2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

த.தே.கூவின் அறைகூவல்

Thipaan   / 2014 செப்டெம்பர் 09 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-புருஜோத்தமன் தங்கமயில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீண்ட காலத்தின் பின் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான அழுத்தங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. மோதல்களால் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று காட்டிக் கொண்டு கழிவிரக்கத்தின் வழி (மட்டும்) சர்வதேசத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இப்போது இலங்கை அரசாங்கத்தை தைரியமாக எதிர்கொள்வதன் மூலம் சர்வதேசத்தின் கைகளைப் பற்றியிருக்கிறது. அப்படித்தான் உணர முடிகிறது.

ஏனெனில், இலங்கையை ஆளும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீதான அதிருப்தி என்பது, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளிடம் சில காலமாகவே உண்டு. அதுவும், சீனாவுடன் நெருங்கிய இலங்கையை அந்த நாடுகள் இரசிக்கவில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களுக்கு மேற்கு நாடுகள் ஆதரவு வழங்கியமை என்பது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கான ஆதரவு அல்ல. அது, ஆயுத ரீதியிலும், மக்கள் ஆதரவிலும் வளரும் (விடுதலைப் புலிகளை) அமைப்பொன்றை இல்லாதொழிப்பதற்கான தமது தேவையின் பிரகாரம் நிகழ்ந்தது. ஆனால், இறுதி மோதல்களையே சில நாட்களுக்குள் மேற்கு நாடுகள் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி இலங்கை அரசாங்கத்தை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது. இன்று விசாரணைகளை நடத்துகின்றது.

இந்த இடத்தில் சுதாகரித்துக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சர்வதேசத்தின் எதிர்பார்ப்பு என்ன, யதார்த்தத்தின் பிரகாரம் தமிழ் மக்கள் அடையக்கூடிய இலக்கு என்ன? என்று ஓரளவுக்கு தெளிவாக வரையறுத்துக் கொண்டு செயற்பட ஆரம்பித்திருக்கிறது. அதற்கு நரேந்திர மோடி தலைமையிலான இந்திய மத்திய அரசாங்கத்தின் ஆதரவும் இருக்கின்றது என்றும் நம்புகின்றது. அது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளிலும் அப்பட்டமாகத் தெரிகிறது.

கடந்த 5, 6, 7ஆம் திகதிகளில் வவுனியாவில்  நடைபெற்ற (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மாநாடு முக்கிய செய்திகளை சொல்லியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரின் உரைகளிலும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலும் அவை தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றன.

மீண்டும் போராடுவோம் என்ற முன்வைப்போடு தன்னுடைய தலைவர் பதவி ஏற்புரையை ஆற்றிய மாவை சேனாதிராஜா, சர்வதேச இராஜதந்திர சந்தர்ப்பமும் குறிப்பாக இந்தியாவின் புதிய அரசின் சந்தர்ப்பமும் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளின் பயனுள்ள உழைப்பும் கைகூடியுள்ள இச்சந்தர்ப்பத்தைப் பற்றி நின்று இம்மாநாட்டில் பொருத்தமான இலக்கை எய்துவதற்கான இலட்சியம் நிறைந்த தீர்மானங்களை எடுப்போம் என்று அறைகூவல் விடுத்தார்.

அத்தோடு, தமிழ் மக்கள் தமது உரிமைகளை வேண்டி 1950களிலிருந்து 2009ஆம் ஆண்டு வரையில் போராடிய வரலாற்றையும், அதன் பிரகாரம் இலங்கை அரசு- தமிழ்த் தலைமைகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுக்கள், இணக்கப்பாடுகள், முறிவுகள் குறித்து விலாவரியாக தனது உரையில் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு முறையும் இலங்கையை ஆளும் பெரும்பான்மை அரசுகள் தமிழ் மக்களை அடக்கியொடுக்க எடுத்த நடவடிக்கைகள், ஏமாற்று வேலைகள் என்பன தொடர்பில் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசாங்கம் இனவழிப்பை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டு, அவற்றுக்கெதிராக போடுவதற்கு தமிழ் மக்கள் தயாராக வேண்டும் என்றார்.  ஆனால், அந்தப் போராட்டம் அஹிம்சை வழியிலானதாக இருக்க வேண்டும் என்பதை அவர் கோடிட்டார்.

