2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஐ.நா.வுடன் மோதும் அரசாங்கம்

Super User   / 2014 ஓகஸ்ட் 21 , பி.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே சஞ்சயன்

போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில், மீண்டும், ஐ.நாவுடன் அரசாங்கம் மோதிக் கொள்ளத் தொடங்கியிருக்கிறது.

ஆரம்பத்தில் இருந்தே இந்த விவகாரத்தில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம், ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆகியவற்றுடன் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டு வந்திருந்தது அரசாங்கம்.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான விசாரணைக் குழுவை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்த பின்னர், இந்த மோதல் போக்கு உச்ச நிலையை எட்டியிருந்தது.

ஐ.நா விசாரணையாளர்களை நாட்டுக்குள் அனுமதிக்கமாட்டோம் என்று அறிவித்த இலங்கை அரசாங்கம், அதன் மூலம் ஐ.நா விசாரணைகளை நிராகரிப்பதாக வெளிப்படுத்தியது.

பின்னர், இலங்கை அரசாங்கம், உள்நாட்டு விசாரணைகளை மேற்கொள்வதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்கப் போவதாக அறிவித்தது.

அதற்கமைய, காணாமற்போனோரைக் கண்டறியும் ஆணைக்குழுவுக்கு, போர்க்குற்றங்கள் குறித்தும் விசாரிப்பதற்கான அதிகாரங்கள் அளிக்கப்பட்டதுடன், வெளிநாட்டு ஆலோசனை நிபுணர்கள் ஐவரும்  நியமிக்கப்பட்டனர்.

இப்போது இந்த நிபுணர் குழு இந்திய நிபுணர் அவ்டாஸ் கௌசல் மற்றும் பாகிஸ்தானிய நிபுணர் அகமர் பிலால் சூபி ஆகியோரும் நியமிக்கப்பட்டு, வலுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் தாமும் நம்பகமான - நடுநிலையான - சுதந்திரமான விசாரணைகளை மேற்கொள்வதாகக் காட்டிக் கொள்ளும் முயற்சியில் இறங்கியிருக்கிறது அரசாங்கம்.

இந்தநிலையில், அண்மையில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, அளித்த செவ்வி குறித்து அரசாங்கம் கடும் விசனத்தை வெளிப்படுத்தியது.

அவர் ஐ.நா விசாரணைகளில் தலையிட முனைவதாகவும், முன்கூட்டியே விசாரணைகளின் முடிவைத் தீர்மானிக்க முனைவதாகவும் வெளிவிகார அமைச்சு கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இலங்கை அரசாங்கம், ஐ.நா விசாரணைக் குழுவுக்கு அனுமதி மறுத்துள்ளது, தமது விசாரணைகளைப் பாதிக்காது என்றும் இலங்கைக்கு வெளியிலேயே ஏராளமான ஆதாரங்களும் தகவல்களும் நிரம்பிக் கிடப்பதாகவும் நவநீதம்பிள்ளை அந்தச் செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

அவ்வாறு இலங்கைக்கு வெளியிலுள்ள ஆதாரங்கள் பற்றி அவர் குறிப்பிட்டது அரசாங்கத்துக்கு ஓர் அச்சத்தையும் மிரட்சியையும் ஏற்படுத்தி விட்டுள்ளது போலும்.

அவ்வாறான ஆதாரங்கள் பொய்யானவை, போலியானவை, நம்பகமற்றவை என்று, வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது.

ஐ.நா விசாரணைகள் மீதோ, நவநீதம்பிள்ளை மீதோ நம்பிக்கையில்லை என்று கூறி வந்த அரசாங்கத்தினால், அவர்களின் நகர்வுகளையோ கருத்துகளையோ கண்டும் காணாதது போன்று  இருந்து விட முடியவில்லை.

அதனை விமர்சனம் செய்யப் போய், ஐ.நா விசாரணைகளில் தமக்குள்ள ஈடுபாட்டை அரசாங்கமே அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறது.

