2025 மே 19, திங்கட்கிழமை

முஸ்லிம்களின் இருக்கைகள்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 10 , பி.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா மாகாண சபை தேர்தலுக்காக முஸ்லிம் கட்சிகள் தனியானதோர் வேட்பாளர் குழுவொன்றை நிறுத்தியுள்ளன. முஸ்லிம் என்று கூறிய போதிலும் தேசிய மட்டத்திலான பல முஸ்லிம் கட்சிகள் இருந்தும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரண்டு தேசிய முஸ்லிம் கட்சிகள் மட்டுமே இந்த விடயத்தில் ஒன்றிணைந்துள்ளன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது பெயரில் இருந்த முஸ்லிம் என்ற பதத்தை அகற்றிக் கொண்ட போதிலும் அக்கட்சி இன்றும் முஸ்லிம்களை மட்டுமே தமது வாக்கு வங்கியாக கொண்டுள்ளது. எனவே, அதனை முஸ்லிம் கட்சியாகவே கருத வேண்டியுள்ளது. அதேவேளை, முஸ்லிம் என்ற பதம் தமது பெயரில் இல்லாவிட்டாலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக மு.காவுடன் முஸ்லிம் கட்சியாகவே ஒன்றிணைந்தும் உள்ளது.

இந்த இரண்டு கட்சிகளும் ஒன்றிணையக் கூடிய கட்சிகள் அல்ல என்றே கூற வேண்டும். அவை அந்த அளவுக்;கு கடந்த காலங்களில் பிரிந்து செயற்பட்டன. இரண்டு வருடங்களாக முஸ்லிம்களுக்கு எதிராக பல நடவடிக்கைகள் இடம்பெற்று வந்த நிலையில் அண்மையில் இடம்பெற்ற மேல் மாகாண சபைத் தேர்தலின் போதும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மு.காவை எதிர்த்து கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டது.

ஆனால், பொது பல சேனா போன்ற பௌத்த தீவிரவாதிகளின் வன்செயல்கள் காரணமாகவே, அவை இவ்வாறாவது ஒன்றிணைந்து செயல்பட முன்வந்தன. அந்த வகையில் இந்தளவுக்காவது முஸ்லிம்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான காரணமாக இருந்ததற்காக முஸ்லிம்கள், பொது பல சேனாவை பாராட்ட வேண்டும்.

ஆனால், எதற்காக முஸ்லிம்கள் இந்த மாகாண சபைத் தேர்தலின் போது ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும் என்ற கேள்வி பல தரப்புக்களால் எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரம் மற்றும் வன்செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே முஸ்லிம் கட்சிகள் ஒன்றாய் இணைந்து போட்டியிட வேண்டும் என பலர் இந்த கேள்விக்கு பதிலளிக்கலாம்.

யாருக்கு இந்த எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்பது அடுத்ததாக எழுப்பப்பட வேண்டிய கேள்வியாகும்.

கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்களை முறையாக கையாளவில்லை என்று அரசாங்கத்தையே முஸ்லிம்கள் குற்றஞ்சாட்டினர். இந்த விடயத்தில் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலும், அ.இ.ம.கா. தலைவர் ரிஷாத் பதியுதீPனுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலும் பல முறை அமைச்சரவையிலும் கருத்து மோதல்கள் இடம்பெற்றதாக செய்திகள் தெரிவித்தன.

அதேவேளை, கடந்த காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற பிரசாரங்கள் மற்றும் வன்முறைகள் விடயத்தில் மு.கா எடுத்த சில நடவடிக்கைகளை அரசாங்கமும் குறிப்பாக ஜனாதிபதியும் தமக்கு எதிரான நடவடிக்கைகளாக எடுத்துக் கொண்டதை காணக்கூடியதாக இருந்தது.

உதாரணமாக கடந்த மார்ச் மாதத்தில் ஐ.நா. மனித உரிமை பேரவையில்,இலங்கை விடயத்தில் அமெரிக்கா தமது மூன்றாவது பிரேரணையை முன்வைக்கு முன்னர், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்ககளை பட்டியல் போட்டு ஐ.நா. மனித உரிமை உயர் ஸ்தானிகரிடம் மு.கா. அறிக்கையொன்றை சமர்ப்பித்தது. ஆனால், அரசாங்கம் அதனை தமக்கு எதிரான அறிக்கையாகவே கருதியது.

