2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கூட்டிணைவு 'போலி'

George   / 2014 செப்டெம்பர் 04 , மு.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-புருஜோத்தமன் தங்கமயில்

பிரச்சினைகளை கையாள்வது தொடர்பில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் போல, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அரசாங்கமும் தம்மைக் காட்டிக் கொள்வதுண்டு. ஆனால், அது அவ்வளவுக்கு சிறந்த பலன்களைக் கொடுத்தது இல்லை.

பல நேரங்களில் வெளித் தோற்றத்தில் ஸ்திரமாக இருப்பதாக காட்டிக் கொண்டாலும், உள்ளுக்குள் பெரும் குழப்பத்தோடு விடயங்களை கையாண்டு முழுமையாக தவற விட்டுவதுண்டு. 

மற்றப்படி, 'உள்நாட்டு மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்தது' என்பதுதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும், அரசாங்கத்தினதும் பெரு வெற்றியாகும். அதிலும் கூட, 'வெளிநாடுகளின் ஒத்துழைப்போடு பெற்றுக் கொள்ளப்பட்ட வெற்றி' என்கிற இடைச் செருகல் இருக்கிறது. 

மோதல்கள் முடிவுக்கு வந்து 5 வருடங்களைக் கடந்துவிட்ட நிலையில் நாடு எதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதன் போக்கு சரியானதா அல்லது அதற்கு என்ன தேவை என்கிற விடயங்கள் குறித்த 'தெளிவான' குழப்பமே இன்னமும் இருந்து வருகிறது.

மோதல்களினால் முற்றாக பாதிக்கப்பட்ட நாட்டில்  அபிவிருத்தி என்பது அவசியமானது. உள்ளக கட்டுமானமும், பொருளாதார முன்னேற்றமும் மிக விரைவான அபிவிருத்தியை நோக்கி செல்ல வேண்டும். அதுதான், மீளுருவாக்கம் தொடர்பிலான நம்பிக்கையை அதிகளவில் விதைக்கும்.
 
ஆனால், நாடொன்றின் அபிவிருத்தி என்பது பொருளாதார ரீதியில் மட்டும் கட்டியெழுப்பப்பட முடியாதது. அது, பிளவுபட்டுக் கிடக்கும் மக்களுக்கு இடையில் நம்பிக்கையை விதைத்து, சமாதானத்தை பெரு விருட்சமாக வளர்த்து அதிலிருந்து பெறப்பட வேண்டும்.

'சமாதானம்' எனும் பெருவிருட்சம் விளைவிக்கும் போஷாக்குள்ள காய்களாகவும், கனிகளாகவுமே பொருளாதார அபிவிருத்தியும், கல்வி முன்னேற்றமும், தொழில்நுட்ப வெற்றியும், அடுத்த கட்ட பயணமும் இருக்க வேண்டும். அதைவிடுத்து, குறை வளர்ச்சி கொண்ட செடியொன்று கொடுக்கும் குறைபாடுள்ள காய்களும், கனிகளும் அவ்வளவு பலன்களைக் கொடுத்து விடாது. எனினும், நாம் குறைபாடுள்ள வளர்ச்சி பற்றிய  அறிக்கைகளையே தொடர்ந்து எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. 

குறிப்பாக, வீதி அபிவிருத்தி, நகர அபிவிருத்தி, மிதக்கும் சந்தை என்று அபிவிருத்தியின் கூறுகள் பற்றி அரசாங்கம் நாளாந்தம் பேசிக் கொண்டிருக்கிறது. அதுபோல, இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றும் அரசாங்கத்தின் திட்டங்களின் படி 8 சதவீத பொருளாதார வளர்ச்சி காணப்படுவதாக மத்திய வங்கி அறிக்கைகள் அவ்வப்போது தெரிவிக்கின்றன. ஆனால், இந்த அபிவிருத்தியின் பலனை யார் அனுபவிக்கிறார்கள் என்கிற பெரும் கேள்வி எழுந்து மடங்கி நிற்கிறது.

மூன்று தசாப்த காலமாக நீடித்த உள்ளக ஆயுத மோதல் முடிவுக்கு வந்துவிட்டது. அதில், எந்தவித மாற்றுக் கருத்துக்களும் இல்லை. ஆனால், சமாதானம் இன்னமும் பெற்றுக் கொள்ளப்படவில்லை.