அந்த விடயம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாட்டு தீர்மானத்தில் இவ்வாறு உள்ளடக்கப்பட்டிருந்தது, எமது இனத்தின் சுயநிர்ணய அடிப்படையிலே, பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள்ளே, இணைந்த வடக்கு - கிழக்கில் பகிரப்படும் இறைமையின் அடிப்படையில், தன்னாட்சி அதிகாரம் கொண்ட அரசு ஒன்று வன்முறையற்ற சாத்வீகப் போராட்டத்தின் மூலம் - வென்றெடுக்கப்படும் வரை போராடுவோம் என்று எமது மக்களுக்கு உறுதி கூறுகின்றது
 
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடுகள் உணர்ச்சி பொங்கும் பேச்சுக்களினாலும் அறைகூவல்களினாலும் நிறைந்திருந்த வரலாறுகளே உண்டு. அப்படியான பேச்சுக்களை இம்முறையும் மாநாடு கொண்டிருந்தது. ஆனால், அந்த உணர்ச்சிப் பேச்சுக்களின் பின்னால் குறிப்பிட்டளவு நிதானம் இருந்தது. இல்லையென்றால், மாவை சேனாதிராஜா போன்ற உணர்ச்சிவசப்படும் தலைவர்களால் பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள்ளே என்ற விடயம் உள்ளடக்கப்படுவது அல்லது உச்சரிக்கப்படுவது தவிர்க்கப்பட்டிருக்கும்.

ஆனால், இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிற சந்தர்ப்பம் என்ற விடயமும் யதார்த்தமும் இவ்வளவு தெளிவாக பேச வைத்திருக்கிறது.

இன்னொரு விடயமும் சுட்டிக்காட்டத்தக்கது, சிங்கள மக்களிடம் இலங்கை என்றைக்கும் பிரிக்கப்படாது என்ற நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். அதுவே, தமிழ் மக்களுக்கு அதிகாரங்களைப் பெற்றுக் கொடுக்க பெருமெடுப்பில் உதவும் என்ற விடயம் உணரப்பட்டிருக்கிறது. 

அதனை தன்னுடைய உரையில் குறிப்பிட்ட வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சமஷ்டி கருப்பொருள் தொடர்பில் சிங்கள மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். (அந்த முயற்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது ஈடுபட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் குறிப்பிட்டிருக்கிறார்).
வட மாகாண சபைத் தேர்தல் கால மேடைகளில் வலம் வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அதியுச்ச உணர்ச்சிப் பிளப்புகளாக தங்களை முன்னிறுத்தியே உரையாற்றி சென்றிருந்தனர்.

ஆனால், வட மாகாண சபை வெற்றிக்கு பின்னாலும் இலங்கை அரசாங்கத்தை கையாள்வது தொடர்பில் எழுந்த சிக்கல்கள் நிறைய சிந்திக்கவும் நிதானமாக செயற்படவும் வைத்திருக்கிறது. அதுதான், இவ்வளவு தெளிவான- புரிதல் கொண்ட முடிவுகளை முன்வைத்து பேச வைக்கின்றது.

சிங்கள மக்களின் மனங்களை வெல்வதன் மூலமே தீர்வு காணப்படலாம் என்பதை வெளிப்படுத்தியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை அரசாங்கத்தை சவால் மனநிலையோடு எதிர்கொண்டிருக்கிறது. அதுவும் மாநாட்டில் உரையாற்றிய இரா.சம்பந்தன், இனப்பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தை என்பது கால வரையறையோடும் சர்வதேச நாடொன்றின் கண்காணிப்போடும் முன்னெடுக்கப்பட வேண்டும். அப்போதுதான், பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள முடியும்.

அதுதவிர எந்தவொரு தருணத்திலும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கெடுக்க மாட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியாக கூறியிருக்கிறோம் என்றுள்ளார்.
 
சம்பந்தனின் மேற்கொண்ட கூற்றானது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கூற்று மட்டுமல்ல. அது, ஒட்டுமொத்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். அவர், அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற தோரணையிலேயே வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதுபோல், தமிழரசுக் கட்சியின் மாநாட்டு தீர்மானங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மற்றைய கட்சிகளும் அவ்வப்போது முன்வைத்து வந்திருக்கின்றன. எனவே, அது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைபபுக்குள் சிக்கல்கள் வர வாய்ப்பில்லை.

இன்னும் இரண்டு விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மைய நாட்களில் ஆணித்தரமாக முன்வைக்கின்றது. முதலாவது, இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான இலங்கை மீதான ஐக்கிய நாடுகளின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது மற்றும் சாட்சியங்களை சேகரித்து வழங்குவது.

இரண்டாவது, இலங்கை அரசியலமைப்பின் 18ஆவது திருத்த சட்டத்தை இல்லாமற் செய்வதன் மூலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு ஆதரவு வழங்குவது. இந்த இரண்டு விடயங்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவர் தலைமையிலான அரசாங்கத்தையும் எரிச்சற்படுத்தும் விடயங்கள்.

