2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பௌத்த நாட்டுக்கான கோஷம்!

Thipaan   / 2014 ஒக்டோபர் 01 , பி.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-புருஜோத்தமன் தங்கமயில்

பொது பல சேனாவின் தேசிய மாநாடு கடந்த சனிக்கிழமை (செப் 27) கொழும்பில் நடைபெற்றது. 5,000க்கும் அதிகமான பௌத்த பிக்குகள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இதில் கலந்து கொண்டிருந்தனர். மாநாட்டின் சிறப்பு அழைப்பாளராக மியன்மாரின் 969 அமைப்பின் தலைவர் அஷின் விராது கலந்துகொண்டிருந்தார்.

இலங்கையில் இனப்பிரச்சினைகளோடு ஒட்டிப்பிறந்த மத அடிப்படைவாதம் கோலொச்சிக் கொண்டிருக்கும் நிலையில், பொது பல சேனாவின் தேசிய மாநாடு முக்கியத்துவம் பெறுகின்றது.

ஏனெனில், இலங்கையை பௌத்த நாடாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற பிரதான கோரிக்கையோடு பொது பல சேனா சில வருடங்களாக பதற்றமான அரசியல் சூழ்நிலைகளில் மேல் நிலைக்கு வந்திருக்கிறது.

இலங்கையின் உள்ளக ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து ஐந்து வருடங்கள் கடந்து விட்டது.

ஆனால், இன- மத ரீதியிலான பதற்றம் கொஞ்சமும் குறைந்துவிடவில்லை. இவ்வாறான நிலையில் தான் பொது பல சேனாவின் கடந்த கால நடவடிக்கைகளும் அதன் தேசிய மாநாடும் முக்கியத்துவம் பெறுகிறது.

அதுவும், மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டிவிட்டவர் என்று குற்றஞ்சாட்டப்படும் 969 அமைப்பின் தலைவர் அஷின் விராது, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டமையும் முஸ்லிம்களை இலக்கு வைத்த அவரது உரையும் கவனம் பெறுகின்றது.

ஆயுத மோதல்களுக்குப் பின்னரான இலங்கையில் போர் வெற்றிக்கோஷம் சிங்கள பெரும்பான்மை மக்களின் இறுமாப்பாகவும் பெருமையாகவும் முன்னிறுத்தப்பட்டது.

அது, அதிகாரத்திலுள்ளவர்களுக்கு பெருவெற்றியைப் பெற்றுக்கொடுத்தது. ஆனால், போர் வெற்றிக்கோஷத்தின் வீரியம் மெல்ல மெல்ல வீழ்ச்சியடைந்து வந்த நிலையில், மத பெரும்பான்மை வாதம் 'பௌத்தத்தை கட்டிக்காத்தல்' என்ற கருப்பொருளை முன்வைத்து முன்னுக்கு கொண்டுவரப்பட்டது. அதன், பெரும் பிரதிபலிப்பே பொது பல சேனாவின் அபரிமிதமான வளர்ச்சியும், நடவடிக்கைகளும்.

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் மத விடயங்களை முன்வைத்த பிரச்சினைகள் பெருமளவில் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக, சிறுபான்மை மதங்களையும் மத நிறுவனங்களையும் நோக்கிய தாக்குதல் முயற்சிகள்.

ஆனால், அந்தப் பிரச்சினைகளோடு சம்பந்தப்பட்டவர்கள் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட்ட சம்பவங்கள் மிகவும் குறைவு. அதனாலேயே, அவை இன்னும் இன்னும் மேலெழுந்து வந்தன.

இன்றைக்கு, மத ரீதியிலான பிரச்சினைகளை முன்வைத்த அரசியல் என்பது ஆட்சியை தக்கவைக்கும் அல்லது பிடிக்கும் இறுதி கருப்பொருளாக்கப்பட்டு விட்டது.

கடந்த முப்பதாண்டு இலங்கை அரசியலில் தமிழர் எதிர்ப்பும்  விடுதலைப் புலிகள் எதிர்ப்புமே பெரும்பான்மை அரசியல்வாதிகளினால் ஆட்சியைப் பிடிப்பதற்காக சிங்கள மக்களிடம் அதிகமாக உச்சரிக்கப்பட்டவை.