ஆயுத மோதல் காலங்களில் சமூகங்களுக்கிடையில் (இன, மத) காணப்பட்ட சந்தேகப்பார்வை, மோதல்களின் நிறைவின் பின்னும் கடுகளவும் குறைந்து விடவில்லை. மாறாக, மேலெழுந்து வந்திருக்கிறது?, என்று அச்சம் கொள்ள வேண்டியிருக்கிறது. 

தமிழ் மக்கள் அதிகாரங்களின் பகிர்வைக் கோருவது என்பது ஆயுத மோதல்களினால் எழுந்தது என்கிற தோற்றப்பாடு முன்வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், அது, எவ்வளவு மோசமான வரலாற்றுத் தவறு. சுதந்திர இலங்கையில் தமக்கான அதிகாரப் பகிர்வினைக் கோரிய தமிழ் மக்களின் போராட்டங்களின் போக்கிலேயே ஆயுத மோதல்கள் தோற்றம் பெற்றன.

ஆனால், அந்த உண்மை மறைக்கப்பட்டுவிட்டன. அதாவது, தமிழ் மக்களின் ஆயுத போராட்டம் தான் அதிகாரங்களைக் கோருவதற்கான விடயத்தை கொண்டுவந்தது என்ற தோற்றப்பாடு இலங்கையின் பெரும்பான்மை மக்களான சிங்களவர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. அது, தமிழ் மக்கள் மீதான சந்தேகப் பார்வையை வளர்த்து விட்டது.

இப்படியான நிலையில், மோதல்கள் முடிவுற்ற போதிலும் தமிழ் மக்களின் சுதந்திரமான செயற்பாடு என்பது தொடர்ச்சியாக கண்காணிப்புக்குள் வைக்கப்பட வேண்டும் என்கிற விடயத்தை சிங்கள பெரும்பான்மை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது. அதை, அரசாங்கமும், பெரும்பான்மை சிங்களக் கட்சிகளும் திட்டமிட்டு முன்னெடுக்கின்றன.

மோதல்கள் முடிவுக்கு வந்து விட்டது. தென்னிலங்கை சிங்கள மக்கள் யாழ்ப்பாணம் சென்று நல்லூரானை தரிசித்து ஆசி பெறுகிறார்கள். இராணுவத்தினரின் ஓய்வு விடுதிகளில் தங்குகிறார்கள். யாழ் நகரத்து சைவக்கடைகளில் இடியப்பமும், தோசையும் சாப்பிட்டு 'யாழ்ப்பாண உணவின்' சுவை பற்றி சிலாகிக்கிறார்கள்.

பேஸ்புக்கில் படம் போட்டு தமது சந்தோசத்தைப் பகிர்கிறார்கள். ஆனால், தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் சென்று வருவதுதற்கான சூழல் மட்டுமே 'சமாதானம்' அல்லவே. 

தமது சகோதர இனத்தின் மீதான சந்தேகப் பார்வையை விலக்கிக் கொள்ளுமளவுக்கு விடயங்கள் நாட்டில் மாற வேண்டும். அது, தமிழ் மக்கள், சிங்கள மக்கள், முஸ்லிம் மக்கள் என்கிற வித்தியாசம் இன்றி அனைத்துத் தரப்பில் இருந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் சிங்கள அடிப்படைவாத, பெரும்பான்மை கட்சிகளும், முஸ்லிம்(களின் அனைத்துக்) கட்சிகளும், தமிழ்க் கட்சிகள் சிலவும் அங்கம் வகிக்கின்றன.

ஆனால்,  அவற்றுக்கிடையில் பரஸ்பர நம்பிக்கைகள் ஏதும் கிடையாது. மாறாக, ஆட்சியின் பங்காளிகள் என்கிற விடயம் மட்டுமே அவர்களை ஒரு தளத்தில் இணைக்கிறது.  அது, ஆட்சியோடு ஒட்டிக் கொண்டிருந்தாலே தம்மை தக்க வைத்துக் கொண்டிருக்க முடியும் அல்லது தாம் சார்ந்த சமூகத்தை பாதுகாக்க(?) முடியும் என்கிற விடயத்தை முன்னிறுத்தியது. (அப்படித்தான் சொல்லிக் கொள்கிறார்கள்) பரஸ்பர நம்பிக்கைகள் அற்ற கூட்டிணைவு என்பது போலியானது. அப்படியான தோற்றப்பாடொன்றையே மஹிந்த அரசாங்கமும், இன்றைய இலங்கையும் கொண்டிருக்கிறது. 
'இலங்கை அனைத்து மக்களுக்கும் தாய்நாடு. நமக்கென்று வேறுநாடுகள் எதுவும் கிடையாது. தமிழ் மக்களுக்கு எந்த நாடுகளும் தாயகம் அல்ல.

