2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஊழலுக்கு எதிராக ஊழல்

Thipaan   / 2014 ஒக்டோபர் 05 , பி.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அவர், குற்றவாளியாக இனங்காணப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டமை இலங்கையில் பலருக்கு பெரும் மகிழ்ச்சிக்குரிய விடயமாக இருகிறது. காரணம் அவர்கள் ஊழலுக்கோ வீண் விரயத்துக்;கோ அல்லது மோசடிகளுக்கோ எதிரானவர்கள் என்பதனால் அல்ல. இலங்கை அரசாங்கத்தினதும் பெரும்பாலான சிங்கள மக்களினதும் விருப்பத்துக்;கு மாறாக ஜெயலலிதா நடந்து கொண்டமையே உண்மையான காரணமாகும்.

அதேவேளை, ஜெயலலிதா சர்ச்சைக்குரிய அரசியல்வாதி என்பதனாலும் அவருக்கு எதிரான இந்த வழக்கும் தண்டனையும் பலரது கவனத்தை ஈர்த்தது. இலங்கையில் தனித் தமிழ் நாட்டை உருவாக்குவதற்காக போரிட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு காலத்தில் அவர் ஆதரித்தார். பின்னர் அவ்வமைப்பை கடுமையாக எதிர்த்தார். பின்னர் மீண்டும் புலிகளை பாராட்டத் தொடங்கினார்.

1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி, புலிகளால் படு கொலை செய்யப்பட்டதை அடுத்து வந்த அனுதாப அலையை பாவித்து தமிழக சட்ட சபையில் மொத்தம் 234 தொகுதிகளில் 225 தொகுதிகளை வென்று முதலமைச்சரானார். பின்னர் சுப்பிரமணியன் சுவாமியின் தூண்டுதலால் பாரதிய ஜனதாக் கட்சியின் அரசாங்கத்தை ஆதரித்தார்.

சுப்பிரமணியன் சுவாமி, ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சிக் காலத்திலேயே, ஜெயலலிதாவுக்கு எதிராக ஊழல் வழக்கொன்றை தாக்கல் செய்ய ஆளுநர் சென்னா ரெட்டியிடம் அனுமதி கேட்டு இருந்தார். ஆனால், சில காலத்துக்குப் பின்னர் ஜெயலலிதா, சுவாமி ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். பின்னர் மீண்டும் இருவரும் எதிரிகளாகினர்.

ஏற்கெனவே சினிமா நடிகை என்ற வகையில் அவரை அறிந்திருந்த இலங்கை வாழ் சிங்கள மக்கள் மத்தியில், ஜெயலலிதா என்ற பெயர் தொடர்ந்து நிலைத்திருக்க இது போன்ற பல நிலைமைகளும்; காரணமாகின. இந்த நிலையில் தான் கடந்த ஐந்தாண்டுகளாக இலங்கையின் கடும் விரோதியாக அவர் செயற்பட்டார். இலங்கையிலிருந்து தமிழகத்துக்குச் சென்றிருந்த விளையாட்டு வீரர்களையும் மரபுக்கு முரணாக அவர் திருப்பி அனுப்பினார். எனவே,    சிங்கள மக்களின் பரம எதிரியாக அவர் மாறினார்.

இதனால் தான் அவர் சிறையிலிடைக்கப்படுவதை கண்டு அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். மாறாக அது ஊழல் எதிர்ப்பு மனப்பான்மையல்ல. இலங்கையில் ஊழலுக்கு எதிரானவர்கள் மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கையையும், ஜெயலலிதா சிறையிலடைக்கப்படுவதை கண்டு மகிழ்ச்சியடைபவர்களில் பெரும்பாலானவர்கள் ஆதரிப்பதில்லை.

ஜெயலலிதா ஊழல்மிக்க அரசியல்வாதி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவர் தாம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக பெறுவதாக கூறியிருந்தார். ஆனால், அவரது வீட்டில் இருந்து 1996ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட 66.65 கோடி ரூபாய் பெறுமதியான பெரும் தொகை நகைகள் மற்றும் ஏனைய சொத்துக்கள் தம்முடையதல்ல என்று அவர் ஒருபோதும் கூறவில்லை.

அந்த சொத்துக்கள் அவருடையதாக இருந்தால் அவற்றை எவ்வாறு சம்பாதித்தார் என்பதற்கான ஆதாரங்களை அவர் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், அவரால் அது முடியாமல் போய்விட்டது.

ஒரு ரூபாய் சம்பளம் பெறும் ஒருவர், தமது வளர்ப்பு மகனின் திருமணத்துக்;காக 1,50,000 பேருக்கு அழைப்பு விடுத்து இந்திய பணத்தில் 75 கோடி ரூபாவை செலவழித்தார் என்றால் அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்று கேள்வி எழுகிறது. எனவே, அவர் ஊழல் பேர்வழி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஒரு நாளுக்கு ஐந்து சாரிகளை பாவித்தாலும் அவரிடம் இருந்த 12,000 சாரிகளை உடுத்து முடிப்பதற்கு ஆறரை ஆண்டுகள் செல்லும்.

