2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

உதவியா - உபத்திரவமா?

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 12 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

கடந்த ஓரிரு வாரங்களாக முக்கிய வெளிநாட்டு அரச தலைவர்கள், அமைச்சர்கள், இராஜதந்திரிகள் பலரும் கொழும்பை வட்டமிட்டுவருகின்றனர். ஸ்பெய்ன் மற்றும் கியூபா வெளிவிவகார அமைச்சர்கள், ஜப்பானிய பிரதமர், சீன ஜனாதிபதி ஆகியோர் இந்த மாதம் கொழும்பு வந்த - வரவுள்ள முக்கிய பிரமுகர்களில் சிலராவார்.

இவர்களில்  ஜப்பானிய பிரதமர் சின்ஷோ அபே, கடந்த 7ஆம் திகதி இலங்கைக்கு மேற்கொண்ட பயணமும் சீன ஜனாதிபதி எதிர்வரும் 16ஆம் திகதி மேற்கொள்ளவுள்ள பயணமும் முக்கியமானவை. அண்மைய நாட்களில் கொழும்புக்கு பயணத்தை மேற்கொண்ட வெளிநாட்டுத் தலைவர்கள் இலங்கையுடனான உறவுக்கு முக்கியத்துவம் அளிக்க விருப்பம் கொண்டுள்ளதை வெளிப்படுத்தியுள்ளனர். இனி வரப்போகிறவர்களும் அதையே வெளிப்படுத்தவுள்ளனர்.

கடந்த வாரம் கொழும்பு வந்த கியூபா வெளிவிகார அமைச்சர் புரூனோ ருத்ரிகோஸ் பரில்லா தவிர்ந்த, ஏனைய பிரமுகர்களின் பயணங்களில் உள்நோக்கம் – அதாவது தமது நாட்டின் நலனே அதிகமிருந்தது என்பதில் சந்தேகமில்லை. இலங்கையின் கேந்திர முக்கியத்துவம், இப்போது உலகத் தலைவர்களை சுண்டி இழுக்கத் தொடங்கியுள்ளது. சீன, ஜப்பானிய தலைவர்களினது பயணத்தின் அடிப்படையே, இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தை தமது நலனுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதேயாகும். இதில் பொருளாதார, பாதுகாப்பு நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஐரோப்பிய ஒன்றிய நாடான ஸ்பெய்னின் இலக்கு வேறானது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில் தற்காலிக உறுப்புரிமையை பெறுவதற்கு இலங்கையின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதே, ஸ்பெய்ன் கை நீட்டுவதற்கு காரணமாகும்.

கடந்த 6ஆம் திகதி அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த ஸ்பெய்னின் வெளிவிவகார மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் ஜோஸ் மனுவல் கார்சியா- மார்கல்லோ மார்பில், இலங்கையுடன் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை பலப்படுத்திக்கொள்ள விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய மேற்குலகுக்;கு எதிராக இலங்கை அரசாங்கம் பகிரங்கமாக ஒரு விமர்சனப்போரை நடத்திக்கொண்டிருக்கிறது.

போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில், மேற்குலக நாடுகள் இலங்கையை தண்டிக்கமுனைவதாக அரசாங்கம் கடுமையாகச் சாடிவருகிறது. மேற்குலகின் அழுத்தங்களுக்கு அடிபணியப்போவதில்லை என்றும் சூளுரைக்கிறது. இத்தகைய நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்றான ஸ்பெய்னின் வெளிவிவகார அமைச்சர், கொழும்பு வந்து இலங்கையுடன் இராஜதந்திர, பொருளாதார உறவுகளை பலப்படுத்துவது தொடர்பில் பேசியிருக்கிறார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தமது நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்.

ஐரோப்பிய நாடுகளிடமிருந்து இத்தகைய அழைப்புகள் இப்போது பெரும்பாலும் இலங்கை அரசுக்கு கிடைப்பதில்லை.

பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொள்ளவேண்டிய சந்தர்ப்பங்களைக் கூட, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் இழக்கவேண்டிய நிலையேற்பட்டது. அதற்கு புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்பும் ஒரு காரணம்.

ஸ்பெய்னை பொறுத்தவரையில் அங்கு புலம்பெயர் தமிழர்கள் அதிகமில்லை என்பதால், துணிவோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.  அவரும் அதனை ஏற்றுக்கொண்டு விரைவிலேயே மட்றிட்டுக்குப் பயணமாகலாம். ஏனென்றால், ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள இலங்கைக்கு எதிரான கருத்தை உடைப்பதற்கு, இது அரசாங்கத்துக்கு கிடைத்துள்ள நல்லதொரு வாய்ப்பென்றும் கூறலாம்.

