2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

காலம் கடந்த ஞானம்

Thipaan   / 2014 ஜூலை 27 , பி.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமற்போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மூன்று சர்வதேச நிபுணர்களை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 15ஆம் திகதி நியமித்தார். அத்தோடு விசாரணை ஆணைக்குழுவின் செயல் வரம்புகளை விஸ்தரித்து, தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் இடம்பெற்ற போரின் இறுதிக் கட்டத்தில் சாதாரண மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பாகவும் ஆணைக்குழு விசாரணை செய்ய வேண்டும் என்று பணித்தார்.

இது மனித உரிமை மற்றும் பொறுப்புக் கூறல் என்ற விடயங்களில் அரசாங்கம் இதுவரை கொண்டிருந்த நிலைப்பாட்டிலிருந்து முற்றாக விலகிச் சென்றதையே காட்டுகிறது. போரின் போது சாதாரண மக்கள் கொல்லப்படவில்லை என்பதும் இலங்கையில் மனித உரிமை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்களில் வெளிநாட்டவர்கள் தலையிட முடியாது என்பதுமே இது வரை அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருந்தது.

சாதாரண மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என்று கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது தொடர்பாக விசாரணை செய்வதற்காக 2012ஆம் ஆண்டு, அப்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவினால் இராணுவ நீதிமன்றம் ஒன்று நியமிக்கப்பட்டது. அந்த நீதிமன்றம் இராணுவத் தளபதியிடம் சமர்ப்பித்த அறிக்கையிலும் போரின் போது சாதாரண மக்கள் கொல்லப்படவில்லை என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது.

சாதாரண மக்கள் எவ்வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்ற ஜனாதிபதியின் பணிப்புரைக்கிணங்க மனிதாபிமான இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் புலிகள் போர் தடுப்பு வலயத்திலிருந்து தாக்குதல்களை மேற்கொண்ட போதிலும் இராணுவம் அவ் வலயத்தின் மீது தாக்தல் நடத்துவதை தவிர்த்துக் கொண்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

போரின் போது எவரும் காணாமற் போகவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, டெய்லி மிரர் பத்திரிகைக்கு கடந்த வருட ஆரம்பத்தில் வழங்கிய பேட்டியொன்றின் போதும் கூறியிருந்தார். அவ்வாறிருக்க, சர்வதேச நெருக்குதலின் காரணமாக காணாமற் போனோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவை ஜனாதிபதி, கடந்த வருடம் நியமித்தார். அந்த ஆணைக்குழுவுக்கு இப்போதைக்கு கிடைத்திருக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை இருபதாயிரத்தை எட்டிவிட்டது.

அதேபோல், போரின் போது சாதாரண மக்கள் கொல்லப்படவே இல்லை என கூறி வந்த அரசாங்கம் இப்போது போரின் போது சாதாரண மக்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதையும் ஆராய வேண்டும் என காணாமற்போனோர் தொடர்பான ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

அது தொடர்பாக கடந்த 15ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமாணி அறிவித்தலில் போரின் போது சாதாரண மக்கள் கொல்லப்பட்டார்களா என்று ஆராயவேண்டும் என்று கூறப்படவில்லை. மாறாக போரின் போது கொல்லப்பட்ட மக்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதைத் தான் ஆராய வேண்டும் என்கிறது.

அதாவது, போரின் போது சாதாரண மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பது இப்போது சர்ச்சைக்குரிய விடயமல்ல. போரின் போது சாதாரண மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது போலும். அவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதையே சர்ச்சைக்குரிய விடயமாக அரசாங்கம் இப்போது கருதுகிறது.

அதன் பிரகாரம் 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி முடிவடைந்த ஆயுதப் போர் நடைபெற்ற காலத்தில், சாதாரண மக்கள் கொல்லப்படுவதற்கு ஏதுவான அடிப்படை காரணிகளையும் நிலைமைகளையும் ஆராய வேண்டும் என்றும் இக் கொலைகளால் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதநேய சட்டங்களை மீறியதன் மூலம் இக் கொலைகளுக்கு ஏதாவது ஒரு நபரோ குழுவோ அல்லது நிறுவனமோ பொறுப்புக் கூற வேண்டுமா என்பதை ஆராய வேண்டும் என்றும் ஜனாதிபதி புதிய  ஆணைக்குழுவிற்கு பணித்துள்ளார்.

