2025 மே 19, திங்கட்கிழமை

அரசின் தலையில் மண் போட்ட பாதுகாப்பு அமைச்சு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 07 , பி.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

தமிழ்நாட்டில் தணிந்து போய்க்கிடந்த இலங்கை அரசுக்கு எதிரான உணர்வலைகள், இப்போது மீண்டும் கொதி நிலைக்கு வந்திருக்கின்றன. இதற்கு, இலங்கைத் தமிழர் பிரச்சினையோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள புலிகளின் ஆதரவாளர்களோ காரணமல்ல. இலங்கை பாதுகாப்பு அமைச்சே இந்த பிரச்சினையை உருவாக்கி விட்டது.

எங்கோ சிறகடித்துப் பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய - இலங்கை உறவுகளுக்கு கடிவாளம் போட்டு அடக்கி விடும் சூழலை பாதுகாப்பு அமைச்சே ஏற்படுத்தி விட்டது. ஒரு வகையில் சொல்லப் போனால், இதனை யானை தன் தலையில் மண்ணை வாரியது போல என்று கூறலாம்.
ஏனென்றால், புதுடெல்லியில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அமைந்த நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசாங்கம், கொழும்புக்குச் சாதகமான உற்சாகத்தை ஏற்படுத்தத்தக்க சில நகர்வுகளை மேற்கொண்ட நிலையில், அதையெல்லாம் தலை குப்புறக் கவிழ்த்துப் போட்டு விட்டுள்ளது பாதுகாப்பு அமைச்சு.

சேனாலி வதுகே என்ற பெண் கட்டுரையாளரின் கட்டுரை ஒன்று தான் பாதுகாப்பு அமைச்சையும் இலங்கை அரசாங்கத்தையும் இந்த நெருக்கடிக்குள் தள்ளிவிட்டிருக்கிறது. மீனவர்கள் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதங்களை கேவலப்படுத்தும் வகையில், 'நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதும் காதல் கடிதங்கள் எந்த அளவுக்கு அர்த்தமுள்ளவை?' என்ற தலைப்பில் அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது.

அதனுடன் சேர்த்து பிரசுரிக்கப்பட்ட ஒரு புகைப்படமும் இந்தியப் பிரதமருக்கு தமிழக முதல்வர் காதல் கடிதம் எழுதுவது போன்று சித்திரிக்கப்பட்டிருந்தது. உண்மையில், அந்தப் படத்தை சித்திரித்தவரோ கட்டுரையை எழுதியவரோ நிலைமை இந்தளவுக்கு மோசமடையும் என்று நினைத்திருக்கமாட்டார். ஏன், பாதுகாப்பு அமைச்சு கூட இந்தளவுக்கு நிலைமை மோசமடையும் என்றோ சர்ச்சையை உருவாக்கும் என்றோ கருதியிருக்கவில்லை.

அவ்வாறு நினைத்திருந்தால் அந்தக் கட்டுரை, பாதுகாப்பு அமைச்சின் இணையத் தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகம் தான். கட்டுரையும் படமும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தின் முகப்புப் பக்கத்தில் பிரதான அம்சமாக வெளியிடப்பட்ட உடனேயே அது சர்ச்சையை கிளப்பி விட்டது.

ஒரு அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்னொரு நாட்டின் பிரதமரையும் ஒரு மாநில முதல்வரையும் இணைத்து இப்படியானதொரு கட்டுரையையும் படத்தையும் வெளியிட்டதென்பது மோசமான முன்னுதாரணமே.

இதனை தவறு என்று அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதனால் தான் பாதுகாப்பு அமைச்சு நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோரியது.

இன்னொரு நாட்டின் உயர்நிலைத் தலைவர்களையோ சர்வதேசப் பிரமுகர்களையோ புலி என்று பட்டம் கட்டிப் பழகிப் போனதால் தான் அரசாங்க இணையத்தளம் ஒன்றினால் இந்தியப் பிரதமரையும் தமிழ்நாடு முதல்வரையும் இவ்வாறு கேவலமாக சித்திரிக்க முடிந்தது.

