2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

திணறும் தமிழகம்?

Thipaan   / 2014 ஜூலை 21 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தியில் ஆட்சி செய்யும் பிரதமர் நரேந்திரமோடிக்கு அனைத்து வகையிலும் ஆதரவு கொடுக்கும் எண்ணத்தில்தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எம்.பி.க்கள், டெல்லியில் நாடாளுமன்றத்திலும் ராஜ்ய சபையிலும் பேசி வருகிறார்கள். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் பிரதமர் மோடியுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்படவில்லை.

மாறாக மத்திய அரசின் ரயில்வே வரவு- செலவுத்திட்டத்தை வரவேற்று அறிக்கை விடுத்தார். அடுத்து வந்த பொது வரவு- செலவுத்திட்டத்தையும் வரவேற்று அறிக்கை கொடுத்திருக்கிறார். முன்பிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீதும் அந்த ஆட்சியை வழிநடத்திய பிரதமர் மன்மோகன்சிங் மீதும் தொடுத்த ஏவுகணைகளை பா.ஜ.க. தலைமையில் வழி நடத்தப்படும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் மீது அவர் தொடுக்கவில்லை.

கச்சதீவில் மீன்பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு இல்லை என்று மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வாக்குமூலம் தாக்கல் செய்த போதுகூட, முந்தைய அரசின் அதிகாரிகள் இப்படி ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த வாக்குமூலத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வராமலேயே நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பார்கள். அதில் கவனம் செலுத்தி கச்சதீவில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமையை பெற்றுக்கொடுங்கள் என்றுதான் பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

தமிழகத்திற்கு போதிய மண்ணெண்ணெய் ஒதுக்காமல் விட்டதைச் சுட்டிக்காட்டி,பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் ஜெயலலிதா, சென்ற ஆட்சியில் இருந்த அதிகாரிகள் செய்ததையே இப்போதும் செய்கிறார்கள். அதில் தாங்கள் கவனம் செலுத்தி தமிழகத்திற்கு கூடுதல் மண்ணெண்ணெய் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து கிடைப்பதற்கு வழி செய்யுங்கள் என்றே கோரிக்கை விடுத்தார்.

அ.தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பேசும் போது கூட, அம்மா மொடல் நிர்வாகத்தை மத்தியில் கடைப்பிடியுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள். குறிப்பாக, தமிழகத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 2 கோடி ரூபாய் வளர்ச்சி நிதி ஒதுக்கியிருக்கிறார் அம்மா. அந்த அம்மா மொடலைக் கடைப்பிடித்து ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு உள்ள தொகுதி வளர்ச்சி நிதியை 12 கோடி ரூபாயாக (தற்போது 5 கோடி ரூபாய்) உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் அ.தி.மு.க. எம்.பி., பி.ஆர்.சுந்தரம்.

அம்மா வரவேற்றுள்ள இந்த பட்ஜெட்டை நாங்களும் வரவேற்கிறோம். தமிழகத்தில் அம்மா மத்திய உணவு திட்டத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். அதற்கு நூறு சதவீத மானியத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார் அ.தி.மு.க.வை நாடாளுமன்றத்தில் வழி நடத்தும் டாக்டர் மு.தம்பித்துரை.

தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் அனைத்தும்,தமிழகத்திற்கு கொடுக்கப்படுமா என்று மத்திய மின்துறை அமைச்சர் பி.கோயலிடம் தம்பித்துரை வலியுறுத்த, அமைச்சரோ, தமிழகத்தில் மின்பற்றாக்குறையை சமாளிக்க மிகவும் நேர்த்தியான முறையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனைபாராட்டுகிறேன் என்று அ.தி.மு.க. அரசை பாராட்டியிருக்கிறார்.

இதுபோன்று,அ.தி.மு.க. எம்.பி.க்களுக்கும், பா.ஜ.க.விற்கும் சினேகிதம் சிறப்பாக இருக்கிறது. மத்தியில் இருப்பது நம் அரசு, நமக்கு ஆதரவான அரசு, அம்மாவிற்கு நட்பான அரசு என்ற சிந்தனையில்தான் அ.தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் இருக்கிறார்கள்.

இந்த அடிப்படையில் பார்த்தால், முதல்வர் ஜெயலலிதாவும் சரி, நாடாளுமன்றத்தில் இருக்கும் அவருடையை எம்.பி.க்கள் 37 பேரும் சரி, மோடி அரசுக்கு எதிராக ஒரு துரும்பையும் இதுவரை எடுத்துப் போடவில்லை. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசோ அ.தி.மு.க.விற்கும், அக்கட்சிக்கு தலைமை தாங்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும் தலைவலி கொடுக்கும் விடயங்களை தாராளமாகச் செய்து கொண்டிருக்கிறது.

