2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மினி தேர்தல்!

Thipaan   / 2014 செப்டெம்பர் 09 , மு.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் மினி தேர்தல் நடைபெறுகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 2,130 வெற்றிடங்களுக்கு செப்டெம்பர் 18ஆம் திகதி நடக்கும் தேர்தல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த உள்ளாட்சி இடைத் தேர்தலில் இதுவரை 4,914 பேர் போட்டியிடும் வகையில் ஒரு மினி தேர்தலாக காட்சியளிக்கிறது.

உள்ளாட்சித் தேர்தல் களத்தில் இந்த முறை வித்தியாசமாக எதிரும் புதிருமாக நிற்பது, பிரதமராக இருக்கும் நரேந்திரமோடியின் பாரதிய ஜனதா கட்சியும் தமிழக முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும்தான். வழக்கமாக தமிழகத்தில் பிரதான தேர்தல் போட்டி என்பது அ.தி.மு.கவுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையில்தான் இருக்கும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அது சற்று வித்தியாசப்பட்டது. அ.தி.மு.க., தி.மு.க. தவிர பா.ஜ.க. தலைமையிலான வலுவான அணியும் களத்துக்கு வந்தது.

அந்த போட்டியின் காரணமாக தமிழகத் தேர்தல் களம் மும்முனைப் போட்டியை சந்தித்தது. தி.மு.கவுக்கு படு தோல்வி ஏற்பட்டது. அ.தி.மு.க. 38 இடங்களில் வெற்றி பெற்றது. மீதியுள்ள ஒரு எம்.பி.யை பா.ஜ.க. பெற்றது.

இந்தக் காட்சிக்குப் பிறகு பா.ஜ.க.வின் தமிழக தலைவர் பதவியில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. புதிய தலைவராக காங்கிரஸ் கட்சியின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தனின் மகள் தமிழிசை சவுந்திரராஜன் தலைவரானார்.

இவர், பா.ஜ.க.வில். இவருக்கு அண்ணன் வசந்தகுமார் காங்கிரஸில் இருக்கிறார். புதிய தலைவரான தமிழிசைக்கு, தமிழகத்தில் உள்ள அனைத்துத் தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர். குறிப்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதியும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தது .

முக்கிய அம்சம். இப்படி வலுவூன்றக் கருதும் பா.ஜ.க.வுக்கும், அக்கூட்டணியில் இடம்பெற்றிருந்த டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி, விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போன்றவற்றுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அவ்வளவாக ராசியான உறவு இல்லை. ஆனால், அந்த நிலைமையை புதிய தலைவராக பொறுப்பேற்ற தமிழிசை சவுந்திரராஜன் மாற்றிக் காட்டினார்.

மூன்று மேயர் பதவி, 8 நகராட்சி தலைவர் பதவி உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட உள்ளாட்சி வெற்றிடங்களுக்கு நடக்கும் தேர்தல் இது. இத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் மாநில தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கையில்லை என்று அறிவித்து, உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்தது தி.மு.க. அதே வழியை ம.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே கடைப்பிடித்தன.

களத்தில் நிற்பது ஆளுங்கட்சியான அ.தி.மு.க. மட்டும்தான் என்ற சூழ்நிலையில், பா.ஜ.க.வும் களத்துக்கு நிற்கும் என்ற முடிவை எடுத்தார் தமிழிசை. அதற்காக கூட்டணிக் கட்சித் தலைவரான வைகோவை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

அவரும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரிக்க முடிவு செய்தார். அதே போல் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தையும் சந்தித்தார் தமிழிசை சவுந்திரராஜன். அவரும் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு என்று அறிவித்தார். இப்படியொரு சூழ்நிலையில்தான் மினித் தேர்தல் போல் நடக்கும் உள்ளாட்சித் தேர்தல் அ.தி.மு.க.வுக்;கும், பா.ஜ.க.வுக்கும் இடையில் நேரடிப் போட்டியை உருவாக்கியிருக்கிறது.

