2025 மே 19, திங்கட்கிழமை

தமிழக கட்சிகளை ஒன்றுசேர்த்த வலைத்தள பிரச்சினை

Thipaan   / 2014 ஓகஸ்ட் 04 , பி.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்தும் இந்திய பிரதமர் நரேந்திரமோடி குறித்தும் வெளியிடப்பட்ட கட்டுரையும் கேலிச்சித்திரமும் தமிழகத்தில் கோப அலைகளை ஏற்படுத்தி விட்டது என்றே சொல்ல வேண்டும்.

பொதுவாகவே, இலங்கை தமிழர்களுக்கு உரிய நியாயத்தையும் நீதியையும் வழங்கவில்லை என்ற கோபம் தமிழக மக்களின் உள்ளுணர்வாக இருக்கிறது. இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் தற்போதைய இந்திய அரசும் முன்பு இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு போலவே செயற்படுகிறது என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக வைகோ, டாக்டர் ராமதாஸ், கலைஞர் கருணாநிதி, முதலமைச்சர் ஜெயலலிதா என அனைவர் மனதிலுமே குடியேறிக் கொண்டிருக்கிறது.

முன்பு இருந்த காங்கிரஸ் அரசு போல் இல்லாமல் பா.ஜ.க. தலைமையிலான அரசு, இலங்கை தமிழர்கள் விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஏற்கெனவே பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரைப் பொறுத்தவரை ஏதோ தி.மு.க. பங்கேற்ற காங்கிரஸ் அரசுதான் இலங்கை தமிழர் பிரச்சினையை குழப்பியது என்று நடந்த பிரசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைகிறார். அதனால்தான் இப்போது பா.ஜ.க.வுக்கு நான் ஆதரவு கொடுக்கவில்லை.

ஆனால், அந்தக் கட்சியின் அணுகுமுறை மாறி விட்டதா என்பதை அறிவிக்கும் வகையில்தான் இப்படியொரு அறிக்கை விட்டார். இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க. பங்கேற்றாலும் சரி, வேறு எந்த தமிழக கட்சி பங்கேற்றாலும் சரி மத்திய அரசின் நிலைப்பாடு ஒரே மாதிரிதான். காங்கிரஸுக்கும், பா.ஜ.க.வுக்கும் அக்கொள்கையில் பெரிய வித்தியாசமில்லை என்பதை வலியுறுத்துவதும் அவரது அறிக்கையின் மற்றுமொரு நோக்கம்.

இலங்கை தமிழர்களின் நலனில் புதிய அரசின் (பிரதமர் மோடி தலைமையிலான அரசு அணுகுமுறை மாறும் என்று நினைத்த தமிழக மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதத்தில் இருக்கிறது என்று முதலமைச்சர் ஜெயலலிதாவும் ஏற்கெனவே கடிதம் எழுதியிருக்கிறார். பிரதமர் மோடி தனக்கு அரசியல் ரீதியாக நண்பர் என்றாலும் அவர் பிரதமர் என்பதற்காக தமிழக மீனவர்களின் பிரச்சினைகளை எழுப்பாமல் இல்லை. தி.மு.க. எதிர்கட்சியாக இருந்து அதை கையிலெடுத்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் போதெல்லாம் முதலமைச்சராக பல கடிதங்களை எழுதியிருக்கிறார். குறிப்பாக கச்சதீவை மீட்க வேண்டும் என்பதில் இன்னும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருக்கும் போது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு என்றாலும், பா.ஜ.க. வந்தவுடன் அந்த வழக்கை வாபஸ் வாங்கிவிடவில்லை.

அது மட்டுமல்ல, அவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் மத்திய அரசு மாறுபட்ட கருத்தைக் கூறிய போது கூட பிரதமருக்கு கடிதம் எழுதி அதைக் கண்டிக்கத் தவறவில்லை. என்னைப் பொறுத்தவரை மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் இலங்கை தமிழர் பிரச்சினையில் ஒரே நிலைப்பாடு என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வரவே முதலமைச்சர் ஜெயலலிதா நினைக்கிறார். அதனால்தான் வலைத்தள விவகாரம் எழுந்த போது கூட பிரதமர் நரேந்திரமோடிக்கே கடிதம் எழுதி, இலங்கை அரசை கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதே நிலைப்பாட்டில்தான் வைகோவும் இருக்கிறார். ஆனால், அவருக்கு வேறு மாதிரி நெருக்கடி. ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளரான வைகோவுக்கும் பா.ஜ.க.வுக்கும்தான் இலங்கை தமிழர் விடயத்தில் கொஞ்சம் கூட இணங்கிப் போகவில்லை.

