2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

எதற்காக மீண்டும் சந்திரசிறி?

Suganthini Ratnam   / 2014 ஜூலை 18 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறிக்கு கடந்த 11ஆம் திகதி மீண்டுமொரு பதவிக்காலத்தை வழங்கியுள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றதும் 2009ஆம் ஆண்டு ஜுலை  மாதம் 12ஆம் திகதி வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்த மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, தனது முதல் பதவிக்காலத்தை கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவு செய்யவிருந்தார்.   அந்தச் சூழ்நிலையிலேயே அவரை மீண்டும் வடமாகாண ஆளுநராக நியமித்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

ஜனாதிபதியின் இந்த முடிவு பலத்த சர்ச்சைக்குரியதொன்றாக இருந்ததால், இந்த நியமனம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் மிகக் கடுமையான விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை, ஏனைய எதிர்க்கட்சிகளையும் நடுநிலை விமர்சகர்களையும் கூட இந்த நியமனம் முகம் சுழிக்கவைத்துள்ளது. ஏனென்றால், இது ஒரு ஆளுநரின் நியமனம் சார்ந்த விடயமாக மட்டும் பார்க்கப்படவில்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொடுத்த வாக்குறுதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான உறவு குறித்த அவரது ஈடுபாடு, அமைதியை எட்டுவதிலுள்ள அவரது அர்ப்பணிப்பு என்று எத்தனையோ விடயங்கள் இந்த நியமனத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வடமாகாணசபைக்கு நடத்தப்பட்ட தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று, முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்ற காலத்திலிருந்தே சிவில் ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுவாக இருந்து வருகிறது.

இதனை வலியுறுத்தி வடமாகாணசபையின் இரண்டாவது அமர்விலேயே தீர்மானமொன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது.
அது மட்டுமல்லாது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்புகளின்போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்த விவகாரத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்திருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தபோதும் சிவில் ஆளுநரை நியமிக்க வேண்டுமென்று கேட்டிருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் 2ஆம் திகதி தெல்லிப்பழையில் புற்றுநோய் மருத்துவமனைத் திறப்பு விழாவில் பங்கேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இது பற்றி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் நினைவுபடுத்தியிருந்தார். அப்போதுதான், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்த வாக்குறுதியை வழங்கியிருந்தார்.

இன்னும் ஆறு, ஏழு மாதங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள். மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததும், சிவில் ஆளுநர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கிறேன் என்று வடமாகாண முதலமைச்சருக்கு உறுதியளித்திருந்தார் ஜனாதிபதி.

இலங்கையின் அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநர் ஒருவரின் பதவிக்காலம் 05 ஆண்டுகளாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 11ஆம் திகதியுடன் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியின் பதவிக்காலம் முடிந்து விடுமென்பதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வடமாகாணசபையும் சற்றுப் பொறுமை காத்து வந்தன.

பல சந்தர்ப்பங்களில் ஆளுநருடன் முரண்படும் நிலையேற்பட்டபோதும், பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்திருந்தன. எல்லாமே ஜுலை மாதம் 11ஆம் திகதியுடன் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியின் பதவிக்காலம் முடிந்து விடுமென்பதால்தான்.

இதற்கிடையே, பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவை அரசாங்கம் வடமாகாண ஆளுநராக நியமிக்கவுள்ளதாக இடையில் ஒரு செய்தி வெளியானது.

பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நெருக்கமான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவுக்கு மரபுகளை மீறி தற்போதும் மூன்றாவது சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும், அண்மைக்காலமாக அரசாங்கத்தின் நேரடித் தேவைகளை நிறைவேற்றும் ஒருவராக அவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரை பொலிஸ் சேவையிலிருந்து விடுவிக்க அரசாங்கத்துக்கு தயக்கம் இருப்பதாகத் தெரிகிறது.

அதேவேளை, அனுர சேனநாயக்கவை ஆளுநராக நியமிப்பதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.

பாதுகாப்புத் தரப்புடன் தொடர்புடைய எவரையும் ஆளுநராக நியமிக்கப்படுவதை எதிர்ப்பதாக கூட்டமைப்பு கூறியிருந்தது.