இந்தப் போட்டியில், எங்களைப் பார்த்து அ.தி.மு.க. பயப்படுகிறது என்ற ரீதியில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் கருத்துச் சொல்ல அதை உடனே மறுத்திருக்கிறார் சித்ரகுப்தன். இவர் யார்? அ.தி.மு.க.வின் அதிகார பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையில் அரசியல் எதிரிகளை அட்டாக் பண்ணி கட்டுரை எழுதுபவர்.

அப்படி பா.ஜ.க.வையும் அட்டாக் பண்ணி எழுதப்பட்டுள்ள கட்டுரையில், வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கே இன்னும் பழகாத பா.ஜ.க. நடைவண்டி ஓட்டும் காலத்தே நமக்கு பூச்சாண்டி காட்டுகிறது.

மகன்-வாத (ராமதாஸின் பா.ம.க.) மது-வாத (தே.மு.தி.க.) மதவாத (பா.ஜ.க.) கட்சிகள் ஒன்றாகக் கூடினாலும் அவையாவும் உதவாத கட்சிகள் என்பதை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்;கு உணர்த்தும் என்று காட்டமாக கட்டுரை தீட்டியிருக்கிறார்.

நேரடிப் போட்டியில் களத்தில் நிற்கும் கட்சிகளில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இருக்கிறது என்றாலும், பா.ஜ.க.வுக்;கும், அ.தி.மு.க.வுக்;கும் போட்டி என்பதுதான் பறைசாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. வேட்பு மனுக்கள் தொடங்கப்பட்ட உடனேயே மாநில தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டுகள் துவங்கி விட்டன.

தேர்தல் அறிவித்தவுடன் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகிறது ஆணையம் என்ற குற்றச்சாட்டை சுமத்தினார் கருணாநிதி. அதே போல் ஆளுங்கட்சி வேட்பு மனுக்களை மட்டுமே தேர்தல் அதிகாரிகள் ஏற்கிறார்கள்.

மற்றவர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்ய விடாமல் தடுக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன் வைத்து மாநில தேர்தல் ஆணையத்வுக்கு படையெடுக்கிறார்கள் அரசியல் தலைவர்கள். குறிப்பாக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசையும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனும் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

வேறு ஒருவர், இந்த தேர்தலையே நிறுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருக்கிறார். ஆனால், புகார்களுக்கு அவ்வப்போது பதிலடி கொடுக்கும் தேர்தல் ஆணையம், புகார் சொல்வதற்கு முன்பு அந்தப் புகார்கள் உண்மையா என்பதை பரிசீலித்து பின் புகார் செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளது.

இதையும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை, தேர்தல் ஆணையம் இப்படி அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை வழங்குவது உள்நோக்கம் கொண்டது என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

எந்த ஆட்சி நடைபெற்றாலும் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தும் மாநில தேர்தல் ஆணையத்வுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது. ஆனால், தி.மு.க. ஆட்சியில் மாநிலத் தேர்தல் ஆணையத்தை சென்னை உயர்நீதிமன்றம் குறை கூறியது போல் அ.தி.மு.க. ஆட்சியில் குறை கூறவில்லை.

அதுவும் மாநில தேர்தல் ஆணையராக இருக்கும் டாக்டர் சோ. அய்யர், அரசியல் கட்சிகள் கொடுக்கும் புகார்களின் மீது அவ்வப்போது நடவடிக்கை எடுத்து புகார்களில் நியாயம் இல்லை என்பதை நிரூபித்து வருகிறார்.