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில், 2012ஆம் ஆண்டு முதலாவது தீர்மானத்தை கொண்டுவருவதற்கு இணை அனுசரணை வழங்கிய நாடுகளில் ஒன்றுதான் ஸ்பெய்ன். 2013ஆம் ஆண்டும் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஸ்பெய்ன் ஆதரவளித்திருந்தது. அவ்வாறு இலங்கைக்கு எதிராக சர்வதேச அரங்கில் - மேற்குலகின் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்பட்ட ஸ்பெய்னுக்கு இப்போது சோதனை வந்திருக்கிறது.

இலங்கையின் ஆதரவைத் தேடி அது கொழும்புக்கு வரவேண்டிய நிலையேற்பட்டிருக்கிறது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச்சபையின் 5 தற்காலிக உறுப்பு நாடுகளை தெரிவுசெய்வதற்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்கப்போகிறது.

2015 ஜனவரி தொடக்கம் 2016 டிசெம்பர்வரையான 2 ஆண்டுகளுக்கு ஐ.நா. பாதுகாப்புச்சபை உறுப்புரிமையை பெறுவதற்கு ஸ்பெய்னும் மேற்கு ஐரோப்பிய பிரிவில் போட்டியில் குதித்துள்ளது. ஸ்பெய்னுக்கு போட்டியாக இந்த அணியில் நியூஸிலாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளும் இருக்கின்றன. இதனால், மேற்குலக நாடுகளின் வாக்குகள் சிதறிப்போகும் நிலை காணப்படுகிறது.

எனவேதான், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக வாக்களித்ததை மறந்துவிட்டு, கொழும்பின் காலை பற்றியிருக்கிறது ஸ்பெய்ன். ஸ்பெய்னின் இக்கோரிக்கை தொடர்பில் ஆலோசிப்பதாக உறுதியளித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இலங்கையில் நிரந்தர தூதரகமொன்றை அமைத்து, உறவுகளை பலப்படுத்திக்கொள்ளப் போவதாகவும் ஸ்பெய்ன் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.
இது இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில் முக்கியமானதொரு வெற்றியெனலாம்.

அதாவது மேற்குலக அணிக்குள் ஏற்படும் பிளவு, எதிர்காலத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கான அழுத்தங்களை குறைப்பதற்கு உதவுமென்று கொழும்பு நம்புகிறது. எனவே, நியூயோர்க்கில் அடுத்த மாதம் நடக்கவுள்ள வாக்கெடுப்பின்போது, ஸ்பெயினுக்கு ஆதரவாக இலங்கை வாக்களிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இதனிடையே, கடந்த 7ஆம் திகதி குறுகியதொரு பயணமாக கொழும்பு வந்திருந்த ஜப்பானிய பிரதமர் சின்ஷோ அபே, இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அடித்தளமிட்டு விட்டுச் சென்றிருக்கிறார். ஜப்பானிய பிரதமர் சின்ஷோ அபே, பங்களாதேஷுக்கும் இலங்கைக்கும் மேற்கொண்ட குறுகியகாலப் பயணத்தின் முழுநோக்கமுமே, சீன ஆதிக்கம் தெற்காசியாவில் விரிவடைவதை தடுப்பதேயாகும்.
சீனாவும் ஜப்பானும் இப்போதும் ஏட்டிக்குப்போட்டியான நாடுகளாக இருந்துவருகின்றன.

கடல்வழி பட்டுப்பாதைத் திட்டத்தில் இலங்கை, மாலைதீவு போன்ற நாடுகளையும் இணைத்துக்கொள்ளும் முனைப்பில் சீனா இருக்கிறது. இலங்கை அதற்கு பச்சைக்கொடி காண்பித்தும்விட்டது. ஏற்கெனவே ஹம்பாந்தோட்டை, கொழும்புத் துறைமுக அபிவிருத்தித்திட்டங்களில் சீனா முதலீடு செய்துள்ளதால், ஜப்பானுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

மத்திய கிழக்கின் எண்ணெய்வளம் ஜப்பானுக்கு முக்கியமானது.  மத்திய கிழக்கிலிருந்து எரிபொருள் விநியோகத்துக்கு எந்த வகையிலும் தடைகள் ஏற்படாத வகையில், பாதுகாப்பான கடற்பாதையை உறுதிப்படுத்த முனைகிறது ஜப்பான். இதற்காகவே ஜப்பானிய பிரதமர் முக்கியமாக கொழும்புக்கு வந்திருந்தார்.

