2025 மே 19, திங்கட்கிழமை

யாரை ஆதரிக்கும் கூட்டமைப்பு?

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 01 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

அடுத்த வருட தொடக்கத்தில் ஜனாதிபதித் தேர்தலை அரசாங்கம் நடத்தலாமென்ற எதிர்பார்ப்பும் ஊகங்களும் அதிகரித்துள்ள நிலையில், இந்தத் தேர்தலில் தமிழர் தரப்பின் வியூகங்கள் குறித்த வாதப்பிரதிவாதங்களும் ஆரம்பமாகிவிட்டன.

குறிப்பாக, தமிழர்களின் அரசியலை கையாளும் பிரதான தரப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டுமென்று ஒரு தரப்பினர் வலியுறுத்தவும் அழுத்தம் கொடுக்கவும் தொடங்கிவிட்டனர். இன்னும் சிலரோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நகர்வு எவ்வாறு இருக்கக்கூடாதென்று எச்சரிக்கவும் செய்கின்றனர்.

அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதை அடிப்படையாகக் கொண்ட நகர்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த 24ஆம் திகதி கொழும்பு நகர மண்டபத்தில் கோட்டே நாகவிகாரையின் விகாராதிபதி மாதுளுவாவே சோபித தேரரின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட கூட்டம் இதற்குச் சிறந்த உதாரணம்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி பதவியை ஒழிப்பது, 18ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாமல் செய்து - மீண்டும் 17ஆவது திருத்தச்சட்டத்தில் இடம்பெற்றிருந்தவற்றை நடைமுறைக்கு கொண்டுவருதல் ஆகியவற்றை முன்னிறுத்தி பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டுமென்ற கருத்து எதிரொலித்தது.

எதிரணியிலுள்ள முக்கிய தலைவர்களான ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகா, இரா.சம்பந்தன், சுனில் ஹந்துன்நெத்தி போன்றவர்களுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். அதுமட்டுமன்றி, ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.

அவர் ஏற்கெனவே ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி பதவியை ஒழிப்பது குறித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

ஆக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பதை மையப்படுத்தி, பொதுவேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த எதிர்க்கட்சிகளிடத்தில் மட்டுமன்றி, ஆளும் கட்சிக்குள்ளேயும் ஆதரவு இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் நாளுக்குள் நாள் வலுத்துவரும் முரண்பாடுகளும் மோதல்களும் பொதுவேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தும் முயற்சிகளை பலப்படுத்தியுள்ளன.

அதேவேளை, அரசாங்கத் தரப்பை இது பலவீனப்படுத்தி வருகிறது என்பதையும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் பொதுவேட்பாளராக முன்னாள் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை முன்னிறுத்துவது குறித்து வலுவாக ஆராயப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தினால் பழிவாங்கப்பட்ட அவர், அரசாங்கத்துடன் ஒத்துழைக்கத் தவறியதற்காக தனது பதவியையும் இழக்கும் நிலை ஏற்பட்டது.

அரசியல் சார்பில்லாத ஒருவராக இருப்பதால், சிராணி பண்டாரநாயக்கவை பொதுவேட்பாளராக நிறுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆதரவு இருப்பதாகத் தெரிகிறது. ஏனென்றால், எதிர்க்கட்சிகள் எல்லாவற்றுக்குமே பொதுவேட்பாளராக நிறுத்தப்படுபவர் குறித்த சந்தேகம், அச்சம் இருக்கிறது.

சந்திரிகா குமாரதுங்கவும் கூட, ஆரம்பத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி  பதவியை ஒழிக்கும் வாக்குறுதியுடன்தான் அரசியலுக்கு வந்திருந்தார். ஒன்றுக்கு இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்திருந்த அவர், அந்தப் பதவியில் அமர்ந்த பின்னர் அதனையும் தன்னையும் வலுப்படுத்திக்கொள்வதிலேயே அக்கறை செலுத்தியிருந்தார்.

அதுபோலவே தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கூட, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிக்கும் வாக்குறுதியுடன்தான் பதவிக்கு வந்திருந்தார்.  மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) அவருக்கு ஆதரவளித்து அரியணை ஏற்றியதற்கு அதுவும் ஒரு காரணம்.
 ஆனால் ஜனாதிபதி பதவியை இரண்டு முறை வகித்தபோதும், மஹிந்த ராஜபக்ஷ அதனை ஒழிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாறாக, அதனைப் பலப்படுத்தி அடுத்தமுறையும் தன்னை அதிகாரத்துக்கு கொண்டுவருவதற்கான வழிமுறைகளையே அவர் தேடியிருந்தார். ஆக இதுவரையில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி பதவியை வகித்த, டி.பி. விஜேதுங்க தவிர்ந்த வேறு எவருக்குமே, அந்தப் பதவியில் அமர்ந்துகொண்டதும் அதனைக் கைவிடுவதற்கு மனம் வரவில்லை.