வெளிநாட்டுச் செய்தியாளர்களை அலரி மாளிகையில் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐ.நா விசாரணைகளை தாம் நிராகரித்து விட்டதாகவும், அதனை ஏற்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஐ.நா விசாரணை வேண்டும் என்று கோரியவர்களைத் தவிர வேறொவரும் இந்த விசாரணைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார்.

அதாவது இந்த விசாரணைகளை அரசாங்கம் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

என்றாலும், விசாரணைகள் நடந்தால் நடந்து விட்டுப் போகட்டும் என்று அரசாங்கத்தினால், இருந்து விடவில்லை.

அவ்வப்போது- ஐ.நா விசாரணைகளில் மூக்கை நுழைத்துப் பார்க்கிறது. அதனை விமர்சிக்கிறது.அதன் மீது நம்பகத்தன்மை இல்லை என்று வெளிப்படுத்துகிறது. போட்டிக்குத் தாமும் நகர்வுகளை முன்னெடுக்கிறது.

இவையெல்லாமே, ஐ.நா விசாரணைகளை விட்டு அரசாங்கத்தினால், தூர விலகி நிற்க முடியவில்லை என்பதையே உணர்த்துகின்றன.

போர்க்குற்றங்கள் நிகழ்ந்துள்ளனவா என்று விசாரிக்கும்படி, காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளித்தது, அதற்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐந்து வெளிநாட்டு நிபுணர்களை நியமித்துள்ளது எல்லாமே, ஐ.நா விசாரணையின் விளைவுகள் தான்.

ஐ.நாவின் விசாரணைப் பொறிமுறை அழுத்தங்கள் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில் தான், அரசாங்கம் உள்நாட்டுப் பொறிமுறையை உருவாக்கும் முடிவையே எடுக்க முன்வந்தது.

எனவே, ஐ.நா விசாரணைப் பொறிமுறையையிட்டு இலங்கை அரசாங்கம் கவலை கொள்ளவில்லை என்றோ, அதன் விசாரணையை யாருமே தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது.

வேறு எந்தத் தரப்பேனும், இதனை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறினாலும் கூட ஏற்றுக் கொள்ளலாம், அரசாங்கம் கூறுவதை ஏற்க முடியாது.

ஏனென்றால், தெரிந்தோ தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ, அரசாங்கம் ஐ.நாவின் விசாரணைப் பொறிமுறைச் சகதிக்குள் சிக்கி கொண்டு விட்டது.

இனிமேல் அரசாங்கத்தினால் இந்தச் சகதிக்குள் இருந்து கால்களை எடுக்கவும் முடியாது.

அதேவேளை, அதற்குள் முற்றாக அமிழ்ந்து போகவும் முடியாது.

இந்த இரண்டும் கெட்ட - இக்கட்டான நிலை ஒன்று அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அலரிமாளிகையில் வெளிநாட்டுச் செய்தியாளர்களுடன் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய சந்திப்பின் போது, ஐ.நா விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்கப் போவதில்லை என்ற தமது முடிவை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

இது முன்னர் அரசாங்கமும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கூறிய விடயங்கள் தான்.

ஆனாலும், அரசாங்கத்தின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவுமில்லை- ஏற்படப் போவதுமில்லை என்பதை, அவரது இந்தக் கருத்து எடுத்துக் காட்டுகிறது.

ஆனால், அரசாங்கத்தின் இந்தப் பிடிவாதப் போக்கினால், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் எந்தக் கவலையும் கொண்டதாகத் தெரியவில்லை.

இலங்கைக்குள் வராமலேயே, விசாரணைகளை முன்னெடுக்க முடியும், அதற்கான வழிமுறைகள் உள்ளன என்பதை, ஏற்கெனவே ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டியிருந்தார்.

அதைவிட, இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வடகொரியாவிலும் சிரியாவிலும் ஐ.நா விசாணைக் குழு நுழைவதற்கு, அந்தந்த நாட்டு அரசாங்கங்கள், அனுமதி மறுத்திருந்த போதிலும், அங்கு விசாரணைகள் நம்பகமான முறையில் நடத்தி முடிக்கப்பட்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அந்த விசாரணைகளின் நம்பகத்தன்மை குறித்து, அந்த நாட்டு அரசாங்கங்கள் தவிர, வேறெவரும் கேள்வி எழுப்பவில்லை என்றும் நவநீதம்பிள்ளை தொம்ஸ்சன் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியின் போது குறிப்பிட்டிருந்தார்.