இதனை தெரியாமல் செய்த தவறு என்று பாதுகாப்பு அமைச்சோ இலங்கை அரசாங்கமோ நியாயப்படுத்த முடியாது. இத்தகையதொரு செயலுக்கான ஊக்கியாக இந்திய அரசாங்கம் அல்லது அதனைச் சார்ந்துள்ளவர்களும் இருந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்திருப்பதைப் புறக்கணிக்க முடியாதுள்ளது.

அண்மையில் கொழும்புக்கு வந்த சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான பா.ஜ.க.வின் கொள்கை வகுப்பு குழுவினர் தெரிவித்த சில கருத்துகள், இலங்கை அரசுக்கு அதிகளவு தெம்பைக் கொடுத்தது என்பதில் சந்தேகமில்லை. அதாவது, இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையை புதுடெல்லியே தீர்மானிக்கும் என்றும் அதனை தமிழ்நாடு, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களால் தீர்மானிக்க முடியாது என்றும் பா.ஜ.க.வின் கொள்கை வகுப்பு ஆலோசகரான கலாநிதி சேஷாத்ரி சாரி தெரிவித்திருந்தார்.

கடந்த காலங்களில் தமிழ்நாட்டின் அழுத்தங்களால் புதுடெல்லி எடுத்த முடிவுகள் கொழும்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. இலங்கை அரசாங்கம் போரை முன்னெடுத்த போதும் அதற்குப் பின்னரும் தமிழ்நாட்டின் கடுமையான எதிர்ப்புகள், விமர்சனங்கள், அழுத்தங்களைச் சந்திக்க நேரிட்டது. அது பல சந்தர்ப்பங்களில் இலங்கை அரசின் திட்டங்களைத் தவிடு பொடியாக்கின. அல்லது குழப்பியடித்தன.

தி.மு.க ஆட்சிக்காலத்திலும் அ.தி.மு.க ஆட்சிக்காலத்திலும் இவை இடம்பெற்றன. தி.மு.க ஆட்சியை இழந்த பின்னரும் மன்மோகன்சிங் அரசாங்கத்தில் கொண்டிருந்த செல்வாக்கை வைத்து பல சந்தர்ப்பங்களில் இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்தது. அல்லது இலங்கை அரசுக்குச் சார்பான முடிவுகளை எடுக்க விடாமல் புதுடெல்லியைத் தடுத்து நிறுத்தியது. இவையெல்லாம் இலங்கை அரசாங்கத்துக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தின என்பதில் சந்தேகமில்லை.

அதுமட்டுமன்றி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பை நடத்தக் கோரியும் இலங்கையில் நடந்த போரக்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணையை நடத்த வலியுறுத்தியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் இலங்கை அரசாங்கத்தை எரிச்சல் கொள்ள வைத்திருந்தன. இந்தநிலையில், புதுடெல்லியில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் தமக்குச் சாதகமாக மாறும் என்று நம்பியிருந்தது இலங்கை அரசாங்கம்.
அதுபோலவே பல சம்பவங்களும் நடந்தன. கருத்துக்களும் வெளியாகின. அதாவது, இலங்கையுடனான இந்தியாவின் உறவுக்குள் தமிழ்நாட்டின் தலையீட்டுக்கு இடமளிக்கக் கூடாது என்ற கருத்து புதுடில்லி ஆட்சியாளர்களின் மீது திணிக்கப்பட்டது. குறிப்பாக சுப்பிரமணியன் சுவாமி போன்றவர்கள் அத்தகைய நிலையை வலியுறுத்தியுள்ளனர்.

அண்மையில் கொழும்பு வந்திருந்த சுப்பிரமணியன் சுவாமி, இந்திய - இலங்கை உறவுகளில் இருந்து தமிழ்நாட்டையும் தமிழர் பிரச்சினையையும் துண்டித்து விட வேண்டும் என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார். அவரது இதுபோன்ற கருத்துகளும் கொழும்புக்குப் புதுடெல்லி காண்பித்த சமிக்ஞைகளும் தமிழ்நாட்டில் வெறுப்புணர்வையே தோற்றுவித்திருந்தது.

இலங்கை அரசாங்கத்துக்குச் சாதகமாக நடந்துகொள்ள புதுடெல்லி துணிந்து விட்டதான கருத்தை அது தமிழ்நாட்டில் ஏற்படுத்தியிருந்தது. ஆனால்,  புதுடெல்லியில் அமைந்த நரேந்திர மோடி அரசாங்கத்துடன் உறவைப் பேண விரும்பிய தமிழக அரசு, இலங்கைத் தமிழர் விவகாரத்தை மட்டும் வைத்துக்கொண்டு மத்திய அரசுடன் முட்டி மோத விரும்பவில்லை.