அ.தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் நட்புணர்வுதானே தவிர, அரசியல் கூட்டணி ஏதுமில்லை. அதனால்தான் நாடாளுமன்றத்தில் துணை சபாநாயகர் கிடைக்கும் வாய்ப்பு வந்து கூட அது பற்றி இன்னும் முடிவு எடுக்காமல் இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.
அப்படி துணை சபாநாயகர் பதவியை ஏற்றுக்கொண்டு விட்டால் இலங்கை தமிழர் பிரச்சினையிலும், நாட்டில் நிலவும் பிரச்சினைகளிலும் பா.ஜ.க.வின் கொள்கைகளில் சிக்கி தன் கட்சியும் கெட்ட பெயர் சம்பாதிக்க நேரலாம் என்று கருதுகிறார்.

பா.ஜ.க.வுக்கு இன்னும் ஐந்து வருடங்கள் கழித்துத்தான் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டிய சூழல். ஆனால், ஜெயலலிதாவுக்கோ அடுத்த ஒன்றரை வருடங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

இது போன்ற சூழலில் அ.தி.மு.க, பா.ஜ.க.வுடன் பதவிகளை ஏற்றுக்கொண்டு நெருங்கிச் செல்லக் கூடாது என்று கருதுகிறார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா. ஆனால் வைகோவுக்கோ இதை விட மோசமான சூழ்நிலை.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது ஒட்டுமொத்த இலங்கை தமிழர் பிரச்சினைக்கும் காங்கிரஸ் தலைமையில் இருந்த அரசுதான் காரணம் என்று வீதிக்கு வீதி பிரச்சாரம் செய்து விட்டார். அதுவும் குறிப்பாக பிரதமராக நரேந்திரமோடி வந்தால் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுவார் என்றும் தமிழக மக்களிடம் வாக்குறுதி கொடுத்து விட்டார்.

இன்னும் சொல்லப்போனால், அப்படியொரு வாக்குறுதியை தன்னிடம் மோடி கொடுத்ததாகவே வைகோ தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் சொல்லி விட்டார். இந்நிலையில் ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடியிடம் இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸின் கொள்கையே தொடருகிறது என்ற கோபம் வைகோவுக்கு இருக்கிறது.

பதவியேற்பு விழாவுக்கு இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவை அழைத்தது, இலங்கையில் நடக்கும் இராணுவ கருத்தரங்கில் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி கலந்து கொள்வது, மீனவர்கள் பிரச்சினையில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து இலங்கை அரசை கண்டிக்காதது, இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் ஐ.நா. குழுவுக்கு விசா கொடுக்க மறுப்பதாக வந்த செய்தி இது எல்லாமே பிரதமர் மோடிக்கும், வைகோவுக்குமான இடைவெளியை விரிவுபடுத்திக் கொண்டே போகிறது.

இன்னும் சொல்லப் போனால் அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில், நாம் ஏதோ நினைத்தோம். ஆனால், இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் அரசை விட மிக மோசமாக பா.ஜ.க. அரசு நடந்து கொள்கிறது. அரக்கத்தனமாக நடந்து கொள்கிறார்கள். எது எப்படியோ நம் கொள்கையில் நாம் உறுதியாக இருப்போம். இலங்கை தமிழர்களுக்கு எதிராகப் போகும் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் கடுமையாக பா.ஜ.க. அரசை எதிர்ப்போம் என்று கூறியிருக்கிறார்.

இப்படி கலைஞர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகிய அனைவரும் இப்பிரச்சினையில் ஒவ்வொரு காரணத்துக்;காக வேகமான கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், இணையத்தள விவகாரம் வந்தது.

தமிழகத்தில் அ.தி.மு.க.வினர் ஆங்காங்கே போராட்டத்தில் குதித்தனர். குறிப்பாக சென்னையிலுள்ள இலங்கை துணை தூதரகம் முன்பும் ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சித்தனர். திரையுலகத்தினரும் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள். அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி, போராட்டம் நடத்தி தமிழக டி.ஜி.பி.ராமானுஜத்திடம் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புகார் மனுவையே கொடுத்துள்ளார்.
இந்தப் போராட்டங்கள் ஒரு புறமிருக்க மீனவ அமைப்புகள் ஆங்காங்கே பதாதைகளை அடித்து ஒட்டியிருக்கின்றன. தங்களின் பிரச்சினைகளுக்காக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வரை எப்படி கொச்சைப்படுத்தலாம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கண்டித்து ஒட்டப்பட்டுள்ளன.

இவற்றையெல்லாம் விட முக்கியமாக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஒரு முகமாக நின்று இதை கண்டித்துள்ளார்கள். முதல்வர் ஜெயலலிதா மீதான தரக்குறைவான விமர்சனத்துக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்திருப்பதுதான் ஹைலைட். அதுவும் குறிப்பாக எதிரும் புதிருமாக இருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதி இதை கண்டித்து அறிக்கைவிட்டதோடு மட்டுமின்றி, இந்திய அரசு, இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரிலிருந்து தி.மு.க.வின் 22 எம்.எல்.ஏ.களும் கூண்டோடு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த ஜனநாயக விரோதச் செயலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. கண்டனக் கூட்டங்களை நடத்தி வருகிறது. இது போன்ற சூழ்நிலையில் கூட முதல்வர் பற்றிய விமர்சனத்தை கண்டித்திருக்கிறது தி.மு.க.