ஆரம்பத்தில், ஆட்சிப் பொறுப்பேற்கும் நிகழ்ச்சிக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வரவழைத்து கௌரவப்படுத்தியது. பின்னர், மீனவர்கள் பிரச்சினை எழுந்த போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் உடனுக்குடன் விடுதலை செய்யப்பட்டாலும், அவர்களின் படகுகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. அது மட்டுமின்றி, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கப் போவதை தமிழக அரசு தடுக்க வேண்டும். உள்நாட்டுப் பிரச்சினையாக இருக்கும் மீனவர் பிரச்சினைக்காக இரு நாடுகளின் உறவுகளை தியாகம் செய்ய முடியாது என்று மத்திய அரசினால் தமிழக அரசுக்கு திட்டவட்டமாக தெரியப்படுத்தியது.

அடுத்து கச்சதீவு பிரச்சினை. அதில் தமிழக மீனவர்களுக்கு உரிமையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிவித்தது மத்திய அரசு. இப்போது அந்த தீவை திருப்பி வாங்கும் பிரச்சினைக்கே இடமில்லை என்று உச்சநீதிமன்றத்திலேயே முதல்வர் ஜெயலலிதாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியும் தொடுத்த வழக்கில் சொல்லி விட்டது.

அடுத்து, ராஜீவ் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யும் விடயத்திலும், இதில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு தன் நிலைப்பாட்டை இந்திய உச்சநீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியிருக்கிறது. ஏன் சமீபத்தில் மத்திய- மாநில அரசுகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி அர்சனா ராமசுந்தரம் வழக்கிலேயே மாநில அரசுக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் மத்திய அரசின் சட்டமா அதிபர் முகுல் ரஸ்தோகி முன்னெடுத்துள்ளார்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல் ஹிந்தி மொழி விவகாரம் வேறு தலை தூக்கியது. மத்திய அரசின் அலுவலகங்கள் முழுக்க முழுக்க ஹிந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று ஏற்கெனவே இருந்த காங்கிரஸ் அரசின் வலியுறுத்தலை,அப்படியே பா.ஜ.க. அரசு கடைப்பிடித்தது. அதனால் தமிழகத்தில் எதிர்ப்புக்குரல் கிளம்பியது. அனைத்துக் கட்சிகளும் கண்டன அறிக்கைகள் வெளியிட்டன. பிறகு, அந்த உத்தரவு ஹிந்தி பேசாத மாநிலங்களுக்கு இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.

ஆனாலும் ஹிந்தி மொழி வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதில் மத்திய அரசுக்கு குறிப்பாக மோடி தலைமையிலான அரசுக்கு ஆர்வம் அதிகமாக இருப்பதாகவே தெரிய வருகிறது. ஏனென்றால் அவருக்கு ஹிந்தி பேசும் மாநிலங்களான பீஹார், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் மற்றைய வட மாநிலங்களிலும்தான் அதிக எம்.பி.க்கள் கிடைத்திருக்கிறார்கள்.

அதை இன்னும் வலுப்படுத்திக்கொள்ள தங்கள் அரசு ஹிந்தி மொழி வளர்ச்சிக்காக பாடுபடும் அரசு என்பதை பறைசாற்றிக்கொள்ளும் நிர்ப்பந்தத்தில் நரேந்திரமோடி அரசு இருப்பதாகவே தெரிகிறது.

எல்லாவற்றிற்கும் உச்சகட்டமாக, எதிர்வரும் ஓகஸ்ட் 7ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை,தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது அறிவிப்பாக மத்திய மனித வள மேம்பாட்டுச் செயலாளரிடமிருந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் மூலம் வந்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ, கேந்திரிய வித்யாலயா சங்கேதன் மற்றும் என்.சி.ஈ.ஆர்.டி. போன்றவை இந்த சமஸ்கிருத வாரத்தைக் கொண்டாடும் என்று அறிவித்துள்ள அதே நேரத்தில் தமிழக அரசும் மாநில, மாவட்ட மற்றும் அனைத்து மட்டத்திலும் இந்த வாரத்தைக் கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சமஸ்கிருத வாரம் என்பது, ஹிந்தியில் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் செயல்படும் என்பதன் அடுத்த கட்டம் என்றே தமிழ் அமைப்புகள் கொந்தளிக்கின்றன. அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டன அறிவிப்பு வெளியிட்டு விட்டார்கள். அதை விட முக்கியமாக முதலமைச்சர் ஜெயலலிதாவும் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