ஆனால், இலங்கையில் இடம் பெறும் ஊழல், மோசடி மற்றும் வீண் விரயம் ஆகியவற்றோடு ஒப்பிடுகையில், இந்த வழக்கில் குறிப்பிடப்பட்ட தொகையான 66.65 கோடி ரூபாவானது இலங்கையில் சில அரசியல்வாதிகள் ஜிலேபி சாப்பிடுவதற்கு செலவழிக்கப்படும் தொகை என்றே கூற வேண்டும்.

இந்த நாட்டில் 22 நிறுவனங்களில் மோசடி செய்யப்பட்ட தொகை 16,000 கோடி ரூபாய் என சில வருடங்களுக்கு முன்னர் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு (கோப்) தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அதாவது சரி சமமாக ஒவ்வொரு நிறுவனத்திலும் மோசடி இடம்பெற்றிருப்பதாக கருதினாலும் ஒரு நிறுவனத்தில் சுமார் 750 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

இந்த நிறுவனங்களில் ஒரு சிலரே இந்த ஊழலில் சம்பந்தப்படுகின்றனர். அவர்களுக்கு ஜெயலலிதா சிறு பிள்ளையாகவே தென்படுவார். முக்கியமான விடயம் என்னவென்றால் இலங்கையில் நடைபெறும் இந்த மாபெரும் மோசடிக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதே. ஏன் எடுக்கப்படவில்லை என்பது எவரும் ஊகித்துக் கொள்ள வேண்டியதொன்றாகும்.

இந்த நாட்டில் எட்டு இலட்சம் முதல் 20 இலட்சம் ரூபாய் வரை மாதச் சம்பளம் பெறும் அதிகாரிகள் இருக்கிறார்கள் என அமைச்சர் சரத் அமுனுகம, நாடாளுமன்றத்தில் அண்மையில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது கூறினார்.

அவர்களை நியமிப்பதும் அவர்களது சம்பளத்துக்;கு அங்கிகாரம் வழங்குவதும் அரசியல்வாதிகளே. அந்த அரசியல்வாதிகளில் ஜனாதிபதியின் சம்பளமும் இன்னமும் ஒரு இலட்சமாகவில்லை. இந்த உறவை விளங்கிக் கொள்ள சாதாரண மக்களால் முடியாது.

ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் முதலீட்டுச் சபையின் தலைவர் ஒருவர் ஒரு நிறுவனத்துக்கு அங்கிகாரம் வழங்க 25 கோடி ரூபாய் இலஞ்சம் கேட்டு மாட்டிக் கொண்டார். ஆனால், அவர் தண்டிக்கப்படவில்லை.

சந்திரிகா பதவியை விட்டுப் போகும் போது ஜனாதிபதி நிதியத்திலிருந்து 75 கோடி ரூபாய் பணத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நிறுவனம் ஒன்றுக்கு மாற்றிக் கொண்டிருந்தார். ஆனால், அடுத்து வந்த ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ அந்தக் காசோலையை இரத்துச் செய்தார்.

வீண் விரயம் எவ்வளவு இடம்பெறுகிறது என்பதை ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அண்மையில் நாடாளுமன்றத்தில் கேள்வியொன்றை எழுப்பி அம்பலப்படுத்தினார்.

அவரது கேள்விக்கு பதிலளித்த சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன கடந்த மே மாதத்தில் மத்தலை விமான நிலையத்துக்கு கிடைத்த வருமானம் 16,185 ரூபாய் மட்டுமே என்றார். 20 கோடி அமெரிக்க டொலர் (சுமார் 2,600 கோடி ரூபாய்) செலவில் நிர்மாணிக்கப்பட்ட விமான நிலையத்தின் லட்சணம் தான் அது.

ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர்கள் என்று 23 பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கான செலவை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் கேட்டார். அவர்களுக்காக கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 4 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு இருந்தது. இது ஏனைய மோசடிகளோடு ஒப்பிடும் போது சிறிய தொகையாக இருந்த போதிலும் அதுவும் விரயம் தான்.

ஊழலுக்காக ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாவே அபராதமாக விதிக்கப்பட்டது. அது இலங்கை பணத்தில் 300 கோடி ரூபாவுக்குக் குறைந்த தொகையாகும். ஆனால், அண்மையில் இலங்கையின்; உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரி ஒருவருக்கு 1,200 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

அதே வழக்கில் சம்பந்தப்பட்ட சில வர்த்தகர்களுக்கு விதிக்கப்பட்ட மொத்த அபராதத் தொகை 3,337 கோடி ரூபாவாகும்
இவை ஊடகங்களில் வெளியாகிய சில ஊழல்களாகும் வெளியாகாத, வெளியே எடுத்துக் கூற முடியாதவை பல இருக்கின்றன. எனவே, அவற்றின் முன்பாக ஜெயலலிதாவின் ஊழல் சிறு தொகையாகவே தெரிகிறது.