அது ஒரு வசியம்மிக்க அரியாசனம். அதனால்தான் அதை எட்டிப் பிடிப்பவர்கள் எவராலும், உதறித் தள்ளிவிட்டுப் போகமுடியவில்லை.
இப்படிப்பட்ட நிலையில்தான் ஏதாவது அரசியல் கட்சியின் செல்வாக்கை பெற்ற ஒருவரை, பொதுவேட்பாளராக நிறுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் அவ்வளவாக விருப்பமில்லை.

அரசியல் பின்புலம் இல்லாத ஒருவரை முன்னிறுத்தினால், அவரால் நாடாளுமன்றத்தை தன் கைக்குள் போட்டுக்கொள்ள முடியாது.
எனவே, குறிப்பிட்ட காலத்துக்குள் தமது தேவை நிறைவேற்றப்படுமென்று எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. இதனால்தான் சிராணி பண்டாரநாயக்கவை பொதுவேட்பாளராக நிறுத்துவதற்கு ஆதரவு அதிகம் இருப்பதாகத் தெரிகிறது.

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் பொதுவேட்பாளராக முன்னிறுத்திய  ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கிடைத்த பெரும் ஆதரவு, சிராணி பண்டாரநாயக்கவை எதிர்க்கட்சிகள் அதிகம் நம்புவதற்கு முக்கிய காரணம் எனலாம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் இணைந்து பொதுவேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை நிறுத்தியிருந்தன. ஆனால், அவரால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க முடியாது போனது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சரத் பொன்சேகாவை ஆதரித்திருந்தும், தமிழ் மக்கள் அவருக்காக வாக்களிக்கத் தயங்கியிருந்தனர். 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த போருக்கு தலைமை தாங்கியவர் சரத் பொன்சேகா.

அந்தப் போரினால் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் ஆறாத நிலையில்,  இடம்பெயர்ந்தவர்கள் கூட முகாம்களில் அடைபட்டுக் கிடந்த நிலையில், அந்தத் தேர்தல் நடத்தப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களால் போருக்கு தலைமை தாங்கிய சரத் பொன்சேகாவை அப்போது ஆதரிக்க முடியவில்லை.

ஆனால் வடக்கு, கிழக்கில் மஹிந்த ராஜபக்ஷவை விட, சரத் பொன்சேகாவுக்கே அதிகளவு வாக்குகள் கிடைத்திருந்தன. அதற்கு காரணம் அவர் மீது கொண்ட நம்பிக்கை என்றோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற்றவர் என்றோ கருதமுடியாது. அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான வெறுப்புணர்வின் உச்சமாக கருதலாம்.

எவ்வாறாயினும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் முழுமையாகவே சரத் பொன்சேகாவுக்கு கிடைத்திருந்தாலும் கூட, அவரால் வெற்றி பெற்றிருக்கமுடியாது. ஏனென்றால், அவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பெற்றிருந்த வாக்குகளுக்கு இடையிலான வித்தியாசம் மிகவும் அதிகமானது. ஆனால், 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் நிலைமை அவ்வாறானதாக இருக்கவில்லை.

அப்போது, தமிழர்களின் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கத்தக்கதாக இருந்தன.

விடுதலைப் புலிகளின் கோரிக்கையை ஏற்று வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அப்போது வாக்களிக்காமல் இருந்தனர். அதனால், ஐ.தே.க. தலைவர்  ரணில் விக்கிரமசிங்க தோல்வியை தழுவினார்.

அப்போது தமிழ் மக்களை வாக்களிக்க புலிகள் அனுமதித்திருந்தால் நிலைமை தலைகீழாக மாறியிருக்கும். ஏனென்றால், மிகக் குறுகிய எண்ணிக்கையான வாக்குகளின் வித்தியாசத்தில்தான் ரணில் விக்கிரமசிங்கவின் தோல்வியும்  மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியும் நிகழ்ந்தன.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதில் தமிழர் தரப்பு தோல்வி கண்டது.

கடந்தமுறை அதற்கான வாய்ப்பை பெற முயற்சித்தபோதும், அது பயனளிக்கவில்லை.

கடந்தமுறை பொதுவேட்பாளராக சரத் பொன்சேகாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரை மனதுடன் முன்னிறுத்தியபோதே, குழப்பங்களும் கருத்து முரண்பாடுகளும் அதிகம் ஏற்பட்டிருந்தன.

ஏனென்றால், அவரை முன்னிறுத்துவதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, தமிழ் மக்களுக்கு என்ன இலாபம் கிட்டுமென்ற வலுவான கேள்வி தமிழர்களிடத்தில் இருந்தது. அதற்குரிய சரியான பதிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கொடுக்கவும் முடியவில்லை.

அதாவது மஹிந்த ராஜபக்ஷவையும் சரத் பொன்சேகாவையும் தமிழர்களால் அப்போது வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. இரண்டுமே ஓர் உருவத்தின் இரு நிழல்களாக தெரிந்தன.

