்ற படுபாதகச் செயல்களுக்கு இரு சாராரும் பொறுப்பை ஏற்று நல்லிணக்கத்தை ஏற்படுத்திய பொறிமுறையாகும். இலங்கையில் இடம்பெற்ற போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்பபடும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பானவர்களை கண்டு பிடித்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதே ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட மூன்று பிரேரணைகளினதும் நோக்கமாகும். அரசாங்கம் அந்தப் பிரேரணைகளின் பிரகாரம் நடந்து கொள்ளாததால் இப்போது மனித உரிமை உயர் ஸ்தானிகரின் அலுவலகம் தாமாக விசாரணை நடத்த முற்பட்டிருக்கிறது.

அரசாங்கம் அந்தப் பிரேரணைகளுக்கு ஏற்ப உள்நாட்டிலேயே விசாரணைகளை நடத்தாமல் தென் ஆபிரிக்காவின் பொறிமுறையை அறிமுகப்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளது. இது மனித உரிமை பேரவையின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியாகவே பலர் கருதுகிறார்கள்.

ரமபோச, தமது இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குப் புறம்பாக, எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சமபந்தன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோரையும் சந்தித்தார். தமது நடவடிக்கைகளைப் பற்றி தாம் தொடர்ந்தும் இந்தியாவுக்கு தெரிவிப்பதாக ரமபோச கூறியதாக, சமபந்தன் இந்து பத்திரிகையிடம் கூறியிருந்தார். உண்மைக் கமிஷன் தொடர்பான அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்து கொள்வது தான் தென் ஆபிரிக்க முயற்சியின் நோக்கம் என்றால் ரமபோச அரசாங்கம ஏன் அதனை இந்தியாவுக்கு அறிவிக்க வேண்டும்?

இலங்கையில் மாகாண சபை முறையில் ஏதாவது மாற்றம் ஏற்படுவதாக இருந்தால் மட்டுமே இந்தியா கவனம் செலுத்தும். ஏனெனில், மாகாண சபைகள் இந்தியாவின் பிள்ளைகளே. ஆனால், இலங்கையில் போரிட்ட தரப்பார் பொறுப்புக்கூறும் பொறிமுறையொன்றை அமைத்துக் கொண்டால் இந்தியா அதில் தலையிடப் போவதில்லை. அவசியமும் இல்லை.
தமது முயற்சி இந்திய முயற்சிகளுக்கும் ஜெனிவா பிரேரணைக்கும் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக, சில மேற்கத்தேய நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும் ஒத்துப் போகக் கூடியதாகும் என்று ரமபோச தம்மிடம் கூறியதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்து பத்திரிகையிடம் கூறியிருந்தார்.

ரமபோசாவின் முயற்சி உண்மைக் கமிஷன் தொடர்பானதாக இருந்தால் அது ஜெனிவா பிரேரணையோடு ஒத்துப் போகலாம். ஆனால், அது இந்திய முயற்சியோடு எவ்வாறு ஒத்துப் போக முடியும்? இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மேற்கத்திய நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளோடு எவ்வாறு அது ஒத்துப் போகும்?  மேற்கத்தேய நாடுகள் அவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுகின்றனவா?


எனவே, ரமபோச வெறுமனே உண்மைக் கமிஷன் ஒன்றை ஆரம்பிக்க மட்டுமே உதவப் போகிறாரா அல்லது அரசாங்கத்தையும் தமிழ் தரப்பாரையும் ஒன்றிணைக்கும் சமாதானத் திட்டமொன்றை ஆரம்பிக்கப் போகிறாரா என்பது தெளிவில்லாமல் இருக்கிறது.

எதுவாக இருந்தாலும் அது தோல்வியில் முடிவடையும் சாத்திக்கூறுகளே அதிகமாக காணப்படுகிறது. அரசாங்கம் இந்த இரண்டில் எதற்கும் தயாரான மனநிலையில் இல்லை என்பதே அதற்குக் காரணமாகும். பொறுப்புக் கூறும் பொறிமுறையொன்றை அரசாங்கம் தேடுவதாக இருந்தால், 2012ஆம் ஆண்டு அமெரிக்கப் பிரேரணை குறிப்பிடப்பட்டு இருந்ததைப் போலவே தாமே நியமித்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளின் படியே அதனை செய்திருக்கலாம்.

ரமபோச மூலமாக இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது தான் அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தால், அரசாங்கம் கடந்த வருடம் மாகாண சபைகளை இரத்துச் செய்ய முயற்சித்திருக்காது. அதிகார பரவலாக்கலை வெறுக்கும் அரசாங்கம் அதிகார பரவலாக்கல் முறையை வலியுறுத்தும் தென் ஆபிரிக்காவை துணைக்கு அழைக்குமா, அவ்வாறாயின் இத்தனையும் எதற்காக?


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X