இன்றைக்கு, புலிகளும் தமிழ் மக்களின் தமிழீழக் கோரிக்கையும் இல்லை என்கிற நிலையில், உணர்ச்சி ரீதியிலான அரசியல் முன்னெடுப்புக்களுக்காக இன்னமும் வீரியமாக இரத்தத்தைக் கொதிக்க வைக்கும் மத பெரும்பான்மை வாதம்  தேவைப்படுகின்றது.
அதுதான் இப்போது முன்னெடுக்கப்படுகின்றது. அப்படித்தான் நம்பவும் வேண்டியிருக்கிறது.

இலங்கையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தோன்றிய மத ரீதியிலான பதற்றங்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அளுத்கமை, பேருவளை கலவரங்களாக வெடித்த போது நாடு எதை நோக்கி மீண்டும் சென்று கொண்டிருக்கின்றது என்பது முற்று முழுதாக வெளிப்பட்டது.

குறிப்பாக, முஸ்லிம்களை பிரதான எதிரியாக இலக்கு வைக்கும் அரசியல் என்பது பௌத்த சிங்கள பெரும்பான்மையை ஒரேயிடத்தில் இணைப்பதற்கான புள்ளியாக நிறுவ முயற்சிகள் எடுக்கப்பட்டது. (ஆனால், அந்த முயற்சிகளை குறிப்பிட்டளவான பௌத்த சிங்கள மக்கள் நிராகரித்தமை கவனிக்கப்பட வேண்டியது).

நாட்டுக்குள் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம் என்ற வேறுபாடுகள் இன்றி மத அடிப்படைவாத குழுக்கள் எல்லா தரப்பிற்குள்ளும் இருக்கின்றன. அவை, சமூக முன்னேற்றத்துக்கான விடயங்களை பெரிதாக முன்னிறுத்துவதில்லை.

அவற்றின் நோக்கம் கட்டுப்பட்டித்தனமாக அல்லது காட்டுமிரண்டித்தனமாக, மத- மார்க்க எண்ணங்களை முன்னிறுத்தி தமது அதிகாரத்தை அதிகரிப்பதே.
இதுவே, எல்லாக் காலங்களிலும் ஆட்சியாளர்களினாலும் நாடு பிடிப்பவர்களினாலும் முன்னெடுக்கப்பட்டு வந்தது. மதம்- மார்க்கம் என்பது சிந்திப்பதை தவிர்க்க வைத்து இலகுவாக இரத்தத்தைக் கொதிக்க வைக்கும் மந்திரம்.

ஆக, அந்த மந்திரத்தை கையாண்டால் இலகுவாக அதிகாரத்தை பிடித்துக் கொள்ளலாம் என்பது ஆக்கிரமிப்பு அரசியலின் அடிப்படை.
பௌத்த சிங்கள மத பெரும்பான்மை வாதம் என்பது சிறுபான்மையினரை பிரித்தாளும் சூத்திரமாகவும் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது.

குறிப்பாக, தமிழ்- முஸ்லிம் சிறுபான்மையினரை பிரித்தாளுவதற்காக. ஏனெனில், பேசும் மொழியினூடு தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரே புள்ளியில் இணைக்கப்படுகிறார்கள்.

அந்த இணைப்பை இலங்கையின் ஆயுத மோதல்கள் பெருமளவில் அறுத்தெறிந்துவிட்டன. அவற்றை முற்றுமுழுதாக அறுத்தெறிய வேண்டிய தேவை அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு உண்டு. அதையே, பல விடயங்களினூடு முன்னெடுக்கிறார்கள்.

அது எவ்வளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது என்றால், 'தமிழர்களுக்கு அடித்தால் என்ன, நாங்கள் வேறு பிரிவினர்' என்ற மனநிலையை முஸ்லிம்களிடத்திலும் இப்போது முஸ்லிம்கள் தாக்கப்படும் போது 'எங்களுக்கு அடித்தபோது இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தானே என்ற மனநிலைக்கு தமிழர்களையும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. இது, பெரும்பான்மை சிங்கள, மத பெரும்பான்மை வாதத்தின் பெருவெற்றி.

