2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சந்தர்ப்பவாதத்தின் மீது சவாரி

Thipaan   / 2014 ஓகஸ்ட் 03 , பி.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஐயூப்

இனப்பிரச்சினை விடயத்தில் அரசாங்கம் அண்மையில் எடுத்த சில நடவடிக்கைகள் காரணமாக, அரசாங்கத்திலுள்ள இரண்டு அமைச்சர்கள் அரசாங்கத்துடன் முரண்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்கவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவனசவுமே அந்த இருவராவர்.

அமைச்சர் வீரவன்ச இந்தப் பிரச்சினையின் காரணமாக எதிர்வரும் ஊவா மாகாண சபைத் தேர்தலின் போது, தமது கட்சி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழல்லாது தனியாக போட்டியிடப் போவதாக அறிவித்து இருக்கிறார்.

ஆனால், அவரது இந்த அறிவித்தலை பொது மக்கள் அவ்வளவு 'சீரியசாக' எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான ஐ.ம.சு.மு.வின் வேட்பாளர் பட்டியலில் கூடுதல் இடம்பிடித்துக் கொள்வதற்காக வீரவன்ச, சிறியதோர் நெருக்குதலை கொடுப்பதாகவே சிலர் நினைக்கின்றனர். வேறு சிலர் அரசாங்கத்துக்குள் பிளவு இருப்பதாக காட்டி எதிர்க் கட்சிகளை திசை திருப்ப அரசாங்கமே வீரவன்ச மூலம் ஒரு நாடகத்தை அரங்கேற்றுவதாக நினைக்கின்றனர்.

தாம் கூறுவதை நிரூபிக்க இவ்வாறு கருத்து வெளியிடுவோரிடம் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், அரசியல்வாதிகள் தமது சுகபோகங்களை அவ்வளவு இலகுவில் கைவிட மாட்டார்கள் என்பதையே இந்த மக்களின் பொதுவான கருத்தாக இருக்கிறது.

இருந்த போதிலும் தே.சு.மு.வின் அறிவித்தல் போன்ற சில காரணங்களால் இம்முறை ஊவா மாகாண சபைத் தேர்தல் அண்மையில் இடம்பெற்ற ஏனைய மாகாண சபைத் தேர்தல்களைப் பார்க்கிலும் கூடுதலான கவனத்தை ஈர்த்துக் கொள்ளும் அறிகுறிகள் தென்படுகின்றன. ஏற்கெனவே, ஊவா மாகாண சபைத் தேர்தல் மேலும் இரண்டு விடயங்கள் காரணமாகவும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சிறுபான்மை மக்கள் கூடுதலாக வாழும் பதுளை மாவட்டத்தில் இருந்து மூன்று ஆசனங்களை குறைத்து, அம்மக்கள் குறைவாக வாழும் மொனராகலை மாவட்டத்திற்கு மூன்று ஆசனங்கள் அதிகமாக வழங்கியிருப்பது பலருக்கு வியப்பாக இருக்கிறது. ஆனால், சனத்தொகை குறைவாக இருந்தாலும் மொனராகலை மாவட்டத்தின் நிலப்பரப்பு அதிகமாக இருப்பதனால் தேர்தல் ஆணையாளரின் இந்த முடிவு சரி என்றே கூறப்படுகிறது.

அது சரியாக இருக்கலாம். ஆனால், மறுபுறத்தில் அது அரசியல் ரீதியாக அரசாங்கத்துக்;கு சாதகமானதாகவும் இருக்கிறது. ஏனெனில், பெரும்பாலான சிறுபான்மை மக்கள் ஐ.ம.சு.மு.வை விட ஐக்கிய தேசிய கட்சியையும் சிறுபான்மைக் கட்சிகளையுமே விரும்புகின்றனர். ஆனால், பதுளை மாவட்டத்தில் சிறுபான்மை மக்கள் அதிகமாக இருந்த போதிலும் அங்கு ஆசனங்கள் குறைவாக இருப்பதால் அவர்களால் தேர்தலின் போது செலுத்தக்கூடிய செல்வாக்கின் அளவு இப்போது குறைந்துள்ளது.

அதேவேளை, அரசாங்கத்தின் மற்றுமொரு அமைச்சரான ரவூப் ஹக்கீம் தலைமை தாங்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆளும் ஐ.ம.சு.மு.வோடல்லாது ஏனைய முஸ்லிம் கட்சிகளுடன் சேர்ந்து தனியான அணியாக போட்டியிடப் போவதாக அறிவித்து இருக்கிறது. அதன் காரணமாகவும் ஊவா மாகாண சபைத் தேர்தல் சற்று அதிகமான கவனத்தை ஈர்த்துக் கொண்டுள்ளது.