இந்த நிலையில், மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறிக்கு 03 மாத சேவை நீடிப்பு வழங்கப்படலாமென்று வெளியான ஊகங்களுக்கு மத்தியில் அவருக்கு மற்றொரு பதவிக்காலத்தை வழங்கியுள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

இந்த அறிவிப்புக் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். ஆனால் அவர்களின் எதிர்ப்பையோ, கண்டனங்களையோ கண்டுகொள்வதில்லை என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருக்கிறது.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தில் மாகாண ஆளுநர் ஒருவரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அதாவது ஆளுநர் என்பது ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதியாவார். ஆளுநரின் எல்லா நடவடிக்கைகளும் ஜனாதிபதியின் பெயரிலேயே இடம்பெறும். எனவே ஆளுநர் ஒருவரைத் தெரிவுசெய்யும்போது, தனக்கு விசுவாசமான ஒருவரையே ஜனாதிபதி தெரிவுசெய்வார் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், மாகாண முதலமைச்சருடன் கலந்தாலோசித்து ஆளுநரை நியமித்திருக்க வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள சிலர் கூறியிருப்பினும், அதற்கு அரசியலமைப்பில் இடமளித்திருக்கப்படவில்லை.

அதை விட, மாகாண தலைமைச் செயலரை முதலமைச்சருடன் கலந்துரையாடி ஜனாதிபதி நியமிப்பார் என்று 13ஆவது திருத்தச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், வடமாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடாமலேயே தலைமைச் செயலரை நியமித்திருந்தார் ஜனாதிபதி.

அவரை நீக்கிவிட்டு வேறொரு அதிகாரியை  நியமிக்குமாறு வடமாகாண முதலமைச்சரும்  மாகாணசபையும் விடுத்த கோரிக்கைகளையே ஏற்றுக்கொள்ளாத ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,  ஆளுநர் நியமனத்தில் முதலமைச்சருடன் கலந்துரையாட வேண்டுமென்று எதிர்பார்ப்பது அறிவீனம்.

அரசியலமைப்பு சட்டப்படி முதலமைச்சருடன் கலந்துரையாடவேண்டிய விவகாரத்திலேயே தன்னிச்சையாக முடிவெடுத்த ஜனாதிபதி, தனக்கு முழு அதிகாரம் இருக்கும் விவகாரத்தில் மட்டும் அத்தகைய கலந்துரையாடலுக்கு எப்படி இணங்குவார்?

சாதாரணமான ஒரு தலைமைச் செயலாளர் நியமனத்திலேயே வடமாகாணசபையுடன் முரண்டு பிடித்த அரசாங்கம், ஆளுநர் நியமனத்தில் இந்தளவுக்கு கடும்போக்குடன் நடந்துகொள்வது ஆச்சரியமில்லைத்தான்.

இருந்தாலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதற்காக மீண்டும் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியை ஆளுநராக நியமித்து தனது கடும்போக்கை வெளிப்படுத்தியுள்ளார் என்பது முக்கியமான வினாவாக இருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.

வடக்கில் இராணுவ ஆட்சியை தொடர்ந்தும் நிலைநிறுத்துவதற்கான முயற்சி என்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனோ, தனது உத்தரவை நிறைவேற்றும் வேறு அதிகாரிகள் எவரும் கிடைக்காது போனதால், மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியை நியமித்திருக்கலாம் அல்லது ஜனாதிபதித் தேர்தலில் தனக்காக செயற்படக்கூடியவர் என்பதால் அவரை நியமித்திருக்கலாமென்று சந்தேகம் கிளப்பியுள்ளார்.

சிங்களக் கடும்போக்காளர்களைத் திருப்திப்படுத்தவே மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியை நியமித்துள்ளதாக வேறு சிலர் கூறுகின்றனர்.
இவை மட்டும் தான் காரணங்கள் என்று கருதமுடியாது.

வேறொரு படை அதிகாரியை ஆளுநராக நியமித்து வடக்கில் இராணுவத் தலையீட்டுடன் கூடிய ஆட்சியை தொடர்ந்து நிலைநிறுத்த முடியும்.
மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியை விடவும் விசுவாசமாகச் செயற்படத்தக்க படை அதிகாரிகளை தனது நலன்களை நிறைவேற்றிக்கொள்வதற்குப் பயன்படுத்தியிருக்கலாம்.

ஆனாலும், அவ்வாறு இன்னொரு படை அதிகாரியைத் தேடாமல் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியையே தொடர்ந்தும் அப்பதவியில் நீடிக்கச் செய்திருப்பது நிச்சயமாக கூட்டமைப்புக்கு சவால் விடுவதற்காகவே என்பதில் சந்தேகமில்லை.