ஜெயலலிதாவுக்கு எதிரான இந்த வழக்கை முன்னெடுப்பதற்கான ஆதாரங்களை திரட்டியவர் ஜனதாக் கட்சியின் முன்னாள் தலைவரும் தற்போது பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான சுப்பிரமனியன் சுவாமியே. ஆனால், இந்த வழக்குத் தீர்ப்பை அடுத்து இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டிருந்த இவ் வழக்கின் வரலாற்றைப் பார்க்கும் போது சுவாமியின் நோக்கமும் கேள்விக்குறியாகிறது.

டான்சி ஊழல் விவகாரத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்குத் தொடர அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டி மூலம் சுவாமி அனுமதி பெற்றிருந்தார். ஆனால், அதன் பின்னர் இருவரும் மீண்டும் நண்பர்களானார்கள். தேசிய அரசியலில் ஜெயலலிதாவின் தூதராகவும் சுவாமி மாறினார். 1998ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசாங்கத்தில் ஜெயலலிதா இணைய காரணமாக இருந்தவரும் சுவாமியே.

டான்சி வழக்கு மூலம் தமக்கு எதிராக செயற்பட்டவர் என்பதைக் கூட பாராமல் சுவாமியின் பிறந்த நாளொன்றில் ஜெயலலிதா அவரது கட்சி அலுவலகத்துக்;கே சென்று அவரை வாழ்த்தி அவருக்கு போர்ட் ஐகான் காரொன்றையும் பரிசாக வழங்கினார். விந்தை என்னவென்றால் ஊழல்பேர்வழி என்று தாமே நீதிமன்றத்துக்கு இழுக்க முயற்சித்த ஜெயலலிதாவிடம் இருந்து இந்த ஊழல் விரோதியான சுவாமி இந்த காரை பெற்றுக் கொண்டமையே.

அடுத்து வந்த லோக் சபா தேர்தலில் தமது கட்சியின் சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிட சுவாமிக்கு ஜெயலலிதா சந்தர்ப்பம் அளித்தார். இதன் மூலம் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் தோட்டத்தின் ராஜகுரு என்ற அந்தஸ்த்தையும் சுவாமி பெற்றதாகவும் சுவாமியை அரசியல் ரீதியாக வளர்த்துவிட்டவர் ஜெயலலிதாவே என்றும் இந்த இந்திய ஊடகம் கூறுகிறது.

ஆனால், 1999ஆம் ஆண்டு அப்போது தமிழகத்தில் இருந்த கருணாநிதியின் ஆட்சியை கவிழ்க்கவில்லை என்பதற்காக ஜெயலலிதா தமது அமைச்சர்களை வாஜ்பாய் அரசாங்கத்திலிருந்து விலக்கிக் கொண்டார். அத்தோடு வாஜ்பாய் அரசாங்கம் கவிழ்ந்தது. இதனை அடுத்து சுவாமியும் ஜெயலலிதாவும் மீண்டும் எதிரிகளாகினர்.

அப்போது, சுவாமி ஏற்கெனவே திரட்டியிருந்த தகவல்களின் அடிப்படையில் தி.மு.க. அரசாங்கம் 1996ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு எதிராக இந்த சொத்துக் குவிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தது. வாஜ்பாய் அரசாங்கத்தின் வீழ்ச்சியின் பின்னர் சுவாமியும் ஜெயலலிதாவின் ஊழல்களைப் பற்றிப் மீண்டும் பேச ஆரம்பித்தார் என அந்த இந்திய ஊடகம் கூறுகிறது.

இந்த வரலாற்றைப் பார்க்கும் போது உண்மையிலேயே சுவாமி ஊழல் விரோதியா என்ற கேள்வி எழுகிறது. இங்கே ஜெயலலிதா பெரும் ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்பது தெளிவாக இருக்கிறது தான். அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை நியாயமற்றதல்ல. ஆனால், வழக்கைத் தாக்கல் செய்த தி.மு.க. அரசாங்கத்தின் ஊழல்களின் அளவையும் சுவாமியின் மேற்படி கதையும் இந்த வழக்கு அரசியல் நோக்கத்தைக் கொண்டது என்பதையும் எவராலும் மறுக்க முடியாது.

இருந்த போதிலும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம் உட்பட உலகில் பல நாடுகளில் ஊழல்பேர்வழிகள் மூலமே ஊழல்பேர்வழிகளுக்கு எதிராக செயற்பட முடியும். ஏனெனில் ஊழலற்ற தூயவர்களை கண்டு பிடிப்பது கடினமாக இருக்கிறது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X