அதேவேளை, அடுத்த வருடம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலுக்கு இந்த ஊவா மாகாண சபைத் தேர்தல் முன்னுரையாக அமையும் என்றும் சிலர் கருதுகிறார்கள். கடந்த தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல்களின் போது ஆளும் கட்சி சற்று பின்னடைவை காட்டியது. ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகளும் அவ்வாறு அமைந்தால் அது அரசாங்கத்திற்கு மிக மோசமான செய்தியை வழங்கும் என்றே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.

தமது 12 அம்ச திட்டத்தை அரசாங்கம் உதாசீனம் செய்துள்ளதாகவும் ஆளும் கூட்டணியின் கட்சிகளிடையே பரஸ்பர புரிந்துணர்வும் கௌரவமும் அருகி வருவதாகவும் கூறியே தே.சு.மு ஊவா மாகாண சபைக்கு தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. உண்மை தான், அவ்வாறானதோர் நிலைமை காணக்கூடியதாக இருக்கிறது தான். குறிப்பாக கூட்டணியின் சிறு கட்சிகள் மதிக்கப்படுவதாக இல்லை.

வீரவன்சவின் 12 அம்ச திட்டத்தில் தமிழ் மக்கள் விரும்பாத சில அம்சங்களும் இருக்கின்றன. அதிகார பரவலாக்கலுக்கு எதிரான ஒரு விடயமும் அதில் உள்ளடக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு புறம்பாக இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு எந்தவொரு வெளிநாட்டினதும் உதவியை பெற வேண்டாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்ற விடயங்களை விசாரணை செய்வதற்கு உள்நாட்டு விசாரணையேனும் நடத்தக்கூடாது என்றும் அவற்றுக்கோ இனப்பிரச்சினையின் தீர்வுக்கோ வெளிநாட்டவர்களின் உதவியை பெற வேண்டாம் என்றும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், அரசாங்கம் அண்மையில் போர்க் குற்றங்களை விசாரணை செய்யக்கூடிய வகையில் காணாமற்போனவர்கள் தொடர்பான ஆணைக்குழுவின் செயற்பரப்பை விஸ்தரித்தது. அந்த ஆணைக்குழுவுக்;கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மூன்று சர்வதேச நிபுணர்களையும் நியமித்தார்.

எனவே, அரசாங்கம் தமது 12 அம்ச திட்டத்தை புறக்கணித்தது என்றும் தம்மை மதிக்கவில்லை என்றும் வீரவன்ச கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை.

ஆனால், தனித்து போட்டியிடுவதன் மூலம் அவர் ஒன்றாய் கூடி இருக்க ஐ.ம.சு.மு பொருத்தமான கூட்டணியல்ல என்று கூறுகிறாரா? அல்லது இது வெறும் மிரட்டலா என்பது தெளிவாகவில்லை. அநேகமாக இது வெறும் மிரட்டலாகத் தான் இருக்க வேண்டும். ஏனெனில், ஒன்றாய் கூடி இருக்க ஐ.ம.சு.மு பொருத்தமான கூட்டணியல்ல என்றால் மத்திய அரசாங்கத்தில் வீரவன்ச அமைச்சராக இருப்பது எவ்வாறு என்ற கேள்வி எழுகிறது.

தே.சு.மு ஊவா மாகாண சபைக்கு தனித்து போட்டியிட்டு அக்கட்சியின் வேட்பாளர்கள் எவரேனும் வெற்றிபெற்றால், அதேவேளை, ஐ.ம.சு.மு மாகாண சபையை கைப்பற்றிக் கொண்டால் தே.சு.மு ஊறுப்பினரகள்; எதிர்க்கட்சியில் இருக்கப் போகிறார்களா அல்லது ஆளும் கட்சியில் இருக்கப் போகிறார்களா? கட்சித் தலைவர்கள் ஆளும் கட்சியில் அமைச்சர்களாக இருக்கும் போது அவர்கள்; எதிர்க்கட்சியில் எவ்வாறு இருக்க முடியும்?

அநேகமாக தேர்தலின் பின்னர் தே.சு.மு ஆளும் கட்சியிலோ அல்லது எதிர்க் கட்சியிலோ ஐ.ம.சு.மு.வோடே தான் இருக்கும். எனவே, வீரவன்சவின் கட்சி தனித்துப் போட்டியிடுவதனால் ஐ.ம.சு.மு பெரிதாக பாதிக்கப்படப் போவதில்லை.