ஜப்பானிய பிரதமர் சின்ஷோ அபே நீண்டகாலத்துக்கு பின்னர் அந்த நாட்டில் உறுதியானதொரு தலைவராக உருவெடுத்துள்ளார். அவர் நீண்டகாலமாக இருந்துவந்த பாதுகாப்புக் கொள்கையில், மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். அதுபோலவே சீனாவுக்குச் சவால் விடும் வகையிலான துணிச்சல்மிக்க நடவடிக்கைகளையும் எடுக்கத் தொடங்கியுள்ளார்.

ஜப்பானிய பிரதமர் கொழும்பில் 24 மணித்தியாலங்கள் கூடத் தங்கியிருக்கவில்லை. அதுபோலவே பங்களாதேஷிலும் அவர் 22 மணித்தியாலங்களே தங்கியிருந்தார். ஐ.நா. பாதுகாப்புச்சபையின் தற்காலிக உறுப்பினர் பதவிக்கு 2015ஆம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் ஆசியப் பிரிவில் பங்களாதேஷும் ஜப்பானுமே போட்டியில் நின்றன.

தனது பங்களாதேஷ் பயணத்தின்போது உதவிகளை அள்ளி வழங்கி, அந்த நாட்டு பிரதமர் ஷேய்க் ஹசீனாவுடன் நடத்திய பேச்சுக்களின் மூலம், பங்களாதேஷை போட்டியிலிருந்து விலகவைத்து விட்டார்.  அதுபோலவே, இலங்கையுடனும் கடல்சார் பாதுகாப்புத் திட்டத்தில் உடன்பாட்டை ஏற்படுத்தியிருப்பது ஜப்பானிய பிரதமரின் பயணத்தினால் விளைந்த முக்கியமானதொரு நன்மையாகும்.

இலங்கையை பொறுத்தவரையில், ஜப்பானுடன் பகையை வளர்த்துக்கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால், ஜப்பானிடமிருந்து அதிகளவு நலன்களை பெற்றுக்கொண்ட நாடு இலங்கை. இரண்டாம் உலகப் போரின்போது திருகோணமலை, கொழும்பு ஆகிய இடங்களில் ஜப்பானிய குண்டுவீச்சு விமானங்கள் தாக்குதல் நடத்தியிருந்தன.

இரண்டாம் உலகப் போரில் படுதோல்வியுற்ற ஜப்பான், சரணாகதியடைந்த பின்னர், எங்கெங்கு ஜப்பான் அழிவுகளை ஏற்படுத்தியதோ அந்த நாடுகளுக்கெல்லாம் நட்டஈடு வழங்கவேண்டுமென்று நிர்ப்பந்திக்கப்பட்டது. அதனால், இலங்கைக்கும் நட்டஈடு வழங்கவேண்டிய நிலையொன்று ஏற்பட்டது. ஆனால், 1951ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஜப்பானிடமிருந்து நட்டஈடு தேவையில்லை என்று அறிவித்திருந்தார். அது நொந்துபோயிருந்த ஜப்பானுக்கு பெரியதொரு விடயமாக இருந்தது.

அதற்கு பின்னர்தான் ஜப்பானிய - இலங்கை உறவுகள் வளரத்தொடங்கின. அதன் அடிப்படையிலேயே கட்டுநாயக்க விமானநிலையக் கட்டுமானம் உள்ளிட்ட பாரிய திட்டங்களை ஜப்பான் செய்துகொடுத்தது. சீனா, இந்தியா போன்ற நாடுகள் இலங்கைக்கு அண்மைக்காலமாகவே உதவி வழங்கிவருகின்றன. ஆனால், பல ஆண்டுகளாக இலங்கைக்கு உதவிகள், கடன்களை வழங்குவதில் ஜப்பானே முன்னிலையிலிருந்து வந்தது.

அது மட்டுமன்றி, ஜப்பானிடமிருந்து இலங்கை உதவிகளை பெறுவதற்கு இந்தியாவோ அல்லது வேறு நாடுகளோ எதிர்ப்புத் தெரிவிப்பதுமில்லை.
நல்லிணக்க முயற்சிகளில் ஆர்வம் காட்டுமாறு அழுத்தம் கொடுத்தாலும், சர்வதேச அரங்கில் இலங்கைக்கு எதிராக ஜப்பான் ஒருபோதும் செயற்படவில்லை.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் ஜப்பான் நடுநிலை வகித்திருந்தது.