இந்த விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓரளவு ஆர்வத்துடன் செயற்படுவதற்கும் சர்வதேசத்தின் ஆதரவு தன்னுடைய பக்கம் இருக்கின்றது என்பது காரணமாகவும், அவசியமானவும் இருக்கின்றது. அதனை, இலங்கையின் பாதிக்கப்பட்ட மக்களும் எதிர்பார்க்கிறார்கள் என்பதே யதார்த்தம்.
 
நீண்டகால நோக்கு
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால நடவடிக்கைகள் ஓரளவுக்கு கவனிக்க வைக்கின்றன என்பது உண்மை. அதை மேலுள்ள பகுதிகளில் பேசியிருக்கின்றோம். ஆனால், அதன் நீண்டகால நோக்கு என்பது எவ்வளவு சாதகங்களை வழங்கும் படியாக இருக்கும் அல்லது சர்வதேச சூழல்கள் என்பது எப்போதுமே தமிழர் தரப்புக்கு சாதகமானதாக இருக்குமா? என்ற கேள்விகள் எழுகின்றன.
 
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இல்லாத சந்தர்ப்பத்தில் புதிதாக வரும் சிங்கள பெரும்பான்மைவாத அரசாங்கத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு கையாளும் அப்போது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்? என்ற விடயங்களும் இருக்கின்றன. ஏனெனில், இன்னும் சில காலத்துக்குள் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வை இலங்கை அரசாங்கம் தந்துவிடும் என்று நம்புவதெல்லாம் அடிமுட்டாள் தனமானது. சாதகமான வாய்ப்புக்களைப் பயன்படுத்தி மெல்ல மெல்ல அதிகாரங்களை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதுதான், நீண்டகால போக்கில் சாத்தியமாகக் கூடியது. தமிழ் மக்களின் தீர்வு என்பது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் மாத்திரம் போராடி பெற வேண்டியதில்லை. அது, சிங்கள பௌத்த பெரும்பான்மை அதிகாரவர்க்கத்துடம் போராடிப் பெற வேண்டியது.
 
தேர்தல், வாக்கு என்கிற அடிப்படையில் (கொள்கை அடிப்படையில் என்பதில் அவ்வளவு உண்மை இருப்பதாகப் படவில்லை) இணைந்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளால் நீண்ட காலப்போக்கில் இவ்வாறு இணைந்திருக்க முடியுமா, அவற்றுக்குள் ஒரு கட்சியின் கோலொச்சும் திறன் அதிகரிக்கும் போது ஏனைய கட்சிகள் என்ன செய்யும்? என்ற விடயங்கள் இன்னமும் பேசப்பட வேண்டியிருக்கின்றன.

இந்த நிலையில் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டிய தேவை எழுகிறது. (அப்போது கொள்ளைக் குழப்பங்கள் இன்றி மக்களை சந்திப்பதில் சிக்கல்கள் இருக்காது. அது, மக்கள் கேள்வியெழுப்புவதற்கும் இலகுவானது) இல்லாத சந்தர்ப்பங்களில் அவை உடைபட்டுப் போகும் வாய்ப்புக்கள் உருவாகும். அப்போது, குழப்பங்களுக்கு மத்தியில் தமிழ் மக்கள் தத்தளித்துக் கொண்டிருப்பார்கள். எமது அரசியலுரிமைகளைப் பெறுவதை மறந்து எமக்குள் மோதிக்கொண்டிருக்க வேண்டி ஏற்படும்.
 
இன்று இன்னொரு பாரிய பிரச்சினை உருவாகியிருக்கிறது. அதாவது, வடக்கிலுள்ள தமிழ் மக்கள் மட்டுமே அதிகாரங்களைக் கோருகிறார்கள் என்பது போன்ற தோற்றப்பாடு. அதனை, முறியடிக்க வேண்டிய தேவையுண்டு. ஏனெனில், கிழக்கிலும், வடக்கு, கிழக்குக்கு வெளியிலுமுள்ள தமிழ் மக்கள் தொடர்பிலும் கரிசனை செலுத்தி அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்;கும் தலைமைகளுக்கும் உண்டு.

அதனை, சர்வதேச ரீதியிலும் கொண்டு செல்ல வேண்டும். எல்லா நேரங்களிலும் எம்மை நோக்கி காற்று வீசுவதில்லை. ஆனால், வீசும் சந்தர்ப்பங்களில் எமது நீண்ட கால நோக்கு தொடர்பிலும் அக்கறை கொண்டு தீர்மானங்களையும் செயற்றிட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும். அதுவே, எமது இருப்பினை உறுதி செய்யும்!
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X