ஆளும் ஐ.ம.சு.மு தம்மோடுள்ள சிறு கட்சிகளை மதிப்பதில்லை என்பதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளும் கூறுகின்றன. ஆனால், அக்கட்சிகளால் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறது. அல்லது அக்கட்சிகள் அரசாங்கத்தை விட்டுச் செல்ல விரும்பாமல் இருக்கின்றன.

வீரவன்சவைப் பொறுத்தவரையில் அவர் இது போன்ற புறக்கணிப்புக்களை மூடி மறைத்துக் கொண்டே வந்தார். உதாரணமாக 2010ஆம் ஆண்டு இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், மர்சூகி தருஸ்மானின் தலைமையில் குழுவொன்றை நியமித்த போது வீரவன்ச சாகும் வரை உண்ணாவிரதமொன்றை ஆரம்பித்தார்.

அரசாங்கமும் ஆரம்பத்தில் தாம் அந்தக் குழுவை ஏற்றுக்கொள்வதில்லை எனக் கூறியது. ஆனால், அக்குழுவுக்;கு இலங்கைக்கு வர இடமளிப்பதாக பின்னர் ஜனாதிபதி அறிவித்தார். இலங்கைத் தூதுக் குழுவொன்று தருஸ்மான் குழு உறுப்பினர்களை நியூயோர்க் நகரில் வைத்து சந்தித்தது. அப்போது தமக்கு ஏற்பட்ட அவமானத்தை வீரவன்ச வெளிக்காட்டாமல் அவற்றைப் பற்றி தெரியாதவரைப் போல் இருந்தார்.

அண்மையில் அவர் தமது 12 அம்ச திட்டத்தை ஜனாதிபதியிடம் கையளித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பேச்சுவார்த்தை திருப்திகரமானது என தே.சு.மு அறிவித்தது. இலங்கையின் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கோ அல்லது நல்லிணக்கம் தொடர்பாகவோ 'தென்னாபிரிக்கா உட்பட' எந்தவொரு நாட்டினதும் உதவியைப் பெறக்கூடாது என அந்த 12 அம்ச திட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

பொதுநலவாய அமைப்பு நாடுகளின் தலைவர்களின் மாநாட்டுக்காக, தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜாகொப் சூமா இலங்கைக்கு விஜயம் செய்த போது, தென்னாபிரிக்க பாணியிலான போர்க் குற்றங்கள் தொடர்பான உண்மையைக் கண்டறியும் பொறிமுறையொன்றை இலங்கையிலும் உருவாக்க உதவுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருந்தார். எனவே தான் தமது 12 அம்ச திட்டத்தில் 'தென்னாபிரிக்கா உட்பட' என்று வீரவன்ச குறிப்பிட்டு இருந்தார். 
 
ஆனால், ஜனாதிபதி ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு இணங்க தென்னாபிரிக்க ஜனாதிபதி தமது பிரதி ஜனாதிபதி சிறில் ரமபோசவை இலங்கைக்கான சிறப்புத் தூதுவராக நிமித்ததோடு, ரமபோச கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்து அரசாங்கத்தினதும் தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் தலைவர்களை சந்தித்தார். அப்போது பெரிதாக எதுவும் நடக்கவில்லையே என்று தமக்கு ஏற்பட்ட அவமானத்தை மூடி மறைப்பதற்காக கூறிவிட்டு வீரவன்ச சமாளித்துவிட்டார்.

அதனை அடுத்து தான், ஜனாதிபதி காணாமற்போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் செயற்பரப்பை விஸ்தரித்தும் அவ்வாணைக்குழுவுக்;கு வெளிநாட்டு ஆலோசகர்களை நியமித்தும் வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டார்.

இது வீரவன்சவை பெரும் அசௌகரித்துக்குள்ளாக்கியது. ஆனால், வீரவன்சவோ ஹெல உறுமய கட்சியோ அதனை கண்டிக்கவில்லை. குறிப்பாக அது தொடர்பாக எதனையும் கூறவுமில்லை.

கூட்டணியொன்றில் கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததற்காக கட்சிகள் பிரிந்துச் செல்லத் தேவையில்லை.