எனவே, அவர்களை எவரும் பொறுப்பேற்கவும் மாட்டார்கள். வடக்கு, தெற்கு - தமிழ், சிங்களம் என்ற பேதம் எம்மிடமில்லை.

நாம் அனைவரும் இந்த நாட்டில் பிறந்தவர்கள் என்ற வகையில் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாத்து நாட்டையும் பாதுகாப்போம். தாய்நாட்டையும் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தையும் காட்டிக் கொடுக்காது, கட்டிக் காத்து நாட்டை முன்னேற்றுவோம்' மொனராகலை விபுலானந்த வித்தியாலயத்தில் கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 01, 2014) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு தமிழில் உரையாற்றும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதைனையே சில வருடங்களாக மேடைகளில் சொல்லி வருகின்றார். ஆனால், அவரினதும், அவர் தலைமை வகிக்கும் அரசாங்கத்தினதும் செயற்பாடுகளில் தமிழ், முஸ்லிம் மக்கள் நம்பிக்கை கொள்ளும் அளவுக்கான நேர்மை இல்லை என்கிற அச்சம் இருக்கின்றது. அது, முரண்பாடுகளினாலும், மோதல்களினாலும் அதிகமாக பாதிக்கப்பட்ட சமூகங்களிடம் அதிகமாக இருக்கும் ஒன்று. ஏனெனில், வடக்கு நோக்கிய 'புலிப்பார்வை' என்பது அரசாங்கத்தினால் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. அதுபோல, முஸ்லிம் மக்கள் மீதான 'இஸ்லாமிய பயங்கரவாதம்' என்ற புதிய புனைவும் நம்பிக்கையூட்டுவன அல்லவே. 

இன்னொரு பக்கம், சிறுபான்மை மக்களை எரிச்சல் கொள்ளச் செய்யும் அறிக்கைகளும், கருத்துக்களும் அரசாங்கத்தைச் சார்ந்தவர்களினால் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுவது. இதனை, இணக்கப்பாடு பற்றிய அக்கறையுள்ளவர்களினால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. அதுபோல, நம்பிக்கை கொள்ளவும் அனுமதிக்காது.

'இலங்கையில் 13ஆவது திருத்தத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பாராட்டவேண்டும். தமிழர்கள் தாங்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பதை மறந்து தம்மை இலங்கையர்களாகக் கருதி அந்த நாட்டின் அரசமைப்பு, சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும். அவர்கள் வடக்கு மாகாணத்துக்கு பொலிஸ் அதிகாரத்தை கோரக் கூடாது...' இப்படியான கருத்தொன்றை காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச நிபுணர் குழுவில் அங்கம் வகிக்கும் இந்திய மனித உரிமை செயற்பாட்டாளரான அவ்தாஷ் கௌஷல், இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருக்கின்றார்.
 
இலங்கை அரசாங்கம் அமைக்கும் விசாரணை ஆணைக்குழுக்கள் மீது அவ்வளவு நம்பிக்கைகள் வைக்கப்படுவதில்லை. ஏனெனில், அவற்றின் செயற்திறன் பற்றிய கேள்விகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இந்த நிலையில், மோதல் காலங்களில் காணாமற்போனவர்கள் பற்றி விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்க வரும் சர்வதேச நிபுணர் இவ்வாறான அடிப்படையற்ற கருத்துக்களை முன்வைப்பது அவ்வளவு சரியானது அல்ல. அது, ஆணைக்குழுவின் மீதிருக்கும் சந்தேகங்களை இன்னமும் வலுக்கச் செய்யும். 

'...தமிழர்கள் தாங்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பதை மறந்து தம்மை இலங்கையர்களாகக் கருதி அந்த நாட்டின் அரசமைப்பு, சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும்....' என்ற கூற்று தமிழ் மக்களை இலங்கையின் வந்தேறு குடிகள் என்ற தோற்றப்பாட்டை  முன்வைக்கிறது.