சரி, பொது பல சேனாவின் தேசிய மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் சிலவற்றை பார்க்கலாம். அதனூடு சில தெளிவைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கை ஒரு பல்லின நாடல்ல. அது ஒரு பௌத்த நாடு. பௌத்த நாட்டில், இஸ்லாமிய தீவிரவாதிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின் அச்சுறுத்தல் எதிர்கொள்ளப்படுகிறது.

பௌத்தர்களின் கரிசனைகள் குறித்த ஆவணமொன்றை அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ளோம். அரசாங்கம் அதற்குத் தீர்வை காணாவிட்டால் மாற்றத்தை ஏற்படுத்துவோம்'  என்று பொது பல சேனாவின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்திருந்தார்.

பொது பல சேனாவுடைய தலைவரின் கருத்துக்கள் அந்த அமைப்பினால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருபவை. குறிப்பாக, முஸ்லிம்கள் - கிறிஸ்தவ சிறுபான்மையினரே பொது பல சேனாவின் இப்போதைய இலக்கு. அந்த அமைப்பின் ஆரம்பத்தில் இந்துக்களும் இலக்கு வைக்கப்பட்டனர்.

ஆனால், அதன் போக்கு முஸ்லிம்களை நோக்கி கூர்மைப்படுத்தப்பட்டதன் பின் குறைக்கப்பட்டது. இன்றைக்கு தங்களின் கூட்டு சக்தியாக இந்துக்களையும் முன்னிறுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதன் போக்கிலேயே ஸ்ரீலங்கா இந்து சம்மேளனம் உள்ளிட்ட சில இந்து சமய சார்ப்பு அமைப்புக்களை இனங்கண்டு தங்களின் மேடைகளில் வலம் வர வைக்கின்றனர்.
இது, தமிழ் - முஸ்லிம் பிரிவினையை இன்னும் ஆழமாக்க உதவும் என்ற வெளிப்படையான நடவடிக்கை. அதுவும், பொது பல சேனாவின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய ஸ்ரீலங்கா இந்து சம்மேளனத்தின் தலைவர் என்.அருண்காந்த், 'கடந்த காலங்களில் தமிழ் சமூகம் குறிப்பாக இலங்கையில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்தனர்.

மொகலாய சக்கரவர்த்திகளாலும், மேற்கத்தேயவாதிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டபோது, இலட்சக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டதுடன் மதமாற்றமும் செய்யப்பட்டனர். காலம் கடந்துள்ளபோதும் எமக்கெதிரான இந்த சவால்கள் மாறவில்லை.

எப்படி கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளை கூட்டாக ஒன்றிணைத்து ஜரோப்பிய தேசம் என்று அழைக்கப்படுகின்றதோ, முஸ்லிம் நாடுகளை ஒன்றினைத்து அரபு தேசம் என்று அழைக்கப்படுகின்றதோ அதனை போல, இந்து, பௌத்தர்கள் அதிகமாக வாழும் தென்கிழக்காசியாவை இந்து - பௌத்த தேசம் என்று அழைக்கவேண்டும்' என்றிருக்கிறார்.

அதுபோல, மன்னார் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்புக்;கு எதிரான கருத்துக்களையும் முன்வைத்திருக்கிறார்.

இலங்கை பல்லின நாடு என்பதை பௌத்த சிங்கள பெரும்பான்மை வாதம் எப்போதுமே ஏற்றுக்கொள்வதில்லை. அதுதான், இனப்பிரச்சினைகளை இன்னும் அதிகமாக பெருப்பித்தது. அந்த வாதத்தின போக்கே தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வர வைத்து நாட்டை சீரழித்தது.

தமது மதத்தையும் இன அடையாளங்களையும் பாதுகாப்பது அவரவருக்கான உரிமை. ஆனால், அது, அடுத்தவரின் மத உரிமைகளை சூறையாடும் அளவுக்கு செல்லும் போதே பிரச்சினைகள் எழுகின்றது. இதுதான், உலகளாவிய ரீதியில் வன்முறைகளில் பெரும் அங்கம் வகிக்கின்றது.