ஏனெனில், கூட்டணியொன்று என்பதன் அர்த்தமே வேறுபட்ட கருத்துள்ள கட்சிகளின் கூட்டு என்பதே. அவற்றிடையே கருத்து வேறுபாடுகள் இல்லாவிட்டால் அவை வௌ;வேறு கட்சிகளாக இருக்கத் தேவையில்லை. சில கட்சிகளை கலைத்துவிட்டு ஒரே கட்சியாக மாறலாம். ஆனால், அவை சில அடிப்படை விடயங்களில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கூட்டணியாக இருக்க முடியாது.

ஐ.ம.சு.மு.வைப் பொறுத்தவரை அதிலுள்ள இடதுசாரி கட்சிகளைத் தவிர்ந்த ஏனைய கட்சிகள் அதிகார பரவலாக்கலை எதிர்க்கும் போர் குற்றங்களை நிராகரிக்கும் அது தொடர்பான விசாரணையையும் அது தொடர்பான வெளிநாட்டு தலையீட்டையும் நிராகரிக்கும் கட்சிகளாகும். அவை தான் அக்கட்சிக்கு இடையிலான பந்தத்தின் அடிப்படையாகும்.

அந்த விடயங்களில் வேறு எவராவது மாற்றுக் கருத்தைக் கொண்டிருந்தால் அவர்களை இந்தக் கட்சிகள் துரோகிகள் என்றே அழைக்கின்றன. ஆனால், இப்போது இந்தக் கூட்டணியில் உள்ள பிரதான கட்சியே (வெளிநாட்டு நெருக்குதல் காரணமாக) அந்த நிலைப்பாட்டிலிருந்து விலகிச் செல்லும் போது அந்தக் கட்சியின் தலைவர்கள் துரோகிகளாவதில்லை.

அதைப் பற்றிக் கேள்வி எழுப்பினால் நாம் அரசாங்கத்தை திருத்திக் கொள்வதற்காக அரசாங்கத்தில் இருக்கிறோம் என்று கூறிக் கொண்டு அரசாங்கத்தில் தொற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இடதுசாரி கட்சிகளும் இதேநிலையில் தான் செயற்படுகின்றன. அவை முதலாளித்துவ பொருளாதாரத்தை எதிர்க்கின்றன.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை எதிர்க்கின்றன. கூடுதலான அதிகார பரவலாக்கலை கோருகின்றன. இவற்றில் எதனையும் இந்த அரசாங்கத்தின் மூலம் செய்து கொள்ள முடியாது என்பதை சிறு குழந்தைகளும் அறிந்திருக்கும் நிலையிலும் அரசாங்கத்தை திருத்தலாம் என்று கூறிக்கொண்டு அதில் தொற்றிக் கொண்டு இருக்கின்றன.

அதேவேளை, தமது கொள்கைக்கு முரணாகவே நிறைவேற்று ஜனாதிபதி முறையைப் பலப்படுத்தும் 18ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கும் வாக்களித்தனர். அதே கட்சிகள் இப்போது நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்யுமாறு மீண்டும் இதே ஜனாதிபதியிடம் கோருகின்றன.

மு.கா. மட்டும் அரசாங்கத்தை திருத்துவதற்காக தாம் அரசாங்கத்தில் இருப்பதாகக் கூறுவதில்லை. தாம் சூழ்நிலையின் கைதி என்றே மு.கா. தலைவர் பல முறை கூறியிருக்கிறார்.

அரசாங்கத்தை நிருத்துவதற்காக அரசாங்கத்தில் இருப்பது என்பது சற்று பழமையான கருத்தாகும். 1990களில் டளஸ் அலஹப்பெரும, டிலான் பெரேரா, நாலந்த எல்லாவல ஆகியோர் மல்பெரி குரூப் என்ற பெயரில் குழுவொன்றை உருவாக்கிக் கொண்டு சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தை திருத்துவதற்காக செயற்படுவதாகக் கூறிக்கொண்டிருந்தனர்.

ஆனால், சமாதானத்துக்;கான போர் என்ற பெயரில் சந்திரிகா போரை தீவிரப் படுத்திய போது போருக்கு எதிராக கருத்து வெளியிட்டவாறே தமது இருப்புக்காக அவர்களும் அதனை பூரணமாக ஆதரித்தனர்.

சிலர் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அரசாங்கத்தை திருத்த அரசாங்கத்தில் தொற்றிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் இனப்பிரச்சினைக்கான தீர்வை குழப்பும் வகையில் அரசாங்கத்தை திருத்துவதற்காக அரசாங்கத்தில் தொற்றிக் கொண்டிருக்கிறார்கள். இரு சாராரினதும் சந்தர்ப்பவாதத்தை வாகனமாக்கிக் கொண்டு அரசாங்கம் சவாரி செய்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X