இத்தகைய நிலையில், மீண்டும் ஐ.நா குழுவை நாட்டுக்குள் அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருப்பது, ஐ.நாவுடனான முரண்போக்கை வளர்த்துக் கொள்ளவே இலங்கை முற்படுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் இந்த மாத இறுதியுடன் முடிவடையவுள்ளது.

அவரை பக்கச்சார்புடையவர் என்று கடந்தவாரம் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

அதேவேளை, புதிய ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இளவரசர் சையிட் அல் ஹுசேய்ன், அவ்வாறானவர் இல்லை என்பது போலவும் கருத்து வெளியிட்டிருந்த வெளிவிவகார அமைச்சு, அவருக்கு வரவேற்பையும் தெரிவித்திருந்தது.

ஆனால், நவநீதம்பிள்ளை ஆரம்பித்துள்ள விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய நிலையில் உள்ளார் புதிய ஆணையாளர் சையிட் அல் ஹுசேய்ன்.

எனவே, அவருடனும் அரசாங்கத்தினால் இணக்கப்போக்கை கடைப்பிடிக்க முடியாது.

அதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் வைத்து, ஐ.நா குழுவை அனுமதிக்கப் போவதில்லை என்று அறிவித்த பின்னர், பிபிசிக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கையின் விஸா தடை, ஐ.நா விசாரணைகளை நிறுத்தி விடாது என்று கூறியிருக்கிறார்.

தொலைபேசி, ஸ்கைப், செய்மதிப் படங்கள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் மூலம், ஐ.நா விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

விஸா வழங்க முடியாது என்று அறிவித்திருப்பதன் மூலம், ஐ.நா விசாரணைகளை தடுத்த நிறுத்தி விடலாம் என்று அரசாங்கம் கருதியிருக்கும் என்று கூறுவதற்கில்லை.

அவ்வாறு சிந்திப்பின் அது சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடும் என்று சிந்திப்பதற்கு ஒப்பாகும்.

அந்தளவுக்கு அரசாங்கம் முட்டாளாக இருக்கும் என்று கருத முடியாது.

ஐ.நா விசாரணைகளை எதிர்த்து விட்டு, அவர்களை எப்படி உள்ளே அனுமதிப்பது என்ற கௌரவப் பிரச்சினையும், உள்நாட்டில், சிங்களத் தேசியவாத சக்திகள் அதனைப் பெரிய விவகாரமாக்கி விடும் என்றும், எதிர்க்கட்சிகள் அதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு விடும் என்ற அச்சமும் தான், அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டுக்கு முக்கியமான காரணம்.

ஐ.நா குழு இங்கு வந்தால், போர்க்குற்றங்கள் குறித்து அறிந்து விடும்,  என்று அரசாங்கம் நினைக்கிறது என்று கருதினால் அது தவறானது.

ஏனென்றால், ஐ.நா குழு இங்கு வந்தாலும் சரி, வராது போனாலும் சரி, தமக்குத் தேவையான சாட்சியங்களைப் பெற்றுக் கொள்ளும் என்பதை அரசாங்கம் நன்றாகவே அறியும்.

ஐ.நா விசாரணைக் குழு, நேரடியாக இங்கு வந்து விசாரணைகளை நடத்தினால், சற்று அதிகமான சாட்சிகளை சந்தித்து விபரங்களை கேட்டறியும், போர் நடந்த பகுதிகளைப் பார்வையிடும் அவ்வளவு தான்.

இங்கு அனுமதிக்கப்படாது போனாலும் கூட, ஐ.நா குழு சாட்சியங்களைப் பெறுவதற்கு ஏராளமான வழிகள் உள்ளன.

இந்த தகவல் தொழில்நுட்ப யுகத்தில், ஸ்கைப் உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் மூலம், தாராளமாகவே சாட்சியங்களை சேகரிக்கலாம்.