கடந்த வருடமும் இந்த வருடமும் சமர்ப்பிக்கப்பட்ட அமெரிக்கப் பிரேரணைகளில் இலங்கை அரசாங்கம் நாட்டில் சிறுபான்மை சமயத்தவர்களுக்கு எதிராக இடம்பெறும் தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனை தமக்கு எதிரான குற்றச்சாட்டாகவே அரசாங்கம் கருதுகிறது.

இந்த நிலையில் மு.கா. அவ்வாறானதோர் அறிக்கையை சமர்ப்பித்தமையும் தமக்கு எதிரான செயலாகவே அரசாங்கம் கருதுகிறது. ஆனால், நாட்டிலுள்ள பிரதான முஸ்லிம் கட்சியென்ற வகையில் ஐ.நா. அதிகாரிகள், மு.கா.விடம் அந்த விடயங்களைப் பற்றி கேட்கும் போது மு.கா. அவற்றை மூடி மறைக்கவும் முடியாது.

அதேவேளை, கடந்த ஜூன் மாதம் 15, 16 ஆகிய திகதிகளில் அளுத்கமை, பேருவளை மற்றும் வெலிபென்ன ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் இடம்பெற்ற போது பொலிஸார் முஸ்லிம்களை பாதுகாக்கவில்லை என்று அப் பகுதி முஸ்லிம்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அந்த விடயத்திலும் அம் மக்கள் அரசாங்கத்துடன் முரண்பட்டுக் கொள்கின்றனர்.

அந்த வன்செயல்கள் இடம்பெற்றதை அடுத்து கொழும்பு மற்றும் வேறு பல இடங்களில் முஸ்லிம்கள் கடைகளை அடைத்து ஹர்த்தால் அனுஷ்டித்தனர். இதனையும் அரசாங்கம் தமக்கு எதிரான நடவடிக்கையாகவே எடுத்துக் கொண்டது. புலிகள் முஸ்லிம்களை வட பகுதிகளில் இருந்து வெளியேற்றிய போது எவரும் ஹர்த்தால் அனுஷ்டிக்கவில்லை என ஜனாதிபதியும் கூறியிருந்தார்.

புலிகளுக்கு எதிராகவும் அக் காலத்தில் முஸ்லிம்கள் ஹர்த்தால் அனுஷ்டித்தார்கள். அதனை சிங்கள அரசியல்வாதிகள் மறந்துவிட்டார்கள் போலும். அவ்வாறு புலிகளுக்கு எதிராக முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தாலும் அளுத்கமை சம்பவங்களுக்கு எதிராக நடத்திய ஹர்த்தாலை அரசாங்கம் ஏன் தமக்கு எதிரானதாக எடுத்துக் கொள்ள வேண்டும்? தாக்குதலுக்குள்ளான சமூகம் ஒன்று அதற்கு சாத்வீகமாக எதிர்ப்பு தெரிவிக்கவும் என்றால் அது என்ன ஜனநாயகம்?

அதன் பின்னர் ஹக்கீம், ஓ.ஐ.சி எனப்படும் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பின் தலைவர்களை சந்தித்தார் அதனையும் ஜனாதிபதி தமக்கு எதிரான செயலாக கருதி கருத்து வெளியிட்டு இருந்தார்.

அரசாங்கம் பொது பல சேனா போன்ற தீவிரவாத அமைப்புக்களை பாதுகாக்கிறது என்றே பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். அவ்வமைப்பின் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் எத்தனையோ பல ஆத்திரமூட்டல்களை செய்தும் பொலிஸார் அவரை கைது செய்யவில்லை.

இது போன்ற பல நிலைமைகள் காரணமாக, அரசாங்கத்துக்;கும் முஸ்லிம்களுக்கும் இடையே விரிசல் நிலைமை ஏற்பட்டு இருக்கிறது என்பதே உண்மை. எனவே, ஊவா மாகாண சபைக்கான தேர்தலில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் இருவர் தலைமை தாங்கும் இரண்டு முஸ்லிம் தேசிய கட்சிகள் இணைந்து தனித்து போட்டியிடுவதாக இருந்தால் அது கடந்த கால முஸ்லிம் விரோத செயல்களுக்கு அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் செயலாகவே விளங்கிக் கொள்ளப்படும்.