அத்தோடு, அவ்வாறு சாதாரண மக்களின் கொலைகள் வேண்டும் என்றே செய்யப்பட்டவையா அல்லது அந்த நோக்கம் இல்லாமலே இடம்பெற்றவையா என்றும் இவ் விடயத்தில் இலங்கையின் பாதுகாப்புப் படைகள் சர்வதேச மனித உரிமை மற்றம் மனிதாபிமான சட்டங்களை கடைப்பிடித்தனவா அல்லது புறக்கணித்தனவா என்றும் விசாரணை செய்யுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

இராணுவ நடவடிக்கைகளின் போது புலிகள், சர்வதேச மனிதநேய மற்றும் மனித உரிமை சட்டங்களுக்கு உட்;படும் அமைப்பா என்பதையும் புலிகள், பொது மக்களை கேடயமாக பாவித்தமை பற்றியும் அதன் மூலம் எந்தளவிற்கு சர்வதேச மனிதநேய சட்டம் மற்றும் மனித உரிமை சட்டம் மீறப்பட்டுள்ளது என்பதையும் அவர்களின் அந்நடவடிக்கை உயிர் சேதங்களுக்கு ஏதுவாகியதா என்பதையும் ஆராயுமாறு ஆணைக்குழுவுக்கு புதிதாக பணிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மனித நேய மற்றும் மனித உரிமை சட்டங்களுக்கு முரணாக புலிகளின் கீழ் அல்லது அரசியல் கட்சியொன்றின் கீழ் இயங்கிய சட்ட விரோத குழுவொன்றோ அல்லது புலிகளோ சிறுவர்களை படையில் சேர்த்துக் கொண்டமையைப் பற்றி விசாரணை செயதல் ஆணைக்குழுவின் புதிய பணிகளில் மற்றொன்றாகும்.

புலிகளின் சர்வதேச குற்றச் செயற்களைப் பற்றியும் அச் சட்ட விரோத நடவடிக்கைகளினால் சம்பாதித்த நிதி அல்லது ஏனைய வளங்களை தாம் இலங்கையில் மேற்கொண்ட போர் நடவடிக்கைகளின் போது புலிகள் உபயோகித்;தமையைப் பற்றியும் இப்போது ஆணைக்குழு விசாரணை செய்ய வேண்டும்.

புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் அல்லது அவருக்குப் பதிலாக இயங்கிய ஒருவரது கட்டளையின் பேரில் சிறுவர் போராளிகள் அல்லது ஏனைய போராளிகள் மூலம் புலிகள் அமைப்பு மேற்கொண்ட தற்கொலை தாக்குதல்களைப் பற்றியும் சர்வதேச மனிதநேய மற்றும் மனித உரிமை சட்டங்களின் படி அந் நடவடிக்கைகளின் குற்றத்தன்மையைப் பற்றியும் விசாரிக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழுவைப் பணித்துள்ளார்.

இதே சொற்களைப் பாவிக்காவிட்டாலும் போரின் போது படையினரும் புலிகளும் மனித உரிமை சட்டங்களை மீறியதைப் பற்றி விசாரித்து சம்பந்தப்பட்டவர்களை பொறுப்புக் கூறலுக்கு உட்படுத்த வேண்டும் என ஐந்தாண்டுகளாக சர்வதேச சமூகம் இதனைத் தான் வலியுறுத்தி வந்தது. ஆனால், அரசாங்கம் அதற்கு செவிசாய்க்கவில்லை.

போரின் இறுதிக் கட்டத்தின் போது சாதாரண மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என ஜனாதிபதியே நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் சிபார்சு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், போரின் போது சாதாரண மக்கள் கொல்லப்படவே இல்லை என்ற அடிப்படையில் அரசாங்கம் அதனை தொடர்ந்தும் நிராகரித்து வந்தது.

போரின் இறுதிக் கட்டத்தின் போது போர் நிறுத்தம் ஒன்றுக்கு உடன்பட வேண்டும் என அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அரசாங்கத்தை வலியுறுத்தின. ஆனால், புலிகளின் தலைமைத்துவத்தை முற்றாக அழிக்க கிடைத்த முதலாவது சந்தர்ப்பத்தை கைவிட அரசாங்கம் விரும்பவில்லை. எந்தவொரு அரசாங்கமாக இருந்தாலும் அந்த நிலைப்பாட்டை எடுப்பது ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல.

ஆனால், அதனால் தலைகுனிவுக்குட்பட்ட மேற்கத்தேய நாடுகள் போர் முடிவடைந்தவுடன் தமக்குக் கட்டுப்படாத அரசாங்கத்தை கட்டுப்படுத்த மனித உரிமை என்ற ஆயுதத்தை கையிலெடுத்தன.

அதன் படி போர் குற்றங்களை விசாரணை செய் என்று மேற்குலகம் இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்த தொடங்கின. அரசாங்கம் அதற்கு இணங்காமல் காலத்தை வீணடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதன் விளைவாகவே அமெரிக்கா 2012ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில இலங்கை தொடர்பான முதலாவது பிரேரணையை முன்வைத்தது. அதுவும் இலங்கைக்கு மேலும் சந்தர்ப்பம் வழங்குவதாகவே அமைந்து இருந்தது. அரசங்கம் தாமே நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுலாக்க வேண்டும் என்றே அந்தப் பிரேரணை மூலம் கூறப்பட்டது.