அவர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இப்படி சமஸ்கிருத வாரம் கொண்டாடச் சொல்வது பொருத்தமற்றது. சமூக நீதி மன்றும் மொழிப்போராட்டங்கள் வலுவாக நடைபெற்ற மாநிலம் தமிழகம். ஆகவே இங்கே செம்மொழி வாரம் கொண்டாடுவதுதான் சிறப்பாக இருக்கும் என்று சுட்டிக்காட்டி, அனைத்து மாநிலங்களிலுமே அந்தந்த கலாசாரத்தை பிரதிபலிக்கும் மொழியின் வாரமாகக் கொண்டாட உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

தமிழ் மொழி வாரம் மட்டுமின்றி, கன்னட மொழி வாரம், தெலுங்கு மொழி வாரம், மலையாள மொழி வாரம் என, இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மொழியின் வாரத்தைக் கொண்டாட வேண்டும் என்பதுதான் இந்த கோரிக்கையின் பின்னணியில் இருக்கும் விடயம்.
அது மாதிரி அந்தந்த மாநில மொழி வாரம் கொண்டாடுவதுதான் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியிருக்கிறார். இது மாதிரி கருத்துக்கள்தான் முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்காலத்தில் தனக்குப் போட்டியாக தேசிய அரசியலில் வருவாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

ஏனென்றால், ஏற்கனவே தேசிய அரசியலை மனதில் வைத்தே கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை கடைசி நேரத்தில் கூட்டணியிலிருந்து விலக்கி வைத்தார் ஜெயலலிதா. அது மட்டுமின்றி தேர்தல் பிரசாரத்தில், மோடியா, லேடியா என்றால் இந்த லேடியின் ஆட்சியில் உள்ள தமிழகத்தில்தான் சிறந்த நிர்வாகம் நடக்கிறது என்று பிரசாரம் செய்தார். நாடாளுமன்றக் கட்டிடத்தின் புகைப்படத்தினை கட் அவுட்களிலும், போஸ்டர்களிலும் போட்டே சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு கேட்டார்கள்.

அடுத்த பிரதமர் அம்மா என்ற கோஷத்தை அ.தி.மு.க.வினர் மூலை முடுக்கெல்லாம் எடுத்துச்சென்றார்கள். இப்படியொரு எதிர்கால தேசிய அரசியல் திட்டத்தில் இருக்கும் ஒரு மாநில தலைவர் ஜெயலலிதா மட்டுமே. அதுவும் அவர் பா.ஜ.க.வில் உள்ளவர்களுக்கும், பா.ஜ.க.வின் கொள்கைகளுக்கும் பெரிய அளவில் வேறுபாடு இல்லாதவர் என்ற எண்ணம் நரேந்திரமோடியின் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. இவற்றை மனதில் வைத்தே அ.தி.மு.க.வுடன் நட்புணர்வுடன் இருக்கிறோம் என்பதை பறைசாற்றுவது போல் மோடியின் அணுகுமுறைகள் இருந்தாலும், அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் வௌ;வேறு கட்சிகள் என்ற ஒரு தெளிவான பாடத்தை எடுக்க விரும்புகிறார் மோடி.

அதன் பிரதிபலிப்புதான் எவ்வளவுதான் அ.தி.மு.க. மோடி பக்கமாக நெருங்கிச் சென்றாலும், என் வழி தனி வழி என்ற ரீதியில் காய் நகர்த்துகிறார் பிரதமர் நரேந்திரமோடி. தேசிய அரசியல் என்ற ஒரு உறைக்குள், பிரதமர் பதவிக்கு ஆசைப்படும் இரு கத்திகள் உள்ளே இருக்க முடியாது என்பதை நரேந்திரமோடி ஆட்சியின் நடவடிக்கைகள் அ.தி.மு.க.விற்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன என்பதுதான் இதன் ஹைலைட். இதை எவ்வளவு தூரம், எத்தனை நாளைக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பொறுத்துக் கொண்டிருக்கப் போகிறார் என்பதுதான் அனைத்து அரசியல் பார்வையாளர்களுக்கும் இப்போது இருக்கும் அகாடமிக் கேள்வி!


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X