ஆனால், மு.கா.வும் அ.இ.ம.கா.வும் இன்னமும் அரசாங்கத்தின் உறுப்புக் கட்சிகளாகவே இருக்கின்றன. முஸ்லிம் விரோத செயல்களுக்காக அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அக் கட்சிகள் தனித்து போட்டியிட்டாலும் தேர்தலின் பின்னர் அவை என்ன செய்யப் போகின்றன என்பது இன்னமும் தெளிவாகவில்லை. அக் கட்சிகள் அதனை இன்னமும் கூறவும் இல்லை.

தேர்தலின் பின்னர் வெற்றி பெறும் இக் கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியுடன் இணைந்து ஓரணியாக ஆளும் கட்சியிலோ அல்லது எதிர்க்கட்சியிலோ இருக்கப் போகின்றனரா அல்லது வேறு ஏதாவது முடிவை எடுக்கப் போகின்றனரா என்பது இன்னமும் தெளிவாகவில்லை.

அவை தேர்தலின் பின்னர் மீண்டும் ஐ.ம.சு.முவுடன் சேர்ந்து ஓரணியாக செயற்படப் போவதாக இருந்தால் இக் கட்சிகள் தனித்து போட்டியிடுவதன் அர்த்தம் என்ன? அவ்வாறு சேர்ந்து செயற்படுவதானது அரச எதிர்ப்பு முஸ்லிம் வாக்குகளை சுருட்டி மீண்டும் அரசாங்கத்திடம் கையளிப்பதற்கு சமமாகும்.

இது போன்றதோர் கருத்தை முஸ்லிம்களுக்கு வழங்கும் வகையில், நீர்ப்பாசன மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும் அண்;மையில் ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றும் போது கூறியிருந்தார்.

அரசாங்கத்தின் அமைச்சர்களான முஸ்லிம் தலைவர்கள், ஊவா மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதனால் அவர்களுக்கு சாதகமானதோர் நிலைமையை உருவாக்குவதற்காக ஐ.ம.சு.மு., முஸ்லிம் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தவில்லை என அவர் கூறியிருந்தார்.

இது உண்மையாக இருக்க முடியாது. முஸ்லிம் அமைச்சர்களின் கட்சிகள் ஐ.ம.சு.மு.வுடன் இணைந்து போட்டியிடுவதையே அரசாங்கம் விரும்பியிருக்கும். ஆனால், அதற்கு அந்த அமைச்சர்கள் இணங்காததையடுத்து அவ் அமைச்சர்களின் கட்சிகளை தோற்கடிப்பதையே அரசாங்கம் அடுத்த நடவடிக்கையாக விரும்பியிருக்கும்.

எனவே, அவர்கள் அரசாங்கத்தின் திட்டத்தின் படியே நடந்து கொள்கிறார்கள் என்றதோர் கருத்தை முஸ்லிம் மக்களிடம் கொடுத்து அம் மக்களின் வாக்குகளை அக் கட்சிகளுக்கு கிடைக்காமல் செய்வதே அமைச்சர் சில்வாவின் உத்தியாக இருக்கிறது போலும்.

அமைச்சர் சில்வா கூறுவது முஸ்லிம் வேட்பாளர்களை ஐ.ம.சு.மு. நிறுத்தாதற்கான உண்மையான காரணமாக இருக்க முடியாது. ஒன்றில் ஐ.ம.சு.மு.வுக்கு முஸ்லிம் வேட்பாளர்களை தேடிக் கொள்ள முடியாமல் போயுள்ளது. அல்லது முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தினாலும் மேல் மாகாணத்திலும் தென் மாகாணத்திலும் நடந்ததைப் போல் முஸ்லிம் வாக்காளர்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று நினைத்து ஆளுங்கட்சி தமது வேட்பாளர்கள் பட்டியலில் முஸ்லிம்களை சேர்த்துக் கொள்ளவில்லை என்றே ஊகிக்க வேண்டியுள்ளது.

அமைச்சர் சில்வா கூறுவது பொய்யாக இருந்தாலும் தேர்தலின் பின்னர் முஸ்லிம் அமைச்சர்களின் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன என்பதை அக்கட்சிகள் முஸ்லிம்களுக்கு விளக்காவிட்டால் அம் மக்கள் அமைச்சர் சில்வா கூறுவதையும் நம்பலாம்.