பொது பல சேனாவின் தேசிய மாநாட்டுக்கான சிறப்பு அழைப்பாளரான அஷின் விராத்து தேரர் (தலைவர் - 969 இயக்கம்), உரையாற்றுகையில்  'இன்று உலகம் முழுவதும் இஸ்லாமிய போராளிகளால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. பௌத்தர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலகளாவிய ரீதியில் பொருளாதாரம் தொழில்நுட்ப ரீதியிலும் பௌத்தர்களுக்கு எதிராக இடையூறுகள் விளைவிக்கப்படுகின்றன.

சர்வதேச கொலையாளிகளுக்கு மத்தியில் அஹிம்சாவாதியான பௌத்தர்களை தவறு செய்தவர்களாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவையனைத்துக்கும் முஸ்லிம் தீவிரவாதிகளும் அவர்களுக்கு கிடைக்கின்ற சில சக்திகளும் காரணமாக உள்ளன' என்றிருக்கிறார்.

முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலை பெருப்பிக்கப்பட்டு வன்முறைகள் தோற்றுவிக்கப்பட எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளின் ஒரு போக்காகவே பொது பல சேனாவின் தேசிய மாநாட்டையும் அஷின் விராதின் அழைப்பையும் பல தரப்பினரும் உணர்கின்றனர். அதுவும், அஷின் விராத்தின் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலை உலகம் அறிந்தது.

அப்படிப்பட்டவரை, சிறப்பு அழைப்பாளராக கொண்டு வருவது என்பது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழியென்று அல்லது புத்தன் போதித்த சமாதானத்தின் அடிப்படையாகக் கொள்ள முடியாது.

நாட்டுக்குள் மத ரீதியிலான பதற்றத்தை முன்னெடுப்பது என்பது இன்னும் இன்னும் மோசமான விளைவுகளை தோற்றுவிக்கும். அதனை, பொது பல சேனா முன்னெடுத்தாலும், வேறு ஏதாவது அமைப்பு முன்னெடுத்தாலும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

அதுதான் அவசரமான தேவை. அதற்கு மனப்பூர்வமாக அதிகாரத்திலுள்ளவர்கள் செயற்பட வேண்டும். மாறாக, அதிகாரத்தை தக்க வைப்பதற்காக மத ரீதியிலான பதற்றங்களை கையாளுவோம் என்றால், பெரும் சோகத்துக்குள் நாடு மீண்டும் செல்வதைத் தடுக்க முடியாது.

இந்தக் கட்டுரையின் இறுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 69ஆவது அமர்வுகளின் போது ஆற்றிய உரையின் இறுதிப் பகுதியை சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அது, இவ்வாறாக அமைந்திருந்தது, 'குழப்பங்களிலிருந்து ஒழுங்கையும், சச்சரவுகளிலிருந்து ஒத்திசைவையும் நிறுவுவதற்கே அனைத்து மனித முயற்சிகளும் காணப்பட வேண்டும் எனத் தெரிவித்த கௌதம புத்தரின் வார்த்தைகளிலிருந்து நாங்கள் புத்துணர்ச்சியைப் பெற்றுக்கொண்டுள்ளோம்.

இந்த வார்த்தைகளுக்கமைவாக, தீய எண்ணங்களையுடைய விமர்சனங்களில் பாதிப்படையாதவாறு நல்லிணக்கம், தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதன் நோக்கத்தில் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் காணப்படுகிறது'

கௌதம புத்தரின் இந்த வார்த்தைகளின் படி அரசாங்கமும் ஜனாதிபதியும் செயற்படுவார்களேயானால், நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளும் வெகு சீக்கிரத்தில் தீர்க்கப்பட்டு விடும்.

அது தொடர்பிலான எதிர்பார்ப்பு நாட்டு மக்களிடம் அதிகமாக உண்டு. ஆனால், அதற்கான உண்மையான அர்ப்பணிப்பு என்பதே எல்லோரிடத்திலும் தேவையாக இருக்கின்றது. அந்த அர்ப்பணிப்பு அவ்வளவுக்கு சாத்தியமாகிவிடுவதில்லை என்பதுதானே, நாம் கண்ட பெரும் உண்மை!



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X