ஐ.நா குழுவுக்கு நேரில் சாட்சியமளித்தால், தாம் அடையாளப்படுத்தப்பட்டு விடுவோம், புலனாய்வாளர்களின் கண்களில் அகப்பட்டு விடுவோம் என்று அஞ்சுவோர் கூட, இரகசியமாக நான்கு சுவர்களுக்குள் இருந்தபடியே சாட்சியமளிக்கலாம்.

அதைவிட, போரின் இறுதிக்கட்டத்தில், நடந்த சம்பவங்கள் குறித்து ஒளிப்படங்கள், வீடியோக்கள் போன்ற ஆதாரங்களில் ஒன்று கூட, அங்கிருந்த தமிழர்களால் எடுக்கப்பட்டவையல்ல.

எல்லாமே படையினரால் எடுக்கப்பட்டவை தான். அவை கூட, சர்வதேசத்தின் பார்வைக்குச் சென்றிருக்கின்றன.

எனவே, போர்க்குற்ற ஆதாரங்களைத் தமிழர்களிடம் மட்டும் தான் திரட்ட வேண்டும், அதை போர் நடந்த பகுதிக்குத் தான் சென்று திரட்ட வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை.

அதற்குப் புறம்பான முறைகளின் மூலம் அத்தகைய சாட்சியங்களைத் திரட்டுவது ஒன்றும் ஐ.நாவுக்கு கடினமான காரியமாகவும் இருக்காது.

அரசாங்கம், இந்தச் சூழ்நிலையை நன்றாகவே அறியும், ஆனாலும் உள்நாட்டு அரசியல் நிலைமைகள் கருதியே ஐ.நா குழுவை அனுமதிக்க மறுக்கிறது.

அதேவேளை, ஐ.நா விசாரணை அணுகுமுறைக்கும், இலங்கை அரசாங்கத்தின் விசாரணை அணுகுமுறைக்கும் பெரியதொரு வேறுபாடு உள்ளது.

இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், தண்டனை வழங்கும் நீதியை விரும்பவில்லை என்று அமெரிக்காவுக்கான தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.

ஐ.நாவின் அணுகுமுறை தண்டனை வழங்கும் நீதியின் அடிப்படையிலானது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த விடயத்திலும், இருதரப்புக்கும் இடையில், ஒரு இடைவெளி இருக்கிறது.

எவ்வாறாயினும், இப்போது அரசாங்கம் போரின் போது போர்க்குற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறுகின்ற நிலைக்கு வந்திருக்கிறது.

இது அரசாங்கத்தின் முன்னைய நிலைப்பாடுகளுக்கு முற்றிலும் முரணானது.

அதுமட்டுமன்றி, போரின் போது குற்றமிழைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட படையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்மையில் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்கவும் கூறியிருக்கிறார்.

ஆனால், அமெரிக்காவுக்கான தூதுவர் பிரசாத் காரியவசம், தண்டிக்கப்படும் நீதியை தாம் விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார்.

இதனால், போர்க்குற்றங்கள் குறித்த உள்நாட்டு விசாரணைகள் உறுதிப்படுத்தினாலும் கூட, அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற உறுதியற்ற நிலையே காணப்படுகிறது.

அரசாங்கம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம், மேற்கொள்ளாமலும் தவிர்க்கலாம்.

ஆனால், ஐ.நா விசாரணைகளில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றது உறுதிப்படுத்தப்பட்டால், அடுத்த கட்டம் குறித்து நிச்சயம் பரிசீலிக்கப்படும்.

எனவே தான் அரசாங்கம், சர்வதேச விசாரணைகளையிட்டு தயக்கம் காட்டுகிறது.

எனினும், சர்வதேச விசாரணைகளை அரசாங்கத்தினால் நிராகரிக்க முடிந்தாலும், அதன் தாக்கத்தில் இருந்து இலகுவாகத் தப்பித்துக் கொள்ள முடியாது என்பதே உண்மை.

கடந்தவாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு நிபுணர்களை அரசாங்கம் நியமித்துள்ளது இதனை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X