அண்மைக் கால முஸ்லிம் விரோத பிரசாரங்கள் மற்றும் வன்செயல்களுக்குப் பின்னர் ஐ.ம.சு.மு.விலிருந்து விலகிப் போகும் முஸ்லிம் வாக்காளர்களை மீண்டும் கவரும் நோக்கில் அரசாங்கம் இப்போது தாம் பொது பல சேனாவை ஆதரிக்கவில்லை என்று கூற முயற்சி எடுத்து வருவதாகவும் தெரிகிறது.

பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பொது பல சேனாவின் பின்புலத்தில் இருந்து அதனை ஆதரிக்கிறார் என்றதோர் கருத்து நாட்டில் பரவி இருக்கிறது. இந்நிலையில அவர் பொது பல சேனாவை ஆதரிக்கவில்லை என்று கூறுவதற்காகவே அண்மையில் இராணுவ பேச்சாளர் ஊடகவியலாளர்களை அழைத்து இருந்தார்.

இப்போது அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கும் பொது பல சேனாவுக்கும் இடையே பெரும் வாக்கு வாதம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு கட்டத்தில் கலபொட அத்தே ஞானசார தேரர், அமைச்சர் ராஜிதவை பலமாக கண்டித்து அண்மையில் ஓர் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்டு இருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் போது அமைச்சர் ராஜித்த, தாம் இது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்ததாகவும் பொது பல சேனா அமைப்பு அரசாங்கத்தை அழிப்பதற்காக செயற்படுகிறது என ஜனாதிபதி கூறியதாகவும் தாம் 100 கோடி ரூபாய் மான நட்ட ஈடு கோரி ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப் போவதாகவும் கூறியிருந்தார்.

ஞானசார தேரர் அரசாங்கத்தை அழிப்பதற்காக செயற்படுகிறார் என்று ஜனாதிபதி கூறியிருப்பாரா? அந்த அளவுக்;கு அவ்விரு சாராரிடையே பிரச்சினைகள் இருப்பதாக தெரியவில்லை. கடந்த காலங்களில் அரசாங்கத்தின் தலைவர்களும் முஸ்லிம்கள் விடயத்தில் ஞானசார தேரின் கருத்துக்களையே ஏற்றுக் கொண்டனர்.

பெரும்பான்மை வர்த்தகர்கள் ஹலால் சான்றிதழினால் பெருமளவில் பயன் பெறும் நிலையிலும் அதற்கு எதிராக ஞானசார தேரர் மேற்கொண்ட பிரசாரத்தையே அரசாங்கத்தின் பலர் ஏற்றுக் கொண்டனர். நாட்டிலுள்ள முஸ்லிம் விரோத பிரசாரமானது முஸ்லிம் தீவிரவாதத்தின் விளைவே என பொது பல சேனா மற்றும் ஜாதிக்க ஹெல உறுமய போன்ற அமைப்புக்கள் கூறியதை அரசாங்கத்தின் பல தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

முஸ்லிம் தீவிரவாதத்தைப் பற்றி பாதுகாப்புச் செயலாளர் வெளியிட்ட சில கருத்துக்களுக்கு அமைச்சர் ஹக்கீம் பதிலளித்து அறிக்கையொன்றை வெளியிட வேண்டியிருந்தது.

பாடசாலைகளில் ஹிஜாப் பாவிப்பது தொடர்பாக, அண்மையில் எதிர்ப்பு வந்தது. ஆனால், அரசாங்கத்தின் முன்னைய சுற்றறிக்கைகளின் பிரகாரம் நடந்து கொள்ள வேண்டும் என அரசாங்கத்தைச் சேர்ந்த முக்கியஸ்த்தர்கள் எவரும் கூறவில்லை. தம்புள்ள, கூரகல (ஜெய்லானி) கிரான்பாஸ் போன்ற இடங்களிலும் மேலும் பல இடங்களிலும் பள்ளிவாசல்கள் தொடர்பாக பிரச்சினைகள் எழுந்தன. அளுத்கம வன் செயல்களின் போது முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று சிங்களவரான நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெருமவே கூறுகிறார்.

சுருக்கமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் இடம்பெற்ற பல விடயங்களின் போது அரசாங்கம் பொது பல சேனாவின் நிலைப்பாடுகளுக்கு எதிராக கருத்து வெளியிடவில்லை. இந்தப் பின்னணியில் தான் அமைச்சர் ராஜிதவின் இந்தக் கூற்றை விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.
இந்த நிலையில் தான் ஊவா மாகாண சபைத் தேர்தல் விடயத்தில் அம் மாகாண முஸ்லிம்கள் முடிவெடுக்க வேண்டியுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X