அரசாங்கம் அதற்கும் அவகாசம் வேண்டும் என்று கூறிக்கொண்டு இருந்தது. எனவே தான் இந்த வருடம் அமெரிக்கா உட்பட ஐந்து நாடுகளால் ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலம் ஐ.நா. மனித உரிமை உயர் ஸ்தானிகர்; அலுவலகத்தினூடாக சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அரசாங்கம் அதனையும் நிராகரித்தது. ஆனால், மனித உரிமை உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை தமது விசாரணையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்தார். விசாரணை குழுவும் நியமிக்கப்பட்டது. அதற்கு பிரிட்டனைச் சேர்ந்த சண்டிரா பெய்டாஸ் இணைப்பாளராக இருக்கிறார்.

அதன் ஆலோசகர்களாக முன்னாள் பின்லாந்து ஜனாதிபதியும் கொஸொவோ பிரச்சினையின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை விசாரித்த குழுவில் கடமையாற்றியவருமான மார்ட்டி ஆட்டிசாரி, நியூசிலாந்தின் முன்னாள் மகா தேசாதிபதியும் கம்போடிய பிரச்சினையின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை விசாரித்த சர்வதேச நீதிமன்றத்தில் கடமையாற்றியவருமான சில்வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தானிய மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவியான அஸ்மா ஜஹாங்கீர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

விசாரணைக் குழுவினருக்கு இலங்கைக்கு வர அனுமதிப்பதில்லை என்று இலங்கையில் அமைச்சர்கள் கூறவே அமெரிக்காவின்; நியூயோர்க், சுவிட்ஸர்லாந்தின்; ஜெனிவா மற்றும் தாயலாந்தின்; பாங்கொக் ஆகிய நகரங்களில் வைத்து சாட்சியங்களை பதிவு செய்வதாகவும் மனித உரிமை ஆணைக்குழு இம்மாதம் அறிவித்தது.

இத்தனையும் நடந்ததன் பின்னர் தான் அரசாங்கம் போரின் இறுதிக்க கட்டத்தின் போது சாதாரண மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக விசாரணை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை அரசாங்கம் போர் முடிவடைந்த உடன் அல்லது குறைந்த பட்சம் 2010ஆம் ஆண்டாவது செய்திருந்தால் அமெரிக்கப் பிரேரணைகள் மூலம் இலங்கை மனித உரிமை மீறும் நாடாக சித்தரிக்கப்பட்டும் இருக்காது. சர்வதேச விசாரணையும் வந்திருக்காது.

அப்போது அவ்வாறு செய்ய அரசாங்கத்திற்கு எவ்வித தடையும் இருக்கவில்லை. அவ்வாறு போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களைப் பற்றி விசாரணை செய்வதை எதிர்ப்பார் என்று நினைக்கக் கூடிய அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் 2010ஆம் ஆண்டு ஞாயிறு லங்காதீப பத்திரிகைக்கு எழுதி வரும் 'தொரமடலாவ' என்ற பத்தியொன்றில் அவ்வாறானதோர் உள்ளக விசாரணையொன்றை ஆதரித்து கருத்து வெளியிட்டு இருந்தார்.

எந்தவொரு போரின் போதும் சட்ட விரோத கொலைகள் மற்றும் கற்பழிப்புக்கள் இடம்பெறும் என்றும் 1971ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது கதிர்காமத்தில் இடம்பெற்ற மனம்பேரி கொலையை விசாரித்து குற்றவாளிகளை தண்டித்ததைப் போல், புலிகளுக்கு எதிரான போரின் போதும் சட்டத்தை மீறியோருக்கு எதிராக விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் அமைச்சர் ரணவக்க அந்த பத்தியில் கூறியிருந்தார்.

அரசாங்கம் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களைப் பற்றி விசாரணை செய்ய வேண்டும் என்பதை ஏற்காததனால் இப்போது போர் குற்றங்களை விசாரிக்கும் இரண்டு விசாரணைகள் நடைபெறப்போகின்றன. ஒன்று மனித உரிமை உயர் ஸ்தானிகரின் அலுவலகத்தினால் நடத்தப்படும் விசாரணை. மற்றையது கடந்த வாரம் ஜனாதிபதி வழங்கிய பணிப்புரையின் பிரகாரம் காணாமற்போனோருக்கான ஆணைக்குழுவினால் நடத்தப்படப் போகும் விசாரணை.