அதிகாரங்கள் கோருதலுக்கான அவ்வளவு அருகதையற்றவர்கள் என்ற மாதிரியான அடிப்படைகளைக் கொடுக்கிறது. இது, நம்பிக்கையான செயற்பாடு ஏற்கனவே, சமாதானத்துக்கான அடிப்படைகள் குறித்த ஆரம்பம் பற்றி அக்கறையுள்ளவர்கள் அல்லாடிக் கொண்டிருக்க, அவ்தாஷ் கௌஷல் போன்றவர்கள் சுப்ரமணியன் சுவாமி போன்று கருத்துரைத்து பிரச்சினைகளின் அளவை பெரிதாக்குகிறார்கள். அதை, அரசாங்கம் அனுமதித்து ரசிக்கிறதோ என்று நம்ப வேண்டியிருக்கிறது.

சிங்கள மக்களும் பரிதாபமான நிலையிலேயே இருக்கிறார்கள். ஏனெனில், அவர்களை அரசாங்கமும், பெரும்பான்மை சிங்களக் கட்சிகளும் தொடர்ந்தும் ஏமாற்றி வந்திருக்கின்றன. அது, சர்வதேச ரீதியில் இலங்கை மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றி ஆராய்ந்து அறிந்து கொள்வதைத் தடுக்கும் முகமாக இருக்கின்றன. இலங்கையின் நற்பெயர் பெருமைகளை  சுப்ரமணியன் சுவாமி போன்றவர்கள் வந்து பேச வேண்டியிருக்கிறது.

சுப்ரமணியன் சுவாமி இந்திய மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதி போன்ற தோற்றப்பாட்டை அரசாங்கமும், அரச ஊடகங்களும் தொடர்ச்சியாக வழங்கி வந்திருக்கின்றன. ஆனால், இந்திய மத்திய அரசோ அவரை தன்னுடைய பிரதிநிதி அல்ல என்று அறிவிக்கின்றது. வட இந்திய ஊடகங்கள் சுப்ரமணியன் சுவாமியை தமிழகத்தின் அரசியல்வாதி தோரணையில் கையாள்வதுண்டு. ஆனால், அவர் தமிழக அரசியலில் இருந்து தோற்றுப்போன அல்லது நிலைக்க முடியாது வெளியேறி தசாப்த காலமாகிறது. அப்படிப்பட்டவரைத் தான், இந்தியாவின் பிரதிநிதி போல அரசாங்கம் முன்னிறுத்தி சிங்கள மக்களை ஏமாற்றி வந்திருக்கிறது. இது, மிகவும் மோசமான ஏமாற்று வேலை.

சர்வதேச அரசியலையும், சூழ்நிலைகளையும் வாக்களித்த மக்கள் விளங்கிக் கொள்ள அனுமதித்து, அதன் போக்கில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். அதுதான் சிறப்பான தலைவரும், அரசாங்கமும் செய்ய வேண்டியது. அதைவிடுத்து, போலிகள் மீது நம்பிக்கை கொள்வது அல்ல.

நாட்டில் சமாதானம் மலர வேண்டும். ஒருங்கிணைந்த நாட்டுக்குள் சமூகங்களுக்கிடையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். எல்லோரும் இலங்கையர் என்று உணர வைப்பதற்கான அடிப்படைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கான ஆரம்ப காட்டங்களில் அரசாங்கம் இல்லையோ என்று சந்தேகம் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஏனெனில், பேச்சுக்களில் காணப்படும் இணக்கப்பாடும், சமாதானமும் நடவடிக்கைகளில் இல்லை. அவை, மனப்பூர்வமாக முன்னெடுக்கப்பட வேண்டும். அப்போது, நாட்டில் உண்மையான அபிவிருத்தி ஏற்படும். நாமும் ஆசியாவின் ஆச்சரியமாக மட்டுமல்ல, உலகின் ஆச்சரியமாகவும் மாறலாம். இல்லையென்றால், முரண்பாடுகளை முன்னிறுத்தி அரசியல் செய்து இன்னும் இன்னும் மோசமாக சீரழிந்து போக வேண்டியிருக்கும்!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X