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை குறை கூறுவது அநாகரீகம். அது கண்டிக்கத்தக்கது என்றார். கூட்டணியிலிருந்து வெளியேறிய விஜயகாந்தும் கண்டித்துள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக வைகோ, தமிழக முதலமைச்சரை விமர்சிக்க உலகத்தில் எவருக்கும் வராத துணிச்சல் இலங்கை அரசுக்கு எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த அறிக்கையோடு தனக்குப் பிடித்த இரு கடிதங்கள் என்ற பெயரில் இரு கடிதங்களை ம.தி.மு.க.வின் அதிகாரபூர்வ சங்கொலியில் வெளியிட்டிருக்கிறார்.

அதில் ஒன்று முல்லைப் பெரியாறு அணை தொடர்பிலான போராட்டத்துக்கு வைகோ சென்ற போது ஜெயலலிதா வாழ்த்தி எழுதிய கடிதம். உலகத்தில் யாருக்கும் வராத துணிச்சல், ஜெயலலிதாவின் பாராட்டுக் கடிதத்தை வெளியிட்டது எல்லாம் வைகோவின் நடவடிக்கைகளில் வெளியாகியிருப்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

டாக்டர் ராமதாஸும் முதல்வர் மீதான விமர்சனத்தைக் கண்டித்திருக்கிறார். இந்த வகையில் பார்த்தால் இலங்கை அரசின் இணையத்தளத்தில் வெளியான கட்டுரையும், படமும் தமிழகத்தில் முதலமைச்சர் பக்கமாக அனைத்துக் கட்சிகளையும் ஒன்று சேர வைத்திருக்கிறது.

ஆனால், இப்படிச் சேர்ந்த நிலையில், தமிழக எம்.பி.க்களின் தயவில் மத்திய அரசு இல்லை என்பதுதான் துரதிஷ்டம். ஏனென்றால் இந்த ஒற்றுமை அகில இந்திய அளவில் இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசின் கருத்தை மாற்றவோ, அல்லது அணுகுமுறைய மாற்றவோ உதவுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

சம்பந்தப்பட்ட கட்டுரை வெளியிட்டதற்;காக இலங்கை அரசு மன்னிப்புத் தெரிவித்த பிறகும் போராட்டங்கள் தொடருகிறன. குறிப்பாக சேலத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் விஜயலட்சுமி அதிக அளவு தூக்கமாத்திரை போட்டு தன்னை தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.
அப்படி யாரும் செய்ய வேண்டாம். தமிழுக்காக, தமிழர்களுக்காக போராட வேண்டும் என்று உருக்கமான வேண்டுகோளை முதல்வர் ஜெயலலிதா ஒகஸ்ட் 3ஆம் திகதி வெளியிட்டிருக்கிறார். தன் மீதான கட்டுரைக்கு முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தாலும், மத்திய அரசைப் பொறுத்தமட்டில் அந்த விஷயம் முடிவுக்கு வந்து விட்டதாகவே அறிவித்திருக்கிறது.
இலங்கை அரசு மன்னிப்புக் கோரிவிட்ட நிலையில் அதை இனி தொடருவது சாத்தியமில்லை என்ற நிலைப்பாட்டையே எடுத்துள்ளது மத்திய அரசு. ஏனென்றால், இந்த விடயத்தில் ஏற்கெனவே தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் ஓரணியில் நிற்கும் போது மத்திய அரசும் இலங்கை அரசு மீது வெளிப்படையாக கண்டனங்களைத் தெரிவித்தால் அது எதிர்கால இந்திய இலங்கை உறவுக்கு சௌகரியமாக இருக்காது என்று உணருகிறது.

அதனால்தான் தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் முன்னெடுத்துச் சென்ற அளவுக்கு அகில இந்திய அளவில் பா.ஜ.க.வோ, இந்திய அரசோ இப்பிரச்சினையில் மேற்கொண்டு கிளற விரும்பவில்லை. இத்தனைக்கும் நாடாளுமன்றத்தில், முதல்வர் மீது இப்படி வலைதள கட்டுரை வெளியிட்டதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் பேசியிருக்கிறார்.

இலங்கையின் பாதுகாப்புத்துறை இணையதளம் ஏற்படுத்திய பிரச்சினை தமிழக அரசியல் கட்சிகளை ஒற்றுமையாக்கியிருக்கிறது. இப்படியொரு ஒற்றுமை இலங்கையில் போர் உச்சகட்டமான நிலையில் இருந்த போது கூட ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமின்றி, இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தலைவர்களில் தமிழக முதல்வர்தான் முதன்மை பெற்றவர் என்ற உணர்வையும் தமிழகத்திலும், அகில இந்திய அளவிலும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதும் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X