அதை உடனே செய்தி குறிப்புகளாகவும் பத்திரிகைகளுக்கு வெளியிட்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் எதுவும் ஒளிவு மறைவு இல்லை என்பதை பறைசாற்றி வருகிறார். அதுமட்டுமின்றி, தேர்தல் ஆணையத்வுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு துடிப்பான பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஜோதி நிர்மலாவும் மாநிலத் தேர்தல் ஆணையரின் உத்தரவுப்படி உள்ளாட்சித் தேர்தலில் எந்த முறைகேட்டுக்;கும் இடம் கொடுத்து விடக் கூடாது என்பதில் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில், பா.ஜ.கவுக்கும், அ.தி.மு.கவுக்குமான நேரடி போட்டி என்ற மக்கள் மத்தியில் கருத்து உருவாக்கம் ஏற்பட்டு வருகிறது. இது அ.தி.மு.கவுக்கு மாற்றாக இருக்கும் தி.மு.கவுக்கும் தலைவலி. மூன்றாவது கட்சியாக தமிழக அரசியலில் நிலைத்து விட்ட தே.மு.தி.கவுக்கும் திருகுவலி. உள்ளாட்சித் தேர்தலில் எது எப்படிப் போனாலும் போட்டியிட்டிருக்க வேண்டும். அப்போதுதான் தமிழக அரசியல் களம் அ.தி.மு.கவுக்கும், தி.மு.கவுக்கும் இடையிலான போட்டிக் களம் என்பதும், அதற்கு போட்டியாக இருக்கும் மூன்றாவது சக்தி தே.மு.தி.க. என்பதும் நிலைநிறுத்தப்பட்டிருக்கும்.

ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவுக்கும், அ.தி.மு.கவுக்கும் மட்டும் போட்டியல்ல. மோடியும் ரேஸில் இருக்கிறார் என்ற ரீதியில் அமைந்த களம் தி.மு.கவுக்கு பாதகமாக அமைந்தது. அதே போன்ற சூழ்நிலை இப்போதும் உருவாகியிருக்கிறது.

தமிழக அரசியலில் தி.மு.கவுக்கும், அ.தி.மு.கவுக்கும் போட்டி என்ற நிலைமாறி, அ.தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் நேரடிப் போட்டி என்ற கட்டம் வந்திருக்கிறது. தி.மு.கவுக்குள் நடக்கும் உட்;கட்சி தேர்தல், அக்கட்சியில் தலைமைக்கும், ஸ்டாலினுக்கும் இடையே நடக்கும் பனிப்போர், தமிழகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் நிலவும் கோஷ்டி அரசியல் எல்லாம் அந்தக் கட்சியை உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்க வேண்டும் என்ற ஆர்வத்தை கொடுக்க மறுத்து நிற்கிறது.

ஆனால், இன்னும் ஒன்றரை வருடங்களில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கும் தி.மு.க. இந்த உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்தது மிகப்பெரும் வரலாற்றுப் பிழை. அது அக்கட்சியின் எதிர்காலத்தை எப்படி தாக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேபோல், விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வும் இந்த தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி நிற்பது அக்கட்சியிடம் இருக்கும் மூன்றாவது கட்சி என்ற அந்தஸ்வுக்கு ஆபத்தாக முடியும். அக்கட்சி எடுத்த புறக்கணிப்பு முடிவும் ஆபத்து.

அ.தி.மு.க.வைப் பொறுத்தமட்டில் சட்டமன்ற தேர்தல் வெற்றி, பிறகு உள்ளாட்சித் தேர்தல் வெற்றி, மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் அபரிமித வெற்றி என்று வெற்றி அலையின் மீது பயணித்துக் கொண்டிருக்கிறது. இப்போது நடைபெறுகின்ற உள்ளாட்சி இடைத் தேர்தலிலும் அக்கட்சிக்கு வெற்றி கிடைக்கும் பட்சத்தில், அ.தி.மு.க. தமிழகத்தில் எந்தக் கட்சியாலும் கூட்டணியாலும் அசைக்க முடியாத கட்சி என்ற இமேஜ் மக்கள் மத்தியில் தோற்றுவிக்கப்படும். அதுவே அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு ஓர் அசையாச் சொத்தாக அமையும்!


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X