ஒரு வகையில் இது அரசாங்கம் தாமே நிராகரித்த இவ் வருட ஜெனிவா பிரேரணையின் படி எடுத்த நடவடிக்கை என்றும் கூறலாம். ஏனெனில், அந்தப் பிரேரணையிலும் இது போன்று சர்வதேச விசாரணையொன்றும் தேசிய விசாரணையொன்றும் சிபாரிசு செய்யப்பட்டு இருந்தது.

இலங்கையில் மனித உரிமை நிலைமையை விசாரணை செய்வதற்காக எந்தவொரு வெளிநாட்டவருக்கும் நாட்டுக்குள் வர அனுமதிப்பதில்லை என அரசாங்கம் கூறிக் கொண்டிருந்தது. ஆனால், மக்ஸ்வெல் பரணகமவின் தலைமையிலான காணாமற்போனோர் தொடர்பான ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக மூன்று சர்வதேச நிபுணர்களை நியமித்ததன் மூலம் அரசாங்கம் அந்த நிலைப்பாட்டடில் இருந்தும் விலகியிருப்பதை அவதானிக்க முடிகிறது.

நவநீதம்பிள்ளையின் விசாரணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கும் மூவரைப் போலவே, காணாமற்போனோர்; தொடர்பான ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூவரும் சர்வதேச ரீதியில் பரபரப்பை ஏற்படுத்திய சில மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளில் சம்பந்தப்பட்டவர்களாவர்.

அவர்களில் சேர் டெஸ்மன்ட் டி சில்வா பிரிட்டிஷ் சட்டத்தரணியும் சியரா லியோனில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையில் சம்பந்தப்பட்டவருமாவர். அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரியாகவிருந்த பேராசிரியர் டேவிட் கிரேன் என்பவரும் அதே விசாரணையில் சமபந்தப்பட்டவராவர். அந்த விசாரணையின் மூலமே லைபீரியாவின் முன்னாள் ஜனாதிபதி சார்ல்ஸ் டேலர் போர் குற்றங்களுக்காக குற்றவாளியாக காணப்பட்டார்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு இருக்கும் மற்றைய ஆலோசகரான பிரிட்டிஷ் பரிஸ்டர் பேராசிரியர் சேர் ஜெப்ரி நைஸ் முன்னாள் யூகோஸ்லாவியாவில் இடம்பெற்ற போர் குற்றங்களை விசாரித்த சர்வதேச நீதிமன்றத்தின் தலைவராகவிருந்தவர். அந்த நீதிமன்றமே முன்னாள் சேர்பிய ஜனாதிபதியான ஸ்லொபொதான் மிலொஸொவிச் போர் குற்றங்களை புரிந்தார் என் தீர்ப்பளித்தது.

டெஸ்மன்ட் டி சில்வா ஒரு காலத்தில் கண்டியில் வாழ்ந்த பிரபல அரசியல்வாதியான ஜோர்ஜ் ஈ டி. சில்வாவின் பேரனாவார். இப்போது அவர் பிரிட்டிஷ் பிரஜையாக இருக்கிறார்.

2006ஆம் ஆண்டு சுமார் 15 பிரதான சம்பவங்களைப் பற்றி விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டு இருந்த ஆணைக்குழுவொன்றுக்கு ஆலோசனை வழங்குவதற்காக முன்னாள் இந்திய பிரதம நீதியரசர் பி.என. பகவதி தலைமையில் சர்வதேச நிபுணர்கள் குழுவொன்றை ஜனாதிபதி; நியமித்து இருந்தார். அந்தக் குழு அரசாங்கம் இந்த விடயத்தில் நேர்மையாக இயங்கவில்லை என்று கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டது.

இறுதிப் போரின் பொறுப்புக் கூறலுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேசம் நெருக்கவே அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தது. அக் குழு சனல் 4 படங்களைப் பற்றியும் போரின் போது சாதாரண மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பாகவும் விசாரணை செய்ய வேணடும் என சிபாரிசு செய்து அரசாங்கத்தை பெரும் சிக்கலில் மாட்டி வைத்தது.

இப்போது சர்வதேச நெருக்குதல் காரணமாக அரசாங்கம் காணாமற் போனோர் தொடர்பான ஆணைக்குழுவுக்;கு போர் குற்றங்களை விசாரணை செய்யும் பொறுப்பையும் வழங்கி ஆலோசனை வழங்க சர்வதேச நிபுணர்கள் குழுவொன்றையும் நியமித்துள்ளது. அதுவும் அனேகமாக அரசாங்கத்திற்கு சாதகமாக அமையும் என்று ஊகிக்க முடியாது.

அது அரசாங்கத்திற்கு சாதகமாக அமையுமா பாதகமாக அமையுமா என்பது வேறு விடயம். ஆனால் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்காக நடவடிக்கை எடுத்தமை காலம் கடந்த செயலாக இருந்த போதிலும் அதனை வரவேற்கத் தான் வேண்டும்.

        


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X