கடந்த அரசாங்கத்துடன் கடைப்பிடித்த முரண்போக்கினால் ஏற்பட்ட பாதிப்புக்களைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் நலன் கருதி பொறுமை காத்தது. இந்தச் சூழலில் தான் இலங்கை அரசாங்கத்துக்குச் சாதகமாக புதுடெல்லியில் ஏற்பட்டு வந்த மாற்றத்தைப் புரட்டிப் போட்டுள்ளது பாதுகாப்பு அமைச்சு.

எங்கே ஒரு சிறு துரும்பு கிடைக்கும் என்று காத்திருந்த தமிழ்நாட்டுக்கு கிடைத்தது அரிய வாய்ப்பு. பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் கட்டுரை வெளியிடப்பட்ட விவகாரத்தை வைத்து ஒரு பெரிய அரசியல் நகர்வையே நடத்தி முடித்திருக்கிறது தமிழ்நாடு. இதில் ஆச்சரியமான ஒரு விடயம் உள்ளது.

எல்லா விடயங்களுக்கும் முரண்பட்டுக் கொள்ளும் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் எல்லாவற்றையும் ஒரே அணியில் திரள வைத்து விட்டது பாதுகாப்பு அமைச்சு. கீரியும் பாம்புமாக செயற்பட்டு வந்த போதும் ஜெயலலிதாவுக்காக  கருணாநிதி குரல் கொடுத்த அதிசயமும் நிகழ்ந்தது. இந்த ஒன்றுபட்ட உணர்வை அண்மைய தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் காண முடியாத நிலை இருந்தது.

பாதுகாப்பு அமைச்சின் புண்ணியத்தினால் இப்போது புதுடெல்லிக்கு இன்னொரு சமிக்ஞை காட்டப்பட்டுள்ளது. அதாவது, கட்சி பேதமின்றி தமிழ்நாடு ஒன்றுபட்டு நிற்கிறது என்பதே அது. அதனால் தான், அ.தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுத்தவுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அதனைக் கண்டித்தார். இலங்கைத் தூதுவரை அழைத்து எதிர்ப்பைத் தெரிவிப்பதாக உறுதியளித்தார்.

அவர் கூறியது போலவே, கடந்த திங்கட்கிழமை மாலை இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்ட புதுடெல்லிக்கான இலங்கைத் தூதுவர் சுதர்சன் செனிவிரத்னவிடம் இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலாளர்களில் ஒருவரான சுசித்ரா துரை, இந்தியாவின் கண்டனத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிருப்தியையும் வெளிப்படுத்தினார்.

இந்த விவகாரத்தில் புதுடெல்லிக்கும் கூட ஒரு பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது. உண்மையில், இந்தக் கட்டுரை வெளியானதும் அது தொடர்பாக இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பேயாகும். ஆனால், இந்திய மத்திய அரசாங்கம் அவ்வாறு செய்திருக்கவில்லை.

தமிழ்நாட்டில் இருந்து அ.தி.மு.க தரப்பில் கொடுக்கப்பட்ட அழுத்தங்களை அடுத்தே கொழும்பில் இருந்த இந்தியத் தூதுவர் வை.கே சின்ஹா, வெளிவிவகாரச் செயலாளர் சேனுகா செனிவிரத்னவை சந்தித்து அதிருப்தியைத் தெரிவித்தார். அதன் பின்னரே, பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரப்பட்டது.

அதற்கு முன்னரே, இந்த விவகாரம் தமிழ்நாட்டில் சர்ச்சையைக் கிளப்பத் தொடங்கியதுமே பாதுகாப்பு அமைச்சு கட்டுரையை சத்தமில்லாமல் நீக்கியிருந்தது. அதுபோலவே, புதுடெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை அழைத்துக் கண்டனம் வெளியிட்ட விவகாரத்திலும் மத்திய அரசே முடிவெடுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.