சீனாவுடன் ஒப்பிடும்போது இலங்கைக்கு அதிக அழுத்தம் கொடுக்காத நாடாக ஜப்பான் இருக்கின்ற அதேவேளை, சர்வதேச உறவுகளில் நெருக்கடிகளை ஏற்படுத்தாத, பாதுகாப்பான நண்பனாகவே இருக்கிறது. ஆனால், சீனாவின் நிலை அவ்வாறானதல்ல.

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்காத நண்பனாகவும் சர்வதேச அளவில் ஆதரவு கொடுக்கும் தோழனாகவும் சீனா இருந்துவந்தாலும், சீனாவுடன் வைத்துள்ள உறவுகள் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கக்கூடியன.

வெளிப்படையாக கூறுவதானால் சீன - இலங்கை நட்புறவை மேற்குலகமும் சரி, ஜப்பானும் சரி, இந்தியாவும் சரி விரும்பவில்லை. இது சீனாவுடனான உறவுகளை ஒரு கட்டத்துக்கு மேல் முன்னகர்த்துவதற்கு இலங்கைக்கு தடையாக இருக்கிறது. முக்கியமாக இந்தியாவின் எதிர்ப்பை சம்பாதிக்கவேண்டி வருமென்ற சிக்கலான நிலை இலங்கைக்கு இருக்கிறது.

இந்தியாவின் பகையை விலை கொடுத்து வாங்குவதை தவிர்ப்பதானால், சீனாவுடன் ஓரளவுக்கு மேல் நெருங்கமுடியாததொரு சிக்கல்  இலங்கைக்கு இருந்துகொண்டிருக்கிறது. இது ஜப்பானுக்கு சாதகமானதொரு நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதனாலேயே சீன ஜனாதிபதியின் பயணத்துக்கு முன்பாக ஜப்பானிய பிரதமர் கொழும்பு வந்து, உடன்பாடுகளை ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்.

அதேவேளை, எதிர்வரும் 16ஆம் திகதி கொழும்பு வரவுள்ள சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், இலங்கையுடன் பல முக்கிய உடன்பாடுகளை செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

குறிப்பாக, கடல்வழி பட்டுப்பாதை திட்டம், சுதந்திர வர்த்தக உடன்பாடு, நெடுஞ்சாலை அபிவிருத்தித் திட்டங்கள் என்பனவும் அவற்றில் முக்கியமானவையாக இருக்கலாம்.

ஏற்கெனவே மூலோபாய பங்காளிகள் என்ற நிலையை இந்த இரு நாடுகளும் எட்டிவிட்டன. இந்த நிலையில், சீன ஜனாதிபதியின்; பயணம் மேலும் நெருக்கமான சூழலை உருவாக்கும். இந்த நெருக்கத்தின் மூலம் இந்தியப் பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை விரிவாக்குவதற்கு முக்கியமான அடியொன்றை எடுத்துவைக்கவுள்ளது. இது சீனாவை பொறுத்தவரையில் பெரும் பாய்ச்சலாகவே இருக்கும்.

இலங்கையை பொறுத்தவரையில் சீனாவுடன் கொள்ளக்கூடிய நெருங்கிய நட்புறவும் அதனுடன் செய்துகொள்ளும் உடன்பாடுகளும் பொருளாதார நலன்களை கொடுத்தாலும், அதிக சிக்கல்களையும் ஏற்படுத்தும். ஏனென்றால், சீனா விடயத்தில் இந்தியா அதிக முன்னெச்சரிக்கையுடனேயே செயற்படுகிறது.

கடந்த திங்கட்கிழமை புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சீனாவுடனான இந்தியாவின் உறவு, ஒத்துழைப்புடன் போட்டித்தன்மை கொண்டதாகவே இருக்குமென்று  தெரிவித்துள்ளார். இது கொழும்பை பொறுத்தவரையில் நல்லதொரு சகுனமல்ல.

ஏற்கெனவே சீனாவுக்கு எதிராக வியூகம் அமைக்கும் ஜப்பானும் இந்தியாவும் தமக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ள நிலையில், சீனாவுடனான கொழும்பின் நெருக்கம் இன்னும் சிக்கலானதாகும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, இந்த மாதம் கொழும்பை வட்டமிட்ட உலகத் தலைவர்களால், இலங்கைக்கு ஆறுதல் கிடைக்குமா - அழுத்தங்கள்தான் மிஞ்சுமா என்ற கேள்வி இப்போது தலையெடுக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X