இந்தப் பின்னணியில் அடுத்து நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எத்தகைய அணுகுமுறையை கடைப்பிடிக்கலாம் என்ற கேள்வி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்கெனவே தோன்றிவிட்டது.

ஏனென்றால், இந்த ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக அடையப்போகின்ற விளைவு தமிழர்களுக்கு எத்தகைய பயனைத் தருமென்று ஆராயப்படவேண்டியது அவசியமாகும்.

எந்த ஜனாதிபதியாலும் எந்த அரசியல் கட்சியாலும் தீர்க்கப்படாமல் இழுபறிப்பட்டுள்ள தமிழர் பிரச்சினைக்கு முடிவு காண்பதற்கான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படாத நிலையில், ஜனாதிபதித் தேர்தலை அதற்கான துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக்கொள்வது குறித்து கூட்டமைப்பு சிந்திக்கலாம்.

அதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்போ, 17ஆவது திருத்தச்சட்டத்தை மீள நிலைப்படுத்துவதோ தமிழர்களுக்கென்று தனியாக எந்த நலனையும் கொண்டுவந்து விடப்போவதில்லை.

ஒருவேளை, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்து  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டுவிட்டாலும் கூட, நிறைவேற்று அதிகார பிரதமர் பதவியை அவர் கையில் எடுக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே, இந்த ஒரு விடயத்துக்காக தமிழர்களின் வாக்குகளை பணயமாக்குவது சரியானதா என்ற கேள்வி எழுகிறது.

இன்னொரு பக்கத்தில் தமிழர் தரப்பின் அடிப்படை நோக்கம் என்னவென்று பார்க்கவேண்டும். அதாவது, மஹிந்த ராஜபக்ஷவை பதவியிலிருந்து இறக்குவதா,  தமிழர் பிரச்சினைக்கு தீர்வை எட்டுவதற்கு வழி தேடுவதா என்று தீர்மானிக்கவேண்டும்.

பெரும்பாலான எதிர்க்கட்சிகள் பொது நிலைப்பாடு குறித்துப் பேசினாலும், அவற்றின் முக்கிய இலக்கு மஹிந்த ராஜபக்ஷவை பதவியிலிருந்து விலக்குவதே என்பதில் சந்தேகமில்லை.

ஏனென்றால், அவரதும் அவரது குடும்பத்தினதும் செல்வாக்கு அரசாங்கத்துக்குள் வலுப்பெறுவது எதிர்கட்சிகளுக்கு அச்சத்தை கொடுக்கிறது.
ஆனால், தமிழ் மக்களை பொறுத்தவரையில் அவரது அசுர வளர்ச்சி பற்றி அலட்டிக்கொள்வதாக இல்லை. ஏனென்றால், அவர்கள் இது போன்ற எதிர்ச்சக்திகளை தாங்கிப் பழக்கப்பட்டுப் போனவர்கள்.

இந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதால் என்ன இலாபம் கிட்டும்?  அவரை தோற்கடிக்காமல் விடுவதால் என்ன நட்டம் ஏற்படும்? என்றும் கவனத்திற்கொள்ள வேண்டும். அது மட்டுமன்றி, இந்தத் தேர்தலில் பொதுவேட்பாளரை ஆதரிக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஒரு வேட்பாளரை நிறுத்தி பலத்தை நிரூபிக்க வேண்டுமென்ற கருத்தும் உள்ளது. ஆனால், அதனால் என்ன இலாபம் கிடைக்கப் போகிறது என்ற கேள்விகளும் உள்ளன.

தமிழர் ஒருவரால் ஒருபோதும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறமுடியாது என்ற நிலையில், பலத்தை நிரூபித்து என்ன பயன்?

முதல் சுற்று வாக்கு  எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காவிட்டால், இரண்டாவது விருப்பு வாக்குகள் எண்ணப்படும். அத்தகையதொரு சூழலுக்குள் தள்ளுவதால் தமிழர்களுக்கு என்ன பயன் கிட்டப் போகிறது? இப்படி எல்லா விதமான யோசனைகளும் அவை குறித்த கேள்விகள் சந்தேகங்களும் எழுப்பப்படுகின்றன.

இவற்றையெல்லாம் ஆராய்ந்து சரியானதொரு முடிவை எடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கால அவகாசம் நிறையவே உள்ளது.
இந்த ஜனாதிபதித் தேர்தலை தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு கருவியாக எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெளிவான முடிவை அவர்கள் எடுக்க முடியும்.

ஆக்கபூர்வமான ஆலோசனைகள் அனைத்தையும் உதறித் தள்ளிவிடாமல், சீர்தூக்கி ஆராய்ந்தால் தெளிவானதொரு பதில் கிடைக்கக் கூடும்.
அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டுமன்றி, தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் உதவியாக அமையலாம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X