அதன் விளைவு என்னாயிற்று என்றால், தமிழ்நாட்டின் அழுத்தங்களுக்கு மீண்டும் மத்திய அரசு பணிய வேண்டிய நிலையை உருவாக்கியது. இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் மாநிலங்கள் தலையிட முடியாது என்று கூறிய மத்திய அரசே ஒரு மாநிலத்தின் அழுத்தங்களை அடுத்து இன்னொரு நாட்டின் தூதுவரை அழைத்துக் கண்டித்தது.

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட இந்தக் கட்டுரை, இந்திய மத்திய அரசாங்கத்தையும் கூடத் திக்குமுக்காட வைத்து விட்டது என்பதே உண்மை. இந்திய மத்திய அரசாங்கம் கொழும்புடன் கடைப்பிடிக்க எண்ணிய சகிப்புத்தன்மை அல்லது மென்போக்குத் தான் தமிழ்நாட்டின் அழுத்தங்களுக்கு அது உள்ளாக நேரிட்டதற்கான காரணம்.

அதேவேளை, இனிமேல் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில் தலையிடும் உரிமையில்லை என்று பா.ஜ.க.வின் கொள்கை வகுப்பாளர்கள் தம்பட்டம் அடித்த போது தமிழ்நாடு பொறுமை காத்திருந்தது. அது ஒருவகையில் தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது என்பதே உண்மை.

ஆனால், இவ்வளவு விரைவாக அதற்கு ஒரு பதிலடி கொடுக்கும் நிலை வரும் என்றோ மத்திய அரசாங்கத்தை தம்மை நோக்கி வளைக்க முடியும் என்றோ தமிழ்நாடு அரசோ அல்லது அங்குள்ள கட்சிகளோ எதிர்பார்த்திருக்காது. அதேவேளை, இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்த போது அதனை அரசியல் சாயம் பூசி வீணடித்து விடாமல் சாதுரியமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு.

இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில் தமிழ்நாடு இனித் தலையிட முடியாது என்று கொண்டாடிய இலங்கை அரசாங்கத்துக்கு மத்திய, மாநில உறவுகளுக்குள் புகுந்து அதனைக் குழப்புவதற்கு என்ன உரிமை உள்ளது என்ற தமிழ்நாட்டின் கேள்வி, இந்திய மத்திய அரசை திக்குமுக்காட வைத்து விட்டது என்பதே உண்மை.

இலங்கை அரசாங்கத்துடன் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதற்காக தமிழ்நாட்டின் கருத்துகளையும் அழுத்தங்களையும் புறக்கணிக்கத் துணிந்த இந்திய மத்திய அரசுக்கு, தாம் செல்லும் பாதை சரியானதா என்று மீளாய்வு செய்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை இந்த விவகாரம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இந்தச் சம்பவத்துக்குப் பின்னர், இலங்கை விவகாரத்தையும் அதுபற்றிய தமிழ்நாட்டின் உணர்வுகளையும் புதுடெல்லி நிதானமாக கையாள முற்படலாம். அதேவேளை, இலங்கை அரசாங்கம், புதுடெல்லியின் உணர்வுகளுக்கு மட்டுமன்றி தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டியது கட்டாயம். அதனை உதறித்தள்ளி விட்டு இலங்கையுடன் கைகுலக்கிக் கொள்ளலாம் என்று எதிர்பார்த்தால் அதன் விளைவு இதுபோன்ற மூக்குடைபடுதலில் தான் போய் முடியும்.

ஏனென்றால், தமிழ்நாட்டின் மீதான பா.ஜ.க.வின் கரிசனை தேர்தலுடன் முடிந்து போகவில்லை. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பா.ஜ.க.வை வளர்த்தெடுப்பதே நரேந்திர மோடியின் அடுத்த இலக்கு. அதற்காக, பா.ஜ.க.வின் தேசியத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள தனது நண்பர் அமீத் ஷாவுடன் தமிழ்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

பா.ஜ.க. தன்னைத் தமிழ்நாட்டில் வளர்த்துக் கொள்ள ஆசைப்பட்டால் தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு நிச்சயம் கட்டுப்பட்டேயாக வேண்டும். இந்த உண்மையை தமிழ்நாட்டுப் பயணத்துக்கு முன்னதாக நரேந்திர மோடிக்கு உணர வைத்த பெருமை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சையே சாரும்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X