அதுவும் தென்னாபிரிக்க பிரதி ஜனாதிபதி  சிறில் ரமபோசவின் மூலம் நல்லிணக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் தென்பட்ட நிலையிலேயே ஜனாதிபதியின் இந்த நகர்வு இடம்பெற்றுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனது வழிக்கு கொண்டுவருவதற்கான ஓர் எத்தனமாகவும் இதனைக் கருதலாம். இங்கு வழிக்கு கொண்டுவருதல் என்பதன் அர்த்தம் என்னவென்றால், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு அவர்களை இழுத்து வருவதுதான்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் 13ஆவது திருத்தச்சட்டம் உள்ளிட்ட அதிகாரப்பகிர்வுக்கான ஏற்பாடுகளை இல்லாமல் செய்ய முயன்ற அரசாங்கத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் பங்கெடுக்காமையால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இப்போது இனப்பிரச்சினை தீர்வுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் காலம் நீடிக்கப்பட்டு வருகிறதே தவிர, அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை.

ஆனால், போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்தும்; நிலையான அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்ற சர்வதேச அழுத்தங்கள் அரசாங்கத்துக்கு அதிகரித்து வருகின்றன. எனினும், தெரிவுக்குழு மூலமே தீர்வு காணுவோம் என்று அரசாங்கம் தெளிவாக கூறிவிட்டது.

இத்தகைய நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு இல்லாமல் தெரிவுக்குழு மூலம் எதையும் செய்ய முடியாமல் திணறி வருகிறது அரசாங்கம்.

இப்படியான நிலையில்தான், மீண்டும் ஆளுநராக மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியை நியமித்து தனது கடும்போக்கை வெளிப்படுத்தியிருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இதுவொன்றும் தனியொரு இலக்கை வீழ்த்துவதற்கான திட்டமாகத் தெரியவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தங்களுக்குப் பணியப்போவதில்லை என்பதை அவர் சிங்களக் கடும்போக்காளர்களுக்கு உணர்த்தியிருக்கிறார்.

அரசாங்கத்துடன் இணங்கிச் செயற்படாமல் போனால், இதுதான் கதியென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதுபோலவே, இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்துக்கும் உள்நாட்டு விவகாரங்களில் எந்தத் தலையீடும் செய்யமுடியாது என்பதையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்துக்காட்டியுள்ளார்.

ஏனென்றால், வடமாகாணசபைக்கு அதிகாரங்களை பகிர்ந்து அதனை சுமுகமாகச் செயற்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இந்தியாவும் மேற்குலக நாடுகளும் கோரி வந்தன.

இந்த நிலையில், மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியை மீண்டும் ஆளுநராக்கியதன் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடும்போக்குவாதமும் விட்டுக்கொடாத தன்மையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வடமாகாணசபையுடன் தொடர்ந்தும் சுமுகமான உறவைப் பேணுகின்ற எதிர்பார்ப்பில் அரசாங்கம் இல்லை என்பதை இது உணர்த்தியிருக்கிறது.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்திக்க மறுத்திருந்தார்.

ஜனாதிபதி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத நிலையில், இந்தச் சந்திப்பால் எந்தப் பயனும் விளையப் போவதில்லையென்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.

அதற்கு தன்னை வந்து சந்தித்தால், எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஊடகச் செவ்வியொன்றில் சில மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

அதாவது, தமது காலடியில் வடக்கு மாகாண முதலச்சரை  கொண்டுவந்து  விழ வைக்க வேண்டுமென்ற எண்ணம் அரசாங்கத் தரப்பிடம் உள்ளது என்பதையே இது காட்டியது. இத்தகைய சூழலில் தான், ஆளுநராக மீண்டும் ஜி.ஏ.சந்திரசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.

13ஆவது திருத்தச்சட்டத்தின் அதிகாரங்களை வடக்கு மாகாணத்துக்கு விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லாத அரசாங்கம், மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியை பயன்படுத்தி பழிவாங்கவே நினைக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.

அதுவும், தென்னாபிரிக்க பிரதி ஜனாதிபதி  சிறில் ரமபோசவின் வருகைக்குப் பின்னர் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் நெகிழ்வுப்போக்கு தென்படுமென்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில்தான், இந்த நியமனம் நடந்தேறியுள்ளது. இதன் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாக்குறுதி மட்டும் மீறப்பட்டிருக்கவில்லை.

தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதில் அவர் கொண்டுள்ள அக்கறை, அர்ப்பணிப்பு எல்லாமே கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பழி தீர்க்க முனைந்தாலும், இறுதியில் இது அரசாங்கத்துக்கே ஆபத்தாக முடியும். ஏனென்றால் இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் நேர்மை, உண்மை, எல்லாமே இப்போது அம்பலமாகிவிட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X